scorecardresearch

எழுத்து பொருள் இன்பம் : ஒரு காகத்தின் அதிகாலை குரல்

சரவணன் தனது 25 வயது முடிய வாழ்ந்து வந்தான். 25 வயதில் நான்கு ஆண் குழந்தைகளையும் அவனது காதலியும் அத்தை மகளுமான பொற்கொடியை தனியாக விட்டுவிட்டு இறந்து போனான்.

எழுத்து பொருள் இன்பம் : ஒரு காகத்தின் அதிகாலை குரல்

எஸ்.செந்தில்குமார்

எழுத்தாளர் ஜெயகாந்தன் இறந்த அன்று மாலை என்னை சந்திக்க தமிழாசிரியர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும், அவருடைய படைப்புலகம் பற்றியும் தனக்குத் தெரிந்ததை பேசிக்
கொண்டிருந்தார். தமிழிலக்கியத்தின் எதார்த்தமான படைப்பாளி என்று புகழ்ந்தார். அக்னிபிரவேசம் கதையை தமிழின் உச்சபட்ச சாதனை கதையாகும் என்று அவர் சொன்னார்.

நான் கேட்டேன். “உங்களது வீட்டில் உங்களது பெண்கள் யாருக்காவது இப்படி ஒரு சம்பவம் நடந்து நீங்கள் ஒரு பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றிவிட்டு உனக்கு எதுவும் நடக்கவில்லை என்று அப்பெண்ணையும் உங்களது குடும்பத்தையும் சமாதானம் செய்வீர்களா? அவர்களும் நடந்ததை மறந்து சகஜநிலைக்கு வந்தடைந்துவிடுவார்களா? அவர் அமைதியாக இருந்தார். அவர் என் மேல் கோபமாக இருக்கிறார் என்பது அவருடைய முகத்தில் தெரிந்தது.

அப்படியென்றால் எதார்த்தம் என்பது என்ன? அக்னிபிரவேசத்தில் ஒருவாளி தண்ணீரை தலைக்கு ஊற்றிவிடுகிற சம்பவத்தின் மூலமாக எழுத்தாளர் என்ன சொல்ல விரும்புகிறார். அதன் மூலம் இந்த உலகத்தை எப்படி மதிப்பிடுகிறார் என்று அவருடன் விவாதிக்க முயன்றேன். அவர் திரும்பவும் ஜெயகாந்தனின் புகழை மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். சமூக மதிப்பிடுகளையோ அக்கதை
சார்ந்த விமர்சனத்தையோ அவர் பேசுவதற்கு தயாராக இல்லையென்பது அவர் பேச்சின் மூலமாக தெரிந்தது.

பொதுவாக பெண் என்பவள் ஒரு ஆணின் மதிப்பிட முடியாத சொத்துக்களில் ஒன்றாக இருந்து வருகிறாள். பெண் வழி சமூகத்தில் ஆணை அடைவதிலும், பங்கீடு செய்வதிலும் நிலவிய போட்டியே ஆண் வழி சமூகத்தில் தொடர்கிறது. ஒரு ஆண் தனது சொத்தை இழக்க நேரிடும் போது அடைகிற வேதனையை விட தான் அடைய முடியாத பெண்ணை நினைத்து பன்மடங்கு வேதனையோடு இருக்கிறான் என்பதே நிஜம். அத்தை மகள், மாமா மகள் என்பதெல்லாம் தனது பூர்வீக ரத்த உறவு சார்ந்தது என்று ஆணின் மனபிம்பத்தில் படிந்துள்ளது.

பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படம் இந்த வகைமையில் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்லவேண்டும். அந்த மண் சார்ந்த சித்திரங்களைப் போன்ற அசல் பிரதிகளை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். பெண்ணை தனது உடமையாக்கிக் கொள்ளும் விருப்பமும் கொடுரமும் தேவையும் ஆண்களிடம் காலந்தோறும் இருந்துவந்துள்ளது. இது கிராமங்களில் மட்டுமல்லாது
நகரங்களிலும் இப்பழக்கவழக்கம் இருந்து வந்துள்ளது.

இளங்கலை வணிகவியல் படித்துவிட்டு ஐந்தாம்வகுப்பு முடிக்காத டுவீலர் ஒர்க்‌-ஷாப் மெக்கானிக்கை கல்யாணம் செய்து கொண்ட பெண்ணும், கால் ஊனமுற்றப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளையும் தன் அத்தை மாமாவையும் காப்பாற்ற வேண்டுமென வங்கி வேலைக்கு தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் நண்பனையும் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதர்கள் என்று சொல்லலாம். தன் அத்தை மகனை திருமணம் செய்து கொள்ளமுடியவில்லை என்பதற்காக கிணற்றில் விழுந்து இறந்தவளும், மாமா
மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லையென்பதற்காக கடைசி வரை திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருபவனையும் எந்த இதிகாசத்தில் எழுதுவது?

சரவணனும் பொற்கொடியும் அப்படிப்பட்ட மனிதர்கள்தான். சரவணனின் தாய்மாமாவின் மகள் பொற்கொடி. பிறந்தது முதல் பொற்கொடி சரவணனுக்குத்தான் என்று பேசி வைத்துவிட்டார்கள். சரவணனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததிலிருந்து குடிப்பழக்கம். நோய்வாய்ப்பட்ட அம்மாவின் மரணம். பாட்டியின் செல்லப்பிள்ளை அவனை நிரந்தரமான குடிகாரனாக்கியது.

திருமணம் செய்து கொண்டால் மாமா சரவணனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பொற்கொடி பத்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்குச் செல்லவில்லை. இருவீட்டினரும் பேசி இளவயதிலேயே (18வயதில்) இவருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். குடிப்பழக்கமும் குடிகார நண்பர்களும் சரவணனின் வாழ்க்கையில் தொடர்ந்தார்கள். சரவணனுக்கும் பொற்கொடிக்கும் வரிசையாக நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்தன.

சரவணனுக்கு தினமும் பணம் கிடைத்தது. சரவணனின் அப்பா, மூன்று ஆட்டோக்கள் வாடகைக்கு விட்டிருந்தார். இரண்டு வேன் ஓடியது. இத்துடன் வாடகை பாத்திரக்கடை வைத்திருந்தார். சரவணன், சமையற்காரர்களை தேடிப் பிடித்து குடிக்கு பணம் சேர்த்துவிடுவான். பாட்டி அவன் மேல் பிரியமாக இருந்ததால் சோற்றுக்கும், பொற்கொடி அவன் பிரியமாக இருந்ததால் படுக்கைக்கும் குறைவில்லாமல் இருந்தது.

சரவணனுக்கு தினமும் குடிக்க வேண்டும். குடித்து விட்டு வீட்டு வாசலில் அமர்ந்து பெண்களைப் போல புலம்புவான் இல்லையென்றால் பழமை பேசிக்கொண்டிருப்பான். எச்சில் வடியும். எதிரே அமர்ந்திருப்பவர்களின் முகத்தில் தெறிக்கும். தெருவில் போகிறவர்களையும் வருகிறவர்களையும் பெயருடன் சாதியைச் சொல்லி அழைத்து வம்பளப்பான். அவனுக்கு தட்டில் சாப்பிடுவதற்கு ஏதாவது வந்து கொண்டிருக்கும். சரவணன் குடிகாரன்தான். ஆனால் ஒருபோதும் பெண்களை கேலி செய்வதோ இல்லை அவர்களை தவறான எண்ணத்தில் பார்ப்பதோ அழைப்பதோ கிடையாது. அண்ணே என்று அழைக்கிற பெண்ணை தங்கச்சி என்று மனதார அழைத்து பேசுவான். அக்கா என்று அழைக்கிற பெண்ணின் மகளின் சடங்கிற்கு முதல் ஆளாக சென்று பரிமாறுவான். சடங்கு
முடிந்ததும் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு குடிக்கச் சென்றுவிடுவான்.

ஆனால் சரவணன் காலையில் எழுந்ததும் இரண்டு மெதுவடைகளை வாங்கிக் கொண்டு வந்து வீட்டு மொட்டைமாடியில் காகங்களுக்குப் பிய்த்துப் போடுவான். காகங்கள் அதிகாலையில் மொட்டை மாடி முழுக்க நிறைந்திருக்கும். காகங்கள்
மெதுவடையை உண்ட பிறகுதான் முகங்கழுவிக்கொள்வான். அவனது அம்மா இறந்த மூன்றாவது நாளிலிருந்து இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து வருகிறான் சரவணன். ஒவ்வொரு வருடமும் அவனது அம்மா இறந்த நாளில் காலையிலிருந்து மாலை வரை குடிக்காமலிருப்பான். இரவு குடிக்க ஆரம்பித்துவிடுவான்.

ஊருக்குள் பிளாஸ்டிக் நாற்காலிகள் புழங்கத் தொடங்கிய புதிது. பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொள்வது மிகப்பெரிய கௌரவம் என்று நினைத்தார்கள்.நாற்காலி வாங்க முடியாமல் வாடகைக்கும் தவனைக்கும் நாற்காலி வாங்கிக் கொண்ட காலம். சரவணனின் அப்பா நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகளை வாங்கி வாடகைக்கு விட்டார். நூறு நாற்காலிகள் இருநூறு நாற்காலிகளாக
மாறியது. வருமானம் அதிகரித்து ஒரு வருடத்திற்குள் 500க்கும் மேற்ப்பட்ட நாற்காலிகளாக பெருக்கின. நாற்காலிகள் வாடகைக்கு விடும் கணக்குகளை பாத்திரங்களுடன் இணைக்கவில்லை. அக்கணக்கை தனியாக சரவணன் மேற்பார்வையில் நோட்டில் எழுதி வரவு வைத்துக் கொண்டிருந்தான். பிளாஸ்டிக் நாற்காலிகளை தள்ளுவண்டியில் ஏற்றி விட்டு கணக்கெழுதுவது அவனது வேலை. ஐந்து மணிக்கு மேல் குடிக்க தனது நண்பர்களுடன் சென்றுவிடுவான். சரவணனுடன் குடிக்கும் நண்பர்கள் கடைக்கு வருவார்கள். பொற்கொடியை தவறான எண்ணத்தில் பார்த்து கேலி செய்வார்கள். சரவணன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான். விடு கழுதைகளை குடிச்சிட்டு ஏங்தங்கச்சி மாதிரி நல்லபொன்னு யாருமில்லே மாப்பிள்ளேன்னு புலம்வான் என்று பொற்கொடியை
சமாதானம் செய்வான்.

இப்படித்தான் சரவணன் தனது 25 வயது முடிய வாழ்ந்து வந்தான். இருபத்திஐந்தாவது வயதில் நான்கு ஆண் குழந்தைகளையும் அவனது காதலியும் அத்தை மகளுமான பொற்கொடியை தனியாக விட்டுவிட்டு இறந்து போனான். குடித்துவிட்டு வந்து இரவு படுக்கையில் படுத்துவன் காலையில் எழுந்திருக்கவில்லை. அதிகாலை மொட்டை மாடி காகங்கள் கரைகிற சத்தம் கேட்டு அவனது அப்பாவும் பாட்டியும் எழுந்து விட்டார்கள். ஆனால் சரவணன் எழுந்திருக்கவில்லை.

22 வயது முடிந்து 23 வயதாகும் பொற்கொடி சரவணனை இழந்து தன் குழந்தைகளுடன் வாழத்தொடங்கி பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். பொற்கொடி நோட்டு வைத்து வாடகைப் பாத்திரங்களுக்கான கணக்கு எழுதிக்கொண்டிருக்கிறாள். பெண் என்னும் சொத்து, பெண் என்னும் கௌரவம் வேறெங்கும் செல்லக்கூடாது என்பதற்காக
சரவணனின் அப்பா தன் மகளைப் போல பொற்கொடியை காப்பாற்றி வருகிறார்.

பொற்கொடியை மறுதிருமணம் செய்துக்கொள்ள பலரும் முன் வந்தார்கள். பொற்கொடி சம்மதிக்கவில்லை. பெண் என்பவள் ஆணுக்கு எவ்வாறான மதிப்பீட்டிலிருக்கிறாளோ அதே மதிப்பீட்டில்தான் பெண்ணும் தனது கணவனை மதிப்பிட்டிருக்கிறாள். அவள் இன்றும் அதிகாலை காகத்தின் குரலுக்கு எழுந்து விடுகிறாள். தன் கணவனைப் போல ரொட்டித்துண்டு வடை தோசை என
எதையாவது பிய்த்துப்போட்டு காகங்களின் முன்பாக சிறிது நேரம் அமர்ந்திருக்கிறாள். காகத்தின் அதிகாலை குரலில் எதை கண்டடைந்திருக்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Writing meaning pleasure the voice of a crow was early

Best of Express