scorecardresearch

எழுத்து பொருள் இன்பம் : ஆதி வளர்த்த கோழிகள்

சின்ன வயத்தில் சைக்கிள் மீது ஏற்படும் காதல், அதோடு சைக்கிள் கடைக்காரர் மகள் மீதான ஈர்ப்பு, கோழி திருடுட எடுத்த முயற்சி என இளம் பிராய சம்பவங்கள்.

aadhe valardha kozhi

எஸ்.செந்தில்குமார்

வாடகைக்கு சைக்கிள் எடுத்து தெருத்தெருவாக ஓட்டுவது பள்ளியில் படிக்கும் போது உருவாகும் பழக்கவழக்கங்களில் முக்கியமான ஒன்று. சைக்கிள் ஓட்டுவதை முன்வைத்து ஏற்படுகிற சண்டைகள், நட்புகள் வாழ்நாள் முழுக்க கூட வருகிறதாக சிலருக்கு அமைந்துவிடும். சைக்கிளிலிருந்து விழுந்து அடிப்பட்ட வலி தீர்த்திருக்கும். ஆனால் தழும்பு இறப்புவரை ஞாபகத்தை கிளர்த்தும். ஒருகை விட்டு பழகுவதற்கும் இரண்டு கை
விட்டு பழகுவதற்கும் ஒரு நண்பனின் துணை வேண்டும். இப்போது அரசு பள்ளியில் சைக்கிள் தருகிறார்கள். 1985களில் இறுதியில் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவது என்பது ஆகப்பெரிய சாதனை என்று சொல்ல வேண்டும்.

அன்றைய காலத்தில் சைக்கிள் வாடகைக்கு எடுக்க காசு சேர்க்கிற வேலை திங்கட்கிழமையிலிருந்து தொடங்கிவிடும். எங்களது தெருவில் S.S.R. சைக்கிள் கடை இருந்தது. அந்தக் கடை எங்களது கடைக்கு எதிரே சைக்கிள் இருந்தது எனக்கொரு வசதி. S.S.R.சைக்கிள் கடை உரிமையாளர் S.S.ராஜேந்திரனுக்குபரிய கிருதாயிருக்கும். வாய் முடிய கிருதா. அளவான மீசைதான். ஆனால் கிருதாவும் மீசையும்
ஒன்று சேர்ந்திருக்கும். (சைக்கிள் கடையை காலி செய்துவிட்டு, இப்போது அவர் வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிகிறார்.) S.S.R.சைக்கிள் கடையில் எனக்கு கடன் சொல்லி வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொள்ளும் வசதியிருந்தது. என் அப்பாவிடம் சைக்கிள்கடைக்காரர் மொத்தமாக பணம் வாங்கிக்கொள்வார்.

ராஜேந்திரன் சைக்கிள் கடையில் இருந்தது எல்லாம் பழைய சைக்கிள்கள். பிரேக் பிடிக்காத, சீட்கவர் இல்லாத,
முன்சக்கரம் நீளமாக என சைக்கிள்கள் அவரிடம் இருக்கும். சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் போது கிரிச் கிரிச் சத்தம் ஒருபக்கம் கேட்கும். செயின் உரசுகிற சத்தத்திற்கு பலரும் திரும்பிப் பார்ப்பார்கள். இத்தனை குறைகளுடன் இருந்தாலும் S.S.R.சைக்கிள் கடையில்தான் பலரும் வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டுச் செல்வார்கள். அதற்கு ஒரே காரணம் கடன்வசதி. S.S.ராஜேந்திரனும் நோட்டில் எழுதி வைத்து பொறுமையாக கடையில் அமர்ந்திருப்பார். ஒருநாள் மொத்தமாக பிடித்து ஜோப்பிலிருந்து பணத்தை எடுத்துவிடுவார். யாரும் அவரிடமிருந்து தப்பிக்க முடியாது.

நாளைக்குத் தருகிறேன். அடுத்த வாரம் தருகிறேன் என்று ஓடுகிறவர்களை விரட்டிப்பிடித்து நடுரோட்டில் காசை எடுத்துக்கொள்வார். சண்டை போடுகிறவர்கள் மறுநாள் சைக்கிள் கடையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு பேர் எழுதிக்கோ என்று சைக்கிளை உருட்டிக்கொண்டுச் செல்வார்கள். எங்கள் தெருவில் மாரிமுத்து என்பவர் புதிதாக ஆதி சைக்கிள்கடை என்ற பெயரில் ஒன்றை வைத்தார். மாரிமுத்து வெளியூர்காரர். எங்களது தெருவிலிருந்த ஒரு வீட்டை விலைக்கு வாங்கி வீட்டின் முன்பாக பெட்டிக்கடையும் கூடவே சைக்கிள் கடையும் தொடங்கிவிட்டார். கடையில் பெரிதாக கடன் இல்லை என்று எழுதி தொங்கவிட்டிருந்தாா். ‘எத்தனை நாளைக்குன்னு பார்க்கலாம்’ என்று பலரும் சைக்கிள் எடுக்காமலிருந்தார்கள். ஆதி சைக்கிள் கடையிலிருந்தது எல்லாமே புதிய சைக்கிள்கள்.
அட்லாஸ்வண்டி. பச்சைகலர் சைக்கிளுக்கு சிவப்பு சீட்கவரும் பிரேக் கவரும் மாட்டி பளீச்சென்று நிறுத்தி வைத்திருந்தார் மாரிமுத்து. கேரியர் வைத்த சைக்கிள்களை தனியாக ஓரிடத்தில் நிறுத்தி வைத்திருந்ததுதான் அவர் கடைக்கு பலரையும் காசு கொடுத்து சைக்கிள் எடுக்கச் செய்தது. வீட்டிற்கு விறகு வாங்கப்போகிறவர்கள், அரிசி
வாங்கப்போகிறவர்களுக்கு கேரியல் வைத்த சைக்கிள் பிரயோஜமாகயிருந்தது. கோரியல் வைத்த சைக்கிளுக்கு கூடுதல் காசில்லை. மாரிமுத்து தன் மகள் ஆதிலெட்சுமியின் பெயரில்தான் அவர் சைக்கிள்கடையும் பெட்டிக்கடையும் வைத்திருந்தார். நன்னாரி சர்பத், எலுமிச்சைப்பழம் சோடா, டபுள் கலர் சர்பத், சோடாசர்பத் என்று மனுஷன் தெருவையே தன் கடையின் முன்பாக நிறுத்தி வைத்திருப்பார். கூடவே ஆதிலெட்சுமியைப் பார்ப்பதற்கென்றுத் தனியாக சிலர் கடைக்குச் சென்றுவருவார்கள். ஆதியின் கண்களைத்தான், தெருக்காரர்கள் புகழ்ந்து பேசுவார்கள். அவளது அப்பாவைப் போல குட்டையான உருவங்கொண்ட பெண் ஆதிலெட்சுமி. பள்ளி விடுமுறை நாளில் மதியம் சாப்பாட்டு வேளையில் சைக்கிள்கடையிலும் பெட்டிக்கடையிலும் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருப்பாள்.

அவள் மூன்று கோழிகள் வளர்த்தாள். ஆதிலெட்சுமிக்கு கோழிகளின் மேல் பிரியம் உண்டானது எதன்பொருட்டு என்று தெரியவில்லை. காலையில் பள்ளிக்கூடத்திற்குப் போவதற்கு முன்பாக கோழிகளுடன் சிறிது நேரம் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆதிலெட்சுமி எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். கோழிகளுக்கு ராகி, சோளம், அரிசி, கம்பு, வரகு என்று தட்டில் வைத்து தருவாள். ஆதி வளர்த்த கோழிகள் மேய்வதற்கு வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாது. பெட்டிக்கடையின் அருகில் கால்கட்டுப் போட்டு நின்றிருக்கும் இல்லையென்றால் படுத்திருக்கும்.

ஆதிலெட்சுமியின் வீடு நீளமானது. அந்த வீட்டின் உள்ளறையில் மினுங்கும் விளக்குப்போல அவளது கண்கள். ஆதிலெட்சுமியின் அம்மா இறந்ததும் இரண்டாவது திருமணம் முடித்துக் கொண்டார் மாரிமுத்து. சித்தியின் பெயர் மீனாட்சி. மீனாட்சிக்கு ஒரு ஆண்குழந்தை. அவன் பெயர் பாண்டி. அரிசிக்கடைத் தெருவில் ராத்திரி நேரத்தில் கடை அடைத்ததும் கூட்டிப்பொறுக்கி முறத்தில் அரிசியைக் கொண்டு வருவது பான்டியின் வேலை. தினமும் அரிசி கொண்டு வந்து தருவதற்காக அவனுக்கு ஐந்து காசு பத்துகாசு தருவாள் ஆதி.

சிறுவர்கள் ஓட்டுகிற சைக்கிள் அவர்களது கடையில் இருந்தது. அரைவண்டி முக்காவண்டி என்று இரண்டு சிவப்பு சைக்கிள். சிவப்பு சைக்கிள்களுக்குத்தான் கூட்டம் அதிகம். பள்ளி விடுமுறையில் வரிசையில் காத்திருந்து எடுத்துச் செல்வார்கள்.

ராஜேந்திரனும் போட்டிக்கு அரைவண்டி, முக்காவண்டி என்று பழைய சைக்கிளை வாங்கி வைத்தார். அந்த சைக்கிள் இற்றுப்போய் துருப்பிடித்திருந்தது. பெல் இல்லை. இரண்டு சிறுமிகள் எடுத்துக் கொண்டுச் சென்று கீழே விழுந்துவிட்டார்கள். அப்பாவிடம் காசு வாங்கி புதிய சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்ட வேண்டுமென்கிற
ஆசையில் பல நாட்கள் இருந்தேன். S.S.ராஜேந்திரன் கடையில் கடனுக்கு சைக்கிள் எடுத்து ஓட்டும்போது உற்சாகமாகயிருக்காது. அரைமணிநேரத்திற்கு ஐம்பதுகாசு ஒருமணிநேரத்திற்கு ஒருரூபாய். ஐம்பது காசு கிடைத்தால்போதும், ஆதி சைக்கிள் கடையில் புதிய சைக்கிள் வாங்கி ஓட்டலாம். ஐம்பது காசு கிடைக்கு நாள் முழுக்க அப்பாவின் கடையில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். டீ காப்பி வாங்கிக்கொண்டு வரவேண்டும். வாங்கி வந்த டீ காப்பியை ஊற்றித்தர வேண்டும்.

தம்ளர்களை கழுவவேண்டும். ஒருநாளைக்கு மூன்று நான்கு தடவை டீ வாங்கிக்கொண்டு வந்தால் சாயங்காலம் ஐம்பது காசு தருவார். ஐம்பது காசு வாங்க வேண்டுமென்பதற்காக நாள்முழுக்க கடையில் அமர்ந்திருப்பேன்.
அப்பா சனி, ஞாயிறுகிழமைகளில் வெளியூர் பிரயாணத்திற்கு கிளம்புவார். ஊருக்குப் போகும் போது, என்னிடம் ஒருரூபாய் தந்துவிட்டுச்செல்வார். நானும் எனது நண்பன் நாராயணனும் ஆதிலெட்சுமி சைக்கிள் கடைக்குச் சென்று சைக்கிள் எடுத்தோம்.

நாராயணனுக்கு ஆதியைப் பிடித்திருந்தது. யாருக்கும் தெரியாமல் அவளுக்கு காதல் கடிதம் எழுதி தந்துவிட்டான். அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் காதல் ஓவியம் பாட்டின் முதல் நான்குவரியை தப்புதவறுமாக கிறுக்கி எழுதி அவளிடம் கொடுத்துவிட்டான். அவளும் படித்துவிட்டு அழுதுகொண்டே அவளது அப்பாவிடம்
கொடுத்துவிட்டாள். யார் கொடுத்தது என்று மாரிமுத்து கேட்டதற்கு அடையாளத்திற்கு எங்களது கடையைக் காட்டிவிட்டாள்.

அப்பா ஊரிலிருந்து வந்ததும் காதல் ஓவியம் கடிதத்தைக் காட்டி நடந்ததைச் சொல்லியிருக்கிறார். அப்பாவுக்கு வந்த கோபத்தில் ஊதுகுழலை எடுத்து அடுப்பில் வாட்டி என் முழங்காலில் சூடு வைத்துவிட்டார். வலி பொறுக்க முடியாமல் கத்திவிட்டேன். நாராயணனுக்கு விஷயம் தெரிந்து அவனது பாட்டி வீட்டிற்கு மஞ்சள் பையில் இரண்டு டவுசர் சட்டையுடன் ஓடிவிட்டான். அப்போது காதல் கடிதம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. நாராயணனும் தெரிந்துதான் கடிதம் தந்தானா என்று தெரியவில்லை.

ராஜேந்திரன் சைக்கிள் கடையிலும் கடனுக்கு சைக்கிள் தரக்கூடாது என்று அப்பா கோபத்தில் சொல்லிவிட்டார். சைக்கிள் மிதிக்காமல் கடையில் அமர்ந்து போகிறவர்களையும் வருகிறவர்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆதிலெட்சுமியைப் பார்க்கும் போதும் அவளது அப்பாவைப் பார்க்கும் போதும் பயம்
வந்து முகத்தைத் திருப்பிக் கொள்வேன். மாரிமுத்து அவரது பெட்டிக்கடையில் அமர்ந்தபடி நாக்கைத்துருத்தி கொன்றுவிடுவேன் என்று கை காட்டுவார். இரண்டு தடவை கடையைக் கடந்து செல்லும் போது ஓடுறா ஓடுறா என்று என்னை விரட்டினார்.நான் பயந்து கொண்டு ஓடிவிட்டேன்.

நாராயணன் ஊரிலிருந்து வந்ததும் ஆதியின் கோழிகளை திருடிவிடவேண்டுமென என்னிடம் சொன்னான். கோழிகளைத் திருடி தருவதற்காக மூடைத்தூக்குகிற முத்துவை கெஞ்சிக்கூத்தாடி தயார்படுத்தி வைத்திருந்தான். யாருக்கும் தெரியாமல் ராத்திரியில் கோழியை திருடிதருவதாக அவன் சொல்லியிருந்தான். வெள்ளிக்கிழமை ராத்திரியில்தான் கோழிகள் கூவாது என்று அவன் சொல்லியது இன்னமும் ஞாபகத்திலிருக்கிறது. கிராமத்திலிருந்து வந்தவன் கோழிகளைத் திருடுவதற்கு பச்சை மருந்து ரெடி செய்து வந்தான். முதலில் கோழி இறக்கையைப் பிய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மருந்தை கோழிகளின் மேல் தூவிவிட்டால் கோழி மாயமாக மறைந்துவிடும் பிறகு இறக்கையை வைத்தால் அதன் கோழி வந்து உட்காரும் என்று பயங்கரமாக பேய்
கதையைச் சொல்வது போலச் சொன்னான். பச்சை மருந்தை யார் சென்று தூவுவது என்று முடிவு செய்தோம். மாரிமுத்துவுக்குத் தெரியாத எங்களது நண்பன் தொந்தி கணேசனை கடலைமிட்டாய் வாங்குவதுபோல மாரிமுத்துவுக்குத் தெரியாமல் பச்சை மருந்தைத் தூவிவிடவேண்டுமென அனுப்பினோம். அப்படி தூவும்போது மாரிமுத்து பார்த்துவிட்டார். அவனை ஓங்கி கன்னத்தில் அடித்துவிரட்டினார்.

மூடைத்தூக்குகிற முத்துவும் கோழிகளைத் திருடித்தரவில்லை. ஆனால் ஆதிலெட்சுமிக்குத் திருமணம் முடிந்தது. கண் மூடித்திறப்பதற்கு பந்தல் போட்டு கோயிலில் வைத்து தாலி கட்டி கல்யாணம் முடித்து விட்டார்கள். ஆதியின் மாப்பிள்ளை நானும் நாராயணனும் தெருவில் நின்று வேடிக்கைப் பார்த்தோம். ஒல்லியாக உயரமாக இருந்தான்.
ஆதிலெட்சுமி மிலிட்டரிக்காரனை திருமணம் செய்து கொண்டாள் என்று தெருப்பெண்கள் பேசியதை நாங்கள் கேட்டோம். மிலிட்டரி வேலைக்குப் போகலாமா என்று நாராயணன் கேட்டான். வேலைக்குப் போகவேண்டுமென்றால் பத்தாம்வகுப்பு பாஸாக வேண்டுமென சொன்னான். இங்கிலிஷில் 35 மார்க் எடுத்து எப்படிடா பாஸாவது என்று கவலையாகக் கேட்டேன்.

ஆதிலெட்சுமி அவளது கணவன் வீட்டிற்குச் செல்லும் போது கோழிகளை எடுத்துச் சொல்லவில்லை. அவள் மிலிட்டரிக்காரனுடன் ஊருக்குச் சென்றதும் அவளது தம்பி பாண்டி கோழிகளின் கால்கட்டை அவிழ்த்துவிட்டு, ஊர் மேயவிட்டான். பகலெல்லாம் கோழிகள் மேய்ந்துவிட்டு கடையின் முன் நின்றிருக்கும். மாரிமுத்து சைக்கிளுக்கு பஞ்சர் பார்த்துக்கொண்டிருப்பார். கோழிகளைக் கண்டதும் அவருக்கு ஏதோ ஆத்திரம் வந்து கத்துவார். கோழிகள் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவிடும்.

ஆதி வளர்த்த கோழிகள் தெருவில் மேய்வதை நானும் நாராயணனும் பள்ளிக்கூடம் போகும்போது பார்த்தோம். நான் பச்சை மருந்தை தூவுடா எப்படி மறையுதுன்னு பாப்போம் என்று அவனிடம் சொன்னேன். அதுக்கு அமாவாசை வரை காத்திருக்கணும் என்று சொன்னவன் ஓடிப்போய் பிடிக்க முயன்றான். கோழிகள் மிரண்டு ஓடிவிட்டன. நீண்ட நாட்களாக கோழிகள் தெருவில்தான் அலைந்து கொண்டிருந்தன. மாரிமுத்து ஒருநாள் கோழி ஒன்றை விரட்டி பிடித்து வீட்டிற்குள் கொண்டு சென்றார். அன்று அவர்கள் வீட்டில் கோழிக்குழம்பு.

ஆதி வளர்த்த கோழியை கொன்றதால்தான் என்னவோ மாரிமுத்துவுக்கு கடன் அதிகமானது. வட்டிக்கு வாங்கிய நடத்திய கல்யாணம், கடனுக்கு வாங்கிய சைக்கிள் என்று அவரைச் சுற்றிலும் கடன்காரர்கள் நின்றிருந்தார்கள். சைக்கிளை பாதி விலைக்கு விற்றுவிட்டார். வீட்டை விற்பதற்கும் வீட்டை வாங்குவதற்கும் பலரும் தினமும் அவரைப் பார்க்க வந்தார்கள். ஆதியின் திருமணம் எப்படி திடீரென நடந்ததோ அதேபோலத்தான் மாரிமுத்து வீட்டையும் விற்றுவிட்டு ஊரைவிட்டுப் போனார். அவர்கள் ஊரைவிட்டுப் போகும் போது ஆதிலெட்சுமி வளர்த்த கோழிகளை எடுத்துக்கொண்டுச் செல்லவில்லை.

அவர்களுடன் செல்லாத வருத்தம் எதுவுமில்லாத கோழிகள் தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்தன. கோழியை பிடித்துவிடலாமா என்று நாராயணனிடம் கேட்டேன். அவன் அழுதுகொண்டே, “ஆதி அவ புருஷங்காரன் கூட போகுறப்போ என்னையைப் பார்த்து சிரிச்சாடா” சொன்னான். நான் கோழிகளைப் பார்த்து சிரித்தேன்.

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Writing meaning pleasure aathi valartha kozhi

Best of Express