எஸ்.செந்தில்குமார்
அப்பாவிடம் ஒருமுறை என்னை நீங்கள் முதன் முதலாக எந்த சினிமாவுக்கு அழைத்துச் சென்றீர்கள் என ஞாபகமிருக்கிறதா என்று கேட்டேன். உடனே அவர் எந்த யோசனையுமில்லாமல் ’ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி’ என்று சொன்னார். அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டுமென்கிற ஆர்வம் எனக்கு ஏற்கனவே இருந்தது. அதற்கு காரணம் எஸ்.வரலட்சுமி. மேலும் அப்பா அந்த சினிமாவின் கதையை சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனது பெரியப்பாவும் இந்த கதையை எங்களுக்குச் சொல்வார். இக்கதையில் மூன்று கேள்விகள் வரும். அக்கேள்விகளை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதுதான் கதை சொல்கிறவர்கள் கதை கேட்பவர்களுக்கு நடத்துகிற பரீட்சை. அப்பா சொல்கிற பாணிக்கும், பெரியப்பா சொல்கிற பாணிக்கும் அதிக வித்தியாசமிருந்தது. ஒவ்வொரு இடத்திலும் அப்பா இடையீடு செய்து சுயவிமர்சனத்தையும் தனது அறிவாளித்தனத்தையும் எங்களுக்குச் சொல்வார். பெரியப்பா அப்படியில்லை. சினிமா எங்களது கண் முன்பாக நடப்பது போல கதையை சொல்வார். நான் கதை எழுதத் தொடங்கிய சமயம் இருவருமே உயிருடன் இல்லை.
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்படத்தைக் கல்லூரி படித்துக் கொண்டிருந்த முதல் வருடத்தில் சினிமா தியேட்டரில் சென்று பார்த்தேன். அதற்கு முன்பாக கமல்ஹாசன் நடித்த குணா, எம்ஜிஆர் நடித்த நீதிக்கு தலைவணங்கு ஆகிய படங்களைப் பார்த்திருக்கிறேன். (நீதிக்கு தலைவணங்கு படத்தைப் பார்த்தற்குக் காரணம் இந்த பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்தி பூவினில் தொட்டில் கட்டிவைத்தேன் என்கிற பாடல். குணா படத்தில் எஸ்.வரலட்சுமி உன்னை யாரறிவார் என்கிற பாடலை பாடியிருப்பார்.) இந்த இரு படங்களிலும் நடிகை எஸ்.வரலட்சுமியின் முதிர்ந்த தோற்றத்தைப் பார்த்து விட்டு ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணியில் இளமையான தோற்றத்தில் பார்த்து பிரமித்துப் போனேன். செங்கமங்கலத்தை உண்மையாக காதலிக்கும் மெய்யழகனாக நான் இருக்கக்கூடாதா என்கிற ஏக்கம் உண்டானது.
எஸ்.வரலட்சுமி என்கிற செங்கமங்கலம், “என் மனதை கவர்ந்தவர் ஒரு ராஜகுமாரன்தான்” விழிகளை உருட்டி உதடு திறக்காமல் ஆச்சரியத்தையும் ஆசையையும் மோகத்தையும் ஏக்கத்தையும் முகத்தில் வெளிப்படுத்திய அந்த காட்சியை சினிமா பார்க்கிற யாராலும் மறக்க முடியாது. இந்த காட்சி அப்படியொன்றும் மிகநெருக்கமான குளோசப் காட்சி கூட இல்லை. அவ்வளவு தெளிவாக பார்வையாளர்களுக்கு கண்களும் உதடும் முகமும் தெரியும்படியாக ஒளிப்பதிவாளர் காட்சியைப் பதிவு செய்திருப்பார்.
“எனது பச்சைக்கிளி கூண்டைவிட்டு தப்பியோடிவிட்டது. அதை நீங்கள் பார்த்தீர்களா ஐயா” என்று எஸ்.வரலெட்சுமி மெய்யழகனாக நடிக்கும் பி.எஸ்.கோவிந்தனிடம் கேட்பார். அப்போது மெய்யழகன் தான் பார்க்கவில்லை என்றும் உண்மையில் பச்சைக்கிளி பறந்து வந்திருந்தால் அல்லவா பார்ப்பதற்கு என்று கேட்டதும் வெட்கத்துடன் மன்னிக்கவும் என்று எஸ்.வரலெட்சுமி நாணும் காட்சி அபூர்வமான நடிப்பு. தலைகுனிந்து கொண்டாலும் அம்முகத்தில் தோன்றும் நாணமும் அச்சமும் துளிர்க்கும் ஆசையும் செங்கமங்கலத்தை காதலிக்கச் செய்துவிடும்.
‘காதலாகினேன்
எவர் ஏதும் சொன்ன போதிலும்
நான் காதலாகினேன்…’ என்று தூணில் சாய்ந்தபடி எஸ்.வரலட்சுமி பாடும் காட்சி இப்படத்தில் இடம்பெறும். முதல் சில நொடிப்பொழுது பார்வையாளர்களுக்கு செங்கமங்கலம் சோகத்துடன் பாடுவது போல முதலில் தோற்றமளித்தாலும் அம்முகத்தில் சோகம் தெரிவதில்லை. கண்கள் மின்ன துடித்துவிடுவதுபோல உதடுகள் விம்ம மோகத்தின் நீர்துளிகள் முகத்தில் தாமரையில் உருளுவது போல ரசமான உணர்வுகள் முகத்தில் மினுங்கும். மற்றொரு காட்சி, “தங்கள் பகைவன் என் பகைவன், தங்கள் நலம் என் நலம் தங்கள் இன்பம் என் இன்பம்” என்று கதாநாயகனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு பேசும் வசனம் நம்மைப் பார்த்து பேசுவது போலிருக்கும். பார்வையாளர்களில் ஒருவரைத்தான் எஸ்.வரலட்சுமி காதலித்து பேசுகிறார் என்று எண்ணத் தோன்றும்.
எஸ்.வரலெட்சுமி ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியைத் தவிர வேறெந்த எந்ததெந்தப் படங்களில் நடித்திருக்கிறார் என்று தேடித்தேடிப் பார்த்திருக்கிறேன். செங்கமங்கலத்தைத் தவிர வேறெந்த கதாபாத்திரத்திலும் நடித்தது எனக்குப் பிடிக்கவில்லை. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியில் எஸ்.வரலெட்சுமி வருகிற முதல் ஒரு மணி நேரத்தை மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். நகைச்சுவையும் குறும்புத்தனமாக பேசும் பேச்சும் பின்னாளில் வந்த எஸ்.வரலெட்சுமி நடித்த திரைப்படங்களில் காணப்படவில்லை. அம்மா கதாபாத்திரங்கள் அவருக்கு பொருந்தியதற்கு அவரது திரேகம் ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.
இப்படத்தில் வி.என்.ஜானகியின் அளவான நடிப்பும் வாளை ஏந்தி பேசும் வசனங்களும் எங்களது சிறுவயதில் புகழ்பெற்று விளங்கின. பெண்கள் வாசல் கூட்டும் விளக்குமாறு குச்சியை கையில் வாளாக ஏந்திப்பிடித்து,
“மண்ணுலகில் பெண்ணாக பிறந்து ஆண்வேடம் பூண்டு
அமைச்சர் தொழில் புரிந்து
பஞ்சவஞ்சிகளை மணமுடிப்பதாக கூறி கவர்ந்து வரும் பொழுது
அப்பெண்ணை சிறை கொண்ட சந்நியாசியை அடித்து துரத்திய
அரிவை இருக்கின்றாளா? இறந்துவிட்டாளா?
அவள் யார்?” என்கிற கேள்வியை ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டு கத்தி சண்டை போடுவார்கள்.
என்னைப்போன்ற சிறுவர்கள் சாமியார் வேஷம் போட்டுக்கொண்டு “ம்ம்ம் தெளிவில்லாத நெஞ்சம் தெளியட்டும்” என்று ஹஹஹாவென சிரித்துக் கொண்டிருப்போம்.
சந்நியாசியாக நடித்த எம்.ஆர்.சாமிநாதன் அலட்சியமாக நடித்திருப்பார். பெண்ணின் முன்பாக நடுங்கும் காட்சியில் அவரது நடிப்பின் அபாரம் புலப்படும். ஈசனிடமிருந்து நேரடியாக சிவதொண்டன் போல அவருடைய பேச்சும் செயலும் காண்பவர்களை வசீகரம் செய்யும். இந்த உடல் ஆசைப்படுகிறது என்று அவர் சிரிக்காமல் சிரிக்கும் இடம் காமத்தைத் தாடி வளர்த்த முகத்தையும் மீறி கண்களின் வழியாகவும் கன்னங்களின் வழியாகவும் வெளிப்படுத்துவார்.
பழைய திரைப்படங்களில் துணைகதாபாத்திரங்கள் அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அபூர்வசிந்தாமணியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் அவள் கேட்கும் மூன்று கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அதே போல துணைகதாபாத்திரமாக வரும் தங்கம் (சி.டி.ராஜகாந்தம்) தான் வைக்கும் புள்ளிகளுக்கு கோலமிட்டு முடிக்க வேண்டுமென்கிற போட்டியை நடத்துவார். காளி (காளி என்.ரத்தினம்) அவரை காதலிப்பார். இருவரும் செய்யும் ரகளை ரசிக்கும்படியாக இருக்கும். வெச்சேனே வெச்சதுதான்… புள்ளி வாசலிலே வச்சனே வச்சதுதான்… வாடிக்கையாக நான் வேடிக்கையாக புள்ளி … என்று பாடலுடன் தங்கம் அறிமுகமாகும் காட்சி தத்ரூபமாக அமைந்திருக்கும். காளியும் தங்கமும் எப்போது தங்களது காதலை பரிமாறிக்கொண்டார்கள் என்பது காட்சிப்படுத்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒரு கட்டத்திற்குப் பிற்பாடு (அதற்கு முன்பாக சண்டையும் சச்சரவுமாக இருப்பார்கள்) காதலர்களாகிவிடுவார்கள். கதையின் கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கத் தொடங்கியதும் இவர்களுக்கும் காதல் காட்சி ஒன்று வந்துவிடும்.
பெரும்பாலான திரைப்படங்களில் துணைகதாபாத்திரங்கள் முழுக்க கதாநாயகியைப் பின்பற்றும் கதாநாயகியைப் போன்ற குணசித்திரம் படைத்த பெண்களாகவே இருப்பார்கள். இதுபோலதான் ஆண் துணைகதாபாத்திரங்களும். கதாநாயகனுக்கு காதலி கிடைத்தவுடன் அடுத்த கணமே துணைகதாபாத்திரத்திற்கும் ஒரு காதலி கிடைத்துவிடுவாள். இப்போது வருகிற நவீன திரைப்படங்களில் துணைகதாபாத்திரங்களுக்கு காதலி இல்லையென்பதும் அவர்களுக்கும் காதல் பாடல் காட்சி இல்லையென்பதும் எவ்வளவு வருத்தமாகவுள்ளது.
பெரும்பாலான புராண திரைப்படங்கள் பயணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. குலேபகாவலி, தங்கமலை ரகசியம், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, வஞ்சிக்கோட்டை வாலிபன், அலிபாபவும் நாற்பது திருடர்களும், பாதளபைரவி இன்னும் பிற. ஊரு விட்டு ஊர் சென்று பல கதைகளையும் பல மனிதர்களையும் சேகரிக்கும் மனித சுபாவங்கள் அடியோடு இன்று மாறிவிட்டது எவ்வளவு வேதனையாக இருக்கிறது. மனித பழக்கவழக்கங்களை விட கதைகளே மாறிவிட்டதே. எதற்காக மனிதன் தன்னை சிறையிலடைத்துக் கொண்டது போல கதைகளை ஒருவட்டத்திற்குள் அடைத்துக்கொண்டான். அவனது கதை உலகத்தை ஏன் விஸ்தாரமாக்கவில்லை என்பது சமூகம் சார்ந்த உளவியல் சிக்கல் கொண்டது. கதை என்பது பயணம்தான். பயணங்கள்தான் கதையை உருவாக்குகின்றன. அந்த பயணத்தில்தான் செங்கமங்கலம் போன்ற பெண்களை சந்திக்கவும் அவளை காதலிக்கவும் அவளைப் பற்றிய நினைவுகளை கதைகளாக எழுதமுடியும் என்றுத் தோன்றுகிறது.