Advertisment

மிஸ்டர் கூல், ஏனிந்த பயம்?

18 MLAs Case Judgement: தினகரன் போடும் பீடிகையிலிருந்து அவர் தேர்தலைச் சந்திக்கும் மனநிலையில் இல்லை என தெரிந்துகொள்ள முடிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
18 MLAs Case Judgement, Madras High Court, TTV Dhinakaran, Edappadi K Palaniswami, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு

18 MLAs Case Judgement, Madras High Court, TTV Dhinakaran, Edappadi K Palaniswami, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு

விவேக் கணநாதன்

Advertisment

தமிழகமே எதிர்பார்த்த 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. நீக்கம் செல்லும் என்றிருக்கிறது நீதிமன்றம். இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 19 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்செல்வன் தன் தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்செல்வன், “வழக்கை வாபஸ் பெறுவதுதான் என் முடிவு. என் முடிவு குறித்து ஏற்கெனவே டி.டி.வி. தினகரனிடம் சொல்லிவிட்டேன். நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விட்டதால் என் முடிவை அவர் ஏற்றுக்கொண்டார். தமிழக மக்கள் இந்தத் தீர்ப்பைப் பார்த்துச் சிரிக்கின்றனர். என் முடிவையே மற்ற 17 எம்எல்ஏக்களும் எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள்.

சபாநாயகர் உத்தரவு செல்லும் என இரு நீதிபதிகளும் தீர்ப்பளித்திருந்தால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றிருக்க மாட்டோம். தேர்தலை சந்திப்போம். அதனால், தமிழக அரசுக்கு நெருக்கடி. செல்லாது என தீர்ப்பளித்திருந்தால் சட்டப்பேரவைக்கு சென்றிருப்போம். அப்போதும் அரசுக்குதான் நெருக்கடி. மூன்றாவது நீதிபதி எப்போது நியமிக்கப்படுவார்? 10 நாட்களில் இந்த வழக்கு முடியும் என தலைமை நீதிபதி கூறியிருந்தால் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன்.

இந்த வழக்கு 2 ஆண்டுகளுக்கு இழுத்தடிக்க வாய்ப்புள்ளது. மூன்றாவதாக நியமிக்கப்படும் நீதிபதி தலைமை நீதிபதியின் கருத்தையே முன்மொழிந்து அரசுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்குவார் என்பது என் கணிப்பு. நாங்கள் அதிமுகவில் சேர வேண்டும் என நினைத்திருந்தால் ஏன் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறோம். சசிகலாதான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அவரையே கட்சியில் இருந்து நீக்கும்போதுதான் நாங்கள் வெளியேறினோம்.

ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது எங்களின் எண்ணமில்லை. தேவைப்பட்டால் தொகுதியில் உள்ள 3 லட்சம் பேரையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்’ என்று ஆவேசமாக பேசினார்.

இன்றைக்கு தமிழ்செல்வன் எதிர்பார்த்தபடி 'நீக்கம்' என தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால், தென்காசியில் புனித நீராடி நம்பிக்கையுடன் இருந்த தமிழ்செல்வன், "மேல் முறையீடு செய்வதா? தேர்தலை சந்திப்பதா? ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்வோம். மூன்றாவது நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையில் தான் மேல் முறையீடு செய்ய மாட்டேன் என கூறினேன்’ என பின்வாங்கியிருக்கிறார்.

தீர்ப்பு இப்படி வரக்கூடும் என்பதால்தான், '18 எம்.எல்.ஏக்கள் கூடிப்பேசி அவர்கள் முடிவெடுப்பார்கள்' என்று அவ்வப்போது சொல்லிவந்தார் தினகரன். இன்றைக்குத் தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், மீண்டும் அதேநிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். கூடுதலாக, '17 எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு செல்ல வேண்டும் என்றே நினைத்தனர். ஆனால், ஒருவர் மட்டுமே தேர்தலைச் சந்திப்போம் என்று கூறினார். கூடி முடிவெடுப்போம்" என பீடிகை போடுகிறார்.

தினகரன் போடும் பீடிகையிலிருந்து அவர் தேர்தலைச் சந்திக்கும் மனநிலையில் இல்லை என தெரிந்துகொள்ள முடிகிறது. சில நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிக்கவில்லை. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் வானிலை காரணத்தைச் சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளிவைப்பதைக் கண்டித்தார்.

அதேநேரம் திருப்பரங்குன்றத்தில் 2016ம் ஆண்டு நடந்த தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஜெயலலிதா கைரேகை தொடர்பான அவ்வழக்கில் திமுகவுக்கு தீர்ப்பு சாதகமாக வரும் சூழலில் தேர்தலே தேவையில்லை என்று டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி அளித்தார்.

இதனை விமர்சித்த தினகரன், திமுக இரட்டை நிலைப்பாடு எடுக்கிறதா? என கேட்டார். காரணம் திருப்பரங்குன்றம் எனும் ஒரே ஒரு இடத்தில் தேர்தல் நடக்கும் பட்சத்தில் 'ஆர்.கே.நகர் பார்முலா' மூலம் வென்றுவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது அவரிடம். ஆனால், இப்போது மொத்தமாக தேர்தல் நடக்கும்போது ஆட்சிக்கு எதிரான கூட்டுமனநிலை, அதிமுகவின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் பிரதிபலிக்கும்.

பிளவுற்றிருக்கும் அதிமுக வாக்குகளால் நிச்சயம் திமுக வெல்லும் சூழல் உருவாகலாம் என்பதே பொதுவான கணிப்பாக இருக்கிறது. எனவே தான் தினகரன் அச்சப்படுகிறார். கீழேயிருக்கும் புள்ளிவிவரஙகளைப் பார்த்தால், ‘மிஸ்டர் கூல்’ தினகரனின் அச்சங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

18 எம்.எல்.ஏக்களின் தொகுதி மற்றும் வாக்கு வித்தியாச விவரம் கீழே:

ஆண்டிப்பட்டி தொகுதி

வெற்றிபெற்ற தங்க தமிழ்ச்செல்வன் பெற்ற வாக்குகள் - 103129

இரண்டாவது இடம் பெற்ற திமுகவின் வாக்குகள் - 72933

அரூர் (தனித்தொகுதி)

வெற்றிபெற்ற ஆர்.முருகன் பெற்ற வாக்குகள் - 64568

இரண்டாவது இடம் பெற்ற திமுகவின் வாக்குகள் - 53147

மானாமதுரை (தனித்தொகுதி)

வெற்றிபெற்ற மாரியப்பன் பெற்ற வாக்குகள் - 89893

இரண்டாவது இடம் பெற்ற திமுகவின் வாக்குகள் - 75004

பெரியகுளம் (தனித்தொகுதி)

வெற்றிபெற்ற கதிர்காமு பெற்ற வாக்குகள் - 90599

இரண்டாவது இடம் பெற்ற திமுகவின் வாக்குகள் - 76249

குடியாத்தம் (தனி)

வெற்றிபெற்ற ஜெயந்தி பெற்ற வாக்குகள் - 94689

இரண்டாவது இடம் பெற்ற திமுகவின் வாக்குகள் - 83219

பாப்பிரெட்டி பட்டி

வெற்றிபெற்ற பழனியப்பன் பெற்ற வாக்குகள் - 74234

இரண்டாவது இடம் பெற்ற பாமக வாக்குகள் - 61521

அரவக்குறிச்சி தொகுதி

வெற்றிபெற்ற செந்தில் பாலாஜி பெற்ற வாக்குகள் - 88068

இரண்டாவது இடம் பெற்ற திமுகவின் வாக்குகள் - 64407

பரமக்குடி (தனித்தொகுதி)

வெற்றிபெற்ற முத்தையா பெற்ற வாக்குகள் - 79254

இரண்டாவது இடம் பெற்ற திமுகவின் வாக்குகள் - 67865

பெரம்பூர் தொகுதி

வெற்றிபெற்ற வெற்றிவேல் பெற்ற வாக்குகள் - 79974

இரண்டாவது இடத்தில் திமுக பெற்ற வாக்குகள் - 79455

சோளிங்கர் தொகுதி

பார்த்திபன் பெற்ற வாக்குகள் - 77651

இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் (திமுக கூட்டணி) பெற்றவாக்குகள் - 67919

திருப்போரூர் தொகுதி

வெற்றிபெற்ற கோதண்டபாணி பெற்ற வாக்குகள் - 70215

இரண்டாவது இடத்தில் திமுக பெற்ற வாக்குகள் - 69265

ஏழுமலை (தனித்தொகுதி)

வெற்றிபெற்ற ஏழுமலை பெற்ற வாக்குகள் - 103952

இரண்டாவது இடத்தில் திமுக பெற்ற வாக்குகள் - 92189

தஞ்சாவூர் தொகுதி

வெற்றிபெற்ற ரெங்கசாமி பெற்ற வாக்குகள் - 101362

இரண்டாவது இடத்தில் திமுக பெற்ற வாக்குகள் - 74488

நிலக்கோட்டை (தனித்தொகுதி)

வெற்றிபெற்ற தங்கதுரை பெற்ற வாக்குகள் - 85507

இரண்டாவது இடத்தில் திமுக பெற்ற வாக்குகள் - 70731

ஆம்பூர் தொகுதி

வெற்றிபெற்ற ஆர்.பாலசுப்ரமணி பெற்ற வாக்குகள் - 85507

இரண்டாவது இடத்தில் திமுக பெற்ற வாக்குகள் - 70731

சாத்தூர் தொகுதி

வெற்றிபெற்ற சுப்ரமணியன் பெற்ற வாக்குகள் - 71513

இரண்டாவது இடத்தில் திமுக பெற்ற வாக்குகள் - 67086

ஒட்டப்பிடாரம் (தனித்தொகுதி)

வெற்றிபெற்ற ஆர்.சுந்தரராஜ் பெற்ற வாக்குகள் - 65071

இரண்டாவது இடத்தில் புதிய தமிழகம் (திமுக கூட்டணி) - 64578

விளாத்திகுளம்

வெற்றிபெற்ற உமா மகேஸ்வரி பெற்ற வாக்குகள் - 71496

இரண்டாவது இடத்தில் திமுக பெற்ற வாக்குகள் - 52778

இவற்றில், பெரம்பூர், ஒட்டப்பிடாரம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் முறையே 519, 493, 950 வாக்கு வித்தியாசத்தில்தான் அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வென்றது. கூடுதலாக கவனிக்க வேண்டியது, இந்த 18 தொகுதிகளில் 8 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். பாப்பிரெட்டிபட்டியில் பாமக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், 4 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடாமல் கூட்டணிக்கட்சிகள் போட்டியிட்டுத் தோற்றுள்ளன.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இரண்டு தொகுதிகளிலும் பொதுத்தேர்தலுக்கு முந்தையை கருத்துக்கணிப்புகளில் திமுகவே வெற்றிபெறும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்காக தேர்தல் நிறுத்தப்பட்ட இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் நடத்தப்பட்டு, அதில் அதிமுக வென்றது. எனவே, 18 தொகுதிகளில் குறைந்தது 9 தொகுதிகளில் திமுக வெல்லும் சூழல் உள்ளது. திருவாரூர் நிச்சயம் திமுக வெல்லக்கூடிய இடம். எனவே, 10. மீதமுள்ள 10 இடங்களில் போட்டி கடுமையானதாக இருக்கக்கூடும்.

சுயேட்சைகள் என சொல்லப்பட்டாலும் கருணாஸ், தமீம், தனியரசு மூவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டவர்கள். எனவே, ஆட்சிக்கு எதிராக அவர்கள் வாக்களிக்க முடியுமா என்பது சந்தேகம். எனவே, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் ஆட்சி கலைய வாய்ப்பில்லை.

தற்போது, திமுகவிடம் 88, காங்.8, லீக் 1, சுயேட்சை 3, தினகரன் + ஆதரவு = 3. மொத்தம் 103. அதிமுகவில் சபாநாயகரைச் சேர்க்காமல் 110. 20 காலியிடங்கள் (திருவாரூர், திருப்பரங்குன்றம் சேர்த்து).

அதிகபட்ச சாத்தியமாக, திமுக 20 தொகுதிகளிலும் வென்றால், திமுகவின் பலம் 108 ஆகும். காங்கிரஸ்+லீக் ஆதரவைச் சேர்த்தால் 117. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை திமுகவுக்கு கிடைக்கக்கூடும். அதேநேரம் 8 தொகுதிகளில் வென்றாலே அதிமுக ஆட்சி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் நடந்துவிடும்.

ஆட்சி கையிலிருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றிக்கு எதையும் செய்யும். எனவே, 'ஆர்.கே.நகர் பார்முலாவை' கையில் எடுத்தாலும் கூட, குறைந்தபட்ச நம்பிக்கையளிக்கும் வாக்குகளைப் பெறவே பொருள் பஞ்சத்தால் வறண்டு தினகரன் தண்ணீர்குடிக்க வேண்டியிருக்கும்.

எனவே தான், திருப்பரங்குன்றம் என்கிற சிங்கிள் தொகுதிக்கு தொடை தட்டிய தினகரன், 20 தொகுதிக்கு தேர்தல் என்றதும் குரலை அடக்குகிறார்.

இந்த ஆட்சியால் யாருக்கு லாபம்?

தேர்தலைச் சந்திக்காமல் இருக்க மேல்முறையீட்டுக்குச் செல்வதே தினகரனின் முடிவாக இருக்கும். தினகரனின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் '18 எம்.எல்.ஏக்களின்' முடிவாக இருக்கும்.

இப்போது இங்கே ஒரு கேள்வி எழுகிறது. இந்த ஆட்சியால் உண்மையில் யாருக்கு அரசியல் லாபம்? எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்குத்தான் லாபம் என்பது ஒருமுகம். அதிமுகவை இயக்கும் பாஜக என நினைப்பது இன்னொருமுகம். ஆனால், இந்த இரண்டு முகங்களுக்கும் இடையில் ஒரு இடைமுகமான வளர்ச்சி இருக்கிறது. அதுதான் தினகரனின் வளர்ச்சி. வேறு எவரை விடவும் இந்த ஆட்சியால் அதிகம் லாபமடைந்தவர் தினகரன் தான். தினகரன் எப்படி லாபம் அடைகிறார். அந்த வளர்ச்சி எப்படி நடக்கிறது? என்பது தனிக் கட்டுரையாக நீளும். இன்னொரு முறை பார்க்கலாம்!

 

Madras High Court Ttv Dhinakaran Vivek Gananathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment