வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடைக் காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி மாதம் அறுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப்பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தை மாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை விழாவாகவே தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்நாளில் கதிரவனைத் தமிழக மக்கள் வணங்குவதாக ‘கல்கி’ கூறுகிறது. ஏனெனில் கதிரவனே பூமியில் செழிப்புக்குக் காரணம் என்று கல்கி கருதுகிறது. கல்கியின் கருத்து தற்கால விஞ்ஞானக் கருத்துக்கு ஒருவாறு ஒத்திருக்கலாம். ஆனால் வரலாற்றுக்கோ, வழக்கத்துக்கோ, மரபுக்கோ அது பொருந்துவதாக இல்லை. பொங்கல் எவ்வாறெல்லாம் கொண்டாடப்பட்டு வந்தது. இன்று பொங்கல் விழாக் கொண்டாடப்படும் முறையில் வரலாற்று எச்சங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ந்தால் பொங்கல் விழாவின் உண்மையான தன்மை பற்றி நாம் முடிவுக்கு வரவேண்டும்.
பொங்கல் வழிபாட்டின் பிரதானமாக சூரியன் அறியப்படுகிறார். சூரியன் தினந்தோறும் காலையில் தோன்றி மாலையில் மறைபவன். காலை எழுந்தவுடன் சூரியனை வணங்குவது தினசரி நிகழ்வு. அதனையே உடல் நலம் காக்கும் யோகாசனமாக செய்தால் அதுவே “சூரிய வணக்கம்”. சூரிய வழிபாடு என்பது தினசரி மற்றும் ஆரோக்கிய நிகழ்வாக அறியப்பட்டாலும் சூரியன் தான் பூமியின் ஆக்க சக்தியல் ஒன்றாக திகழ்கிறது. இதனை அறிந்த நமது முன்னோர்கள் இன்றைய தெய்வ உருவ வழிபாட்டிற்கு எல்லாம் முன்னரே இயற்கையை வணங்கினான். இயற்கை வணக்கத்தின் முழுமுதற் கடவுளும் சூரியனே. பழங்கால நாகரீக தொட்டில்களாக விளங்கிய சிந்து சமவெளியிலும், எகிப்து மற்றும் கிரேக்க நாகரிகத்திலும் சூரிய வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன.
எகிப்தியர்கள் ஆமன்ரா என்றும், கிரேக்கர்கள் போபஸ் – அப்போல்லோ என்றும், ஈரானியர்கள் மித்ரா என்றும் சூரியனைப் போற்றி வழிபடுகின்றனர். கி.மு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வழிபாடு நிகழ்த்தப்பட்டதன் ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. இந்தியாவில் வேத காலத்தில் இருந்து சூரிய வழிபாடு நிகழ்ந்ததாக தாய் வேத நூல்கள் கூறுகின்றன. ஆகவே சூரிய வழிபாடு என்பது பழங்காலந்தொட்டு இன்று வரை தெடர்ந்து கடைபிடித்து வரும் வழக்கமாக உள்ளது. வேத கால கட்டத்தில் சூரிய வழிபாடு ஏற்பட்டதாய் கூறும் வேத நூல்களையே சூரியன் வடிவமாக சூரிய அஷ்டகம் கூறுகிறது. அதாவது, காலையில் ரிக் வேதமாகவும், மதியம் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாம வேதமாகவும் சூரியன் திகழ்கிறான் என்று கூறுகிறது.
சூரியன் இயற்கை வடிவமைப்பின் முதல் கிரகமாக கருதப்படுகிறது. புராணத்தின்படி காசிபர்-அதிதி தம்பதியின் மகனாகப் பிறந்த விஸ்வான் என்பவரே சூரியன். இவருக்கு நான்கு மனைவிகள். செம்பொன் நிறமேனியுடன் காலச்சக்கரங்கள் சுழல ஏழு குதிரைகள். எனவே காலத்தின் கடவுள் சூரியன் என வேதம் கூறுகிறது. ஒவ்வொரு மாதமும் சூரியன் வெவ்வேறு பெயருடன் தன் மாறுபட்ட ஒளிக்கிரணங்களை பாய்ச்சி பயணிக்கிறான் என வேதம் கூறுகிறது. இதனை அறிவியலும் ஏற்கிறது.
ஆயிரம் கரங்கள் நீட்டி என கதிரவனை புகழும் பாடலில் உள்ளது போல் கதிரவனின் ஒளிக்கதிர்கள் ஆயிரம் என்றவாறே உள்ளது. இது ஒவ்வொரு மாதமும் அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். எனவே அதற்கேற்பச் சூரியனுக்கு 12 மாதங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளது. மேலும் தனிப்பட்ட 21 பெயர்கள் சூரியனுக்கு உள்ளது.
ஞாயிறு, ஆதவன், கதிரவன், செங்கதிரோன், கதிர்ச்செல்வன் என செந்தமிழ் பெயர்கள் பல கொண்ட சூரியனை வணங்குவதன் மூலம் உலகமே செழிப்படையும். அது மட்டுமல்ல சூரியனின் ஆயிரம் பெயர்கள் உள்ளனவாம். அதனை கூறி அவரை புகழ்ந்து பாடினால் எண்ணிய எண்ணம் யாவும் திண்ணம் என வேதம் கூறுகிறது.
சூரியன் தை மாதத்தில் பூஷாவான் என்ற பெயருடன் ஆயிரம் கதிர்களுடன் ஒளியை வீசுபவன். சூரியன் வடக்கு நோக்கி செல்லும் உத்தராயணம் காலத்தின் முதல் நாள் என்பதால் பொங்கலன்று சூரிய வழிபாடு சிறப்புடன் செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமன்றி வடமாநிலங்களிலும் பல உலக நாடுகளிலும் இதே நாளில் சூரிய வழிபாடு மற்றும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. சூரியனை பிரதான தெய்வமாகக் கொண்டு பொங்கல் திருவிழா சூரிய வெளிச்சம் படும் வெட்ட வெளியில் பொங்கல் வைத்து படையலிட்டு கொண்டாடப்படுகிறது. உடல் ஆரேக்கியத்தை அளிப்பவரும், மழை பெய்ய காரணமானவரும், இதய நோயை நீக்குபவரும், ஆன்மாவை எழுப்பி தன்வழிப் படுத்துபவருமான சூரியனை போற்றுவோம். நல்வளங்களைப் பெறுவோம்.
(கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக, செய்தித் தொடர்பாளர், இணையாசிரியர், கதைசொல்லி, நிறுவனர், பொதிகை – பொருநை கரிசல். தொடர்புக்கு : rkkurunji@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.