எஸ்.செந்தில்குமார்
இரண்டு தினங்களுக்கு முன்பாக திருவாரூரிலிருந்து மாலை 5:30 மணிக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் திருச்சிக்குப் புறப்பட்டேன். முன்பதிவு செய்யாதப் பெட்டியில் கூட்டம். நின்று கொண்டு திருச்சி வரை பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். அப்பெட்டியில் மலையாளிகள் அமர்ந்திருந்தனர். வேளாங்கண்ணிக்குச் சென்று பாலக்காட்டிற்கும் கோட்டயத்திற்கும் திரும்புகிறார்கள். பொதுப்பெட்டிக்குரிய துர்நாற்றம் சற்றுக்கூடுதலாகவே இருந்தது. திருவாரூரிலிருந்து கேரளாவிற்கு வேலைக்குப் போகும் கும்பல் ஒன்று ரயில் புறப்படுவதற்கு முன்பாக ஏறியது. பழக்கப்பட்டவர்கள் போல கூட்டத்திற்குள் நுழைந்து லக்கேஜ் வைக்கும் இடத்தில் தங்களது உடமைகளை வைப்பதும், சிலர் அந்த இடத்தில் ஏறி அமர்ந்து கொள்வதிலும் வேகமாக இருந்தனர்.
அக்கூட்டத்தில்தான் இறந்து போன பாலுவின் சாயலிலிருக்கும் அவனைப் பார்த்தேன். கிட்டத்தட்ட பாலுவின் தோற்றம் அவனிடமிருந்தது. சதுரமான இரண்டு முன்பற்கள். சிறிய நெல்லிக்காயை மூக்கின் மேல் வைத்ததுபோல குண்டு மூக்கு. கூடுதலாக வளர்ந்திருக்கும் கறுப்பு புருவம். காதின் மடல்களில் வளர்ந்திருக்கும் ஒன்றிரண்டு முடிகள். நான் அவசரப்பட்டு, பாலு என்று அழைப்பதற்கு முன் அவன் கூட்டத்தை விலக்கிவிட்டு தரையில் தினசரியை விரித்து அமர்ந்தான். அமர்ந்ததும் தனது அடிவயிற்றில் சொருகிவைத்திருந்த பொட்டலத்தை எடுத்து மடியில் பிரித்தான். சீவல் வெற்றிலை சுண்ணாம்பு என்று பொட்டலத்திற்குள் சின்னஞ்சிறிய பொட்டலங்கள்.
பாலுவிற்கு வெற்றிலைப்போடும் பழக்கம் கிடையாது. பாலு ஒரு தனியார் பள்ளியில் எழுத்தரா வாட்மேனா காவலாளியா பிரின்ஸ்பாலுக்கு உதவியாளானா பிரின்ஸ்பால் வீட்டு சமையற்காரான என்று குழப்பமான பல வேலைகளை செய்து வந்தான். அப்பள்ளியில் நடந்த இரண்டு இலக்கியக்கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். இலக்கியக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேநீர் கொடுத்தது பாலுதான். இரவு எட்டுமணியைத் தாண்டியதும் பாலுவின் இருப்பு நிலையற்றதாகயிருந்தது. பாலு ஏழு மணிக்கு தன் மனவைியிடம் வருவதாக உறுதியளித்திருந்தான். ஆனால் பிரின்ஸ்பால் அவனை விடவில்லை. இரண்டு மூன்று முறை அவரிடம் தான் வீட்டிற்குச் செல்லவேண்டுமென்பதை நினைவுப்படுத்தினான். கூட்டம் முடியட்டும் செல்லலாமென்று அவர் அவனை நிறுத்தி வைத்திருந்தார். “எட்டு மணிக்கு வீட்டிலே இருக்கலைன்னா கதவைத் திறக்கமாட்டா ஸார் அவள்” என்று மெதுவான குரலில் பாலு எங்களுக்கு கேட்காமல் அவரிடம் பேசினான். ஆனாலும் பிரின்ஸ்பால் விடவில்லை. இலக்கியக்கூட்டம் முடிந்து அவர் நன்றியுரை நிகழ்த்திய பிறகுதான் அவனை வீட்டிற்கு அனுப்பினார்.
பாலுவை அதற்குப் பிறகு ஒரு சினிமா தியேட்டரில் சந்தித்தேன். இரண்டு கையிலும் ஐஸ்கிரிம் வாங்கிக் கொண்டு வேகவேகமாக நடந்து சென்றவனை மறித்து, “என்ன பாலு சினிமாவுக்கா” என்று கேட்டதும் பாலு எனது முகத்தைப் பார்த்தும் பார்க்காமல் “கோயிலுக்கா ஸார் வந்திருக்கேன். உங்களை மாதிரிதான் ஸார் நானும் சினிமாவுக்கு வந்திருக்கேன்” என்று பரபரப்பாக பேசினான். “ஐஸ்கிரிம் வடியுறதுக்கு முன்னாடி அவ கிட்டே போய் கொடுத்திரணும் ஸார்” என்று இருக்கையை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான்.
எனக்கு பாலுவை நினைக்க நினைக்க ஆங்காரமாக வரும். இல்லையென்றால் அவன் மீது பரிதாபம் வரும். பாலு இறந்ததை கேள்விப்பட்டு பள்ளிக்குச் சென்றேன். பாலு யாரிடமும் தன் குடும்பத்தைப் பற்றி எதுவும் பேசியதில்லை. அவனது மனைவியின் பெயர் என்னவென்று பணியாளர்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவனது வீடுகூட பலருக்கும் தெரியவில்லை. பாலு இறந்தது கொடூரமானது. அவன் ஊரை விட்டுச் சென்று ரயிலில் விழுந்து தற்கொலை செய்து இறந்திருக்கிறான். எதற்காக இந்த தற்கொலை என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவனது வீட்டிற்குச் சென்று வந்த பிரின்ஸ்பால் ஸாரிடம் விசாரித்தேன். அவனது மனைவி அமைதியாக மட்டுமே இருந்தாள் எதுவும் பேசவில்லை என்று சொன்னார். வீட்டிலிருந்தவர்கள் சகஜமாகத்தான் இருந்தார்கள். பெரிய அதிா்ச்சியுடனோ இல்லை துக்கத்துடனோ யாருமில்லை என்பது போல அவர் என்னிடம் கவலையுடன் தெரிவித்தார். பாலுவின் மரணம் எனக்கு புதிராக மட்டுமல்ல, ஏதோ ஒருவகையில் பாலு என்கிற நபர் எனக்கு ஏதோ ஒருசெய்தியை சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான் என்பது போல தோன்றியது.
பாலு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பான அவனை சந்தித்தேன். அவன் தன் மனைவியை சைக்கிளின் பின்னால் அமர்த்தி வைத்து முன்பாக பிள்ளையை அமர்த்திக் கொண்டு வேகவேகமாக சைக்கிளை ஓட்டி வரும் காட்சி எனது மனதில் இப்போதும் இருக்கிறது. சந்தையின் திருப்பத்தில் அவன் கவலையும் வேதனையுமான முகத்தோடு அன்று நின்றிருந்தவனின் அருகில் சென்று அவனிடம் பேசினேன். என்னிடம் சரியாக அவன் எதுவும் பேசவில்லை. இரண்டு பை நிறைய காய்கறிகள் வாங்கிக்கொண்டு அவனது மனைவி அவனை நோக்கி வந்தாள். அவளது முகத்தில் கோபம். நான் அருகில் நிற்பதைப் பார்க்காமல், “சம்பளம் வாங்குறது பத்து நாளுக்குகூட வரமாட்டேங்குது என்ன வேலையோ என்ன சம்பளமோ வேறே வேலைக்கு போனா என்னா” என்று திட்டினாள்.
அவள் சைக்கிளில் ஏறிக்கொண்டதும் என் முகத்தைப் பார்த்தபடி அவன் சைக்கிளை ஓட்டிச்சென்றான். அவள், “இப்படியே இருந்திங்கன்னா நான் எங்கம்மா வீட்டுக்குப் போயிருவேன் இனிமேற்பட்டு உங்க கூட வாழமாட்டேன்” என்று சத்தமாக சொல்லியது என் காதிற்குக் கேட்டது. பாலு திரும்பி என்னைப் பார்்த்துவிட்டு வேறுயாரையோ தேடுவது போல தெருப் பார்த்தான். அதற்குப்பிறகுதான் பாலு இறந்து போன தகவல் எனக்கு கிடைத்தது.
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. வெற்றிலையை வாயில் அதக்கிக்கொண்டு தனது செல்போனில் யாருடனோ பேசத்தொடங்கினான் பாலுவின் சாயலிலிருந்தவன். எனது காலிற்கு கீழே அமர்ந்திருந்தான். அவனது காவியேறிய பற்களும் கொச்சையான பேச்சும் உடையும் தலைமுடியும் உடனே முகத்தைத் திருப்பிக்கொள்ளச் செய்யும். வெற்றிலையை எடுத்து தொடையில் நீவியவன் காம்பை கிள்ளியெறிந்து வாயினுள் அதக்கிக்கொண்டான். அவனது மனைவியிடம் தான் பேசுகிறான் என்பதை இரண்டு மூன்று வார்த்தைகளில் என்னால் கண்டுப்பிடித்துவிடமுடிந்தது.
“ஆமா ரயிலு ஏறிட்டேன்”
“ஆமா கோட்டயத்துக்குத்தான் நேராப் போறோம்”
“ஆமா முத்துஅண்ணாச்சியுந்தான் கூட வர்றாரு”
“சரி… சரி… ஒருவாரத்துக்குள்ளே அட்வான்ஸ் வாங்கி உனக்கு பேங்கிலே போட்டுடுறேன்”
அவன் போனை வைத்துவிட்டு சீவலை மெதுவாக மென்றான். சற்றுமுன்பாக போனில் பேசிய பதட்டம் எதுவும் இப்போது இல்லை. நான் பார்ப்பதைப் பார்த்தவன் வெற்றிலையை எடுத்து நீட்டி, வேண்டுமா என்பது போல பார்த்தான். நான் வேண்டாமென தலையாட்டினேன். பிறகு அவனிடம் “கோட்டயத்துக்கு என்ன வேலைக்குப் போறிங்கே” என்று கேட்டேன்.
“கொத்தனார் வேலைக்கு ஸார்”
கணேசனின் தொழில் கொத்தனார் வேலை இல்லை. தனது பூர்வீக கிராமத்தில் டெய்லர் கடை வைத்திருந்தவன். வாடிக்கையாளர்கள் பலரும் ரெடிமேட் துணிகளையும் புதிதாக வந்த நகரம் சார்ந்த டெய்லரிடமும் சென்றுவிட்டதால் அவனுக்கு வருமாணம் குறைந்துவிட்டது. இதற்கிடையில் வீட்டில் அவனது மனைவிக்கும் அம்மாவிற்கும் சண்டை. தனித்தனியாக சமையல் செய்து ஒரே வீட்டில் அவமானப்படுவதை விட வேறு வீட்டிற்குச் சென்றுவிடுவது நல்லது என்று வாடகைக்கு வீடு பார்த்து சென்றிருக்கிறான். மாதந்தோறம் தவறாமல் அவனால் வாடகை தரமுடியவில்லை. மனவைியின் நகையை அடகு வைத்து ஒத்திக்கு வீடு பார்த்து குடியேறினான். வீட்டிலேயே டெய்லர் கடையும் வைத்து இழுத்துப்பிடித்துப் பார்த்திருக்கிறான். மனைவியின் நகையை இரண்டு வருஷங்களுக்கும் மேலாக மீட்டுத்தரமுடியவில்லை. நகையை மீட்டுதரவில்லையென்பதற்காக தினமும் சண்டை. டெய்லர் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் சென்றால் தினமும் கையில் காசு கிடைக்குமென கோட்டயத்திற்கு கடந்த ஆறுமாதங்களாக வேலைக்குச் சென்றுவருகிறான். இந்த ஆறு மாத சம்பளத்தில் வட்டியைக் கட்டி நகையை மீட்டுக்கொடுத்துவிட்டான். நல்ல வருமானம் வருகிறது திரும்பவும் கோட்டயத்திற்கு கொத்தனார் வேலைக்குப் போ இல்லையென்றால் நான் எங்கம்மா வீட்டிற்குப்போயிருவேன் திரும்பவும் வரமாட்டேன் என்று அவனது மனவைி அவனுடன் சண்டையிட்டு கோட்டயத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறாள்.
“எல்லா வீட்டிலேயேயும் இதே பிரச்சனைதான் கணேசன் எனக்கு தெரிஞ்ச நண்பர் பாலுன்னு பெயர் அவர் வீட்டிலேயேயும் இதே மாதிரிதான் பிரச்சனை. அவர் கடைசியிலே செத்துப்போயிட்டாரு. பார்க்கிறது உங்களை மாதிரிதான் இருப்பாரு”
“என்ன பேரு ஸார் சொன்னீங்க”
“பாலு”
“என்னோட கூட படிச்சவன் பேரும் பாலுதான் ஸார். போன வாரந்தான் தூக்குமாட்டிட்டு செத்துப்போனான். பொண்டாட்டி தினமும் சண்டை போட்டாளாம். சம்பளம் ஜாஸ்தியா தர்றா வேலைக்குப் போ. வேறே வேலைக்குப் போன்னு சண்டை போட்டாளாம் ஸார். மூனு நாளா கொலை பட்டினியா இருந்திருக்கான் ஸார் சாப்பிடாமல் அந்த காசையும் சம்பளத்தோடு சேர்த்து வெச்சு தந்திருக்கான். அவனாலே முடியலை ஸார் வேலைக்குப் போன இடத்திலே தூக்குமாட்டிட்டு செத்துப்போனான் ஸார்” என்றான்.
நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். ரயிலில் அமர்ந்திருக்கிறவர்கள் நின்றுகொண்டிருப்பவர்கள் அனைவரின் முகங்களும் இறந்து போன பாலுவின் முகத்தைப் போல எனக்குத் தெரிந்தன. ஏதோ ஒருவகையில் இவர்களெல்லாம் பணத்திற்காகத்தானே வீட்டை விட்டு ஊரைவிட்டு பிழைக்க வந்திருக்கிறார்கள். சம்பளத்தை வாங்கி வீடு திரும்புகிறார்கள் ஆனால் வீடும் பிறந்த ஊரும் அவர்களை விரட்டுகிறதே என்று ஜன்னலைப் பார்த்தேன்.
ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்தவர் செல்போனில் “ஓ பாலுவா எப்போ இன்னைக்கு காலையிலேயா சரி வர்றேன்” துண்டு துண்டாக அவர் பேசியது எனக்கு கேட்டது. பிறகு தன்னுடன் வந்தவரிடம், “பாலு மருந்தை குடிச்சி செத்துட்டானாம்” என்றார்.
“ஓ பாலுவா அவன் பொண்டாட்டி கூட சோ்ந்து வாழுறது சாகுறது மேல்” என்றார் அவர். அவர் சொல்லி முடித்ததும் ரயில் பெரிய சத்தத்துடன் நின்றது. அது ஸ்டேஷன் இல்லை. ஆனால் எதிரே வரும் மற்றொரு ரயிலுக்காக தன்னை நிறுத்தி காத்திருக்கிறது.