ச.செல்வராஜ்
2019 நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலியாக தேசியத் தலைவர்களை வளைக்க தமிழக கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ராகுல் காந்தி எந்த மாநாட்டுக்கு வரப் போகிறார்?
2019 நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கிற முக்கியத் தேர்தல்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், திமுக தலைவர் கருணாநிதி ஆக்டிவாக செயல்பட முடியாத நிலை ஆகியவற்றை தொடர்ந்து நடைபெறும் தேர்தல் இது!
போதாக்குறைக்கு புதிதாக கட்சிகளை தொடங்கியிருக்கும் கமல்ஹாசன், டிடிவி தினகரன், கட்சி தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த் ஆகியோர் என்ன விதமான தாக்கத்தை உருவாக்குவார்கள் என்பதை இந்தத் தேர்தலில்தான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பலம் பெற்றுவிட பாஜக பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக அண்மையில் வருகை தந்த அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்தார். வருகிற அக்டோபர் மாதத்திற்குள் பூத்திற்கு தலா 2 பேர் மீதம் தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிக்கு மட்டுமே 1,30,000 பேர் நியமிக்கப்பட்டாக வேண்டும் என இலக்கு நிர்ணயித்துவிட்டுப் போயிருக்கிறார் அமித்ஷா!
அமித்ஷா டெல்லி சென்ற பிறகு இந்தப் பணிகளுக்காக 40 பேர் கொண்ட குழுவையும் கட்சி ரீதியாக நியமனம் செய்திருக்கிறார்கள். மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜக.வுக்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என அமித்ஷா காதுகளில் சிலர் தகவல் சொல்ல, மேற்படி 40 பேர் குழுவில் சரி பாதி இடங்களை மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு கட்சி வழங்கியிருக்கிறது.
அண்மைகால ஐ.டி. ரெய்டுகளை பார்த்தால் அதிமுக-பாஜக கூட்டணிக்காக வாய்ப்புகள் குறைவே! எனவே ரஜினிகாந்த், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை உள்ளடக்கி கூட்டணி அமைக்க பாஜக முயற்சிக்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் அரசியல் பெரும்பாலும் காங்கிரஸை மையப்படுத்தியே நகர்கிறது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் அடுத்தடுத்து டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். ராகுல் காந்தி தமிழக கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுக்க தயாராவதை உணர்த்துவதாகவே இந்த சந்திப்புகள் அமைந்தன.
விடுதலை சிறுத்தைகள் செப்டம்பரில், ‘இந்திய தேச பாதுகாப்பு மாநாடு’ என்ற பெயரில் திருச்சியில் ஒரு மாநாடு கூட்டுகிறார்கள். இதில் ராகுல் காந்தியை பங்கேற்க வைப்பதே திருமாவின் நோக்கம்! காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முகுல்வாஸ்னிக், தமிழக தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் இந்த விஷயத்தில் திருமாவுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள்.
இதற்கிடையே ஆகஸ்ட் இறுதியில் சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த திமுக முடிவு செய்திருக்கிறது. இதற்காக மு.க.ஸ்டாலின் சார்பில் திருச்சி சிவா டெல்லிக்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். இருவரிடம் இருந்தும் பாசிட்டிவான பதில் இல்லை!
இந்தச் சூழலில்தான் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பிரச்னையில் ராகுல் காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக மு.க.ஸ்டாலின் ஒரு ‘ட்வீட்’ போட்டார். ராகுல் காந்தி அதற்கு பாராட்டு தெரிவிக்க, இதன் அடுத்தகட்டமாக ராகுல் காந்தியை மு.க.ஸ்டாலினே நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் எடுக்கும் இந்த முயற்சி விடுதலை சிறுத்தைகள் மத்தியில் பீதியை கிளப்புகிறது. ஆகஸ்ட் இறுதியில் திமுக மாநாட்டில் ராகுல் கலந்து கொண்டால், அதன் பிறகு தங்கள் மாநாட்டுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்பது சிறுத்தைகளின் ஒரு கவலை!
இன்னொன்று, திமுக மாநாட்டுக்கு ராகுல் வர விரும்பவில்லை என்றால், அதையே சாக்காக வைத்து விசிக மாநாட்டையும் தவிர்த்துவிடுவார் என கவலைப்படுகிறார்கள்.
இதற்கிடையே செப்டம்பர் 15-ல் மதிமுக சார்பில் ஈரோட்டில் முப்பெரும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவாரை இன்று (ஜூலை 19) அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து அழைப்பு விடுத்தார். சரத்பவார் அதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்காவையும் இன்று சந்தித்து ஒப்புதல் பெற்றிருக்கிறார் வைகோ. காங்கிரஸுடன் வைகோ நேரடியாக தொடர்பு கொள்ளும் திட்டம் இல்லை என்றே கூறுகிறார்கள். தவிர, வைகோவைப் பொறுத்தவரை தேர்தலுக்காக இல்லாவிட்டாலும் இதுபோல மாநாடுகளுக்கு தனது நட்பின் அடிப்படையில் டெல்லி தலைவர்களை அழைக்கக் கூடியவர்தான்!
ராகுல் காந்தி எந்த மாநாட்டுக்கு வரப் போகிறார் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பு!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.