Advertisment

சுஜாதா இலக்கிய எழுத்தாளரா? வணிக எழுத்தாளரா? இன்னும் தொடரும் சர்ச்சைகள்!

எழுத்தாளர் சுஜாதா வாழ்ந்தபோதும் அவருடைய மறைவுக்குப் பிறகும் தமிழ் இலக்கிய சிறுபத்திரிகை குழுக்களில் சுஜாதா இலக்கிய எழுத்தாளரா, வணிக எழுத்தாளரா, என்ற விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Writer Sujatha controversy, writer Sujatha was series literature writer or commercial writer debates, Sujatha, எழுத்தாளர் சுஜாதா இலக்கிய எழுத்தாளரா, எழுத்தாளர் சுஜாதா, சுஜாதா வணிக எழுத்தாளரா, எழுத்தாளர் சுஜாதா தொடரும் சர்ச்சைகள், மனுஷ்யபுத்திரன், அபிலாஷ், போகன் சங்கர், கடற்கரய், Sujatha, manushyaputhiran, Abilash, Bogan Sankar, Kadarkarai, tamil literature

தமிழ் இலக்கியத்தில் பெரிய அளவில் வாசகர்களைக் கொண்டவர் எழுத்தாளர் சுஜாதா. அறிவியல் புனைகதைகளை எளிமையாக புரிந்துகொள்ளும்படி எழுதியவர். 60க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் மூலம் என தமிழ் வாசகர்களுக்கு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியவர். அதுமட்டுமில்லாமல், எழுத்தாளர் சுஜாதா பல வெற்றி படங்களில் திரைக்கதையாசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழின் மிக முக்கியமான கவிஞர்களை, எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவர். வாசகர்களால் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் சுஜாதா 2008ம் ஆண்டு மறைந்தார்.

Advertisment

எழுத்தாளர் சுஜாதா வாழ்ந்தபோதும் அவருடைய மறைவுக்குப் பிறகும் தமிழ் இலக்கிய சிறுபத்திரிகை குழுக்களில் சுஜாதா இலக்கிய எழுத்தாளரா, வணிக எழுத்தாளரா, என்ற விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. சுஜாதா வணிக எழுத்தாளர் என்று யாரேனும் சொல்கிறபோது, சுஜாதா இலக்கிய எழுத்தாளர்தான் என்று அவருடைய வாசகர்களும் எழுத்தாளர்களும் தங்கள் வாதங்களை வலுவாக முன்வைப்பார்கள். சில ஆண்டுகளாக ஓய்ந்திருந்த இந்த சர்ச்சை, சென்னை புத்தக் கண்காட்சி வர உள்ள நிலையில் மீண்டும் எழுந்துள்ளது.

தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் திடீரென சுஜாதா தீவிர இலக்கிய எழுத்தாளரா, வணிக எழுத்தாளரா என்று சமூக ஊடகங்களில் முனுமுனுக்க மீண்டும் தமிழ் இலக்கிய உலகம் சுஜாதா பற்றிய விவாதத்தையும் சர்ச்சையையும் தொடங்கியுள்ளது. முகநூலில் எழுத்தாளர்களுக்கு இடையே நடந்த விவாதங்கள் இங்கே தொகுத்து தரப்படுகிறது.

எழுத்தாளர் அபிலாஷ் தனது முகநூல் பக்கத்தில், சுஜாதா குறித்து எழுதியிருப்பதாவது:
“1) எனக்கு எந்த படைப்பாளியையும் மேல்-கீழ் என படிநிலைப்படி நோக்குவதில் உடன்பாடில்லை. நாம் வாசிக்கும் போதோ எழுதும் போதோ இத்தகைய மதிப்பீட்டை செய்வதில்லை. விமர்சிக்கும் போது மட்டுமே இந்த மதிப்பிடும் வெறி கிளம்புகிறது. அது அதிகாரத்தை உற்பத்தி பண்ணும், ஒரு குறிப்பிட்ட படைப்பாளியை சந்தைப்படுத்தும், ஒரு குறிப்பிட்ட பண்பாட்டை மக்கள் மீது திணிக்கும் மோசமான நோக்கத்தில் தோன்றும் வெறி.

2) இலக்கியப் படைப்புகள் சிக்கலானவை, வாசிக்க சவாலானவை, வணிக எழுத்துகள் எளிமையானவை, வாசிக்க சவாலற்றவை என்பது தான் பிரதானமான முதல் வேறுபாடு.

3) அடுத்து, இலக்கிய படைப்புகள் அளவுக்கு வணிக எழுத்துகள் பரிசோதனைகளில் ஈடுபடுவதில்லை.

4) மூன்றாவதாக, வணிக எழுத்துக்கள் வாசகன் எதிர்பார்க்கும் உணர்ச்சியைக் கிளறி அவனுக்கு சுகமளிக்க முயல்கின்றன. இலக்கிய படைப்புகள் அவன் சற்றும் விரும்பாத, அவனால் ஜீரணிக்க முடியாத ஒரு கோணத்தில், உணர்ச்சியில், தொனியில் வாசிப்பு அனுபவத்தை தருவதுண்டு. உ.தா., வதையை ரொம்பாண்டிசைஸ் பண்ணாமல் நேரடியாகக் கொண்டாடுகிற ஒரு படைப்பை வணிக எழுத்தில் நீங்கள் காண முடியாது.

5) நான்காவதாக, வணிக எழுத்தில் அடுத்தென்ன எனும் கேள்வி முக்கியம். எதிர்-கதைகளில் துவங்கி மௌனி வகையான அரூப கதைகளில் வரை சம்பவங்களின் விளைவுகள் முக்கியமல்ல. சொல்லப்போனால் கதையே முக்கியமல்ல என ஒரு இலக்கிய படைப்பு கோர முடியும். வணிக எழுத்தால் அது முடியாது.

இந்த நான்கைத் தவிர வேறு முக்கியமான வேறுபாடுகள் எனக்குத் தோன்றவில்லை. இந்த வரைமுறையைக் கொண்டு சுஜாதா எழுதிய பெரும்பாலான சிறுகதைகள் வணிக எழுத்து, சில கதைகள் இலக்கிய படைப்பு என்று வகைப்படுத்தலாம். (அதே நேரம் வணிகக் கதைகளாக இருப்பதால் அவை தரமற்ற படைப்புகளும் அல்ல. வைனுக்கும் பிராந்திக்குமான வேறுபாட்டைப் போன்றது தான் இதுவும். நான் இங்கு பெயருக்குத் தான் வகைபிரிக்கிறேனே ஒழிய அவருக்கு, இவருக்கு சுஜாதா மேல்-கீழ் எனும் வாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.)
இன்னொரு விசயம், இலக்கிய பிரதிகளிலும் மேற்சொன்ன வணிக எழுத்தின் இயல்புகளை நாம் தாராளமாகப் பார்க்க முடியும். வணிக எழுத்திலும் இலக்கிய சாயல்களைக் காண முடியும். இன்று இலக்கிய மேதைகள் என்று அறியப்படுகிறவர்களிடம் வணிக எழுத்தின் நரம்புகளை நாம் கண்டறிய முடியும். இதனால் தான் நுட்பமான வாசகர்கள் எழுத்தாளனை தரம் பிரிக்க மாட்டார்கள்.

எதையும் மிகைப்படுத்தி ஒன்று தலைக்கு மேல் தூக்கி வைக்கிற அல்லது தரையில் போட்டு மிதிக்கிற இயல்பு நம்மவர்களுக்கு உண்டு. ஒரு பக்கம் இலக்கிய தரவரிசையில் யாரெல்லாம் முன்னே பின்னே என சட்டையைக் கிழிக்கிறார்கள், அல்லது சுஜாதா போன்றவர்களுக்கு இலக்கிய முத்திரை குத்தலாமா கூடாதா எனும் சண்டை வலுக்கும் போது சுஜாதா இலக்கிய எழுத்தாளர்களை விட மேல் என்றோ கீழ் என்று கோஷமிடுகிறார்கள். நீங்கள் எங்காவது பல்மருத்துவரே பொதுமருத்துவரை விட மேல் என்கிற வாதங்களைப் பார்த்திருக்கிறீர்களா? எனக்குப் பல்வலி வந்தால் பல்மருத்துவர், ஜுரம் என்றால் பொதுமருத்துவர். இலக்கியத்துக்குள் மட்டும் ஏன் இவ்வளவு மதிப்பீட்டு சண்டை என்றால் அது நமது பக்தி மரபில் இருந்து, மத துவேஷ மோதல் வரலாற்றில் இருந்து வருகிறது. இதெல்லாம் சுத்தமான நேர வீணடிப்பு சமாச்சாரம்.

சில நேரம் நம் இலக்கிய சூழலில் இருப்பது தீவிர மதவாதிகள் நடுவே இருப்பதைப் போல இருக்கிறது. இவர்கள் எதை எடுத்துக் கொண்டாலும் அதை ஒரு மதத்தைப் போன்றே பாவிக்கிறார்கள்.

நான் சுஜாதாவின் மொழியின் நுட்பங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன், பேசி இருக்கிறேன், அதற்காக அவரை ஜெயமோகனுடன், ஜி.நாகராஜனுடன், எஸ்.ராவுடன் ஒப்பிட்டு யார் மேல்-கீழ், யார் அதிகபட்ச சாதனை செய்தவர் என்று எழுததோ பேசவோ மாட்டேன். சொல்லப்போனால் நான் ஜெயமோகன், ஜி.என், எஸ்.ராவைக் கூட பரஸ்பரம் ஒப்பிட்டு தரவரிசை செய்ய மாட்டேன்.

நான் ஒரு சவாலை முன் வைக்கிறேன் - நீங்கள் ஒரு சுவாரஸ்மான வணிகக் கதையையும் அதே அளவுக்கு சுவாரஸ்யமான இலக்கிய கதையையும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் தன்னை மறந்து வாசியுங்கள். அப்போது நடுவே இது இலக்கியம், இது வணிகம் என உங்கள் அனுபவத்துக்கு தட்டுப்படுகிறதா என்று சொல்லுங்கள். நீங்கள் உப்பை வாயில் போட்டால் உப்பென்று தெரிந்து போகும். சர்க்கரையை போட்டால் சர்க்கரை என்று தெரியும். ஆனால் எழுத்தை மட்டும் அப்படி அறிய முடியாது. அது நம் இருத்தலுடன் தொடர்புள்ள அனுபவம். இருத்தல் எந்த பாகுபாட்டையும் அறியாதது.

எழுத்தாளர் அபிலாஷ் பதிவுக்கு கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறியிருப்பதாவது:
“அபிலாஷ் தாலிபான்கள் தொடர்பாக எழுதியதற்கு நிகராக மற்றொரு முக்கியமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"இலக்கியப் படைப்புகள் சிக்கலானவை, வாசிக்க சவாலானவை, வணிக எழுத்துகள் எளிமையானவை, வாசிக்க சவாலற்றவை என்பது தான் பிரதானமான முதல் வேறுபாடு." என்கிறார்.

சிக்கலானவை என்றால் பிரதி தரும் சிக்கலா, வாசிப்பவரின் பயிற்சியைப் பொறுத்து ஏற்படும் சிக்கலா? பாரதி பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் ' சில வருட நூல் பழக்கம் உள்ளவருக்கும் புரியும் வண்ணம் அக்காப்பியத்தை எளிமையாக எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறான். நான் டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் படித்தபோது என் வயது 17 . அதே காலத்தில்தான் அசோகமித்திரனையும் ஜெயகாந்தனையும் படித்தேன். எனக்கு அதில் எந்த சிக்கலும் தோன்றவில்லை. வாசிப்பதில் எந்த சவாலும் இல்லை. வேறொன்று நினைவுக்கு வருகிறது. கல்குதிரை கொண்டுவந்த மார்க்வெஸ் சிறப்பிதழில் வந்த மொழிபெயர்ப்பு கதைகள் வாசிப்புக்கு பெரும் சவாலாக இருந்தன. பிறகு அக்கதைகளை ஆங்கிலத்தில் படித்தபோது அவற்றின் எளிமையும் இலகுவானதன்மையும் பெரிதும் வியப்பில் ஆழ்த்தின. கி.ராவின் கதைகள் மிக மிக எளிமையானவை. ஜெயகாந்தனின் கதைகளும்கூட. அவை வெகுசன இதழ்களில் வெளிவந்து பெரும் புகழ்பெற்றன.

மோகமுள்ளில் என்ன சிக்கலும் சவாலும் இருக்கிறது. தமிழ் எழுதப்படிக்க தெரிந்த யாரும் அதைப்படிக்க மாட்டார்களா? வெகுசன எழுத்திலேயே ஒரேவிதமான வாசகர்கள் கிடையாது. சுஜாதா ஒரே ஒரு முறை ராணியில் ஒரு தொடர்கதை எழுதினார். அது அவர் விகடனில் எழுதும் கதைகள்போல சூட்சுமங்களும் துள்ளல்களும் நிறைந்த கதை அல்ல. மிக மிக நேரடியாக எழுதப்பட்ட கதை. ஒருவிதத்தில் சுஜாதாவின் வழக்கமான பாணியிலிருந்து விலகிய கதை. விகடன் வாசகர்கள் மத்தியதர, நகப்புறத்தைச் சேர்ந்தவர்களாகவும் ராணி கிராமப்புற பள்ளி இறுதியைத்தாண்டாத பெண்களை இலக்காகக்கொண்டதாகவும் இருந்தன.

கவிதையிலும் சிக்கலும் சவாலும் தகுதிகளாக ஒரு காலத்தில் கருதப்பட்டன. பின்னர் அந்த மாயை தகர்க்கப்பட்டு இன்று நவீன கவிதை உரை நடைக்கு மிக அருகில் எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டதாகிவிட்டது.

அபிலாஷின் அளவுகோல்படி கோணங்கி தமிழின் மிகச்சிறந்த இலக்கிய எழுத்தாளராகவும் அசோகமித்திரன் எளிய இலக்கியமற்ற வணிக எழுத்தாளராகவும் ஆகிறார்கள். வெங்கட் சாமிநாதனின் இலக்கிய உள்வட்டம் என்ற சனாதான கருத்தைத்தான் அபிலாஷ் வேறு சொற்களில் கூறுகிறார்

புதுமைப்பித்தன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “விசித்திரமான அபிப்ராயங்கள் உருவாகும் இடத்தை யாரால் கண்டறிய முடியும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுஜாதாவின் எழுத்துகள் குறித்து எழுத்தாளர் போகன் சங்கர் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை எழுதியுள்ளார்.

போகன் சங்கர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “சுஜாதா ஜன ரஞ்சக எழுத்தாளர்.சில நல்ல இலக்கியக் கதைகளை எழுதியிருக்கிறார்.ஆப் செட் ப்ரிண்ட்,நல்ல வழா வழா பேப்பர்,அதிர்ச்சிகரமான கவர்ச்சிப் படங்கள் போன்ற நவீனமான எல்லாமே ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு இலக்கியப்பத்திரிகைகளை விட சீக்கிரமே வந்துவிடும்.இலகுவான மொழியும் கூட அப்படியே.ஆனால் தீவிர இலக்கியப் பத்திரிகைகள் கொச கொசவென்ற எழுத்துக்குவியலோடு மிகக் குறைவான தெளிவில்லாத புகைப்படங்களோடுதான் இன்னும் இருக்கின்றன என்று காணலாம்.ஒரு இறுக்கம் எப்போதும் இருக்கும்.இறுக்கமே செறிவு என்ற எண்ணம் அங்குண்டு.சொல்லப்படாத ஒரு இலக்கிய சனாதனச் சட்டம் அங்கு உண்டு.சாரு உடைப்பை ஏற்படுத்தியது அந்த வெளியில்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

போகன் சங்கர் தனது மற்றொரு பதிவில், “நேற்று சுஜாதா இலக்கியவாதி இல்லை என்று சொல்லிவிட்டதற்காக சிலர் போனில் எனக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தனர்…"
"என்ன சார் திடீர்னு சாரு ஸ்டைல்ல எழுதறீங்க?” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுஜாதா பற்றி சுஜாதாட்ஸ் என்று போகன் சங்கர் தொடர் பதிவிட்டுள்ளார்.

சுஜாதாட்ஸ்-1

சுஜாதாவின் புகழ்பெற்ற துரித ஸ்கலித நடை பற்றி சில வார்த்தைகள்.சுஜாதாவின் இந்த வெகு வேக நடை, நண்பர் கேவீ சொன்னது போல மேற்கில் அப்போது வந்துகொண்டிருந்த ஏராளமான 33c துப்பறியும் திரில்லர்களின் இலகு நடை.சுஜாதாவின் நூல்களை ரொம்ப சிரமமே இல்லாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விட முடியும்.ஏனெனில் தமிழ் மொழிக்கே உரிய நுட்பங்கள் எதுவும் அதில் இருக்காது.உண்மையில் அவர் நூல்களில் இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் கொண்டிருந்த நுட்பமோ இந்தியத் தன்மையோ கூட இல்லை.அவர் ஆங்கிலத்தில் எழுதாததன் காரணம் இதுவாகவே இருக்கக்கூடும். அவர் நடை ஆங்கில திரில்லர்களைப் படித்துக்கொண்டிருந்த படிக்க விரும்பி ஆங்கிலத்தில் பரிச்சயக் குறைவினால் ஏங்கிக் கொண்டிருந்த மேல் ,நடு வர்க்க மக்களுக்கு தமிழில் வாசிக்க வாகான நடை.

அவரது வேகமான நடை பெரும்பாலும் மொழியுடனான ஒரு அவசரப் புணர்ச்சி மாத்திரமே.அவர் கதைகளில் வருகிற கலவிகள் கூட இப்படியே இருப்பதைக் காணலாம்.அவரது வாசகர்கள் பெரும்பாலும் உலக சினிமாத் திரைப்பட விழாக்களுக்கு வந்து 'சீக்கிரம் சீனைப்போடு மாமா'என்று கத்துகிறவர்கள்.அந்த அவசரத்தைத்தான் சுஜாதா பூர்த்தி செய்தார்.முதல் வாக்கியத்திலேயே ஒரு சீன்!

இப்படி மேற்கிலிருந்து emulate செய்ய துப்பறியும் கதைகள் வகைமையிலேயே நுட்பமாக எழுதிக்கொண்டிருந்த john de le carre, len deighton போன்றவர்களைக் கூட அவர் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவர் இங்கு கொண்டுவந்தது Earl Stanley Gardner, Desmond Bagley போன்றவர்களின் நடையைத்தான்.அவர் வியந்து பேசிய John Fowles இன் நடையைக்கூட அவர் யோசிக்கவே இல்லை. இதே போன்று கூர்மையாக சிறிய வாக்கியங்களில் எழுதிய ஹெமிங்வே போன்றவர்கள் எழுதியது போன்ற பெரிய இலக்கியப் பிரதிகள் எதையும் அவரால் உருவாக்கவில்லை.அல்லது முடியவில்லை

சுஜாதாட்ஸ் 2

சுஜாதாவின் புகழ்பெற்ற இந்த வேக நடைதான் அவரை இலக்கியவாதியாக அங்கீகரிக்கவும் தடையாக உள்ளது.அவர் சரித்திர நாவல் எழுதினாலும் இலக்கியக் கருக்கள் உள்ள சிறுகதைகளை இலக்கிய இதழ்களில் எழுதினாலும் இதே நடையில்தான் எழுதினார்.அவர் சிறுகதைகளில் கூடுதலாய் ஓ ஹென்றி பாதிப்பைக் காணலாம்.இந்த தடையை அவர் உணர்ந்திருக்காமல் இருந்திருக்க மாட்டார். புத்திசாலி ஆனால் புத்திசாலிகளுக்கு முடியாத விஷயங்கள் இலக்கியத்தில் நிறைய உள்ளன(பட்டன் மொபைலைச் சரியாகக் கையாளத் தெரியாத தேவதேவன் தமிழின் மகத்தான கவிதைகளை எழுதியிருக்கிறார்) ஆனால் அதற்குள் அவரது வணிகக்குறி(டிரேட் மார்க்)நடை பிரம்மாண்டமான பூதமாகி அவர் தலை மேல் அமர்ந்துவிட்டது. அவர் அந்த நடையைக் கைவிட்டால் ரசிகர்கள் அவரைக் கைவிட்டுவிடுவார்கள்.தயிர் சாதத்துக்கு புகழ்பெற்ற கடையில் திடீரென்று சிக்கன் சமோசா விற்க ஆரம்பித்தால் குழம்பிவிடுவார்கள் தானே?

இலக்கியத்துக்கு சுஜாதாவின் உடனடி இனிப்பு நடை உகந்தது அல்ல. short is not always sweet there!

சுஜாதாவின் அறிவியல் புனைவுகளையும் நாம் அதிகபட்சம் Michael Crichton, Robin cook போன்றவர்கள் அருகில்தான் வைக்கலாம். ஐசக் அசிமொவ்,ரே பிராட்பரி ,ஆர்தர் சி க்ளார்க் கூட சந்தேகம். பிலிப் டிக், உருசுலா லீக்வின் எல்லாம் வெகு உயரத்தில் இருக்கிறார்கள். க்ரிக்டன், குக் இருவரும் வாடகை நூலகங்களின் டார்லிங்குகள் என்று காணலாம்.சுஜாதாவும் அப்படியே. ராபின் குக்கையும் க்ரிக்டனையும் நேசிப்பவர்கள் சுஜாதாவையும் நேசிப்பார்கள்.

இவர்கள் எல்லாம் சுவாரஸ்யமான புத்திசாலித்தனமான அந்த வகைமையில் நல்ல எழுத்தாளர்கள் சந்தேகமில்லை. ஆனால், மேற்கில் ஒருவரும் க்ரிக்டனை டால்ஸ்டாயோடு தாஸ்தவஸ்கியோடு வில்லியம் பால்க்னரோடு ஒப்பிடத் துணிய மாட்டார்கள்.இங்கு அசால்ட்டாக சுஜாதா அசோகமித்திரனை விட சுந்தர ராமசாமியைவிட நுட்பமானவர் என்று வெட்கமே இல்லாமல் சொல்லித் திரிகிறார்கள்.

சுஜாதாட்ஸ் 3

சுஜாதாவின் இலக்கிய மதிப்புக்கு ஒரு வினோதமான காரணம் சொல்லப்படுகிறது. அவர் ஒரு பெஸ்ட் செல்லர்.பரவலான தாக்கம் ஏற்படுத்தினார்.

இது பற்றி கொஞ்சம் பேசுவோம்.சுராவை விட நிச்சயம் சுஜாதா அதிகம் படிக்கப்படுவார். பரவலான தாக்கத்தை ஏற்படுத்துவார். சுஜாதாவை விட ராஜேஷ்குமார் அதிகம் படிக்கப்படுவார். ராஜேஷ்குமாரை விட ரமணிச்சந்திரன் அதிகம் படிக்கப்படுவார். ரமணிச்சந்திரனை விட அவரது மெலிந்த நகல்களை அதிகம் படிப்பார்கள். தினத்தந்தி வாரமலர்க் கதைகளை இன்னும் லட்சக்கணக்கான பேர் படித்து தாக்கத்துக்கு ஆளாவார்கள். இதற்கும் இலக்கிய மதிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இது எதையாவது இலக்கியத்தில் பிரதிபலிக்கிறது எனில் இவற்றை வாசிக்கிற சமூகங்களின் முதிர்சி அல்லது முதிர்ச்சியின்மையையே பிரதிபலிக்கிறது. அந்த எழுத்தாளர்களின் இலக்கிய மதிப்பை அல்ல. சுராவை விட சுஜாதா அதிகம் வாசிக்கப்படுவார் எனில் அது அந்த சமூகத்தின் தலைவிதி. popularity increases proportional to mediocrity.

உலகின் மகத்தான கவிகளுள் ஒருவரான எமிலி டிக்கின்சனின் 1800 கவிதைகளில் பத்து கவிதைகள் மட்டுமே அவர் வாழ் நாளில் பிரசுரமாகி உள்ளன.அவர் வாழ் நாளில் அவரை வாசித்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்.அவள் அவள் காலத்தில் நிச்சயமாக ஒரு பெஸ்ட் செல்லர் அல்ல.

பெஸ்ட் செல்லர் ஆவது ,வைரல் ஆவது எல்லாம் வியாபாரிகளுக்கு முக்கியம்.வியாபாரிக்கு முக்கியம்.சில நேரங்களில் அங்கீகாரத்துக்கு ஏங்குகிற இலக்கியவாதிகளுக்கும் முக்கியமாகலாம். இலக்கியத்துக்கு அல்ல. இதை ஒரு பிரதியின் தரம் குறித்த விவாதத்தில் கொண்டு வருகிறவர்கள் புதியவர்கள் எனில் இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் என்று பொருள். பழையவர்கள் இப்படிப் பேசினால் உள்ளுக்குள் அழுகி தங்கள் ஆன்மாவை இழந்துபோய்விட்டார்கள் என்றே பொருள்.

நோய்க்கிருமிகள் மிக எளிதில் பரவும். விதைகள் மெதுவாகத்தான் முளைக்கும். (chuckle)” என்று போகன் சங்கர் தொடர் பதிவுகளை எழுதியுள்ளார்.

எழுத்தாளர் டி.தருமராஜன், எழுத்தாளர் சுஜாதா குறித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

“சுஜாதாவுக்கு சங்கப்பலகையில் இடமுண்டா என்ற விவாதத்தை போகன் சங்கரும் எம்.டி.எம்மும் நடத்திக் கொண்டிருப்பதை காலக்கோடு அடிக்கடி காட்டிக் கொண்டிருக்கிறது. சுஜாதா மட்டுமல்ல, ஜனரஞ்சகமாய் எழுத ஆரம்பித்த பாலகுமாரனையும், ஞானக்கூத்தனையும், விக்கிரமாதித்தனையும், கலாப்ரியாவையும், வண்ணதாசனையும்கூட இந்தச் சண்டையில் இழுத்துக் கொள்ள முடியும்.

விக்கிரமாதித்தனின் கவிதைகளில் இலக்கியத்தரத்தை உணர முடிகிற போகன் சங்கரால், எம்.டி.எம்மால் சுஜாதாவில் அதை உணரமுடியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இலக்கிய மதிப்பீடுகள் பெரும்பாலும் இப்படி ஆட்களைக் கவனப்படுத்தியே எழுதப்படுகின்றன. சுஜாதாவிடமுள்ள அடிப்படை பிரச்சினை, அவர் ஜனரஞ்சகமாய் எழுதி வந்தாலும் முகத்தை மட்டும் சீரியஸாக வைத்துக் கொண்டிருந்தார். அதனால், அவர் நிஜமாகவே இலக்கியவாதியோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டு.

அந்த வகையில் சுஜாதாவின் எழுத்து, எம்ஜியார் மாதிரி. சதா தொப்பியும் கண்ணாடியும் அணிந்தபடியே காட்சி தரும். அதிலொரு தெனாவட்டை நீங்கள் தனியாக உணர முடியும்; கேளிக்கையே அதன் நிரந்தர தொனி. இதில் தவறொன்றும் இல்லை. ஜனரஞ்சக வெளிப்பாடு, சாராம்சத்தைக் கொன்று விடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், சுஜாதா சண்டையில், அந்த எழுத்தின் சாராம்சம் பற்றி யாரும் பேசக்காணோம். எம்ஜியார், தொப்பியையும் கண்ணாடியையும் காட்டி தமிழர்களை ஏமாற்றினார் என்று எழுதிய எம்.எஸ்.எஸ். பாண்டியனைப் போலவே, சுஜாதா கில்பான்ஷாக எழுதி ஏமாற்றினார் என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுஜாதா உருவாக்கும் மனோபாவங்கள் குறித்து ஆராயும் பொழுதே அவரது பங்களிப்பை மதிப்பிட முடியும் என்பது என் நம்பிக்கை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுஜாதா திவிர இலக்கிய எழுத்தாளர் இல்லை, அவர் ஜனரஞ்சக எழுத்தாளர், வணிக எழுத்தாளர் என்ற விமர்சனங்களுக்கு சுஜாதா புத்தகங்களின் பதிப்பாளர், கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக எதிர்வினையாற்றியுள்ளார். சுஜாதாவை ஏன் இவர்கள் இலக்கிய எழுத்தாளராக ஒப்புக்கொள்வதில்லை, தமிழ் இலக்கியத்திற்கு சுஜாதாவின் பங்களிப்புகள் குறித்து தொடர் பதிவுகள் எழுதியுள்ளார்.

சுஜாதாவைவிட யாரெல்லாம் மேலானவர்கள் என்று ஆள் ஆளுக்கு ஒரு பட்டியல் தர ஆரம்பித்திருக்கிறார்கள். சுஜாதாவின் அனைத்துப்படைப்புகளையும் ஒருவரி விடாமல் வாசித்திருப்பவன் என்ற முறையிலும் அவற்றில் பெரும்பாலானவற்றை பதிப்பித்திருப்பவன் என்றமுறையிலும் சொல்கிறேன். அவரது சிறுகதைகளிலும் நாவல்களிலும் தமிழ் வாழ்வியலையும் மனித மனதின் நுட்பங்களையும் முன்னுதாரணம் இல்லாத ஒரு புத்தம் புது நடையில் ஒரு இயக்கம்போல எழுதிச்சென்றவர் சுஜாதா. "அவர் நடை நல்லா இருக்கும்.. உள்ளடக்கம் சுமார்… இலக்கியத்தரத்தில் சுஜாதாவைவிட அவர் மேலே.. இவர் மேலே" என்கிற இற்றுபோன ஜல்லிகள்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒருவன் சிறுபத்திரிகை வட்டாரத்தில் புழங்கிக்கொண்டு இருப்பதே ஒருவனது இலக்கியத் தகுதியா? இலக்கிய முகமூடிகள் அணிந்த வெற்றுக்குபைகள் மலைபோல குவிந்துகிடக்கின்றன. இன்னொருபுறம் வெறும் பிம்ப வழிபாட்டின் அடிப்படையிலோ ஃபேஸ்புக் பரபரப்பில் இடம் பிடிக்கும் மனநோயிலோ பிறக்கும் அபிப்ராயங்களுக்கு என்ன பொருள் உள்ளது? நாளை யாரேனும் ஒருவர் சமூகப்பொறுப்பின் அடிப்படையில் சுஜாதாவைவிட மேலாண்மை பொன்னுசாமியே சிறந்த எழுத்தாளர் என்று நிறுவக்கூடும்.

ஒரு பிரதியை வெறும் நடையினால் மட்டும் நிலைநிறுத்த முடியுமா? அல்லது உள்ளடக்கத்தால் மட்டும் அதற்கு ஒரு மதிப்பளிக்க முடியுமா? இரண்டு எப்படி தனித்தனியாக இயங்க முடியும்? என்னடா உங்கள் இலக்கியக் கோட்பாடு? ஒரு எழுத்தாளனின் பிரதிகள், அவனது ஒட்டுமொத்த பங்களிப்பு என எதைப்பற்றியும் எந்த ரெஃபரன்சும் இல்லாமல் எந்த அபத்தமான ஒப்பீட்டையும் வைக்க முடியும் என்பதை ஒரு சீரழிந்த சூழலின் விளைவாகவே பார்க்கிறேன்.

சுஜாதாவின் பல கதைகள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சாரு, அசோகமித்திரன் எழுதிய கதைகளைவிடவும் நுட்பமானவை, வடிவ நேர்த்திக்கொண்டவை, நவீனமானவை. எந்த உலக மொழியிலும் தமிழை பிரதித்துவப்படுத்தும் பிரதிகளாக் மொழிபெயர்க்ககூடிய இலக்கியத் தகுதிகொண்டவை. புக் ஃபேர் வருகிறது அல்லவா, எல்லோருக்கும் கொஞ்சம் பசிக்கிறது. ஒரு சின்ன அட்டென்ஷன் சீக்கிங். அதுதான் இந்தப் புரளிகள்.

சுஜாதாவைப் போலவே வெகுசன தளத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்திய பலர் இருக்கிறார்கள். கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன் , ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எண்டமூரி வீரேந்திர நாத், பி.டி சாமி, புஷ்பா தங்கதுரை இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. ஆனால் சுந்தரராமசாமி தொடங்கி ஜெயமோகன்வரை, ஏன் நேற்றுப்பிறந்த சில இலக்கிய சில்வண்டுகள்கூட சுஜாதாவை மேல் மட்டும் ஏன் தொடர்ந்து கல்லெறிகிறார்கள்? சுஜாதாவின் பிரபலம் அதற்கு காரணமல்ல. இவர்கள் எங்க ஏரியா என இலக்கியத்தில் சொந்தம்கொண்டாடுகிற பல இடங்களை அவர் போகிற போக்கில் கடந்து சென்றார் என்பதுதான். அவர் நவீன இலக்கியசூழலோடு தொடர்ந்து உரையாடினார். கதைசொல்லும் முறைமையில் ஒரு புதிய சென்சிபிலிட்டியை உருவாக்கினார். சுஜாதாவின் இருப்பு இவர்களுக்கு உறுத்துவதற்குக்காரணம் அவர் வெகுசன எழுத்தாளர் என்பதால் அல்ல. பரிசுத்தமான இலக்கியப்படைப்பாளிகளின் அரதப்பழசான மொழியையும் உணர்ச்சி பாவங்களையும் சுஜாதாவின் இருப்பு தொடர்ந்து கேலி செய்கிறது என்பதுதான்.


சுஜாதாவை பிராமண அடையாளத்திற்குள் நிறுத்தி ‘இலக்கிய ஊர் விலக்கம் செய்துவிடலாம்’ என்று நினைக்கும் கட்டைப் பஞ்சாயத்துகள் தமிழுக்கு புதிதல்ல. இதை வேறுவேறு கோஷ்யகள் வேறு வேறு ஆளுமைகளுக்கு செய்திருக்கிறார்கள். பாரதிக்கும் செய்திருக்கிறார்ர்கள். விமர்சனங்கள் என்பது வேறு ஒருவருடைய பங்களிப்பையே மொண்ணைத்தனமாக் மறுதலிப்பது என்பது வேறு.

எஸ்ராபவுண்ட் அவருடை நாஜி ஆதரவு நிலைப்பாட்டிற்காக கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பவுண்டின் கவிதைகளும் அவரது இலக்கியக்கோடபாடுகளும் உலகம் முழுக்க செல்வாக்கு செலுத்துகின்றன. காம்யூவின் எழுத்துக்கள் மீது நிறவெறி சார்ந்த குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆனால், அவரது இலக்கியத் தகுதி எங்கும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டதில்லை. திருடனாக வாழ்ந்த ஜெனேயை ‘புனித ஜெனே’ என எழுதினார் சார்த்தர். எழுத்தாளர்கள், கலைஞர்களுடைய சொந்த வாழ்க்கை, சில ஏற்கமுடியாத சார்பு நிலைகள் குறித்த விமர்சங்களுடன் அவர்கள் கலையின் மகத்துவங்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
தமிழில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

பெரியார் எங்கோ எப்போதோ பேசிய ஒரு வரியை எடுத்துக்கொண்டு அவரது ஒடுக்கபட்டோருக்கான போராட்டங்கள் அனைத்தையும் மறுத்து ஒரு சாதி வெறியராக அவரை சித்தரித்த தலித் அறிஞர்கள் இங்கு இருக்கிறார்கள். புதுமைப்பித்தன் கதைகளின் சாதிய உணர்வை இங்கே சிலர் கட்டுடைத்து அவரை இலக்கிய வெளியேற்றம் செய்ய முயற்சித்தார்கள். ஒரு கதையை வைத்து சுந்தரராமசாமியின் ஒட்டுமொத்த இலக்கிய வாழ்வையும் கேள்விக்கு உள்ளாக்கினார்கள். பாரதியிடம் வெளிப்பட்ட மதம் சார்ந்த சில கருத்தியல்கள், நீதிக்கட்சியை அவர் விமர்சித்தார் என்பதுபோன்ற காரணங்களை வைத்து, பாரதி நிகழ்த்திய வரலாற்றுப் பாய்ச்சல்களை யெல்லாம் மறுத்து அவரை ஒரு பிராமணர் சங்கத் தலைவராக சித்தரிக்க முயன்றார்கள்.

ஆனால், இன்னொரு புறம் உண்மையாகவே பிராமனர் சங்கத் தலைவராக இருந்த சி.சு. செல்லப்பா இலக்கிய பிதாகமகனாக திகழ்ந்து வருகிறார். ஹர ஹர சங்கரா எழுதிய ஜெயகாந்தன், திராவிட இயக்கத் தலைவர்களை மிக இழிவாக விமர்ச்சித்தவர் முற்போக்கு இலக்கியத்தின் முகமாக கருதப்படுகிறார். இதையெல்லாம் வைத்து இவர்களுடையை இலக்கியத்தையோ பங்களிப்பையோ மதிப்பிட முடியுமா?

ஒருவருடைய பிறப்பின் அடிப்படையில் நான் ஒருவரை மறுக்கவேண்டும் எனில் உ.வெ.சா தொடங்கி தமிழின் மகத்தான கொடையாளிகளை மறுக்க வேண்டும். “தமிழ்நாட்டில் பிராமணர்கள் நாஜிகளின் ஆட்சியில் யூதர்கள் வாழ்ந்ததைப்போல வாழ்கிறார்கள்” என உளறினார் என்பதற்காக அசோகமித்திரனின் சாதனைகளை யாராவது மறுக்க முடியுமா? இவ்வளவு ஏன் ஜெயமோகன் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கும் பிற்போக்கு அரசியலுக்குப்பிறகும் அவரது கதைகளுக்காக அவரது இடம் கொண்டாடப்படுகிறது.

இங்கே முற்போக்கு முகமூடி அணிந்த , இலக்கிய முகமூடி அணிந்த பலரது சொந்த வாழ்க்கையோடும் இலக்கிய வாழ்க்கையோடும் ஒப்பிட்டால் சுஜாதாவின் வாழ்க்கை மிகவும் முற்போக்கானது, அவரது சொந்த வாழ்க்கையில் சாதிய கருத்தியல்களுக்கு ஒருபோதும் இடம் இருந்ததில்லை. தமிழ் வாழ்க்கையின், தமிழ் மனங்களின் சொல்லப்படாத பக்கஙக்ளை ஊடுருவி சென்றவர் அவர். தமிழின் முதன்மையான ஸ்டைலிஷ்ட் எழுத்தாளரும் அவரே. அவரது சில வாக்கியங்கள், திரைப்பட வசனங்கள், அவரது பிறப்பின் அடிப்படையில் அவரை இலக்கிய அந்தஸ்து நீக்கம் செய்துவிடலாம் என சிலர் நினைத்தால் அந்த அளவுகோலின்படி இங்கே ஒருவர்கூட எழுத்தாளராக தேறமாட்டார்கள்.

உங்க புள்ளகுட்டிங்களை படிக்க வைப்பது இருக்கட்டும்.. முதலில் இந்த வெற்று வெறுப்பு அரசியலைவிட்டு நீங்கள் போய் படிங்க..

'ஜெயமோகனின் தொண்டர்களும் ரசிகர்களும் ஏன் சுஜாதா இலக்கியவாதி அல்ல, வெறும் சுவாரசிய நடைக்காரர் மட்டுமே என்கிறார்கள்? ' என சற்று முன் ஒரு வாசகி கேட்டார்.

தமிழ் இலக்கியச் சூழலில் சுஜாதா மேல் இந்த எதிர் மனோபாவத்தை உருவாக்கியதில் ஜெயமோகனுக்கு முக்கிய பங்குண்டு. தமிழின் ஒரே முதன்மையான எழுத்தாளன் என்ற இடத்தை அடையும் ஜெமோவின் கனவுக்கு தடையாக இருப்பவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று சுந்தரராமசாமி. மற்றொருவர் சுஜாதா. இவர்கள் இருவரும் வெறும் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, அவர்கள் ஒரு இயக்கம். Cult. அவர்களுக்கு தீவிரமான பின்பற்றாளர்கள் உண்டு. அந்த 'கல்ட்' சங்க நடவடிக்கைகளால் உருவானதல்ல. அது சுயமான வாசிப்பின் வழியே நிகழ்ந்தது. அவ்விரு இயக்கங்களையும் கடப்பது ஜெயமோகனுக்கு இப்பிறவியில் சாத்தியமல்ல என்பது நன்கு தெரியும். அதனால் ஜெமோ அவ்விருவர் தொடர்பான எதிர்மறை எண்ணங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் ஜெயமோகனுக்கு அவர்கள் இருவரின் முக்கியத்துவமும் இடமும் நன்கு தெரியும். காரணம் அவர் படிக்கக்கூடியவர். தன் படிப்பு தரும் முடிவுகளுக்கு முரணாக அபிப்ராயங்கள் சொல்லகூடியவர். சுஜாதா, சுரா இருவரின்மீதான ஜெமோவின் கசப்பின் ஆதிகாரணம் அவர்கள் இருவருக்குமே விஷ்ணுரம் பிடிக்கவில்லை என்பதுதான்.” என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் தொடர் பதிவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கவிஞர் கடற்கரய், தனது முகநூல் பக்கத்தில் சுஜாதா பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “சுஜாதா குறித்து எல்லோரும் ஏனோ எழுதுகிறார்கள். நான் அவரது வாசகன் இல்லை.

அவரது கட்டுரைகளை சரிபார்த்து அச்சுக்கு அனுப்பும் பணியில் இருந்திருக்கிறேன். கம்ப்யூட்டர் புலி எனக் கேள்விபட்ட எனக்கு காக்கா கிறுக்கலைப் போல் இருந்த அவரது கையெழுத்தினைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மிகப் பெரிய அறிவியல் சமாச்சாரங்களை மிக எளியநடையில் அவரால் சொல்ல முடிந்தது. அதை ஆயிரக்கணக்கான வாசகர் விரும்பி படித்தனர். அவரைக் கொண்டாடினர்.

ஒருவாசகனுக்கு விரும்பியதை அவர் தந்தார். அதில் அயராது உழைத்தார். எனக்கு அவர் எந்த நன்மையும் செய்ததில்லை. ஆனால் இந்த அரைகுறைகளைவிட அவர் மேலானவர் என்பது எண்ணம்.

அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோதும் அவர் யாருடைய சலுகைக்காகவும் ஏங்கியதில்லை. அவரது மறைவுக்குப் பின் திருமதி சுஜாதாவை பேட்டி எடுத்தேன். அவர் ஒருவிஷயத்தை சொன்னார். தன் மகன்கள் என்ன படிக்கிறார்கள்? என்பதுகூடத் தெரியாமல் வாழ்ந்தார். பிள்ளைகளுக்காக அவர் ஒரு சின்ன சிபாரிசையும் செய்ததில்லை என்றார். அது பெரும் ஆச்சரியமாக இருந்தது.

மேலும், அவர் பகிர்ந்த ஒரு தகவல் பகீர் ரகம். சுஜாதாவுக்கு 40 வயதில் இருந்து கிட்னி பிரச்னை. அதிக சர்க்கரையால் அவர் அவதிப்பட்டு கிட்னி பாதிக்கப்பட்டது. ஆகவே ஒரு லிட்டருக்கு மேல் அவர் நீரறுந்த முடியாது. நடு ராத்திரியில் தாகம் என்றால் ஐஸ் கட்டிகளை உதட்டில் நனைத்துக் கொள்ளலாம் என்றார். ஏறக்குறைய 40 ஆண்டுகள் தவ வாழ்வு வாழ்ந்தவர். இவ்வளவு இன்பமான கதைகளை எழுதியுள்ளார் என்பது எத்தனைப் பெரிய ஆச்சரியம்.” என்று சுஜாதாவைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

“சுஜாதா இலக்கிய எழுத்தாளரா? வணிக எழுத்தாளரா?” என்ற சர்ச்சை இலக்கியவாதிகளின் ஃபேஸ்புக் பக்கங்களில் தீயாக பற்றி எரிந்துகொண்டிருக்க, இந்த சர்ச்சையை புறந்தள்ளும் விதமாக மனுஷ்யபுத்திரன் இறுதியாக ஒரு பதிவு எழுதியுள்ளார்.

“சுஜாதாமீதான சர்ச்சைகள் வழியே உயிர்மைக்கு சுஜாதா நூல்களுக்கான ஆர்டர்கள் தினமும் வந்தவண்ணம் இருக்கின்றன. கண்காட்சியில் உயிர்மை வெளியிட்ட சுஜாதாவின் 70 நூல்களும் புதிய பதிப்புகளுடன் கிடைக்கும். அவரை வசைபாடிய சார்ந்தோரே இந்த வெற்றிக்கு காரணம். நன்றி. கண்காட்சிவரை விடாமல் தொடர்ந்து எழுதுங்கள். உரிய நேரத்தில் கமிஷன் உங்கள் அக்கவுண்டிற்கு வந்து சேரும்.” என்று மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment