Advertisment

எழுத்து பொருள் இன்பம் : ஒவ்வாமையும் பேரன்பும்

ஆசிரியர் தம்பதிகளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது எதுவுமில்லை. ஆனால் கற்க வேண்டியது என்று ஏராளமாக இருப்பது இப்போது தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ovamai

எஸ்.செந்தில்குமார்

Advertisment

ஒருமனிதரை நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும் ஏதோ காரணத்திற்காக நம்மை அவர் பின்தொடர்ந்து வருவதும் அன்பு செலுத்துவதும் முன்வந்து உதவுவதும் அதன்பொருட்டு நமக்கும் அவருக்குமான கசப்புணர்வுகள் நீங்கி அம்மனிதரின் அன்புக்கு முன் பணிந்து நிற்பது சகஜமான தருணங்கள் என்று சொல்லவேண்டும்.

இப்படியான தருணங்கள் என் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் பலரிடமும் நடந்திருக்கிறது. ஒவ்வாமை என்பது உணவுகள், சுற்றுச்சூழல், உடைகள் போன்றவற்றில் மட்டுமில்லை. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலும் உண்டு. ஒருவர், ஒருவரை பிடிக்கவில்லையென்று குற்றம் சுமத்துவது ஒருவகை ஒவ்வாமை என்று கூறத் தோன்றுகிறது.

எங்களது வீட்டினருகே குடியிருந்த ராஜலெட்சுமி டீச்சரும் துரைப்பாண்டி வாத்தியாரும் அவ்வகையில் ஏதோ ஒரு காரணத்திற்காக என் மீதும் அவர்கள் குற்றம் சுமத்துவதும், நான் அவர்கள் மீது தொடர்ந்து புகார் தருவதுமாக இறுதி வரை இருந்திருக்கிறேன். அதற்கு முக்கியமான காரணமாக கருதுவது ஒவ்வாமை என்றுதான் சொல்ல வேண்டும்.

ராஜலெட்சுமி டீச்சரிடம் ஏழாம் வகுப்பில் பயின்றேன். அது மாணவிகளும் மாணவர்களும் கலந்த வகுப்பறை. டீச்சருக்குப் பக்கத்து வீடு என்பதால் அதிகமாக கெடுபிடி இருந்தது. தாமதமாக வரக்கூடாது. கேள்விகளை உடனே மனப்பாடம் செய்து முதல் ஆளாக ஒப்பித்துவிட வேண்டும். ஆங்கில கட்டுரைகளை தவறுகள் இல்லாமல் எழுதிக் காட்ட வேண்டும் என்பன போன்ற சட்டதிட்டங்கள் அந்த வகுப்பில் இருந்தன. முப்பது நாட்களுக்குப் பிறகு அந்த வகுப்பறை முழுக்கவும் பெண்களுக்கான வகுப்பாக மாறி அங்கிருந்த மாணவர்களை வேறு வேறு வகுப்புகளுக்குப் பிரித்து அனுப்பி வைத்தார்கள். என்னை அமிர்குஷேன் வாத்தியாரிடம் கொண்டுபோய் சேர்த்தார்கள். (ஸாருடைய மகன் பெயர் பாதுஷா பின்னாளில் நாங்கள் இருவரும் ஒரே சிகரெட்டை ஆளுக்குப் பாதியாக குடித்தோம். கவிதைகள் எழுதினோம் கல்லூரியில் தோழர்களாக திரிந்தோம்.) ஸாருக்கு காது கொஞ்சம் மந்தம். சத்தமாக பேசவேண்டும். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. மெதுவாக பேசினால் அவருக்குக் கோபம் வந்து காதைப் பிடித்துக் கிள்ளிவிடுவார். கிள்ளும் போது கத்துவதை கூட சத்தமாக கத்த வேண்டும் அப்போதுதான் கிள்ளுவதை நிறுத்துவார்.

ராஜலெட்சுமி டீச்சரின் தொந்தரவு அந்த காலக்கட்டத்தில் அளவுக்கு அதிகமாக இருந்தது. என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. என்னால் மட்டுமல்ல எங்களது தெருவிலிருந்த பல மாணவர்களுக்கும் டீச்சரைக் கண்டால் பிடிக்காது. தெருவில் விளையாட முடியாது. கத்த முடியாது. ஓட முடியாது. பிற்பகல் நேரத்தில் டீச்சர் வீட்டிற்கு முன்பாக யாரும் விளையாடக்கூடாது. மதிய உறக்கத்திலிருந்து எழுந்து துரைப்பாண்டியன் ஸார் வந்து யார்றா கத்துரது எந்த கிளாஸ்டா என்று அதட்டுவார். ஸார் தங்களை பெயிலாக்கிவிடுவார் என்று பயந்து கொண்டு பிள்ளைகள் யாரும் அவர் வீட்டுக்கு முன்பாக விளையாடுவதில்லை. வேறு தெருவுக்கும் போகமுடியாது. உங்க தெருவுக்குப் போய் விளையாடுங்கடா என்று பையன்கள் விரட்டுவார்கள். (என்னுடைய முறிமருந்து நாவலில் இதுபோன்ற பல விஷயங்கள் முதல் 100 பக்கங்களில் இருக்கும்.) டீச்சருக்கும் ஸாருக்கும் சத்தம் கேட்காமல் என்ன விளையாட்டுக்கள் விளையாட முடியும்?

ஊளைக்காதனும் நானும் டீச்சர் வீட்டுக் கதவின் ஓட்டையில் சீனிவெடியை வைத்துவிடுவது என்று திட்டம் போட்டோம். தீபாவளி வருவதற்கு இன்னமும் எத்தனை நாட்கள் இருக்கின்றன. எவ்வளவு காசு சேர்க்கவேண்டுமென்பது பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் பேசியதை யாரோ கேட்டுவிட்டு, டீச்சரிடம் போய் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். டீச்சர் என்னையையும் என் அம்மாவையும் அழைத்து திட்டினார்.

இதுமாதிரியான சம்பவங்கள்தான் டீச்சருக்கும் ஸாருக்கும் எனக்குமான ஒவ்வாமையாக மாறி அவர்களைக் கண்டால் நான் ஓடி ஒளிந்து கொள்ளும்படியாக இருந்தது. டீச்சரையும் வாத்தியாரையும் எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்பது எனது லட்சியமாகக்கூட இருந்தது. ஆனால் காலம் தன் பக்கங்களைப் புரட்டும் போது எல்லாம் மாறிவிடுகிறது. இதே ராஜலெட்சுமி டீச்சர்தான் என் கதைகளைப் படித்து என்னிடம் பேசும் முதல் பெண் வாசகியானார் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையாதது குறித்து அதிக கவலைகொண்டது டீச்சர்தான். அதேநேரம் டுட்டோரியரில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றியடைந்ததோடு, நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முதல் தேர்விலேயே வெற்றியடைந்தேன். இது குறித்தும் அதிக சந்தோஷங்கொண்டது டீச்சர்தான். “எப்படிடா எப்படிடா” என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள். ஆனால் டீச்சரிடம் பேசுவது கிடையாது. பேச்சைக் குறைத்துக் கொண்டேன்.

கல்லூரியில் முதலாம்ஆண்டு இளங்கலை வரலாற்று மாணவனாக சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் கவிதைகள் எழுதினேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கும் சூழல் அங்கு உருவானது. பாதுஷா, முகமது உஸ்மான் ஆகியோர் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதியில் நானும் கவிதைகள் எழுதினேன். கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு மதுரையில் தங்கி ஓராண்டுகாலமாக கூட்டுறவு பட்டயப்பயிற்சிப் படிப்பு படித்தேன். கூட்டுறவு வங்கி வேலை கிடைத்து திருமணம் குழந்தை வாரந்தோறும் சினிமா ஞாயிற்றுக்கிழமை மதிய உறக்கம், மட்டன்சாப்பாடு என்று சுருக்கமாக முடிந்திருக்கிற வேண்டிய என் வாழ்வு இலக்கியவாதியாக மாறிவிட்டது.

அப்பா இறந்ததும் தினமும் வீட்டிற்கு வந்து அம்மாவுடன் பேசிவிட்டுச் செல்லும் பழக்கத்தை டீச்சர் கடைபிடித்தார். புத்தகங்கள் தருவது வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய பலகாரங்களைக் கொண்டு வந்து தருவது என அவருடைய செயல் சிலநேரங்களில் குழந்தைமையாக இருக்கும். தீபாவளிக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாகவே டீச்சரும் ஸாரும் வீடுகளுக்குச் சென்று ஸ்வீட் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

டீச்சருக்கு இரண்டும் ஆண் குழந்தைகள். மூத்தவர் மதுரையில் தமிழ்நாடு மெர்க்ண்டைல் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். இரண்டாவது மகன் பெங்களூரில் அலுவலகப்பணி. தமிழ்நாடு மெர்க்ண்டைல் வங்கியில் டீச்சரின் சிபாரிசின் பெயரில் எனக்கு நகைமதிப்பீட்டாளர் பணி கிடைத்தது. நன்றாக பிழைத்துக்கொள்ளலாமென பலரும் சொன்னார்கள். எனக்கு அங்கு சென்றதும் முதல் வேலை மேஜை நாற்காலிகளை சுத்தம் செய்வதும், டீ வாங்கிக்கொண்டு வந்து தருவதும்தான். கொஞ்சநாட்கள் இருந்திருந்தால் எல்லாம் சரியாகப் போயிருக்குமென்று பலரும் சொல்லி கேட்காமல் பணியிலிருந்து விலகினேன். அப்போது புதுஎழுத்து சிறுபத்திரிகையில் உலகின் கடைசி வீட்டோருக்கான கடிதம் என்கிற நெடுங்கதை பிரசுரமாகியிருந்தது. என்றாவது ஒருநாள் ஆகச்சிறந்த எழுத்தாளானாகிவிடுவேன் என்கிற நம்பிக்கையில் சொந்தமாக கடை வைத்து அமர்ந்தேன். கடையில் புத்தகம் வாசிப்பது, கதை எழுதுவது மட்டுந்தான் வேலை (அப்போது கம்ப்யூட்டர் பரவாலாகவில்லை P4 என்று கம்ப்யூட்டரை அழைத்தார்கள். கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போய் கம்ப்யூட்டர் கடை வைத்து சம்பாதித்தவர்கள் பலரும் எங்களூரில் உண்டு.)

என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து ராஜமார்த்தாண்டன் அண்ணாச்சி போன் செய்து பேசினார். தொகுப்பிற்கு கதைகளை அனுப்ப கூரியருக்குப் பணம் இல்லை. தெருவில் யாரிடமும் கேட்பதற்கு கூச்சமாக இருந்தது. டீச்சரிடம் செலவுக்குப் பணம் வேண்டுமென 50 வாங்கி கூரியர் செய்தேன். அந்த வருடம் இளம்படைப்பாளிக்கான சுந்தரராமசாமி விருதும் விலகிச் செல்லும் பருவம் என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளியானது. டீச்சர் வீட்டிற்கு வந்து விருதையும் புத்தகத்தைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

அதற்குப்பிறகு டீச்சருக்கும் ஸாருக்கும் எனக்குமான இடைவெளி அதிகமானது. மதுரை ஃபன்ட் ஆபிசில் வேலைக்குச் சேர்ந்தேன். 5 வருடங்கள் மதுரை தெற்குமாசி வீதியில் குடும்பத்துடன் குடியிருந்தனர். வேலை தல்லாகுளத்திலும் புதூரிலுமாக மாறி மாறி வேலை பார்த்தேன். டீச்சருக்கு சந்தோஷம். வங்கியில் வேலை பார்த்த டீச்சரின் முதல் மகன் அன்பு அண்ணன் மதுரையில் அடிக்கடி சந்தித்து பேசுவார். மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு அன்பு அண்ணனிடமிருந்து போன் வந்தது. டீச்சர் கீழே விழுந்து தொடைக்கும் இடுப்பிற்குமான எலும்பு சேதமாகிவிட்டது மதுரை மருத்துவமணையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்.

டீச்சரை மருத்துவமணைக்குச் சென்றுப் பார்க்கவில்லை. வேலை பளு என்றில்லை. பதிலாக பார்க்கக்கூடாது என்பதுதான். எதற்கென தெரியாத மனஅழுத்தம் என்னிடம் இருந்தது. இது என்னுடைய தவறுதலாகக்கூட இருக்கலாம்.

நான் கதை எழுதுவதை விருதுவாங்குவதை டீச்சரும் ஸாரும் பெருமையாக நினைத்தார்களா என்று தெரியாது. ஆனால் விருது எப்படி கிடைத்தது? கதையை ஆனந்தவிகடனுக்கு எப்படி அனுப்ப வேண்டும் எவ்வளவு பணம் கிடைத்தது என்கிற மாதிரியான கேள்விகளை கேட்பார்கள். டீச்சர், “எங்க சொந்தக்காரப் பெண்ணும் கதை எழுதும். ஆன்டிப்பட்டியிலே கட்டிக் கொடுத்திருக்காங்க” என்று சொல்வார்கள். ஸார் என்னுடைய கதையை படித்ததாக நினைவில்லை. இரண்டு பேரிடமும் உதாசீனம் செய்கிற குணம் உண்டு. நான் அதை பெரிதுப்படுத்தவில்லை. அவர்களை மதிப்பில்லை என்கிற குற்றம் சாட்டுவார்கள். கதை எழுதி பெரிதாக சம்பாதிக்கிறேன் என்று என்னை முன்னால் செல்லவிட்டு பின்னால் பேசுவார்கள். ஸாரிடம் ஹிந்தி போராட்டத்தைப் பற்றிச் சொல்லுங்க ஸார் என்று கேட்டால் அது எதுக்கு உனக்கு? என்று சொல்லிவிடுவார்.

டீச்சருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவரால் வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை. இரண்டு மகன்களின் மனைவிமார்களும் மகளைப் போல தங்கமாகப் பேணுவார்கள். இறுதியில் மேட்டுப்பாளையத்திலிருக்கும் அவர்களது உறவினர்களின் காப்பகத்திற்கு சென்று தங்கிக்கொண்டனர். ஊரிலிருந்த இரண்டு வீட்டையும் விற்றுவிட்டார்கள். பேரனுக்கும் பேத்திக்கு பணம் கொடுத்துவிட்டார்கள். காப்பகத்தில் தங்கியிருந்த நாளில் டீச்சருக்கு ரொம்பவும் முடியாமல் இறந்துபோனார். தகவலை ஸாரே அழுதுகொண்டு அம்மாவிடம் சொன்னார்.

டீச்சரின் வீட்டை விலைக்கு வாங்கி அதைப்புதுப்பித்து வேறு வேறு கலர் அடித்து வீட்டை மாற்றியிருக்கிறார்கள். பால் காய்ச்சிய நாளில் நான் சென்றிருந்தேன். டீச்சர் வழக்கமாக அமர்ந்து பேப்பர் படிக்கும் இடம், காய்கறி நறுக்கும் இடம், ஸார் அமர்ந்து டி.வி. பார்க்கும் இடம் என்று எதுவும் மாறாமல் இருந்தது. டீச்சரும் ஸாருந்தான் இல்லை. ஊருக்குப் போகும் போது, டீச்சரின் வீட்டைப் பார்ப்பேன். வாசற்படியில் டீச்சர் அமர்ந்திருப்பது போலிருக்கும். ஆனந்தவிகடனில் கதை வந்ததும் படித்துவிட்டு எப்படி எழுதுனே. அங்கே பத்திரிகை ஆபிஸிலே யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்களா என்று கேட்பது போலிருக்கும். திரும்பிப் பார்க்காமல் கடந்துவிடுவேன்.

இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது எதுவுமில்லை. ஆனால் கற்க வேண்டியது என்று ஏராளமாக இருப்பது இப்போது தெரிகிறது. தங்களுக்கு கிடைத்த ஆசிரியர் உத்தியோகத்தை நம்பி சொந்த ஊரிலிருந்து எங்களது ஊருக்கு வந்து குடியேறி ஒரு வீட்டிற்கு இரண்டு வீடு விலைக்கு வாங்கி பிள்ளைகளை படிக்க வைத்து வேலை வாங்கிக்கொடுத்து திருமணம் செய்து வைத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீடு என்று பிரித்துக் கொடுத்து கடைசி வரை யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்க நினைத்தது இதுதான்: ஏன் டீச்சர் கடைசி காலத்தில் நீங்கள் காப்பகத்தைத் தேர்வு செய்தீர்கள்?

S Senthilkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment