எழுத்தாளர்கள் தங்கள் உணர்வுகளால் எல்லா காலங்களிலும் இளைஞர்கள்தான். அவர்களின் படைப்புகள் எப்போதும் இளமைதான் என இறையன்பு ஐஏஎஸ் பேசினார்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக தமிழியல் பண்பாட்டு புலத்துறை, சாகித்ய அகாடமியுடன் இணைந்து இளம் எழுத்தாளர்களுகு இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை சென்னையில் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக கூட்டரங்கில் நடந்த தொடக்க விழாவிற்கு பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் வெ.இறையன்பு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எழுத்தாளர்கள் தங்கள் உணர்வுகளால் எல்லா காலங்களிலும் இளைஞர்கள்தான். அவர்களின் படைப்புகள் எப்போதும் இளமைதான். இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எழுத்துக்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன. எல்லா காலமும் போற்றப்படுவதும், நினைவு கூறப்படுவதும் எழுத்துக்கள்தான். அவை எப்போதும் நிலைத்து நிற்கும்.
எழுத்தளர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. மானுட விடுதலைக்காக பாடுபட்ட எழுத்தாளர்கள் பலர். அவர்களின் கருத்துக்கள் பலவேளைகளில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன. எழுத்தில் உண்மை இருந்தால், அதை மனதில் வைத்துக் கொண்டு காலம் ஒரு நாள் அந்த எழுத்தை மதிக்கும். பல எழுத்துக்களில் கருத்துக்கள் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும். வாசிப்பாளர்களை பொருத்தே கருத்துக்கள் அர்த்தப்படுத்தப்படுகின்றன.
பல்கலைமக் கழகம் என்பது கல்வியை வழங்குவதுடன் ஆய்வுகளிலும் ஈடுபட வேண்டும். எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளைப் பல்கலைக் கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இளம் எழுத்தாளர்கள் என சொல்லப்படும் தொடக்க நிலை எழுத்தாளர்கள், மற்றவர்களுடன் கலந்து பேசினாலே அவர்களுக்கு கதைக் கருவும், கதைக்களமும் கிடைத்திவிடும். படிப்பதை சுமையாக கருதாமல் படிப்பதை நேசிக்க வேண்டும். கல்வி என்பது கடைசி வரை தொடரக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.
இவ்வாறு இறையன்பு பேசினார்.
முதல் நாள் பயிற்சியில், ‘தமிழ்ச் சிறுகதைகள் - படைப்பும் பார்வையும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் முகிலை ராஜபாண்டியதும், ‘மொழியும் கதையும்’ என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமியும், ‘சிறுகதை செப்பனிடுதல்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷூம் கருத்துரை வழங்கினர். இரண்டாவது நாளன்று ’கற்றுத்தரும் கதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ‘கதை - கதையாக உருவாகும் இடம்’ என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன், ‘சிறுகதை : கருவும் உருவும்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் மாலன் பேசினார்.