அமெரிக்க தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவு விருது, எழுத்தாளர்கள் ராஜ் கவுதமன், சமயவேலு ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
அமெரிக்க தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பின் சார்பில் 1996ம் ஆண்டு முதல் புதுமைப்பித்தன் நினைவு விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள இந்த விருது, தமிழின் முக்கியமான விருந்துகளில் ஒன்றாகும். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா, பிரமிள், பூமணி, சி.மணி, ஞானக்கூத்தன் உள்பட பலர் இவ்விருது பெற்றுள்ளனர்.
2016ம் ஆண்டு விருதுக்கு எழுத்தாளர் ராஜ் கவுதமனையும், சமயவேலுவையும் நடுவரகளாக அம்பை, தமிழச்சி, பெருந்தேவி ஆகியோர் கொண்ட குழு தேர்ந்தெடுத்துள்ளது.
எழுத்தாளர் ராஜ் கவுதமன் விருதுநகரில் 1950-ல் பிறந்தவர். புதுச்சேரி காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ்துறை தலைவராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். சிலுவை ராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ் ஆகிய நாவல்களுடன் 17 ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார்.
சமூக வரலாற்றெழுத்துக்கும், திறனாய்வுக்கும் நவீனத்துவத்துக்கும் அளப்பரிய பங்காற்றியதற்காக ராஜ் கவுதமனுக்கு இந்த விருதை அளிப்பதாக விளக்கு அமைப்பு தெரிவித்துள்ளது.
1957ல் வெம்பூரில் பிறந்த கவிஞர் சமயவேல், அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்று, தற்போது மதுரையில் வசிக்கிறார். காற்றின் பாடல், அகாலம், அரைக்கணத்தின் புத்தகம், மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் உள்ளிட்ட 6 கவிதைத் தொகுப்புகளையும், நான் டைகர் இல்லை என்ற சிறுகதை தொகுப்பையும், ஆண் பிரதியும் பெண் பிரதியுய்ம் என்ற கட்டுரைத் தொகுப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்க் கவிதை பரப்பில் தனித்த ஒரு அடையாளத்துடன், அதன் செழுமைக்கு செறிவானா பங்களிப்பதை செய்திருப்பதற்காக சமயவேலு இந்த விருதை அளிப்பதாக விளக்கு அமைப்பு தெரிவித்துள்ளது.