scorecardresearch

எழுத்து பொருள் இன்பம் : உணவு உறவு

உணவு என்பது பொருட்களால் உருவானது மட்டுமல்ல, அதை தயாரிக்கும் நபரின் மனநிலையும், தயாரிக்கப்படும் இடத்தின் சூழலும், அப்பண்டத்தில் கலந்திருக்கும்

unau - velu

எஸ்.செந்தில்குமார்

உணவு என்பது பொருட்களால் உருவானது மட்டுமல்ல, அதை தயாரிக்கும் நபரின் மனநிலையும், தயாரிக்கப்படும் இடத்தின் சூழலும், அப்பண்டத்தில் கலந்திருக்கும் என்பது என் அனுபவம். அதேவேளை சாப்பிடுவதற்கான பொருள் மட்டுமல்ல உணவு. பசி, நிறைவு இரண்டையும் மீறி உறவு என்கிற அர்த்தப்பூர்வமான மனநிலை சாப்பிடும்பொழுது கலந்திருக்க வேண்டுமென விரும்புபவன் நான். உறவினர் வீட்டிற்கும் நண்பர்களது வீட்டிற்கும் செல்லும்போது, தரப்படும் தேநீர் சிலநேரங்களில் அதோடு அவ்வுறவே முடிந்துவிடுமளவிற்கு தரப்படும். சில வீடுகளில் குடிக்கத் தரும் தேநீரில் தொடங்கும் உறவு வாழ்க்கை முழுவதும் நீண்டு வளரும். டீ டம்ளரை தரும்போதே வீட்டை விட்டு ஓடிப்போய்விடுமளவிற்கு கொடூரமான நடவடிக்கை தருபவரிடம் இருக்கும். அது கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் போல பெண்கள் தங்களுக்குக் காப்பாற்றுவார்கள். டீயோடு முடிந்து போய்விடவேண்டுமென்கிற துரத்தல் அது. அடுத்தவேளை சாப்பாட்டிற்கோ டிபனுக்கோ அவர்கள் வீட்டிற்குள்ளிருக்கக்கூடாது என்பது அவர்களது முடிவாகயிருக்கும். ஆண்களை விட பெண்கள் இதனை அழகாக செய்வார்கள். கொடுப்பவர்களின் கைகளும் வாங்கிக்கொள்பவர்களின் கைகளும் அவ்வளவு அழகாக இருக்கின்றன என்று ஒருகவிதை வரி எழுதியிருக்கிறேன்.

சிலர் வீட்டில் தேநீர் தந்துவிட்டு என் அருகிலேயே அமர்ந்துகொள்வார்கள். தேநீர் எப்படி இருக்கிறது சர்க்கரை போதுமா இஞ்சி காரமாகயிருக்கிறதா என்று விசாரிப்பார்கள். டீயைக்கொடுத்துவிட்டுப் போயிருக்கலாம். ஏன் அருகில் அமர்ந்து விசாரிக்கிறார்கள் என்று சங்கோஜத்துடன் அமர்ந்து டீ குடிப்பேன். டீ குடித்து முடிந்ததும் மதிய உணவு சாப்பிட்டு விட்டுப்போகவேண்டுமென உட்காரவைத்துவிடுவார்கள்.

பசிக்குச் சாப்பிடுவது மட்டுமல்ல உணவு. பசிக்கு சமைப்பது மட்டுமல்லாது சாப்பிடுவதும் சமைப்பதும் உணவைப் பரிமாறுவதும் ஒருகலையாக பெண்கள் தெரிந்தும் தெரியாமலும் தங்களுக்கும் பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் அமைதியாக பொறுமையாக உணவை விரும்பி சாப்பிடும் ஆண்களுக்கு பரிமாறுவதை விரும்புபவர்கள். உணவு சாப்பிடும் முறையைக் கொண்டு உடலுறவில் எப்படி
பெண்களிடம் ஆண் நடந்துகொள்வான் என்கிற மனக்கணக்கு அதிலுண்டு என்று வயது முதிர்ந்தப் பெண்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். “மெதுவா சாப்பிடு மெதுவா சாப்பிடு” சாப்பிடப்பழக்கி தருகிற அம்மாதான் பெரும்பாலான ஆண்களுக்கு கலவி இன்பத்தின் மறைமுகமாக ஆசிரியையாக இருக்கிறாள் என்று நினைக்கிறேன். உணவை பரிமாறுவதற்கும், பரிமாறுகிற உணவை நிதானமாக உண்ணுவதற்கும் உடலுறவுக்கும் ஏதோ ஒருவகையில் முக்கோணவடிவத்திலான தொடர்பு உள்ளது.

எனக்கு அத்தை முறையுள்ள உறவுக்காரர் வீட்டிற்கு ஒருமுறை மதிய உணவு நேரமிருக்கும் சமயம் செல்லும் சந்தர்ப்பம் நேரிட்டது. அவசரகதியில் ஒரு பாழாய்போன டீயை தயாரித்துக் கொடுத்துச் சாப்பிட்டு விட்டுச் செல் என்ற சொல்லப்படாத உத்தரவை நீட்டினார்கள். சூடும் இருக்காது இனிப்பும் இருக்காது. ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான நீர் இருக்கும். பேச்சு சுவாரஸ்யமாகப் போகக்கூடாது என்று எது பேசினாலும் இடையிடையே முறித்துவிடுவார்கள். எழுந்து சென்றுவிடவேண்டுமென அந்த அறையிலிருக்கிறப் பொருட்கள் முழுவதும் என்னை விரட்டும். ’அப்புறம் செந்திலு… அப்புறம் செந்திலு…’ என்று பேசிக்கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து வழியனுப்பிவிடுவார்கள்.

எனது சித்தியின் வீட்டிற்கு இரவு சாப்பாட்டிற்குச் சென்று வர வேண்டிய சூழல். இரண்டு சப்பாத்தி தட்டில் வைத்து ஊறுகாய் போல சட்டினியை வைத்துத் தந்தார்கள். இத்தனைக்கு சித்தி நல்ல குண்டு. மூன்று வேளைக்கு நான்குவேளை எண்ணெய் பலகாரமும் நொறுக்குத்தீனியும் நன்றாக சாப்பிடக்கூடியவள்தான். ஏன் இப்படி கஞ்சத்தனம் செய்கிறாள் என்று நினைத்தேன். பாபா படத்தை திருட்டு சிடியில் பார்த்துக் கொண்டே, ‘‘சப்பாத்தி போதுமில்லே, உங்க அம்மா… நீ முந்தி மாதிரி சாப்பிடுறதில்லே… இரண்டு சப்பாத்திதான் சாப்பிடுறேன்னு சொன்னாங்க. அதான் இரண்டு சப்பாத்தி சுட்டேன். இன்னும் வேணுமின்னு சொன்னா மாவு பிசைகிறேன்’’ என்றார்கள். எனக்கு இதுவே ஜாஸ்தி என்று சொன்னேன். இரண்டு சப்பாத்தி என்பது பெரிய விஷயமல்ல. அதை தந்த விதமும் சாப்பிடுகிற அறையின் வெளிச்சத்தை (பாபா படம் பார்க்கிறதிற்காக அறையின் லைட்டை) அணைத்துவிட்டு எனக்கு உணவு கொடுத்ததும் தான் எனக்கு சிரிப்பாக வந்தது.

சாப்பாடு என்பது இப்போது பெரிய விஷயமல்ல. ஹோட்டல்கள் பெருகிவிட்டன. ஜாதிவாரியாக ஹோட்டல்கள் வந்து ஜாதி ஓட்டுபோல அந்தந்த ஜாதிக்காரர்கள் அவரவர் ஜாதி ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுகிறார்கள். ஆனால் ஊர் விட்டு ஊர் செல்லும் போது சாப்பிடுவதற்கும் தங்கிச் செல்வதற்கும் உறவுக்காரர்களின் வீடுகளுக்குச் செல்வது எதார்த்தத்தில் பண்பாடாக இருந்து வந்திருக்கிறது. சங்ககாலத்தில் இந்த முறை இருந்திருக்கிறது. விருந்துக்கு வருகிறவர்களின் விருப்பம் போல நடந்து கொள்ள வேண்டுமென்பது அறம் சார்ந்த விஷயமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று உறவுக்காரர்களின் வீடுகளுக்குச் சென்று சாப்பிடுவது என்று அரிதாகிவிட்டது. நாம் உறவுக்காரர்களின் வீடுகளுக்குச் சென்றால் நம் வீட்டிற்கும் அவர்கள் நாளை வந்துவிடுவார்கள் என்கிற குறுகிய யோசனை மனிதமூளைக்குள் தோன்றிவிட்டது.

கூட்டுக்குடும்பங்களில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவை சாப்பிடும் போதுதான் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களையும் பெண்கள் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பிருக்கும். எனது நண்பர்கள் பலரும் மாதத்தில் ஒருநாள் தான் வீட்டில் இருக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கும். ஹாஸ்டலிலிருந்து விடுமுறைக்கு வந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, வெளியூரில் திருமணம் முடிந்து சென்ற மூத்த அக்காவும் அவளது கணவரும், வியாபாரத்திற்கு ஊர் ஊராகப் போய் அலைந்து திரும்பி வந்திருக்கிற அப்பா, இவர்களை மாதத்தில் ஒருநாள் சந்திக்கும் அம்மா என்ன சிரமம் இருந்தாலும் தன் பெண் பிள்ளைகளை எந்த வேலையும் செய்யவிடாமல் தானே தன் கையால் உணவு செய்து வரிசையாக பந்திப்பாய் விரித்துப்போட்டு (அந்த வீட்டில் அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் உட்கார முடியாது. இடித்துக்கொண்டு ஒருவர் தொடை இடித்துக்கொள்கிற மாதிரி அமர்ந்து சாப்பிடுவார்கள்) அம்மாவே தன் கையால் பரிமாறுவாள். மையத்தில் சமைத்தப் பொருட்களை எடுத்து வைத்து சுற்றி அமர்ந்து அவள் பரிமாறுகிற அழகும் ஒவ்வொரும் ஒவ்வொரு விஷயத்தைப் பேசிக்கொண்டு சாப்பிடு அழகும் வசீகரமானது. நாமும் அந்த வீட்டில் பிறந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் வரும்.

உணவு பரிமாறும் போதுதான் சில வீடுகளில் கணவனின் அருகிலேயே சரிக்கு சமமாக உட்கார்ந்து கொள்ள முடியும். நெருக்கமாக கூட. உணவு பரிமாறியபடியே தங்களது தேவையை ரகசியமாக சொல்லி நிறைவேற்றிக் கொள்வார்கள். கணவனின் மேலிருக்கும் கோபத்தை சமைப்பதில் காட்டுகிற பெண்களும் உண்டு. உப்பில்லாது சமைப்பதும், உப்பிட்டு உப்பிட்டு வாயில் வைக்க முடியாமல் சமைத்து வைத்துவிடும் பெண்களது ஆயுதங்களில் ஒன்று. சில வீடுகளில் சாப்பிடும்போதுதான் சண்டையே வரும். சாப்பிடாமல் எழுந்து சென்றுவிடுவார்கள். சமைப்பதற்கு நேரமாகிறது என்பதற்காக சண்டையிட்டு நாள் முழுக்க சண்டையிட்டுச் செல்லும் கணவனும், யார் எப்படி போனாலும் நான் சமைத்து என் வயிற்றுக்கு நேரத்திற்கு சாப்பிட்டுவிடுவேன் என்கிற பெண்களும்தான் குடும்பத்தில் பற்சக்கரங்களாக இருக்கிறார்கள். இரவு பனிரெண்டு மணிக்கு ஊரிலிருந்து வரும் கணவனுக்காக சூடாக இட்டிலி அவித்து காத்திருக்கிற பெண்ணையும் நான் சந்தித்துக்கிறேன்.

ஒருபதிப்பாளர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அன்று மாலை எனக்கு விருது தரும் நிகழ்ச்சி. ஹோட்டலில் தங்கியிருந்தேன். காலையில் எழுந்து குளித்து கடையில் சாப்பிட்டு ஆசையாக அவர் வீட்டிற்குச் சென்றேன். ஏற்கனவே அங்கு பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் நண்பர்கள் என்று குழுமியிருந்தார்கள். தேநீர் இரண்டு முறை கேட்ட பிறகு கிடைத்தது. (தேநீர் வரும் நேரத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கிடைக்காது. மறுசுற்று தேநீர் வராது. கடைக்குப் போய் தேநீர் அருந்திவிட்டு வரவேண்டும்) ‘‘வீட்டில் இரண்டு நபர்களுக்குத்தான் சாப்பாடு தயாராகிறது. மீதமுள்ள நபர்கள் ஹோட்டலுக்குச் செல்லுங்கள். அந்த இரண்டு நபர் யாரென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகரில் 130/11 மதுரா கோட்ஸ்காலணியில் இருந்த போது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவரது வீட்டிற்குச் சென்று வருவேன். ஒவ்வொரு முறையும் அவர் வீட்டிற்குச் செல்லும் போது எழுத்தாளர்கள் வாசகர்கள் நண்பர்கள் உறவுக்காரர்கள் ஊர்க்காரர்கள் என்று யாராவது ஐந்தாறு நபர்கள் வீடு நிறைய இருப்பார்கள். தேவதச்சனை அங்குதான் சந்தித்தேன். கோணங்கியை அங்குதான் பார்த்தேன். முருகபூபதியை அங்குதான் பார்த்தேன். இன்று கல்லூரி பேராசிரியர்களாக இருக்கும் அ.பூமிச்செல்வம் (அமெரிக்கன் கல்லூரி), ந.ரத்தினகுமார் (மதுரைக்கல்லூரி) சீமான் (சிங்கப்பூரி பணி) என்று பலரும் அங்கு சந்தித்திருக்கிறோம். திருமதி சந்திரா அவர்கள் வேலைக்குச் சென்று வந்து பிற்பகலில்தான் உணவு சமைப்பார்கள். எப்போது சமைத்தார்கள் எப்படி சமைத்தார்கள் என்று தெரியாது. அனைவரையும் உட்கார வைத்து பரிமாறுவார்கள். ‘‘நல்லா சாப்பிடுங்க குண்டான பரவாயில்லை’’ என்று சொல்லியதை இன்றும் என்னால் மறக்க முடியாது.

இன்னும் மறக்க முடியாத உணவு குறித்த உறவுகள் இருக்கின்றன. எந்த காரணத்திற்காகவும் அவர்கள் வீட்டில் சாப்பிடவே மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிற மனநிலை கூட மாறியிருக்கிறது. மறக்க முடியாது ஒரு விஷயம் என்னவென்றால் எங்களது தெருவிலிருந்த சுமதி, ரங்கநாயகி சித்திகள் சாப்பிட்ட உணவும் அவர்கள் எனக்கு ஊட்டிவிட்டு சோறும்தான். இரண்டு சித்திமார்களும் காம்பவுண்டு வீட்டில் இருந்தார்கள். சித்தியின் அம்மா சித்திகள் இருவரும் ஏலக்காய் கடைக்கு வேலைக்குப் போய் இரவு ஏழுமணிக்கு வீடு திரும்புவார்கள். அந்த காம்பவுண்ட் வீட்டிலிருக்கிற பெண்கள் அனைவரும் ஏலக்காய் கடைக்கு வேலைக்குப் போய் வரக்கூடியவர்கள். ஏழுமணிக்கு வந்து காய்கறி பலசரக்குப்பொருட்கள் அரிசி எண்ணெய் என்று வாங்கி சமைத்து குளித்து வீட்டுக்கு முன்னாலிருக்கிற திண்ணையில் உட்கார்ந்து கொள்வார்கள். அனைவரும் சமைத்த உணவை ஒருவருக்கொருவர் பரிமாறி சண்டை சச்சரவில்லாமல் வாழ்ந்தார்கள். இன்று அதே தெருவில் புரோட்டா கடையில் கோழி வாங்கிக்கொண்டு வந்து வீட்டுக்கதவைப் பூட்டிவிட்டு சாப்பிடுகிறார்கள். இடம் அப்படியே இருக்கிறது இடத்திற்கு வந்து சேர்கிற மனிதர்கள்தான் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள்.

“இன்னைக்கு எங்க வீட்டிலே கறிக்குழம்பு. நீங்க குழம்பு வெக்காதீங்க மதினி” என்று ஆசையாக சொல்லும் அடுத்த சாதிக்காரப்பெண்மனிகள் கூட காலத்திற்கு ஏற்ப மாறிவிட்டார்கள்.

“என்னத்தை சமைச்சேன்… என்னத்தையோ சமைச்சேன்… ஒன்னும் நல்லாயில்லே விட்டுட்டேன்” என்று வெளியே பேசிவிட்டு வீட்டிற்குள்ளே சமைத்து சாப்பிடுகிற ரகசியம் வந்துவிட்டது. உணவு இன்றய சூழலில் ரகசியமான ஒரு ஆயுதம் என்று உறுதியாக சொல்வேன். அந்த ஆயுதத்தால் எதிராளியைக் கொண்டு வீழ்த்தலாம் நண்பனை பகைத்தும் கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Writing material pleasure food relationship

Best of Express