தமிழின் மிக முக்கிய எழுத்தாளர், ஆய்வறிஞர், தலித் சிந்தனையாளர் பேராசிரியர் ராஜ்கௌதமன் உடல்நலக் குறைவால் பாளையங்கோட்டையில் புதன்கிழமை (நவம்பர் 13) காலமானார். அவருக்கு வயது 74.
“தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு எழுத்தாளர் ராஜ்கௌதமனுக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும்.” என்று இயக்குநர் பா. ரஞ்சித் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோர்க்கை வைத்துள்ளார்.
எழுத்தாளர் ராஜ்கௌதமனின் இயற்பெயர் எஸ்.புஷ்பராஜ். 1950-ல் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி என்ற ஊரில் பிறந்தார். புதுப்பட்டியில் தொடக்கக் கல்வியு மதுரையில் உயர்நிலைப்படிப்பும் முடித்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியல் இளங்கலை, தமிழிலக்கியத்தில் முதுகலை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். அ. மாதவையா பற்றிய ஆய்வுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.
பேராசிரியர் ராஜ்கௌதமன் தமிழின் மிக முக்கிய எழுத்தாளர், புனைவு, ஆய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம் என இயங்கியவர். பைந்தமிழ் பண்பாட்டு வரலாறு சார்ந்து காத்திரமான ஆய்வுகளைச் செய்தவர்.
சங்க இலக்கியங்களைக் குறித்து ராஜ்கௌதமன் எழுதிய ஆய்வு நூல்களான பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு ஆகிய நூல்கள் முக்கிய நூல்களாக திகழ்கின்றன.
அதே போல, ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் என்ற வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழில் தலித் இலக்கிய முதல் அலை உருவான காலகட்டத்தில், ராஜ்கௌதமன் முன்னணியில் நின்று தலித் இலக்கியம், கலை, அரசியல், தலித் விமர்சனம் ஆகியவற்றுக்கும் பெரும் பங்களிப்பை செய்தார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, அறம் அதிகாரம்,
தலித்திய விமர்சனக் கட்டுரைகள், கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக ஆகிய நூல்கள் ராஜ்கொதமனின் முக்கிய நூல்களாக உள்ளன.
அதே போல, புனைவு இலக்கியத்தில், சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ் ஆகிய நாவல்கள் தமிழில் தலித் தன்வரலாற்று நாவல்களில் சிறந்த நாவலாக வாசகர்களாலும் விமர்சகர்களாலும் புகழப்படுகிறது.
எழுத்தாளர் ராஜ்கௌதமன் விளக்கு விருது, விஷ்ணுபுரம் விருது, நீலம் பண்பாட்டு மையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது அகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்த ராஜ்கௌதமன் 2011-ல் ஓய்வு பெற்றார். அவருடைய மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா லண்டனில் வசிக்கிறார். எழுத்தாளர் பாமா, ராஜ்கௌதமனின் உடன்பிறந்த சகோதரி ஆவார்.
பாளையங்கோட்டையில் வசித்து வந்த எழுத்தாளர் ராஜ்கொதமன் முதுமை காரணமாக சிறிது காலமாக உடல்நலிவுற்றிருந்த நிலையில், புதன்கிழமை (நவம்பர் 13, 2024) காலமானார். அவருக்கு வயது 74. எழுத்தாளர் ராஜ் கௌதமனின் உடல் பாளைங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ராஜ்கௌதமன் மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், தலித் செயற்பாட்டாளர்கள், வாசகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“எழுத்தாளர் ராஜ்கௌதமன் உடலை உரிய அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முனைவர் ராஜ் கௌதமன் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு நேர்ந்த பேரிழப்பு!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 13, 2024
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
---------------------------------------
தமிழ் ஆய்வறிஞரும் தலித்திய சிந்தனையாளருமான பேராசிரியர் #ராஜ்கௌதமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தாங்கவொண்ணா வேதனையளிக்கிறது. அவரது… pic.twitter.com/wfi2bZAXXC
முனைவர் ராஜ் கௌதமன் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு நேர்ந்த பேரிழப்பு என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ் ஆய்வறிஞரும் தலித்திய சிந்தனையாளருமான பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தாங்கவொண்ணா வேதனையளிக்கிறது. அவரது மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்கள் சுமார் 40 ஆண்டுகளாகத் தமிழ் ஆய்வுகளில் ஈடுபட்டு, பாராட்டுத்தக்க ஆய்வு நூல்களை எழுதி இருக்கிறார். அ.மாதவையா, இராமலிங்க அடிகளார், அயோத்திதாசப் பண்டிதர் முதலானவர்கள் குறித்து காய்தல் உவத்தலின்றி அவர் படைத்த நூல்கள் கருத்தாழமும், இலக்கியச் சிறப்பும் கொண்டவை. மார்க்சியம், அம்பேத்கரியம், பின்னவீனத்துவம் ஆகிய சிந்தனைகளின் துணையோடு அவர் மேற்கொண்ட தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் சங்க இலக்கியங்களைப் புதிய நோக்கில் பார்ப்பதற்கு வழி கோலின.
புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தளத்தில் உருவான தலித் சிந்தனை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் அவர் முதன்மையானவர். அவரது ‘தலித் பண்பாடு’ என்ற ஆய்வு நூல் வெளியான போது, அது நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விரிவான உரையாடலை ஏற்படுத்தியது.
தனிப்பட்ட முறையில் என்னோடும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடும் இணக்கமான நல்லுறவைப் பேணி வந்தவர். தமிழ்ப் பரப்பில் ஆய்வறிஞராக செயல்பட்ட போதிலும் அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர். எம்மைப் போன்றோரின் பணிகளுக்கு உரிய மதிப்பளித்து ஊக்குவித்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய இயலாததாகும்.
இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் முனைவர் ராஜ் கவுதமன் அவர்கள் ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பைப் போற்றி, கடந்த ஆண்டுக்கான (2023) ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருதினை அளித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெருமை கொண்டது.
அவரது ஆய்வுகளுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்ப் புலமைச் சூழலையும் பற்றியிருக்கும் பாகுபாட்டு உணர்வு அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்குத் தடையாயிருந்தது வேதனைக்குரியதாகும்.
தமிழ்நாடு அரசு அவரது நூல்களை அரசுடமையாக்கி அனைவருக்கும் எளிதில் கிடைத்திட வழி செய்ய வேண்டும். அத்துடன் உரிய அரசு மரியாதையோடு அவரை நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
எழுத்தாளர் ராஜ்கௌதமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இயக்குநர் பா. ரஞ்சித், “தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உருவான போது அதன் முதன்மை முகமாய்… pic.twitter.com/kxkY1GBwW6
— pa.ranjith (@beemji) November 13, 2024
இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந்த கோட்பாடுகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல், கற்ற அனைத்தையும் அடித்தட்டு மக்களின் வரலாற்றை புரிந்துக்கொள்ளவும் அவர்களின் அரசியலை நிறுவவும் எழுதியவர். 'தலித்' என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார்.
புனைவும் அரசியலும் வெவ்வேறல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமையை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், படைப்பு குணாம்சத்தின் நுட்பங்களை கணக்கில் கொண்டே அவற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கினார்.
படைப்பூக்கத் தன்மையும், ஆய்வும், அரசியலும் வெவ்வேறல்ல என நம் ஒவ்வொருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த எழுத்தாளர், ஐயா ராஜ் கௌதமன் தமிழ் அறிவு வரலாற்றில் என்றும் நீடித்திருக்கக் கூடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை டேக் செய்து கோரிக்கை வைத்துள்ளார்.
ராஜ் கௌதமன் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள வி.சி.க எம்.பி-யும் எழுத்தாளருமான ரவிக்குமார், “ராஜ் கௌதமன் மார்க்சியம் அம்பேத்கரியம் பின் நவீனத்துவம் இணைந்த அபூர்வ கலவை” என்று அவருடனான தனது நட்பை நினைவுகூர்ந்துள்ளார்.
ராஜ் கௌதமன் ( 1950-2024) : மார்க்சியம் அம்பேத்கரியம் பின் நவீனத்துவம் இணைந்த அபூர்வ கலவை
— Dr D.Ravikumar (@WriterRavikumar) November 13, 2024
- ரவிக்குமார்
ராஜ் கௌதமன் மறைந்தார் என்ற செய்தியை ஜெகந்நாதன் அனுப்பியிருந்தார். அவரது உடல்நிலையை அறிந்திருந்ததால் இந்தச் செய்தி அதிர்ச்சி தரவில்லை. ஆனால் அவரோடு பழகிய நினைவுகள் மிகுந்த மன… pic.twitter.com/o9LSHYN9X3
ராஜ் கௌதமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ரவிக்குமார் எழுதியுள்ள அஞ்சலி குறிப்பில் கூறியிருப்பதாவது: “ராஜ் கௌதமன் மறைந்தார் என்ற செய்தியை ஜெகந்நாதன் அனுப்பியிருந்தார். அவரது உடல்நிலையை அறிந்திருந்ததால் இந்தச் செய்தி அதிர்ச்சி தரவில்லை. ஆனால் அவரோடு பழகிய நினைவுகள் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கிவிட்டன.
மார்க்சியத்தில் நல்ல புலமை கொண்டிருந்த அவர் பின் நவீனத்துவ சிந்தனைகளை உள்வாங்கி தலித் பண்பாட்டு, இலக்கிய விமர்சனங்களிலும் , செவ்வியல் இலக்கிய ஆய்வுகளிலும் பயன்படுத்தினார். மார்க்சியம், பின் நவீனத்துவம், அம்பேத்கரியம் என்ற அபூர்வமான கலவையாக அவரது சிந்தனை வெளிப்பட்டது.
அதுவும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் அவருக்கிருந்த புலமையும் அவரது சம காலத்தில் காத்திரமாக செயல்பட்ட கோவை ஞானி, எஸ்விஆர், அ.மார்க்ஸ், தமிழவன் முதலானவர்களிலிருந்து அவரை வேறுபடுத்தச் செய்தது. அ.மாதவையா, இராமலிங்க அடிகள், பெண்ணியம், தலித் பண்பாடு, செவ்வியல் இலக்கியத் திறனாய்வுகள் - என அவரது ஆய்வுப் பரப்பு மிக மிக விரிந்தது. அவற்றைத் தமிழ்க் கல்விப் புலத்தினர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ( CICT) வழங்கும் விருதுகள் அவருக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். அவரது பெயரை முன்மொழியும் அளவுக்கு அங்கே யாரும் இல்லைபோலும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
1985 இல் புதுச்சேரிக்கு நான் வங்கிப் பணி நிமித்தமாக வந்தபோது அவரை முதன் முதலாக சந்தித்தேன். பின்னர் தினமும் சந்தித்துப் பேசும் நட்பாக அது மாறியது. நிறப்பிரிகை பத்திரிகையிலும் நான் முன்னெடுத்த தலித் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் அவர் பங்களிப்புச் செய்தார்.
அவரது இளைய மகள் கௌரி பத்து வயது ஆவதற்கு முன்பே திடுமென இறந்தது அவரை நிலைகுலைய வைத்தது. அதிலிருந்து அவரை மீட்பதற்கு அவரை எழுதச் செய்து நூலாக வெளிக்கொண்டு வருவதை ஒரு சிகிச்சைபோல நான் பயன்படுத்தினேன். தலித் பண்பாடு நூலை அப்படித்தான் வெளிக்கொண்டு வந்தேன்.
அவரையும் தலைவர் திருமாவளவன் அவர்களையும், சந்திரபோஸ் அவர்களையும் உரையாடச் செய்து அதை ஒலி நாடாவில் பதிவு செய்து எழுதி எடுத்து அந்த நூலில் சேர்த்தேன். காஞ்சிபுரம் போய் அன்பு அச்சகத்தில் அதை அச்சிட்டேன், இந்திரனிடம் கேட்டு அந்நூலுக்கான அட்டையை சென்னையில் அச்சிட்டு வாங்கி பைண்ட் செய்து புதுச்சேரியில் ஆயிரக் கணக்கானவர்கள் கூடிய தலித் கலை விழாவில் வெளியிடச் செய்தேன்.
பின்னர், கோத்தகிரிக்கு நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கோவையில் விடியல் பதிப்பகத்தில் தங்கியிருந்தபோது விடியல் மூலமாக அறம் அதிகாரம் என்ற நூலை வெளியிடச் செய்தேன். அதன் பின்னர் தமிழினி வசந்தகுமார் தொடர்ச்சியாக அவரது நூல்களைக் கொண்டுவந்தார்.
சில ஆண்டுகளாக உடல் நலிவால் அவர் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார். அதையெல்லாம் மீறி அவர் இவ்வளவு காலம் வாழ்ந்ததற்கும் எழுதியதற்கும் அவரது மனைவி முனைவர் பரிமளம் அவர்களே முழுமுதல் காரணம். அவரது அரவணைப்பு இல்லாது போயிருந்தால் தமிழுக்கு இப்படியான பங்களிப்புக் கிடைத்திருக்காது.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சென்னையில் சிகிச்சை முடிந்து நெல்லைக்கு அவர் போகும் வழியில் விழுப்புரத்தில் அவரது காரை நிறுத்தி நானும் வன்னி அரசுவும் அவரை சந்தித்தோம். அதன் பின்னர் ஓரிரு முறை தொலைபேசியில் அவரோடு பேசினேன். தேரதல் முடிந்ததும் வந்து பார்க்கிறேன் எனக் கூறியிருந்தேன். தொகுதிப் பணிகள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.
நான்கு நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற தகவலை ஜெகந்நாதன் தெரிவித்தார். போய்ப் பார்க்க வேண்டும் என மனம் விரும்பினாலும் எனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இருமலும் காய்ச்சலுமாக இரவெல்லாம் அவதிப்பட்டு அதிகாலை சோர்வில் தளர்ந்தபோது ஜெகந்நாதனின் செய்தி வந்தது. அது மேலும் என்னைப் பலவீனப்படுத்திவிட்டது. நினைவுகூர நல்ல விஷயங்களை மட்டுமே விட்டுச் செல்வது நட்பில் அபூர்வம். அத்தகைய அபூர்வ மனிதர் அவர்.
திரு ராஜ் கௌதமன் அவர்களுக்கு என் அஞ்சலியையும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் இந்திரன் தனது முகநூல் பக்கத்தில் ராஜ்கொதமன் மறைவுக்கு அஞ்சலி குறிப்பு எழுதியுள்ளார். அதில், “நம் காலத்தின் ஆகப்பெரும் எழுத்தாளுமையும் அறிவுஜீவியுமான ராஜ் கௌதமன் மறைந்தார். காலையில் முகநூலில் நண்பர் வாசுகி பாஸ்கர் பதிவைப் பார்த்து பதறினேன்.சங்க இலக்கியம் உட்பட அனைத்தின் மீதும் இதுவரை வைக்கப்படாத காத்திரமான விமர்சனங்களை முன் வைத்தார் ராஜ் கௌதமன்.
இவரது முதல் நூலான "தலித் பண்பாடு" நூலின் அட்டைப்படத்தை நான்தான் உருவாக்கினேன்.. புதுச்சேரியில் ரவிக்குமார் எம்பி நண்பர்கள் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட மாபெரும் விழாவில் ராஜ் கவுதமனின் முதல் நூலான " தலித் பண்பாடு " நூலை நான் வெளியிட முதல் பிரதியை மாபெரும் அறிவு ஜீவி வ. கீதா பெற்ற காட்சிகள் மனதில் ஓடி இதயத்தின் பாரத்தை கூட்டுகின்றன.
ராஜ் கௌதமன் என்று சொன்னாலே எதையுமே அறிவுபூர்வமான விமர்சனத்துக்கு உள்ளாக்கி பகடி செய்து நகைக்கும் அவரது முகம்தான் எனக்கு நினைவு வருகிறது.
தமிழ் இனி விழாவில் எனது" தேடலின் குரல்கள் " கனமான புத்தகத்தைக் கொடுத்தவுடன் அதன் எடையைத் தூக்க முடியாதது போல பகடி செய்து அவர் சிரித்ததை என்னால் மறக்க முடியவில்லை. லண்டனில் வாழ்ந்த அவர் எங்கு மரணம் அடைந்தார் என்பது எனக்குத் தெரியாததால் இன்னமும் குழப்பம் அடைகிறேன்.
எனது நண்பர்கள் சாகிற போது
எனக்குள் உலகங்கள் சாகின்றன.
என்ன செய்ய?” என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் ராஜ்கௌதமன் மறைவுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
“தலித் நோக்கை உலக நோக்காக விஸ்தரித்த பெருந்தாதன் ராஜ் கெளதமன் அவர்களுக்கு அஞ்சலி.” என்று எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.