Advertisment

எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா விருது; ரூ.5 லட்சம் பரிசு... எழுத்தாளர்கள், வாசகர்கள் வாழ்த்து

விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில், எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயரில் ஆண்டு தோறும் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும், ரூ.5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கி.ரா. விருது எழுத்தாளர் கோணங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
writer Konangi gets Ki Rajanarayanan award, writers and readers wishes, writer Konangi, எழுத்தாளர் கோணங்கிக்கு கிரா விருது, கோணங்கிக்கு ரூ 5 லட்சம் பரிசு, கி ராஜாநாராயணன் விருது, Konangi, tamil literature, tamil modern literature

விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பாக ஆண்டுதோறும் வழங்கப்படும் கி.ரா. விருது தமிழ் நவீன இலக்கியத்தின் மாய யதார்த்தவாத கதைசொல்லியான எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கி.ரா விருது பெறும் எழுத்தாளர் கோணங்கிக்கு எழுத்தாளர்கள் வாசகர்கள் வாழ்த்து தெரிவித்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில், கரிசல் இலக்கிய பிதாமகர் என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயரில் ஆண்டு தோறும் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும், ரூ.5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கி.ரா. விருது எழுத்தாளர் கோணங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கி.ரா. விருதை சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது. செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள விழாவில் எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா விருதுடன் ரூ.5லட்சம் பரிசும் வழங்கப்படவுள்ளது.

தமிழ் நவீன இலக்கியத்தின் மாய யதார்த்தவாத கதை சொல்லியாக அறியப்படும் எழுத்தாளர் கோணங்கி கோவில்பட்டியைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் எழுத்தாளர் கோணங்கி. இவரது தந்தை சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோரும் எழுத்தாளர்கள் ஆவர். இவருடைய தம்பி முருகபூபதி நவீன நாடகங்களை இயக்கி வருகிறார்.

கோவில்பட்டியில் வசிக்கும் கோணங்கி 1958 ஆம் ஆண்டு நென்மேனி கிராமத்தில் பிறந்தவர். தமிழ் நவீன இலக்கியத்தின் ஜாம்பவான்களான புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந.முத்துச்சாமி, கி.ராஜநாராயணன் எழுத்துகளால் கவரப்பட்ட கொணங்கி 1980 ஆண்டு முதல் சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதி வருகிறார்.

கோணங்கி மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள் சிறுகதை தொகுப்புகளுக்கு பிறகு, மாய யதார்த்தவாத எழுத்துகளுகுள் நுழைந்தவர், அதன் பிறகு, உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை, பாழி, பிதிரா, த, நீர்வளரி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இறுக்கமான மொழி நடை கொண்ட கோணங்கியின் எழுத்துகள் புரிவதில்லை என்று பல எழுத்தாளர்களும் வாசகர்களும் விமர்சனங்களை வைக்கின்றனர். இருப்பினும், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் கோணங்கி தொடர்ந்து தனது ஸ்டைலில் நாவல்களை எழுதி வருகிறார்.

எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எழுத்தாளர் சி.மோகன், கி.ரா விருது பெறும் கோணங்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “2021ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருது ( ரூ. 5 லட்சம் ) பெறுகிறார் கோணங்கி.
அளவற்ற ஆனந்தம். கலை நம்பிக்கையையும் செயல்பாட்டையும் உயிராகக் கொண்டியங்கும் அபூர்வக் கலைஞன் கோணங்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தேர்வுக் குழுவினருக்கு நன்றிகளும் வணக்கங்களும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் சமயவேல், “கோணங்கி மாப்பிள்ளைக்கு கி.ராஜநாராயணன் விருது கிடைத்திருப்பதில் ஆனந்தம். விருது வழங்கி கௌரவம் பெறும் அமைப்பான விஜயா பதிப்பகம் வாசகர் வட்டத்திற்கு அன்பும் நன்றியும்.” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் அழகிய பெரியவன், கி.ரா. விருது பெறும் எழுத்தாளர் கோணங்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் அமிர்தம் சூர்யா, எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மணலில் நனையாத நீருக்கு மகுடம் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். “மணலில் நனையாத நீருக்கு மகுடம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எங்கள் ராஜாங்கத்தில் அண்ணன் நவீன எழுத்தாளர் கோணங்கி அவர்களுக்கு கி.ரா விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பெருமிதம் .மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். மணலில் நனையாத நீர் என்பது தம்பி தாமரை பாரதி நூல் வெளியீட்டு விழாவில் கோணங்கி பேச்சின் ஒரு இழையில் வந்த வரி.” என்று அமிர்தம் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவர், எழுத்தாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுத்தாளர் கோணங்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கோணங்கி குறித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கிரா விருது பெற்ற கோணங்கி இன்றைக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவர் கோவில்பட்டியாக இருந்தாலும் இரண்டு, மூன்று தடவைதான் சந்தித்ததுண்டு. இதுவரை அவருடன் நேரடியாகவோ, தொலைபேசியிலோ பேசியதில்லை.
கடந்த 1989-ல் சட்டமன்ற தேர்தலில் நான் கோவில்பட்டியில் திமுக வேட்பளராக போட்டியிட்ட போது; இடைசெவல் கிராமத்திற்கு கிராவைச் சந்திக்கச் சென்ற சமயத்தில் கோணங்கியை பற்றி கிரா சிலாகித்தார். இது நடந்தது கிரா புதுவைக்கு வருவதற்கு முன்பு. எனக்கு அப்படிதான் கோணங்கியைப் பற்றிய அறிமுகம்.
அவருடைய மூத்த சகோதரர் தமிழ்ச்செல்வன் என்னோடு தொடர்பில் இருந்தவர். இவர்களின் பூர்வீகம் சாத்தூர் நென்மேனி மேட்டுப்பட்டி இருந்தாலும் கோவில்பட்டியிலிருந்தே இயங்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போது கோவில் பட்டியில் பல படைப்பாளிகள் வலம் வந்தநேரம். இன்றைக்கு கோணங்கி, கரிசல் இலக்கிய படைப்புகள், தான் எழுதிய படைப்புகள் குறித்தான விடயங்கள், இனி தான்படைக்கப் போகின்றப் படைப்புகளைக் குறித்து விரிவாக பேசினார்.இது மகிழ்ச்சியானத் தருணமாக அமைந்தது.

கோணங்கியின் படைப்புகள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்று என்னுடைய கருத்தை அவரிடம் கூறினேன். கோணங்கி எளிமையான வாழ்க்கை, தேடல், வாசிப்பு, ஆழமானப்புரிதல், அற்புதமான சொல்லாடல் என பல சிறப்புகளையும், மேன்மைகளையும் தன்னகத்தே கொண்டவர். சமகாலத்தில் படைப்பாளிகளுக்கு ஒரு இலக்கணமாக திகழ்கின்றார் கோணங்கி அவர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கி.ரா விருது பெறும் எழுத்தாளர் கோணங்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ 1. விருதளிப்பதும் வாழ்த்துவதும் விருதளிப்பவருக்கும் எழுத்தாளரின் நேயர்களுக்கும் மகிழ்வான விஷயம். எழுத்து குறித்த மதிப்பீடு என்பது வேறு. கோணங்கிக்கு அவரது ரசிகர்களிடம் இருப்பது கோணங்கி எனும் ஐதீகத்தின் மீதான பிரம்மை. இது வாசகர்களால் உருவானது அல்ல. அவரைப் படிக்காத அவரது ரசிகர்களால் உருவானது. அவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் தவிர நாவல்கள் எதையுமே என்னால் வாசிக்க முடியவில்லை. இத்தனைக்கும் எளிதில் பிடிபடாத எந்தப் படைப்பாயினும் - அது நாவலாயினும் திரைப்படமாயினும்- இரண்டு மூன்றுமுறை அதனுள் நுழைய முயல்பவன். அந்நிய மொழியில் மார்க்வசுக்குள்ளும் சரமாகோவுக்குள்ளும் நுழைய முடிகிற என்னால் எனது சொந்த மொழி தமிழில் எழுதப்படுகிற கோணங்கியின் நாவல்களுக்குள் நுழையமுடியவில்லை. இன்னும் நுழைய முயன்றால் இருக்கிற ஆயுட்காலம் போதாது என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு 5 இலட்சம் பரிசுத்தொகையுடன் விருது தருவது உண்மையில் அற்புதமான விஷயம். அந்த வகையில் கோணங்கிக்கு வாழ்த்துக்கள்..

2. கோணங்கி பற்றிய எனது பதிவு நிச்சயமாக விருதுக்கான அவரது தகுதி பற்றியது அல்ல. இலக்கியத்தையே வாழ்வாக வரித்துக் கொண்ட ஒரு ஆளுமையாக இலக்கியம் சார்ந்து அவருக்கு பல பரிமாணங்கள் உண்டு. அவர் சிறுகதையாளர். நாவலாசிரியர். இதழாசிரியர். பயணி. பலருக்கும் நெகிழ்வான தோழமை. நான் சொல்லியிருப்பது அவரது நாவல்கள் பற்றி மட்டுமே. வாசிப்பில் உடனடியில் எல்லாம் புரிய வேண்டும் என நான் சொல்லவில்லை. மறுபடி மறுபடி வாசிக்க முயன்றாலும் ஒரு கட்டத்தில் புரிய வேண்டும். மொழியை அநியாயத்துக்குத் திருகி எழுதுகிறார். சிலவேளை பதினோறாவது வாசிப்பில் அவரது நாவல் மொழி அனுபவமாகலாம். வாசகனாக எனக்கு இருப்பது ஒரு வாழ்காலம். கோணங்கி நாவல் மொழியில் எனக்கு இருக்கும் பிரச்சினை இதுதான். கோணங்கி குறித்த பெரும்பாலுமான பதிவுகள் அவரை ஐதீகமாக முன்வைக்கும் அவருடனான தனிப்பட்ட உறவுகளும் அவற்றின் நெகிழ்வான அனுபவங்களும் குறித்தவை. அவரது எழுத்துக்கள் குறித்தவை அல்ல..” என்று விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment