எழுத்து பொருள் இன்பம் : துணைமாப்பிள்ளை

திருமணத்திற்கு பெண் தேடுவதை விட, மணமேடையில் மாப்பிள்ளையின் அருகே அமர்ந்து கொள்வதற்கு துணைமாப்பிள்ளைக்கு ஆள் தேடுவது கஷ்டமான காரியந்தான்.

எஸ்.செந்தில்குமார்

எங்கள் ஊரில் துணைமாப்பிள்ளை என்ற பெயரில் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலையே கல்யாண மாப்பிள்ளைக்கு துணைமாப்பிள்ளையாக இருப்பதுதான். அவருடைய பெயரும் ‘தொணைமாப்பிள்ளை’தான். சங்கரன் என்கிற பெயர் துணைமாப்பிள்ளையாக மாறி 40 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. கல்யாண நேரத்தில், திருமணத்திற்கு முதல்நாளிலிருந்து,
முதல்ராத்திரி வரை மாப்பிள்ளையை தயார்ப்படுத்தி, மருவீட்டுக்கு அனுப்புவது வரை, துணைமாப்பிள்ளைக்கு வேலை இருந்தது. திருமணத்திற்கு மண்டபத்தை முன்பதிவு செய்தற்குகூட சிறிது யோசிக்கலாம். ஆனால் சங்கரனை துணைமாப்பிள்ளையாக பேசி தேதி உறுதி செய்துவிடுவதில் எந்த யோசனையும் தள்ளிப் போகக்கூடாது. சங்கரன் ஒரு காலத்தில் துணைமாப்பிள்ளையாக பேரும் புகழுமாக வாழ்ந்துவந்தவர். ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்ணெண்ணை வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மனமும் உடலும் எனக்கு எரிந்தது.

சங்கரனுக்கு வயது 62 இருக்கும். அடையாளம் தெரிந்து கொண்ட சிலர் அவரைப் பார்த்து சிரித்து வழி விட்டு விலகி நின்றனர். சிலர் வரிசையில் நின்னு வாங்கு பெரிசு என்று திட்டினார்கள். சங்கரன் எதையும் பொருட்ப்படுத்தியாகத் தெரியவில்லை. தளர்ந்த நடையும் யோசித்த முகமும் தோற்றுப்போன உடம்புமாக கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்தார். அவருக்குப் பின்பாக பத்து
பதினைந்து நபர்களுக்கு அடுத்து நான் நின்றிருந்தேன். சங்கரனின் இளமை காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்திருக்கிறேன். கல்யாண மாப்பிள்ளைக்கு நிகரான உடையும் மிடுக்கான உடலுமாக அவர் இருப்பார். மீசையும் கிருதாவும் உயரமும் புதுவேட்டி புதுசட்டையும் பார்க்கிற பெண்களை கிறக்கம் கொள்ளச் செய்யும். ஆனால் துரதிருஷ்டம் என்று சொல்வதா
இல்லை எந்த பாவத்தின் நிழல் அவரிடம் சேர்ந்திருக்கிறது என்று சொல்வதா என்று தெரியவில்லை அவருக்கு திருமணம் நடக்கவில்லை. அவர் வேண்டாமென மறுக்கவுமில்லை.

அவரை சந்திப்பதற்காக பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று சந்திக்காமலேயே திரும்பியிருக்கிறேன். தெற்குப் பக்கம் வாசல் வைத்த குடிசை வீடு அது. வீட்டைச் சுற்றிலும் புற்களும் செடிகளும் எனது முழங்கால் வரை வளர்ந்திருந்தது. இரண்டு கன்றுக்குட்டிகளும் கோழிகளும் சேவல்களும் மேய்ந்துக் கொண்டிருக்கும். பெரியஆட்டுரல் ஒன்று சமசதுரமான வடிவில் சாப்பாட்டு மேஜையைப் போல் குடிசையின் அருகில் கிடக்கும். மாலை நேரத்தில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருப்பார். ரேடியோ கேட்பார். சுருட்டு வாயில் புகையும். இரவானதும், அரசு தொலைக்காட்சியில் வீட்டுக்குள் சென்று பழைய படம் பார்ப்பதும், பாட்டுக் கேட்பதுமாக எந்த வேலைக்குப் போகாமல் வாழ்ந்த மனிதர். காலையில் அவருடைய உணவு ஒரு டீயும் ஒரு காராச்சேவு பொட்டலம் மட்டும். பிற்பகல்
வேளையில் குழந்தைகள் அநாதை இல்லத்திலிருந்து அடிபிடித்த சோறு தட்டு நிறைய வரும்.

அடிபிடித்த சோற்றை சொரண்டி எடுத்து சாப்பிடுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். கோழிகள் அவரைச்சுற்றி மேய்ந்து கொண்டிருக்கும் காட்சி எனக்கு இயேசுவை ஞாபகப்படுத்தும். ஏன் அவரை சந்திக்காமலேயே வந்துவிட்டோமென வருத்தத்துடன் நினைத்துக்கொள்வேன். அவரை சந்தித்தால் என்ன கேட்கப்போகிறோம். கேட்டுவிட்டு அவருக்கு என்ன உதவி செய்யபபோகிறோம். அவர் சொல்லுவதை ஒரு கதையாக முடிந்தால் சிறுநாவலாக எழுதப்போகிறோம் இதற்குத்தான் அவரை சந்திக்கப்போகிறோமா என்று சோம்பலும் தவிப்புமாக பலமுறை அவரை தவிர்த்திருக்கிறேன்.

ஒருகாலத்தில் சங்கரன் துணைமாப்பிள்ளையாக வரவேண்டுமென மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் காத்திருந்த காலம் அது. பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பது கூட எளிதாக அமைந்துவிடும். ஆனால் முகூர்த்த நேரத்தில் கல்யாண மாப்பிள்ளைக்கு, துணைமாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமாக இருந்த காலம் அது. துணைமாப்பிள்ளைக் கிடைக்காமல் இரண்டொரு கல்யாண
முகூர்த்தம் தள்ளிப் போயிருக்கிறது என்று பெரியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் துணைமாப்பிள்ளையை தாங்கு தாங்கு என்று தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பார்கள். திருமணம் தேதி முடிவானதும், முதலில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் துணைமாப்பிள்ளை சங்கரனை ஆள் விட்டு வரவழைப்பார்கள். சங்கரன் வந்ததும், அவருக்கு புதுத்துணி கொடுத்து தையல்காரரிடம் அழைத்துச் செல்வார்கள்.
அவருடைய உடையை தைக்கப் போடுவார்கள். சங்கரன் ஏற்கனவே, அந்த தேதியில் வேறொரு கல்யாணத்திற்கு துணைமாப்பிள்ளையாக இருப்பதற்கு கை நீட்டி புதுத்துணி வாங்கியிருந்தால் இதை மறுத்துவிடுத்துவார். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் வேறொரு துணைமாப்பிள்ளைக்கு அலைவார்கள். இல்லையென்றால் மாற்று தேதி வாங்க ஜோசியரிடம் சென்று வருவார்கள்.

திருமணத்திற்கு பெண் தேடுவதை விட, மணமேடையில் மாப்பிள்ளையின் அருகே அமர்ந்து கொள்வதற்கு துணைமாப்பிள்ளைக்கு ஆள் தேடுவது கஷ்டமான காரியந்தான். துணைமாப்பிள்ளையின் ராசி என்று ஒன்றிருக்கிறது. இன்னார் வந்து, தன் வீட்டு பையன்
அருகில் துணைமாப்பிள்ளையாக அமர்ந்தால் மணமகனின் வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடுமென நம்பினார்கள். சங்கரன் தன் மகனுக்கு துணைமாப்பிள்ளையாக வந்து அமரவேண்டுமென நினைத்தவர்கள் ஊரில் ஏராளமானவர்கள் இருந்திருக்கிறார்கள்.
கல்யாண மாப்பிள்ளை கல்யாணம் முடிகிற வரையில் துணைமாப்பிள்ளையின் பேச்சை கேட்டு நடப்பான். துணைமாப்பிள்ளையின் மனம் கோணாமல் மணமகன் வீட்டுக்காரர்கள் நடந்துக் கொள்வார்கள். மாப்பிள்ளையுடன் எவ்வளவுதான் நெருங்கிப்பழகியிருந்தாலும் அவனுடைய நண்பர்கள் துணைமாப்பிள்ளையாக மணமேடையில் அமர்ந்து கொள்ளமுடியாது. இதெல்லாம் திருமணம் முகூர்த்தக்கால் நடுவதிலிருந்து திருமணம் நாள் வரைதான். மறுநாள் என்றில்லை அன்றிரவிலிருந்தே சாப்பிட்டு முடித்த வாழைஇலையைப் போல துணைமாப்பிள்ளையை தூர எறிந்துவிடுவார்கள். துணைமாப்பிள்ளையாக இருந்தவரும் இவ்வளவுதான் தன்னுடைய இடம் என்பதை தெரிந்துக் கொண்டு சென்றுவிடுவார்.

துணைமாப்பிள்ளையாக பெண்ணின் அண்ணன் அல்லது தம்பி என யாராவது ஒருவர் மாப்பிள்ளைக்கு அருகில் அமரவேண்டும். பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிள்ளையின் கையில் பூச்செண்டை தரமாட்டார்கள். பதிலாக துணைமாப்பிள்ளையின் கையில்தான் பூச்செண்டை தருவார்கள். மாப்பிள்ளையிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் பெண்ணின் தோழிகள் துணைமாப்பிள்ளையிடம் சொல்லி அதை மாப்பிள்ளையிடம் போய் சேர்ந்துவிடும்படி செய்துவிடுவார்கள். மணமகளின் தோழிகள் மாப்பிள்ளையைப் பார்ப்பதை விட துணைமாப்பிள்ளையாக யார் மணமேடையில் அமரப்போகிறார்கள் என்றுதான் தேடுவார்கள்.

சங்கரன் அவருக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். ஏன் திருமணம் செய்துகொள்ளாமல் தன்னந்தனியாக வாழ்ந்துவருகிறார் என்று அறிந்துகொள்ள அவருடைய நண்பர்கள் பலரையும் சந்தித்திருக்கிறேன். அவரின் நண்பர்கள் பலருக்கும் ஏன் கல்யாணம் நடக்கவில்லை என்று தெரியவில்லை. பதிலாக ஒருவிஷயத்தைச் சொன்னார்கள். சங்கரனின் அப்பாவின் திருமணத்தின் போது துணைமாப்பிள்ளையாக யாரும் நிற்பதற்கு வரவில்லையென்றும் குடை பிடிக்க பூச்செண்டு ஏந்திவர, துணைக்கு வரவில்லையென்று அவர் அப்பா சங்கரனிடம் சொல்லியதாகவும் அதனால்தான் அவராகவே தனக்கு வேண்டியவர்களுக்கு
தானாகவே முன்வந்து துணைமாப்பிள்ளையாக சென்று வந்தது என்று சொல்லியதாக அவர் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பாவிற்கு துணைமாப்பிள்ளை கிடைக்கவில்லையென்பதற்காக ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க பிறருக்கு துணைமாப்பிள்ளையாக இருக்கமுடியுமா?

சங்கரனின் நண்பர்கள் தீபாவளி பொங்கல் ஆடி என விசேஷநாட்களில் கறிக்குழம்பு வைத்து இட்லி அவித்து அவருக்குத் தருவார்கள். சங்கரன் வாங்கிக்கொள்ளமாட்டார். ஒரு டீயும் ஒரு காராச்சேவுப்பொட்டலம்தான் தன் கடைசி காலம் வரைக்கும் காலை உணவாக
இருக்கவேண்டுமென சொல்லியிருக்கிறார்.

சங்கரன் மண்ணெண்ணை வாங்கிக் கொண்டு கூட்டத்திலிருந்து விலகி நடந்து செல்வதைப் பார்த்து நிற்கிறேன். இதே சங்கரன்தான் ஒரு காலத்தில் மணமேடையில் கீழே குதித்து பெண்ணும் மாப்பிள்ளையும் நடப்பதற்கு கூட்டத்தை விலக்கிவிட்டவர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? துருபிடித்து இற்றுப்போன தகர வில்லையைப் போல அவருடைய உடம்பு ஆயிரம் அவமானச் சொற்களின் ஓட்டைகளுடன் கிடக்கிறது. ஒவ்வொரு ஓட்டையிலும் ஒவ்வொரு வேதனை ஒளியைப் போல புகுந்து அதை நிறைக்கிறது. சங்கரனைப் போல எத்தனையோ மனிதர்கள் எதன்பொருட்டோ தங்களை எதற்காகவோ அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான். இறுதிகாலத்தில் யாருமறியாது குப்பைகளுடன் சிறிய துகள்போலாகிவிடுவது உலகநியதிகளில் ஒன்றுதான் போலும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Literature news in Tamil.

×Close
×Close