க.சந்திரகலா
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யாரென உலகத்தின் ஏதோவொரு மூலையிலிருக்கும் 10 பேரிடம் கேளுங்கள். 5 பேர் ஜெயமோகன் என்பார்கள். இதே கேள்வியை இன்னும் 25 வருடங்களுக்குப் பிறகு கேளுங்கள். 8 பேர் ஜெயமோகன் என்பார்கள்.
குமரி மாவட்டத்தின் அருட்கொடை அவர். தமிழ் இலக்கிய உலகை அலங்கரிக்கிற அவரது எழுத்துக்கள் வெறும் தோரணங்களல்ல.. ; ஆபரணங்கள்.! ஒட்டுமொத்த குடும்பத்தின் சுவையறிந்து சமைக்கும் கிராமத்துக்கிழவி போல, இவர் அனைத்து தரப்பு வாசகனுக்கும் பிடிக்கிறமாதிரி எழுதுகிற நுட்பம் அறிந்தவர். அதனால்தான் அவர் எழுத்துலகில் 'ஜெய'மோகனாக இருக்கிறார்.
கலைஞர் கருணாநிதியின் எழுத்து குறித்து எவரும் பேசாத கருத்தை இவர் விமர்சனமாக வைத்த போது, என்ன தைரியம் இவருக்கு என நாலா பக்கத்திலிருந்தும் சொல்லம்பு வந்தது. அதையெல்லாம் சாமர்த்தியாமாய் எதிர்கொண்டவரின் முகத்துக்கு நேராக இப்போது வீண்வம்பு பாய்ந்திருக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன்
விளம்பரங்களால் பிரபலமாகும் படைப்பாளர்களின் ஊரில், இவர் பிரபலமாக இருந்தும் விளம்பரம் தேடாதவர். காது குத்து விழா வீடியோ பதிவில் வந்து விட்டாலே சினிமா புகழ் என போஸ்டர் அடிக்கும் போலிகளுக்கு மத்தியில் இவர் தமிழ், மலையாள சினிமாக்களுக்கு முகமாக இருந்தாலும் விளம்பர வெளியில் தனது முகத்தை காட்டுவதை தவிர்த்தவர்.
விருதுகள் தேடி வந்த போதெல்லாம் வராத காமிராக்கள் இப்போது அவரை தேடித்தேடி படம் பிடிக்கிறது. காரணம், மனதாலும், உடலாலும் அவர் காயப்படுத்தப்பட்ட ஒற்றை நிகழ்வு.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தோசை மாவை வாங்கிப்போகிறார். வீட்டுக்குப்போன போது மாவு கெட்டுப் போயிருப்பது தெரிகிறது. ஒரு பிரபலமாக அல்லாமல் சாதாரண குடும்பஸ்தனாக அந்த கடைக்கு வருகிறார். மாவு பாக்கெட்டை திரும்ப எடுப்பது தொடர்பான பிரச்னையில் தாக்கப்படுகிறார்.
தெரிந்த கடை; கேள்வி எதுவும் கேட்க மாட்டார்களென நம்பி வந்த இடத்தில் சூழ்நிலை வேறாகிறது. விற்ற பொருளை திருப்பி எடுப்பதில் வியாபாரிகள் சில முரட்டு நியாயம் வைத்திருக்கிறார்கள்... அது அடி உதையாகவும் இருக்கலாம் என தெரிந்தபோது நொறுங்கிப்போகிறார் மனிதர்.
பிரச்னை வீடு வரை வந்து மிரட்டுகிறது.
ஜெயமோகன் என்ற பிம்பத்தை விடுங்கள்; ஒரு சாதாரண மனிதராக பார்த்தால் என்ன தவறு செய்தார் அவர் ? அரசு வேலையில் இருந்தவர். சினிமாவில் சம்பாதிக்கிறார். 20 ரூபாய் மாவு பாக்கெட்டை திருப்பி எடுத்து வரலாமா ? என்றொரு கேள்வி வருகிறது அவரது சகபாடிகளிடமிருந்து. பொதுவாக விடைகளை விட வினாக்கள் கூர்மையாக இருக்க வேண்டும். இது ஒரு மொக்கை கேள்வி. இப்படியொரு கேள்விக்கே அவசியமில்லை. அவர் ஒரு நுகர்வோராக வந்திருக்கிறார், அவ்வளவுதான்.
நுகர்வோன் கேள்வி எதுவும் கேட்காமல் நகர்வோனாக இருக்க வேண்டுமென்பது என்ன நியாயம்? கடை வைத்து வியாபாரம் செய்ய விற்பனை தந்திரம் வேண்டியதுதான். அதில் வியாபார நியாயம் வேண்டாமா? உணவுப் பொருளோடு விளையாடுவது உயிரோடு விளையாடுவது ஆகாதா?
எழுத்துத்தளத்தில் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் இருக்கலாம். அவர் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறார். இளம் வயதில் அவர் அனுபவித்த துன்பத்தை விட இங்கே எது பெரிது? அதையும் கடந்தவரல்லவா அவர்!
இங்கே எழுத்துலகில் அவர் தொட்ட உயரத்தை அண்ணாந்து பார்த்து கழுத்து சுழுக்கி கொண்டவர்கள் ஊசிப்போன மாவை வாலினி போல் வாரிப் பூசி சுகம் காண்கிறார்கள். சாதாரண மக்களின் மருத்துவமனை படுக்கையை பறித்துக் கொண்டார். மினரல் வாட்டர் குப்பியுடன் உட்கார்ந்திருக்கிறார் என ஏகடியம் செய்கிறார்கள். சாராய ஊரில் தண்ணீர் பாட்டில் பணக்கார திமிராக பார்க்கப்படுகிறது.
நேற்று ஒரு காவல் துறை நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு ஜெயமோகன் பக்கம் திரும்பியது. அவரைத்தெரியுமா என்று கேட்டேன். தெரியாது .. ஆனால் பெரிய எழுத்தாளர் என்று பேசிக்கொள்கிறார்கள் என்றார். அதன்பிறகு சொன்னார்... இந்த விவகாரத்துக்கு பிறகு பல்வேறு தரப்பிலும் விசாரித்தேன். ‘நல்ல மனிதர்’ என்றார்கள்.
வாங்கி சேர்த்த விருதுகளோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஜெயமோகன்.
(கட்டுரையாளர் க.சந்திரகலா, கவிஞர்- சிறுகதை எழுத்தாளர் என பன்முக அடையாளம் கொண்டவர்)