மீன் வேண்டாம்... மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்

மக்களவை தேர்தலில் கூட்டணிக்கான ஒருங்கிணைந்த தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது தான் சாலப்பொருத்தமாக இருக்கும்.

சு.ஆ.பொன்னுசாமி

தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் அறிக்கைகளுக்கு ஒரு மரியாதை இருக்கவே செய்கிறது. காரணம், கடந்த ஓரிரு தேர்தல்களில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இலவச டிவி, இலவச அரிசி, இலவச மிக்சி என கொடுத்த சில வாக்குறுதிகளை செய்து கொடுத்தார்கள்.

ஆனால் இப்போது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இரு முக்கிய கட்சிகளான அதிமுக.வும், திமுக.வும் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளே மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கு பதிலாக, கானல் நீரை காட்சிப் படுத்துவதுபோல இருக்கின்றன. மாதம்தோறும் குடும்பத்திற்கு 1500 ரூபாய், ஒன்றரை கோடி பேருக்கு அரசு வேலை என்கிற வாக்குறுதிகளை வேறு எப்படி சொல்வது?

இப்படி செயல்படுத்த முடியாத பல்வேறு விசயங்களை உள்ளடக்கிய திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளுக்கு காங்கிரஸ், பாஜக எப்படி மதிப்பளிக்கும்? என்பது மில்லியன் டாலர் கேள்வி. மதிப்பளிப்பதாக இருந்தால், இப்போதே கூட்டணிகள் சார்பில் ஒரே தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பார்களே?

எனவே மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை தனித்தனி அறிக்கையாக வெளியிட்டிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்தான். மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ள தேசிய கட்சிகளுக்கு இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.

கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு, ‘நாங்கள் பொறுப்பல்ல’ என அவை தட்டிக்கழிக்க முடியும். காலம் கடத்தவும் வாய்ப்புகள் அதிகம். மாநிலக் கட்சிகள் இப்போது நீட், மேகதாது பிரச்னைகளில் வலியுறுத்துவது போல வலியுறுத்திக் கொண்டுதான் இருக்க முடியும். இதுதான் யதார்த்தம்!

நீட் தேர்வை ரத்து செய்வோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நீட் தேர்வினால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற முடிகிறது என்று பாஜக ஆணித்தரமாக நம்புகிறது.

அது போல ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்கிறது திமுக.வின் தேர்தல் அறிக்கை. அந்த எழுவரை விடுதலை செய்ய தமிழக காங்கிரஸ் தலைவர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனும் போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உச்சநீதிமன்றத்தின் மீது பழியை போட்டு தப்பித்து கொள்ளவே ராகுல் காந்தி பார்ப்பார்.

அதுமட்டுமின்றி, அன்னிய முதலீட்டை தடுத்து நிறுத்துவோம் என்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. உலகளவில் ‘காட்’ ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்றைக்கு கையெழுத்துப் போட்டதோ அப்போதே இந்தியாவின் தலையெழுத்து மாறிப் போனது. அந்த தலையெழுத்தை இனி காங்கிரஸ் நினைத்தாலும் மாற்ற முடியாது எனும்போது, அன்னிய முதலீட்டை தடுத்து நிறுத்துவோம் என்பது முழுப்பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்கும் செயலாகும்.

தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு அழிவு திட்டங்களுக்கு காங்கிரஸ் தான் விதை போட்ட சூத்திரதாரி. அதற்கு திமுக.வும் உடந்தையாக இருந்தது. அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்து அவற்றையெல்லாம் கடுமையாக எதிர்த்த பாஜக., ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு வளர்த்து வருவதோடு அவற்றை இன்று வரை பத்திரமாக பாதுகாத்தும் வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தவிர, திமுக அல்லது அதிமுக.வின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தேசியக் கட்சிகள் நிறைவேற்ற விரும்புமா? என்கிற கேள்வியும் அரசியல் ரீதியாக எழுகிறது. ஒருவேளை அப்படி நிறைவேற்றினாலும், ‘இதை நாங்கள்தான் செய்தோம்’ என மாநிலக் கட்சிகள் மார்தட்டும். இதில் தேசியக் கட்சிகள் தங்களுக்கென்ன அரசியல் லாபம் என்று பார்க்க மாட்டார்களா? இதே மாநிலக் கட்சிகளிடம் அடுத்த தேர்தலிலும் 5 சீட்களுக்கும், 10 சீட்களுக்கும் குட்டிக்கரணம் அடிக்க வேண்டியிருக்கும் என்பது தேசியக் கட்சிகளுக்கு தெரியாதா என்ன?

மத்தியக் கட்சிகள் நிறைவேற்றாதது குறித்து மாநிலக் கட்சிகளும் பெரிதாக கவலைப்படப் போவதில்லை. மத்திய ஆட்சியாளர்கள் மீது பழி போட்டு விட்டு, சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்க புறப்பட்டு விடுவார்கள் இவர்கள்!

ஆக, மக்களவை தேர்தலில் கூட்டணிக்கான ஒருங்கிணைந்த தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது தான் சாலப்பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து தனித் தனி தேர்தல் வாக்குறுதிகளில் “வலியுறுத்துவோம், பாடுபடுவோம், முயற்சி செய்வோம்” என அறிக்கை விடுவதெல்லாம் ஒட்டு மொத்த மக்களையும் வாக்குகளுக்கு ஏமாற்றும் செயலன்றி வேறில்லை.

‘கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, மாதந்தோறும் 1500 ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை’ என்பதெல்லாம், ‘ஒருவரை ஏமாற்ற வேண்டுமானால் அவரது ஆசையை தூண்ட வேண்டும்’ என்கிற ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் வசனத்தை நினைவூட்டும் வகையில் இருப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது.

மாணவர்களும், விவசாயிகளும் கடனே வாங்காமல் செயல்படுவதற்கான திட்டத்தை வகுப்பதும், இலவச திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்து அவரவர் தேவைகளை அவரவர் பூர்த்தி செய்து கொள்ள வழிவகை செய்வதே சரியான தீர்வாக இருக்க முடியும். அதாவது, மீன் பிடித்து அதனை சமைத்து சாப்பிடக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். இந்த ஏமாற்றுத் தேர்தல் அறிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் உடனடியாக திரும்பப் பெறுவது உத்தமம்.

(கட்டுரையாளர் சு.ஆ.பொன்னுசாமி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர். தொடர்புக்கு 9600131725)

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close