Advertisment

படைப்பாளிகள், வாசகர்களின் ‘பாட்டையா’ எழுத்தாளர் பாரதி மணி மரணம்; எழுத்தாளர்கள் அஞ்சலி!

நடிகர், எழுத்தாளர் பாரதி மணி நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருடைய மறைவு எழுத்தாளர்கள் வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Writer Bharati Mani passes away, Actor Bharti Mani, எழுத்தாளர் பாரதி மணி மரணம், நடிகர் பாரதி மணி, பாட்டையா பாரதி மணி, பாரதி மணி காலமானார், எழுத்தாளர்கள் அஞ்சலி, வாசகர்கள் அஞ்சலி, Actor Bharti Mani dies, Bharati Mani, tamil writers and readers pays tribute to Bhrati Mani, Paattaiyaa Bharati Mani, tamil literature

தமிழ் இலக்கிய உலகில் படைப்பாளிகளாலும் வாசகர்களாலும் பாட்டையா என்று கொண்டாடப்பட்ட நடிகர், எழுத்தாளர் பாரதி மணி உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 16) காலமானார். அவருக்கு வயது 84. எழுத்தாளர் பாரதியின் மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

எஸ். கே. எஸ். மணி என்ற இயற்பெயர் கொண்ட பாரதி மணி நாடக நடிகர், திரைப்பட நடிகர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை ஆவார். பாரதி திரைப்படத்தில் பாரதியாருக்குத் தந்தையாக நடித்த பின் எஸ்.கே.எஸ். மணி, எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் பாரதி மணி என்று அழைக்கப்பட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாபா படத்தில் அரசியல் வாதியாக நடித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாரதி மணி, எழுதிய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’, ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ ‘பாட்டையாவின் பழங்கதைகள்’ என்ற நூல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் இலக்கிய உலகி எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் பாட்டையா என்று அன்புடன் அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டவர். அதுமட்டுமில்லாமல், தமிழ் நவீன இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர் க.நா.சு.-வின் மருமகன் ஆவார்.

இந்த நிலையில், நடிகர், எழுத்தாளர் பாரதி மணி நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருடைய மறைவு எழுத்தாளர்கள் வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர்களும் வாசகர்களும் அவருடனான நினைவுகளைக் குறிப்பிட்டு தங்கள் அஞ்சலியை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர் விருப்பப்படியே அவரது உடல் செயிண்ட் ஜான் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டையா பாரதி மணி மறைவு குறித்து, அவருடைய மகள்கள் அனுஷா மற்றும் ரேவதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “எங்கள் அன்புக்குரிய தந்தையார் ஸ்ரீ எஸ்.கே.எஸ்.மணி என்ற பாரதி மணி நேற்று மாலை ஐந்து மணிக்கு காலமானார். நீண்ட காலமாக புற்றுநோயுடன் மிகுந்த தைரியத்துடன் வீறார்ந்து போரடிக்கொண்டிருந்த அவர் என் கரங்களில் அமைதியாக உயிர் நீத்தார். அவரை நீண்ட காலமாக அறிந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் அவர்மீது காட்டிவந்த உங்கள் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் நானும் என் குடும்பத்தினரும் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். தனது உடலை மரணத்துக்குப்பின் அறிவியல் ஆய்வுக்காக தானம் செய்வதென்று மூன்று வருடங்களுக்கு முன் முடிவெடுத்திருந்தார். அவர் விருப்பப்படியே அவரது பூதவுடலை செயிண்ட் ஜான் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கியுள்ளோம். இதன் காரணமாக, எங்கள் இல்லத்தில் எந்தவிதமான பூசைகளோ, சடங்குகளோ நிறைவேற்றப் போவதில்லை.

மிகவும் நடைமுறைவாதியான அவர், தனது மரணத்துக்காக நாங்கள் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டு முடங்கியிருக்கக்கூடாதென்றும், எங்கள் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவேண்டுமென்றும் எங்கள் குடும்பத்தினரிடம் வலியுறுத்திக் கூறியிருந்தார். அவர் சொல்லுக்கு மதிப்பளித்து கனத்த இதயங்களுடன் நாங்கள் அனைவரும் எங்கள் பணியிடங்களுக்குத் திரும்பியிருக்கிறோம். எனவே தனிமையில் கழிக்க விரும்பும் எங்கள் துக்க நேரத்தை மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அழைப்புகளை எங்களால் ஏற்க இயலாது. தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். நம் எல்லோருடைய இதயங்களிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர்.

மாயா ஏஞ்சலூ ஒருமுறை சொன்னதைப்போல, “என் வாழ்வின் நோக்கம் உயிர்த்திருப்பதல்ல, ஆக்கப்பணியாற்றுவதுதான். அப்பணியை சற்று பேரார்வத்துடனும், சற்று பரிவுணர்வோடும், சற்று சுவாரஸ்யத்தோடும், சற்று நளினத்தோடும் செய்வது.” என் தந்தை எனும் மகத்தான மானுடனை கச்சிதமாக வர்ணிக்கும் கூற்று இதுதான். அப்பா, நீங்கள் ஒரு பேராளுமை! உங்கள்மீது நாங்கள் கொண்டிருக்கும் அன்பு வானிலும் உயர்ந்தது. நீளமைதி கொண்டிருங்கள் அப்பா.” என்று தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் பாரதி மனைவி குறித்து கவிஞர், எழுத்தாளர் கடற்கரய் தனது முகநூல் பக்கத்தில் "நீதான் என்னெ எழுத்தாளனாக்குன" என்ற் பதிவிட்டிருப்பதாவது: “இசை விமர்சகர் சுப்புடு மறைந்த சில நாட்கள் கடந்திருந்தன. 'குமுதம்' அலுவலகத்தின் கீழ் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக இண்டர்காமில் செக்யூரிட்டி சொன்னார். பெயர் கேட்டேன், பாரதிமணி என்றார்கள்.

எனக்கு அவரை முன்பின் நேரடியாகத் தெரியாது. ஆனால் பாரதி படத்தில் அவர், "சுப்பையா காலத்தை மீறி கனவு காணாதெ" எனப் பேசிய வசனம் வாழ்நாள் முழுக்க நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது.

ஆகவே உடனே சுதாரித்துக் கொண்டு அவரை மேலே அனுப்புங்கள் என்றேன்.

அவர் ஒரு கைத்தடியோடு மேலே கம்பீரமாக படியேறி வந்தார். "தீராநதிக்காக ஒரு கட்டுரை எழுதி வந்திருக்கேன். நான் எழுத்தாளன் இல்லை. சுப்புடுவ பத்தி எவன் எல்லாமோ கத கதெயா எழுதிக்கிட்டு இருக்கான்.
டெல்லியில என்னோட வாழ்ந்தவர் அவர். நீ இத படிச்சு பார்த்து போட்டியினா நல்லா இருக்கும். கட்டாயம் இல்ல. உனக்குப் புடிச்சிருந்தா போடு" என்றார்.

நான் கைகளில் வாங்கி வைத்து கொண்டு.பல மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரைப் பார்க்க அலுவலகத்தில் கூட்டம் கூடிவிட்டது. பெரிய நடிகர்களின் படத்தில் அவர் நடித்திருந்ததால் கிடைத்தை பிரபலம்.
அவர் சென்ற பிறகு கட்டுரையை வாசித்தேன். சுப்புடுவை பொலந்து கட்டி இருந்தார். எனக்கு அவர் நேர்மை பிடித்திருந்தது. அந்த மாதமே அதை பிரசுரித்தேன்.
அதன் பின் எனக்கு அவர் போன் பேசினார். " உனக்கு தைரியம் ஜாஸ்தி. எதையும் வெட்டாம அப்படியே போட்டுட்ட. எனக்கு எழுத தெரியாது. நான் எழுத்தாளன் கிடையாது. என் மாமனார் க.நா.சு என்னைவிட பெரிய எழுத்தாளர். நீ தான் என்னை எழுத்தாளனாகின. நன்றி" என்றார்.

"உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளன் இருக்கான். தொடர்ந்து எழுதுங்க" என்றேன். பிறகு எங்கு என்னைப் பார்த்தாலும் " நீ தான் என்ன எழுத்தாளனாக்கின" என்பதை தவறாமல் சொல்லிக் கொண்டே இருந்தார்.

தீராநதியில் வந்த சுப்புடுவைப் பற்றி கட்டுரைதான் பாரதிமணியின் முதல் கட்டுரை. அதை வெளியிட எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்று அவர் இல்லை. ஆனால் " காலத்த மீறி கனவு காணாதெ" என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பத்திகையாளர் கோபாலகிருஷ்ணன் சங்கரநாராயணன், எழுத்தாளர் பாரதி மணியின் மறைவு குறித்து முகநூலில் அஞ்சலி பதிவிட்டுள்ளார். அதில், “திரு.பாரதிமணி அவர்களுடன் மிகக் குறைந்தகாலம் தொழில்முறைரீதியாகப் பழகியிருக்கிறேன். அவருடன் பழக்கம் ஏற்பட்ட பிறகே பாரதி, பாபா உள்ளிட்ட படங்களில் அவர் சிறிய அதே நேரம் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் காணப்பட்ட முகம் என்பது நினைவுக்கு வந்தது. 2013இல் நான் பத்திரிகை துறையில் நுழைந்த புதிதில் அவர் சென்னை மியூசியம் அரங்கில் எழுத்தாளர் சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகத்தைப் பார்த்து நம்ம சென்னை இதழில் விமர்சனம் எழுதினேன். அது அவருக்குப் பிடித்திருந்தது என்றே நினைக்கிறேன். அப்போது தமிழ் சினிமாவில் மலிந்துவந்த டாஸ்மாக் காட்சிகள்/ பாடல்கள் குறித்த கட்டுரை ஒன்றுக்கு அவருடைய quoteஐ கேட்டபோது அவர் கூறியது இது: “தமிழ் சினிமா இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் குடிப் பழக்கத்தைப் பற்றிய புரிதலே இல்லை. சோஷியல் ட்ரிங்கிங் என்ற விஷயம் இருப்பதே தமிழ் சினிமாவில் காண்பிக்கப்பட்டதில்லை. ஆரம்பத்திலிருந்தே தமிழ் சினிமா குடிப்பழக்கத்தை இழிவுபடுத்தி வந்திருக்கிறது. இவர்களைப் பொறுத்தவரை குடிக்கிறவர் என்றால் மனைவியைப் போட்டு அடிப்பார், அப்பா-அம்மா அல்லது மாமானாருடன் சண்டை போடுவார், பெண்களை பலாத்காரம் செய்வார். குடிப் பழக்கம் என்பது இது மட்டுமல்ல. நண்பர்களுடன் கலந்து யாரிடமும் சொல்ல முடியாத, சாதாரண நேரங்களில் பேச முடியாத விஷயங்களை மனம் விட்டுப் பேசவும் மனதில் இருக்கும் பாரத்தைக் குறைக்கவும் குடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்க்ள் குடித்துவிட்டு வேறெந்த தவறான செய்லகளிலும் ஈடுபடுவதில்லை. தமிழ் சினிமா இந்த விஷயத்தைத் தொட்டதே இல்லை. சமீபத்தில் வந்த படம் ஒன்றில் ஒருவர் பியரில் சோடா கலக்கிறார். பியரில் 4% ஆல்கஹால்தான் இருக்கிறது. அதில் ஏன் சோடா கலக்க வேண்டும். . குடிப் பழக்கத்துக்கு ஒரு கலாச்சாரம முக்கியத்துவம் இருக்கிறது. அதைத் தெரியாதவர்கள் எடுக்கும் காட்சிகள்தான் இவை”.

70களில் இருந்த ஒரு தமிழர் இப்படிப் பேசியது என்னை மிகவும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. அவர் நான் நினைத்ததைவிட மிகவும் சுவாரஸ்யமான மனிதர் என்று தோன்றியது. இதற்கடுத்து விருகம்பாக்கத்தில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு நான். எமது ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன், இதழியல் இளவல் சரவணன ஜெயராமன் ஆகிய மூவரும் சென்று பேட்டி எடுத்தோம். மூன்று மணி நேரத்துக்கு மேல் நீண்ட அந்த உரையாடலில் அவர் ஒரு தருணத்திலும் ஒரு முதியவருக்கான அயர்ச்சியையோ எரிச்சலையோ வெளிப்படுத்தவில்லை. மிகவும் ஜாலியாக பேசிக்கொண்டே போனார். அந்தப் பேட்டியில் அவருடைய சென்னை நகரம் சார்ந்த அனுபவங்கள் நம்ம சென்னை இதழிலும் பொதுவான நாடக மேடை அனுபவங்கள் சார்ந்த அனுபவங்கள் பொங்குதமிழ் இணைய இதழிலும் வெளியாகின. அவர் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நான் சந்தித்தவர்களில் மிக வித்தியாசமான என்னைக் கவர்ந்த மதிப்புக்குரிய மனிதராக இருந்தார். ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருந்தோம்.ஆனாலும் அதற்குப் பிறகு அவருடன் எந்த உரையாடலும் நிகழவில்லை. நானும் அந்த தொடர்பை தொடர முயலவில்லை.

பாட்டையா என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் பாரதிமணி அவர்கள் இன்று இறந்துவிட்டதாக அறிகிறேன். அவருக்கு என் இதயபூர்வ அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுந்தாளர் பாரதி மணியின் மறைவு தாங்கவியலவில்லை என்று எழுத்தாளர் சுதீர் செந்தில் தெரிவித்துள்ளார். சுதீர் செந்தில் எழுதியுள்ள அஞ்சலி குறிப்பில் கூறியிருப்பதாவது: “பாரதி மணி காலமானார் என்பதை நம்ப மறுக்கிறது இதயம். நானும் கவிஞர் மனுஷ்ய புத்திரனும் போட்டி போட்டுக்கொண்டு பாரதி மணியை எழுத்தாளராக ஆக்கினோம். நாஞ்சில் நாடன் இந்த இழப்பைத் தாங்க மாட்டார். எனக்கும் கூட தாங்கவியலவில்லை. அஞ்சலி பாரதி மணி. விரைவில் சந்திப்போம் நாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment