இலங்கை தமிழர்கள் பற்றியும், பிரபாகரனைப் பற்றியும் உணர்ச்சி பொங்க சீமான் பேசுகிறார். சீமானின் அரசியல் செயல்பாடுகளால் ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது பயனுண்டா?
சீமானால் எங்களுக்கு இதுவரை எந்தவொரு பயனும் கிடைத்ததில்லை. ஆனால், ஈழத் தமிழர்களிடமிருந்து சீமானுக்குக் கட்சிக் கொடி, இலச்சினை உட்பட ஏராளமான பயன்கள் கிடைத்துள்ளன. ஈழத் தமிழர்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து ‘நாம் தமிழர் கட்சி’க்குப் பணம் அனுப்புகிறார்கள். சீமான் ஈழத்துக்கு வந்திருந்தபோது, போரால் கடுமையான உணவுப் பஞ்சமும் அங்கே நிலவியபோதும் சீமானுக்கு மூன்று வேளையும் உணவளித்துத் தடபுடலாக விருந்தோம்பியிருக்கிறோம். துப்பாக்கி சுடுவதற்கு, கப்பலைக் கடத்துவதற்கு எல்லாம் கற்றுக்கொடுத்துள்ளோம். இவற்றுக்கு நன்றி செலுத்தும் வகையில் இனித்தான் சீமான் ஏதாவது எங்களுக்குச் செய்ய வேண்டும்.
இப்போது ஈழத் தமிழர்கள் சந்திக்கும் முதன்மைச் சிக்கலாக எதை பார்க்கிறீர்கள்?
ஒற்றுமையின்மைதான் முதன்மைச் சிக்கல். சிங்களப் பேரினவாதிகள் மிகுந்த ஒற்றுமையுடன் முழு இலங்கையையும் சிங்களப் பவுத்த மயமாக்குவது என்ற தூரநோக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களோ இதை எதிர்கொள்ளத் திராணியற்று தங்களுக்குள் கட்சிகளாகவும் சாதிகளாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். ஆளையாள் மாறி மாறித் துரோகிப் பட்டம் கட்டிப் புறம் தள்ளுகிறார்கள். ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அய்.நாவையும் அமெரிக்காவையும் இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தையும் நம்புவர்கள் சக தமிழரை நம்புவதற்கு மறுக்கிறார்கள். இணைந்து வேலை செய்யப் பின்னடிக்கிறார்கள். உண்மையில் இன்றைய ஈழத் தமிழ்க் கட்சிகளிடம் கொள்கை அடிப்படையில் பெரிய வேறுபாடுகளில்லை. அதிகாரப் போட்டியாலும், தேர்தல் அரசியலாலுமே இவர்கள் பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகள் என்ற அடிப்படையில் இவர்கள் ஒரணியாகத் திரளாவிட்டால், முழு இலங்கையும் மிக விரைவிலேயே சிங்கள பவுத்தமயமாவதை யாராலும் தடுக்க முடியாது.
உங்களது புத்தகங்கள் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களால் வாசிக்கப்படுகின்றன. இதை மனதில் வைத்துக்கொண்டுதான் ஒரு கதைக்கான மொழியைத் தெரிவு செய்வீர்களா? சில கதைகள் ஈழ வட்டார மொழி வழக்கில் இருக்கின்றன, அதைப் படிப்பதில் வாசகர்களுக்குச் சிக்கல் ஏற்படாதா?
சிக்கல் இருக்கக் கூடும். அந்தச் சிக்கைச் சிரத்தையுள்ள இலக்கிய வாசகர் சற்றே சிரமப்பட்டாவது அவிழ்த்துவிடுவார். அப்படி அவிழ்த்துத்தான் ஈழத்தவர்களான நாங்கள் தமிழக வட்டார வழக்கு இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருக்கிறோம். வட்டார மொழி வழக்கு என்பது ஓசைகளால் மட்டும் வேறுபடுவது அல்ல. அது வேறொரு பண்பாட்டையும் நிலத்தின் வாசனையையும் நம்மிடம் எடுத்து வருகிறது அதன் தனித்துவத்தையும் அழகையும் அனுபவிக்கச் சோம்பல்பட்டால் எப்படி? அதனால்தான் நான் புனைகதைகளின் அடியில் சொல் விளக்கமோ, வழக்குச் சொல் அகராதியோ கொடுப்பதில்லை. சிங்களத்தில், பிரஞ்சில் கூட என்னுடைய கதைகளில் சில வரிகள் ஆங்காங்கே இடம் பெறுவதுண்டு. அவற்றுக்கும் நான் அகராதி கொடுப்பதில்லை. கதையின் சித்தரிப்பிலேயே அவற்றை வாசகர்களுக்குப் புரியப்பண்ணவே நான் முயற்சிக்கிறேன். ‘டப்பிங்’ இலக்கியத்திற்கு ஆகாது.
கதைக்கான மொழியைத் தெரிவு செய்வதில் என்னிடம் தெளிவான விதிகள் ஏதுமில்லை. புனைவு கதையின் மொழி இசையைப் போன்றிருக்க வேண்டும் என்பது எனது அவா. எப்படி இசை சித்திக்கிறது எனக் கேட்டால் இளையராஜா மேலே கையைக் காட்டுகிறார். உள்ளுணர்வின் உந்துதலால் ஏற்படும் மன எழுச்சியையும் கற்பனையையும் படைப்பு நுட்பத்தையுமே அவர் கடவுள் எனக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு கதைக்கான மொழியும் அவ்வாறுதான் தேர்ந்த படைப்பாளியிடம் உருவாகிறது என்றே நான் நினைக்கிறேன்.
உங்கள் படைப்புகளில் பெரும்பாலும் இலங்கை யுத்தமும், அதன் பாதிப்பும் வெளிப்படுகிறது. இவற்றைத் தவிர்த்து வேறு வகையான கதை மற்றும் நாவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?
நேற்று, புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய கதைகள் ரஷ்யாவைப் பின்னணியாகக்கொண்டு, ரஷ்யப் பாத்திரங்களை வைத்தே எழுதப்படும். மிக்கயீல் நிக்கொலேவிச்சுகளும், அன்னா நடேஷாக்களும் அவரது கதைகளில் தாராளமாக உறைபனியில் நடமாடுவார்கள். எனவே அவரிடம் ‘ஈழத்தை மையமாக வைத்து ஏன் நீங்கள் கதைகளை எழுதுவதில்லை?’ என்று கேட்டேன். அவரோ ‘ஈழப் பிரச்னையைத் தொட்டால் பிரச்சினையில் சிக்குப்பட வேண்டிவரும். எதை எழுதினாலும் புலி ஆதரவாளர்களோ, புலி எதிர்பாளர்களே என்னைப் பிய்த்துத் தின்றுவிடுவார்கள்’ என்று வெள்ளந்தியாகச் சொன்னார். எனவே ரஷ்யக் கதைகளையும், பிரெஞ்சுக் கதைகளையும், வேறு வகையான கதைகளையும் அவரைப் போன்ற எழுத்தாளர்கள் எழுதட்டும். இலங்கையில் நிகழ்ந்த கொடிய யுத்தத்தை பக்கம் சாராமலும், சுயதணிக்கைகள் இல்லாமலும் எழுத என்னைப் போல சில எழுத்தாளர்களே இருக்கிறோம். நாங்கள் இது குறித்து எழுத வேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன. நாடுகாண் பயணியான மார்க்கோ போலோ தனது மரணப்படுக்கையில் இருந்த போது ‘நான் பார்த்தவற்றில் பாதியைத்தான் இதுவரை சொல்லியிருக்கிறேன்’ என்றாராம். அதுபோன்று நான் பார்த்தவற்றிலும் கேட்டவற்றிலும் கால்வாசியைக் கூட நான் இன்னும் எழுதி முடிக்கவில்லை.
பெண் விடுதலைப் புலிகளை நான் கொச்சைப் படுத்தினேனா? ஷோபா சக்தி
இந்து என்ற கதையாடல் அடிப்படையில் ஈழத்தை வென்று விட நினைப்பது முட்டாள்தனம்: ஷோபாசக்தி
( எழுத்தாளர் ஷோபா சக்தி நேர்காணலின்போது பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்கள் இரண்டு தொகுப்புகளாக வெளியானது. இதன் கடைசி மற்றும் 3- வது தொகுப்பு இன்று வெளியாகி உள்ளது.)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/