scorecardresearch

எழுத்து பொருள் இன்பம் : இசை ஆசை

சினிமா இசையும் மனித வாழ்க்கையும் எப்படி பிண்ணி பிணைந்தது என்பதை மூன்று மனிதர்களின் வாழக்கை, பழக்க வழக்கங்களைக் கொண்டு விவரிக்கிறார், கட்டுரையாளர்.

எழுத்து பொருள் இன்பம் : இசை ஆசை

எஸ்.செந்தில்குமார்.

சினிமாவைப் பற்றி பேசுவதற்கு நிகரானதுதான், அதன் பார்வையாளர்களைப் பற்றி பேசுவதும். 90களின் தொடக்கத்தில் சினிமா என்பது கிடைக்காத அபூர்வமான வஸ்து என்று அனைவருக்கும் தெரியும். சினிமாவும் அது திறந்துகாட்டிய உலகமும் அதன் கற்பனையும் அளப்பரியது. அதற்கு நிகரானதுதான் அதன் பார்வையாளர்களைப் பற்றிய கதைகளும், சம்பவங்களும்.

திரைப்படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்லும் போது எனக்கும் எனது நண்பர்களுக்கும் உண்டாகும் பயத்தைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும். நாங்கள் மாலை நேரக்காட்சி பார்த்துவிட்டு வீட்டுக்குப் போகும் எங்களில் சிலருக்கு இரவு சாப்பாடு கிடைக்காது. (எட்டு மணிக்கு மேல் வரவில்லையென சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள்) கூட்டுக் குடும்பத்திலுள்ள சிலருக்கு தூங்குவதற்கு இடம் கிடைக்காது. இன்னும் சிலருக்கு வீட்டின் கதவு திறக்காது. நண்பர்களின் வீட்டில்தான் உறங்கச் செல்ல வேண்டும்.

சினிமா தொடங்கும் போது எங்களுக்குள்ளிருக்கிற கொண்டாட்டம், படிப்படியாக கிளைமாக்ஸ் தொடங்கி சுபம் போடும்போது வெள்ளம் வடிந்தது போலாகிவிடும். இதற்காக மதியகாட்சிக்குச் சென்று வரும் பழக்கம் பல நண்பர்களுக்கு இருந்தது. அதிலும் ஒரு பிரச்சனை. இரண்டு மணிக்கு மேல் சோறு பரிமாறும் பழக்கமுடைய நண்பர்களின் வீட்டில் 1:30 மணிக்கு சோறு போடுங்கள் என்றால், ‘சினிமாவுக்கா போறே’ என்று கண்டுபிடித்து விடுவார்கள். “உனக்கு உடனே சோறு போடமுடியாது. கொஞ்சம் லேட்டா போனா என்ன” என்று கேலி செய்யும் அக்கா தங்கைமார்கள். ஆனாலும் இடைவேளையில் வாங்கிச்சாப்பிட தனது சீரகடப்பாவிலிருந்து காசு எடுத்துத்தரும் அம்மா, (அக்காவுடன் பிறந்த தம்பிக்கு எந்த ஜாதகமும் பார்க்க வேண்டியதில்லை; அவனுக்கு இரண்டு அம்மா) அக்கா தனியாக சேர்த்து வைத்திருப்பதிலிருந்து சிறிது காசு கிடைக்கும்.

இந்த காலக்கட்டத்தில்தான் ஒரே சினிமாவை வேறு வேறு நண்பர்களுடன் இணைந்து மூன்று முறை, நான்கு முறையென பார்க்க நேரிட்டது. குமாருடன் ஒருமுறை, அதே படத்தை இரண்டு தினங்களுக்குப் பிறகு “நீ அவனுக்கு மட்டும் கம்பனி கொடுத்தே எனக்கு கொடு” என்ற தங்கப்பாண்டியுடன் இன்னொரு முறை. இப்படி சினிமாவைப் பார்க்கச் செய்தது இளையராஜாவின் இசைதான் என்றால் அது பொய்யில்லை. சுந்தர்ராஜன், பாக்யராஜ், மகேந்திரன் படங்களும் அப்படங்களில் வரும் பாடல்களும் எங்களது விருப்பமாக இருந்தது.

‘மன்னவன் ஜாடை நூதனமே’ என்று தூறல் நின்னுப்போச்சு திரைப்படத்தில் வருகிற ஒருவரியை மட்டும் பாடிக்கொண்டு அலைகிற (பூபாளம் இசைக்கும் ஊர்வலம்… என்ற பாடல்.) நண்பர்கள் ஊரில் உண்டு. இப்போது இருக்கிற வசதி போல 90களின் காலத்தில் இல்லை. நினைத்த நேரத்தில் நினைத்த பாடல்களைக் கேட்க முடியாத சூழல். ஆனால் பாட்டுப்பாடுகிறவா்கள் என்று சிலர் இருந்தார்கள். ஒரு ஆயிரம் பாடல்களையாவது மனப்பாடமாக பாடுவாா்கள். கீழத்தெரு ராஜாங்கம், மேலத்தெரு பொன்னையா அண்ணாச்சி, மார்க்கெட் ராஜேந்திரன் என்று ஊருக்குள் மூன்று நான்கு பேர் பாட்டுப்பாடி அலைந்தார்கள். அவர்களின் வேலை பாடுவதுதான். இதில் பொண்ணையா அண்ணாச்சி டி.எம்.எஸ்ஸின் தத்துவப்பாடல் ஸ்பெஷலிஸ்ட். (2000இல் இறந்துவிட்டார்.) ராஜாங்கம் சிவாஜி ரசிகர். டூயட் பாடல்கள் மட்டுந்தான் பாடுவார். அதுவும் பெண்கள் குரலில் அவரே பாடும்போது கூட்டத்திலிருந்து வரும் கைதட்டலும் விசில் ஓசையும் திருவிழாவுக்கு நிகரானது. (ராஜாங்கமும் இறந்துவிட்டார்) ராஜேந்திரன் ரஜினி கமல் காலத்து ஆள்.

இசை ஆசை என்பது போதைதான். தினமும் இசையை கேட்டுக்கொண்டு உறங்கச்செல்வது ஒரு பழக்கம் அல்ல. பதிலாக அது ஒரு போதையின் தொடக்கந்தான். ஒரு பாடலை மூன்று நான்கு முறை ஒரு சமயத்தில் கேட்கும் பழக்கமுடைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆழ்மனதிலும், கூட்டு நனவிலுமாக அப்பாடலும், அப்பாடலைக் கேட்கும் போது ஏதேனும் சம்பவங்கள் காட்சிகள் அந்த பாடலின் வழியாக மீட்டுருவாக்கம் அடையும். சிலருக்கு ஊர் வீடு புத்தகம் என்று பலவகைப்பட்டுள்ளது. சிலருக்கு வாசனையின் வழியாக அமையும். ஒருவருக்கு சாம்பார் வாசனையை முகர்ந்ததும் தனது அம்மாவின், பாட்டியின் ஞாபகம் வருவது போலத்தான் இந்த பாடலும் அது எழுப்பும் ஞாபகமும். இது ஒரு வகை போதைதான். இதிலிருந்து தப்பிக்க முடியவே முடியாதா?

இசை என்கிற போதையிலிருந்து தப்பித்தவர்கள் மேலே குறிப்பிட்ட ராஜாங்கம், பொண்ணையா அண்ணாச்சி, ராஜேந்திரன் என்ற மூன்று நபர்களும்தான். அவர்கள் பாடல்களைக் கேட்பதில்லை பதிலாகப் பாடுகிறார்கள். பொண்ணையா அண்ணாச்சி பிற்பகல் வேளையில் அவரது வீட்டிலிருந்து தத்துவப்பாடலை பாடியபடி வீதிஉலா வருவார். அவரைப் பின் தொடர்ந்து இரண்டு மூன்று பேர் வருவார்கள். முதலில் ஒரு டீக்கடையில் அவரது நடை நிற்கும். ஆனால் பாடல் நிற்காது. பருத்த வயிறும் நோயுற்ற கருத்தமுகமும், சர்க்கரையினால் வீங்கிய கால்களும் தொடைகளுக்கு மேலாக கட்டிய வேட்டியும், வேட்டிக்கு கீழே தொியும் காக்கி டவுசரும்தான் அண்ணாச்சிக்கு மிகப்பெரிய அடையாளம். அண்ணாச்சியை எங்கிருந்தாலும் கண்டுப்பிடித்துவிடலாம். அவரைக் கண்டுப்பிடிப்பதற்கு இன்னொரு அடையாளம் பாட்டுத்தான்.

“அண்ணாச்சி உங்களுக்கும் கீழத்தெரு ராசாங்கத்துக்கு ஒரு பாட்டுப்போட்டி நடத்தலாமா?”

“போடா வெண்ணே (அண்ணாச்சியின் பாசமே வெண்ணைய் என்ற வார்த்தைதான்) அவனுக்கு தத்துவமெல்லாம் எங்கே வரப்போகுது. நடையா இது நடையா ஒரு நாடகமென்றோ நடக்குதுங்கிற பாட்டை குடைய இது குடையான்னு பாடுறவன்தானே அவன்” என்று ராஜாங்கத்தைப் பற்றி குறைசொல்லிவிட்டு, ‘கடவுள் ஏன் கல்லானான்’ என்ற எங்கள் அண்ணன் படத்திலிருந்து வரும் பாட்டை பாடுவார். அவருக்கு டீ வந்துவிடும். பேப்பர் படிக்கிறீங்களா என்று ஒருவன் தந்தி பேப்பரைத் தந்துவிட்டுச் செல்வான்.

“அண்ணாச்சி இந்த பச்சகை்கிளிக்கு செவ்வந்தி பூவினில் தொட்டில் கட்டிவைத்தேன் பாட்டைப்பாடுங்க”

“போடா வெண்ணெய் எந்த பாட்டை எந்த நேரம் பாடுறதுன்னு வெவஸ்தை இல்லையாடா. ராத்திரி ஏழுமணிக்கு மேலே வா”
அண்ணாச்சிக்கு அதற்குள் சூடாக ஒருவடை வந்திருக்கும். அண்ணாச்சி அதை சாப்பிடமாட்டார். அவருக்குத் தெரியும். அது தன்னுடைய பசிக்கு வந்ததில்லை. தான் பாட வேண்டுமென்பதற்காக வந்தது என்று அவருக்குத் தெரியும். பாடவும் மாட்டார் சாப்பிடவும் மாட்டார். தன்னை கடந்து யாராவது பிச்சைக்காரர்களோ இல்லை பள்ளிக்கூடத்து சிறுமிகளோ சென்றால் கொடுத்துவிடுவார்.

“அண்ணாச்சி நீங்க சாப்புடுங்க”

“எனக்கு தெரியும்டே வெண்ணேய்”

அண்ணாச்சிக்கு பிற்பகல் ஒருமணியிலிருந்து சாராயம் குடிக்கத் தொடங்கினால் மூன்று மணிவரை குடிப்பார். குடிக்கிற இடத்தில் எந்த தகராறும் இருக்காது. தனது வேட்டியில் மடித்து வைத்திருக்கிற காசை எடுத்து மொத்தமாக கடைக்காரனிடம் கொடுத்துவிடுவார். அவன் அண்ணாச்சி இனி நாளைக்குத்தான் என்று சொல்லும்வரை தம்ளரை நீட்டிக்கொண்டிருப்பார். தான் கொடுத்த பணத்திற்கு சாராயம் குடித்துவிட்டு நிதானமாக நடந்துவருவார். வரும்போது யாரெல்லாம் தன் எதிரே நடந்து வருகிறார்களோ அவர்களை நிறுத்தி அவர்கள் கேட்டப்பாட்டையும் கேட்காத பாட்டையும் பாடுவார். அவர்கள் சிறிது நேரமாவது நிற்கவில்லையென்றால் ‘டே வெண்ணெய்…’ என்றுதான் சலம்பல் ஆரம்பிக்கும்.

பொண்ணையா அண்ணாச்சி பி.யூசி. படித்த நபர் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அவர் படித்த காலத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லையென்கிற வருத்தத்தில்தான் குடிக்கத் தொடங்கினார் என்றும் அண்ணாச்சி எட்டாம் கிளாஸ்கூட படிக்காதவர். அவருடைய அப்பா அவர் பெயருக்கு ஏலத்தோட்டத்தை எழுதித்தராமல் அவருடைய மனைவியின் பெயரில் எழுதி வைத்துவிட்டதாலும் மனைவி அவரை மரியாதைக் குறைச்சலாக நடத்துவதாலும்தான் குடிக்கிறார் என்றும் சொல்லுவார்கள்.
அண்ணாச்சி குடிகாரராகயிருந்தாலும் காலையில் குளித்துவிட்டு சலவை செய்த வேட்டியும் சட்டையும் அணிந்து நெற்றி நிறைய விபூதியும் கை நிறைய வடையும் தன் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொண்டுப்போவார். அவர்கள் வீட்டில் பசுமாடுகள் இருந்தது. அகத்திக்கீரையும் கத்தரிக்காயும் கூடையில் வைத்து தலையில் சுமந்து செல்வார். ரோட்டில் யாராவது குடித்துவிட்டு படுத்திருந்தால் காப்பிக்கடையில் தண்ணீர் வாங்கி முகத்தில் அடித்து யார் எந்த தெருக்காரர் என்று பார்த்துவிட்டு ஆள்விட்டு வீட்டிலிருந்து வரச்செய்வார். ரோட்டில் கிடக்கிற ஆளைத் தூக்கிக்கொண்டுப் போகிறது முடிய அருகில் அமர்ந்து பாட்டுப்பாடிக்கொண்டிருப்பார்.

“நானும் இப்படித்தான்டா ரோட்டிலே கிடப்பேன் குடிச்சிட்டு… கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிட்டு கொஞ்சம் கொஞ்சமா நடந்து வரணும்”

’அண்ணாச்சிக்கு பிறக்கும் போது அழுகிறான் இறக்கும் போது அழுகிறான்’ பாட்டுதான் உயிர். பாடி முடிகிற பொழுது அண்ணாச்சியின் கண்களில் கண்ணீர் வடிந்து நிற்கும். பாட்டு முடிந்து கண்களைத்துடைத்துக் கொண்டு சாதரணமாக பேசுவது போல தன் எதிரே உள்ளவரிடம் ஒருநாளிலேனும் கவலையில்லாமல் வாழமறந்தாய் மானிடனே என்று சொல்வார். அவருக்கு அந்த வரி அவ்வளவு இஷ்டம். இன்னும் கொஞ்சம் காலம் சந்திரபாபு இருந்திருக்கலாம் என்று சொல்வார்.

“அண்ணாச்சி இன்னொரு தடவை பாடுங்க இந்த பாட்டை”

“போட வெண்ணேய் எத்தனை தடவை நான் அழுகுறது” என்று வேறு பாட்டுக்குப் போய்விடுவார்.

அண்ணாச்சி இறக்கும் போது அவர் பிள்ளைகள் தொலைக்காட்சி டி.வி.டி என்று பல வசதிகளுடன்தான் இருந்தார்கள். ஆனால் அவர் எந்த பாட்டையும் கேட்கவுமில்லை பார்க்கவுமில்லை. இசை என்கிற போதையை ஆசையாக பாடிப்பாடியே அனுபவித்தவர்.

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Writing meaning pleasure music desire