10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி - குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு

ஏழை இஸ்லாமியர்கள், ஏழை படேல்கள், ஏழை அந்தணர்கள் ஆகியோர் சமூக ரீதியான பலன்களைப் பெற இதுவே முதல் வாய்ப்பு.

சுர்ஜித் எஸ். பல்லா,
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் காண்ட்ரிபியூட்டிங் எடிட்டர் மற்றும் நெட்வொர்க் 18 கன்சல்டிங் எடிட்டர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தில் எண்ணற்ற முக்கிய அம்சங்கள் உள்ளன. இந்தியாவின் மதச்சார்புள்ள அரசாங்கங்களின் வரலாற்றில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான (இவர்களில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் பழங்குடியினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்டோர் இல்லை) 10 சதவீத இட ஒதுக்கீட்டுப் பயனாளிகளில், இஸ்லாமியர்கள் சேர்க்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். பா.ஜ.க. தலைவர்களிடையே நிலவும் விருப்புவெறுப்புகளினால், அதன் செய்தித் தொடர்பாளர்கள் யாரும் இந்த அம்சத்தை முன்னிலைப்படுத்தவே இல்லை.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், மதச்சார்பற்ற தாராளவாதிகளும், இந்த அம்சத்துக்காக மோடியைப் பாராட்ட மனமில்லாமல், வாளாவிருந்ததுதான். மாறாக, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான அனைத்து கருத்துகளும், இந்தச் சட்ட திருத்தம் எப்படி ஒரு வெற்றுப் பேச்சு; இதன்மூலம், வாக்காளர்களைக் கவருவதற்கு பா.ஜ.க. எப்படியெல்லாம் பரிதவிக்கிறது என்றே சொல்லப்பட்டது.

இதற்குள் எத்தனை முரண்பாடுகள்? இது வெற்றுப்பேச்சு என்றால், ஏன் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தக் கொள்கையை பாராட்ட வேண்டும்? மக்களவையில் பெரும்பாலானோர் இதற்கு அதரவு தெரிவித்தனர். ஆனால், மாநிலங்களவைக்கு வருவதற்குள், ஒருசில கட்சிகளுக்கு திடீரென்று தங்கள் ‘மனசாட்சி’ உறுத்த, வாக்களிப்பதில் இருந்து விலகிக்கொண்டன.

இதன் பிறகு, காணாமல் போயிருந்த விமர்சகர்கள் திரும்பி வந்தார்கள். அவர்களில் ஒருசிலர் வழக்கறிஞர்கள் வேறு. மத்திய அரசு 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது, அதனால், 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கினர்.

இதனை ஆரம்பத்திலிருந்தே பார்ப்போம். கடந்த இருபது ஆண்டுகளாக, இட ஒதுக்கீடு பற்றி நான் விரிவாக ஆய்வு செய்துவருகிறேன். என் பார்வையில், இந்தியா இட ஒதுக்கீடு எனும் திசையில் பயணம் செய்தே இருக்கக்கூடாது. அப்படிச் செய்ததன் மூலம், சரியான இலக்குகளுக்காக தவறான வழிமுறைகளைத் தேர்வு செய்துவிட்டது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் போன்ற வரலாற்று ரீதியாகவே அடித்தட்டு மக்களுக்கு நிச்சயம் சிறப்புக் கவனம் வழங்கப்பட வேண்டும். அவர்களை இனங்கண்டு, கூடுதல் வருவாய்க்கான வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும். எப்படி தந்திருக்க முடியும்? ஆரம்பத்தில் இருந்தே, வருவாய் உதவித் திட்டங்களையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினரின் கல்விக்காக மிகப்பெரும் உதவிகளும் செய்திருக்க வேண்டும். அதன்மூலம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், ‘உயர் சாதி’ பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு இணையாக கல்வி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், இது மேற்கொள்ளப்படவில்லை. மேட்டுக்குடி தாராளவாதிகளுக்கு வேறு கருத்துகள் இருந்தன. நிலப்பிரபுத்துவ மனோபாவத்தில் இருந்து வரும் ‘ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும்’, ‘வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்’ என்பன போன்ற கருத்துகள் அவை. இதனால், அரசாங்கங்கள் மேட்டுக்குடிக்கு உதவும் வழிகளை யோசித்ததே அன்றி, ஏழைகளுக்கு அல்ல. ஏழைகளுக்கு உதவி செய்தபோதோ, அதில் ஏராளமான ஊழல்களுக்கு வாய்ப்பு இருக்கும்படி பார்த்துக்கொண்டது. அனைவருக்கும் ஆரம்ப சுகாதாரம், ஆரம்ப மற்றும் இடைநிலைக் பள்ளிகளை மேம்படுத்துவதற்குப் பதில் தனியார் பள்ளிகள் காலூன்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தோம். அரசுப் பள்ளிகளுக்கோ செலவுசெய்ய பணமில்லை, வசதிகளில்லை, விரிவாக்கமும் இல்லை. இவற்றில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களோ, வகுப்புக்கே வரமாட்டார்கள், ஆனால் நிரந்தர உத்யோகம், வேலையை விட்டு நீக்கவும் முடியாது. இதனால் பெற்ற பலன் என்ன தெரியுமா? மேட்டுக்குடியினர் தனியார் பள்ளிகளுக்குப் போனார்கள், பெருந்தொகைகளை கட்டணங்களாகச் செலுத்தினார்கள். பின்னர் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அறிவுத் திருக்கோயில்களான, புகழ்பெற்ற தில்லிப் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி.க்கள், ஐ.ஐ.எம்.களுக்குள் நுழைந்தார்கள்.

இவற்றையெல்லாம் வரவேற்றதோடு, ஆதரவும் தெரிவித்தவர்களில் மதச்சார்பற்ற தாராளவாதிகளும் உண்டு. இவர்கள் தங்கள் சின்ன வீடுகளில் இருந்து வடக்கு தில்லி வளாகங்களுக்குச் செல்வதற்கான பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டால், உடனே எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள். யாரேனும் ஒரு அப்பாவி, தில்லி பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று சொல்லிவிட்டால், உடனே எதிர்ப்பார்கள், போராடுவார்கள். தங்களது இலவசக் கல்வி உரிமை மீறப்படுவதாக குமுறுவார்கள்.

மேட்டிக்குடியைச் சேராதவர்களுக்கு, தரமான ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வி கிடைக்காது என்றால், பெரும்பாலும் ஏழைகளான தாழ்த்தப்பட்டோ, மலைவாழ் பழங்குடியினர், இஸ்லாமிய மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். சிறப்பு இட ஒதுக்கீடுச் சலுகை கிடைத்ததால், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் பழங்குடியினர் தங்கள் கல்வித் தரத்தை மேம்படுத்திக்கொண்டனர், அரசாங்க வேலைவாய்ப்புகளையும் பெற்றனர். 1983இல், ஒரு சராசரி தாழ்த்தப்பட்ட / மலைவாழ் பழங்குடி இளைஞர் 2.4 ஆண்டுக்கான கல்வித் தகுதியை அடைந்திருந்தால், சராசரி இஸ்லாமிய இளைஞர் (5 – 24 வயதுடையோர்) பெற்றதோ 3.3 ஆண்டுக்கான கல்வித் தகுதி. ஆனால், 2011-12இலோ, ஒரு சராசரி தாழ்த்தப்பட்ட / மலைவாழ் பழங்குடி இளைஞர் 7.1 ஆண்டுக்கான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க, இஸ்லாமிய இளைஞரோ நாட்டிலேயே மிகக் குறைவாக 6.9 ஆண்டுக்கான கல்வித் தகுதியையே பெற்றிருந்தார்.

இஸ்லாமியர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பார் (ஓ.பி.சி.) என்ற பிரிவின் கீழ்தான் வருகிறார்கள். அதனால், ஓ.பி.சி. வகைப்பாட்டின் அனைத்துச் சலுகைகளையும் பெற அவர்கள் தகுதியானவர்கள். ஆனால், 2011-12 ஆண்டு கணக்கின்படி, இஸ்லாமியரல்லாத இதர ஓ.பி.சி. இளைஞர்களின் கல்வித் தகுதியான 8.5 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இஸ்லாமிய ஓ.பி.சி. இளைஞர்களின் கல்வித் தகுதி வெறும் 5.8 ஆண்டுகளாக மட்டுமே இருக்கிறது. மேலும், இஸ்லாமியர்களின் மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது, அரசு வேலைகளில் அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினரே வாய்ப்பு பெற்றுள்ளனர் என்று சச்சார் குழு அறிக்கை தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

மொத்த மக்கள்தொகையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் (மொத்த மக்கள்தொகையில் இவர்கள் சுமார் 30 சதவிகிதம்) இதர அரசாங்க உதவித் திட்டங்கள் எதையும் பெறாதவர்கள் முதன்முறையாகப் பயன்பெறப் போகிறார்கள் என்பது முக்கியம். இந்த முறைதான், ஓ.பி.சி. அல்லாத, எஸ்.சி., எஸ்.டி., அல்லாத ஏழைகள் முதன்முறையாக பயன்பெறப் போகிறார்கள். இருப்பதிலேயே இஸ்லாமியர்கள் தான் ஏழைகள் (பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கியவர்கள்) என்பதால், 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்தச் சலுகையைப் பெற, குடும்ப வருமானம் 8 லட்ச ரூபாய் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிகம். எட்டு லட்ச ரூபாய் வருமானம் என்பது மொத்த இந்தியக் குடும்பங்களில் சுமார் 99 சதவிகித குடும்பங்களை உள்ளடக்கியதாக ஆகிவிடும் என்பதை என்.சி.ஏ.இ.ஆர் (NCAER (IHDS survey) மற்றும் என்.எஸ்.எஸ்.ஓ. (NSSO) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள், தனிநபர் வருமானங்களில் சுமார் 25 முதல் 30 சதவிகிதத்தினரின் வருவாயையே கணக்கெடுத்துள்ளன. உண்மையில், 8 லட்ச ரூபாய் வரம்பினால், 20 சதவிகித குடும்பங்கள் தகுதியற்றதாகிவிடுகின்றன.

இந்த உச்சவரம்பை மோடி அரசாங்கம் எங்கிருந்து பெற்றது? 1993இல் இருந்து பல்வேறு அரசாங்கங்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணயித்த வரம்பில் இருந்தே பெற்றுள்ளது. 1993இல், குடும்ப வருவாய் 1 லட்சமாக இருந்தால், அது இதர பிற்படுத்தட்டோருக்கான கிரீமி லேயராக வரையறை செய்யப்பட்டது. இந்தத் தொகை 2004இல் 2.5 லட்சமாகவும், 2008இல் 4.5 லட்சமாகவும், 2013இல் 6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டன என்பது நினைவில் இருக்கட்டும். இந்த வரம்பு 700 சதவிகிதம் உயர்த்தப்பட்டது, ஆனால், இதே காலத்தில் நுகர்வோர் விலை குறியீட்டெண் 413 சதவிகிதம் மட்டுமே உயர்ந்தது. 2017இல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இந்த வரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. இது சுமார் 33 சதவிகித உயர்வு. இதே காலகட்டத்தில் நுகர்வோர் விலை குறியிட்டெண் 21 சதவிகிதம் மட்டுமே உயர்ந்தது.

எட்டு லட்சம் ரூபாய் உச்ச வரம்பு வந்த பாதையை தெளிவாகப் பார்த்துவிட்டோம். இப்போது, இதை ஒரு வெற்றுப்பேச்சு என்று கூக்குரலிடும் ஊடக மற்றும் இதர அதிமேதாவிகளைப் பார்த்துக் கேட்க விரும்புகிறேன் – 2004இலும் 2008இலும் 2013இலும் 2017இலும் ஓ.பி.சி. வரம்பு இதுபோன்று அர்த்தமற்று உயர்த்தப்பட்டபோது நீங்கள் எங்கே போனீர்கள்? தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இப்போதுதான் உச்சவரம்பை மாற்றியுள்ளது. அதை உடனே அதிகம் என்று சொல்கிறீர்கள் (அதிகம் என்பதுதான் என் கருத்தும்). இதற்கு முன்னால், இந்துக்களுக்கு மட்டுமே கிடைத்துவந்த வாய்ப்பை, தற்போது “ஏழை” இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், இஸ்ஸாய் சமூகத்தினர் பெறும்போது ஏன் எதிர்க்கிறீர்கள்? மேலே தெளிவுபடுத்தியதுபோன்று, ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டில் இஸ்லாமிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பயனடைந்திருக்க வாய்ப்பில்லை.

மோடி அரசாங்கத்தை இரண்டு விஷயங்களுக்காகப் பாராட்ட வேண்டும். இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் போன்ற தவறான திசையில் அமைந்த சமூகக் கொள்கைகளினால், இஸ்லாமியர்களும் பயனடைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது முதல் விஷயம். இரண்டாவது விஷயம், முதல் விஷயத்தோடு சம்பந்தப்பட்டதுதான். இறுதியாக, கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த மோசமான சமூகநலத் திட்டங்களைப் பற்றி உண்மையான விவாதத்தையும், உண்மையான அக்கறையையும் வெளிப்படுத்துவதற்கான விவாதம் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதிகள் என்பதுதான் அரசமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு. ஆனால், இதுவும் முதல் பத்து ஆண்டுகளுக்குத்தான் இருந்தது. பின்னர், தொடர்ந்து செய்யப்பட்ட சட்ட திருத்தங்களால், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது. அடுத்த சட்ட திருத்தம் 2020இல் செய்யப்பட வேண்டும். இதில்லாமல் சட்டப்பிரிவு 15 (4) இருக்கிறது. அதன்படி, ‘இந்தச் சட்டப் பிரிவோ, அல்லது சட்டப் பிரிவு 29இன் கீழ் உட்பரிவு (2)ன் படியோ, சமூக ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ பிற்படுத்தப்பட்ட குடிமக்கள் அல்லது தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டுக்காக சிறப்புச் சலுகைகளை வழங்குவதற்கு யாதொரு தடையுமில்லை’ என்று சொல்கிறது.

இந்தச் சிறப்புச் சலுகை, இட ஒதுக்கீடாகத்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. இங்கே, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கியிருப்பது என்பது வருவாய் ரீதியாகவும் பின் தங்கியிருப்பதோடு (ஏழைமை) நன்கு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதனால், ஏழை இஸ்லாமியர்கள், ஏழை படேல்கள், ஏழை அந்தணர்கள் ஆகியோர் சமூக ரீதியான பலன்களைப் பெற இதுவே முதல் வாய்ப்பு. இதனை இவர்கள் அனுபவிக்கத் தொடங்கிய பிறகு, இந்த மோசமான இட ஒதுக்கீட்டு முறையை மாற்றியமைப்பது பற்றி யோசிக்க ஆரம்பிக்கலாம்.

(கட்டுரையாசிரியர் சுர்ஜித் எஸ். பல்லா, தி இந்திய எக்ஸ்பிரஸ் நாளிதழின் காண்ட்ரிபியூட்டிங் எடிட்டர் மற்றும் நெட்வொர்க் 18க்கு கன்சல்டிங் எடிட்டர் ஆவார்)

தமிழில் : துளசி

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close