By: WebDesk
Updated: February 3, 2021, 09:21:38 AM
“வீடு புத்தகங்களை ஒருபோது அனுமதிப்பதேயில்லை; புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது.” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு எழுத்தாளர் அழகிய பெரியவன் மாறுபட்ட கருத்து தெரித்துள்ளார். இதனால், வீடுகளில் புத்தகங்கள் அனுமதிக்கப்படுகிறதா? இல்லையா? என்ற கருத்து விவாதமாகியுள்ளது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நாளிதழ் ஒன்றில், “வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது.
குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக்கூட சகித்துப்போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இடத்தை அடைத்துக்கொண்டு ஏன் இந்த புத்தகங்களை வீட்டில் வைத்திருக்கிறாய்? எனச் சண்டையிடாத குடும்பமே இல்லை. உடைந்துபோன நாற்காலிகள், பழைய பாய், தலையணைகள், நசுங்கிய பாத்திரங்களைக்கூட பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் குடும்பங்கள், புத்தகங்களை வெறுப்பது என்பது பண்பாட்டின் வீழ்ச்சியே” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதை உங்கள் தனிப்பட்ட கருத்தாகவே பார்க்கிறேன் எஸ்.ராமகிருஷ்ணன்.
இது ஒருபோதும் பொதுக்கருத்து ஆகாது. ஆக முடியாது. ஆகவும்…
Posted by Azhagiya Periyavan on Sunday, 31 January 2021
”எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்த இந்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாகவே பார்க்கிறேன்; இது ஒருபோதும் பொதுக்கருத்து ஆகாது, ஆக முடியாது” என்று எழுத்தாளர் அழகிய பெரியவன் தனது முகநூல் பக்கத்தில் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
அழகிய பெரியவன் தனது முகநூல் பக்கத்தில், “இதை உங்கள் தனிப்பட்ட கருத்தாகவே பார்க்கிறேன் எஸ்.ராமகிருஷ்ணன்.
இது ஒருபோதும் பொதுக்கருத்து ஆகாது. ஆக முடியாது. ஆகவும் கூடாது.
புத்தகங்களுக்கு என்று ஒரு நிரந்தர இடம் இருந்த என் பாட்டி வீடோ, கரையான் பிடித்தாலும் ஒரு மட்டச் சுவரை ஒதுக்கி தந்த என் குடிசை வீடோ, நான் உரிமையுடன் இயல்பாய் புழங்கிய நண்பர்களின் வீடுகளோ புத்தகங்களை நிராகரித்ததில்லை.
தேங்காய் உரித்த என் அம்மா வழி தாத்தா எங்கள் மாமாக்களுக்கும், பீடி சுற்றிய என் அப்பா எனக்கும் புத்தகங்களை வாங்கித்தான் தந்தார்கள். வீட்டு வேலைகளூடே அதைப் படித்துக் காட்டச் சொல்லி என் பாட்டியும் அம்மாவும் கேட்டார்கள்.
கடும் வறுமையைக் கடந்து வந்த காலத்திலும் என் இணையர் புத்தகங்களையும் அதைச் சார்ந்த என் செயல்பாடுகளையும் கடிந்துக் கொண்டதேயில்லை.
எளிய மக்கள் புத்தகங்களையும், வாசிப்பவரையும் மதித்து போற்றியிருக்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி யிருக்கிறார்கள்.
நீங்கள் முன் வைக்கும் பார்வை, ‘எல்லாருக்கும் புத்தகங்கள் அவசியப்படாதாவை’ , ‘வாசிப்பு வெறுப்பு’ ஆகிய இடைக்கால கருத்திலிருந்து உருவான பொதுக் கருத்து என்றே நான் பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அழகிய பெரியவனின் இந்த மாறுபட்ட கருத்துக்கு வாசகர்கள் பலரும் ஆதரவாகவும் மறுத்தும் பின்னூட்டங்களை இட்டுள்ளனர். இதனால், வீடு புத்தகங்களை புத்தகங்களை அனுமதிக்கிறதா? இல்லையா என்று விவாதம் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Literature News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Homes not allowed books or allowed different opinion writers s ramakrishnan azhagiya periyavan