இலக்கியத்துக்காக இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞான பீடம் விருது நம் காலத்தின் மகத்தான படைப்பாளியான கி.ராஜநாராயணனுக்கு தரப்பட வேண்டும் என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அரசு ஒவ்வொரு மொழியிலும் இலக்கியத்துக்காக ஆண்டு தோறும் சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது. அதே போல, இலக்கியத்தில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ஞான பீடம் விருது வழங்கப்படுகிறது.
தமிழுக்கு கடைசியாக எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காக 2002ம் ஆண்டு ஞான பீடம் விருது வழங்கப்பட்டது. அதற்கு முன்பு எழுத்தாளர் அகிலனுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. தமிழில் அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இரண்டு எழுத்தாளர்களுக்கு மட்டுமே ஞான பீட விருது வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில், தமிழில் ஞானபீடம் விருது அளிக்கபட்டிருக்க வேண்டும் என்றால் இன்னும் நிறைய எழுத்தாளர்களுக்கு ஞான பீடம் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். சுந்தர ராமசாமி, அசோக மித்திரன், கி.ராஜநாராயணன், வண்ண நிலவன் ஆகியோருக்கு ஞான பீடம் விருது வழங்குவதற்கான தகுதி உள்ள படைப்புகளை அளித்துள்ளனர் என்பதே தமிழ் வாசகர்களின் கருத்தாக உள்ளது. இந்த வரிசையில் சுந்தர ராமசாமி, அசோக மித்திரன் இருவரும் இறந்துவிட்டனர்.
ஒரு எழுத்தாளனை அவர் வாழும் காலத்திலேயே கௌரவிக்கப்பட்டு கொண்டாடப்படுவது மிகவும் முக்கியமானது. அந்த வகையில், தமிழின் மூத்த எழுத்தாளராக இருக்கும் கி.ராஜநாராயணனுக்கு ஞான பீடம் விருது வழங்கப்பட வேண்டும் வேண்டும் என்பது பல தமிழ் வாசகர்களின் விருப்பமாக உள்ளது என்றால் அது மிகையல்ல.
எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தற்போது 98 வயதாகிறது. தமிழின் மிக மூத்த படைப்பாளி. கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், மாயமான், அந்தமான் நாயக்கர், பிஞ்சுகள் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல், களவு, கண்ணிமை, அப்பா பிள்ளை, அம்மா பிள்ளை, கரிசல் கதைகள், கொத்தை பருத்தி உள்ளிட்ட சிறுகதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். நாட்டுப்புற கதைக் களஞ்சியம், தமிழ் நாடோடி கதைகள், வயது வந்தவர்களுக்கு மட்டும் நாட்டார் கதைகளை தொகுத்துள்ளார். கி.ராஜநாராயணன் தமிழ் இலக்கியச் சூழலில் வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் அன்புடன் கி.ரா என்று கொண்டாடப்படுகிறார்.
கி.ராஜநாராயணன் 98 வயதிலும் சிறுகதைகளை எழுதி வருகிறார். சமீபத்தில் அவர் எழுதிய அண்டரெண்டபட்சி சிறுகதையை தனக்கு அனுப்பி வைத்தது குறித்து குறிப்பிடுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணனுக்கு ஞானபீட விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதனை, எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணையப் பக்கத்திலும் எழுதியுள்ளார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ஞானபீட விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், “கிராவிற்கு ஞானபீடம் என்ற hashtagல் trending ஆக்கலாம். உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் முன் வரவேண்டும்.” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"