அரியகுளம் பெருமாள் மணி – எழுத்தாளர் / ஊடகவியலாளர்
2001 முதல் 2021 வரையிலான 20 ஆண்டு காலத்தில் தி.மு.க ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்தது, இதற்கு முன் 1976 முதல் 1996 வரையிலான இருபது ஆண்டு காலத்தில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி தி.மு.க வசம் இருந்தது. 1976 க்கு பிறகான சவாலை கருணாநிதி எவ்வாறு திறம்பட எதிர்கொண்டார்? என்பது பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது.
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி ஒரு தேர்தலை சந்தித்து சட்டசபையில் அசுர பலத்துடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற பிறகே எம்.ஜி.ஆரின் சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது. எம்.ஜி.ஆர் எதிர் அரசியல் செய்ய ஆரம்பித்தபோது கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் இரண்டாவது முறையாக அமர்ந்திருந்தார். தி.மு.க.,வின் வலிமை மிகுந்த தலைவராகவே எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பிளவை கருணாநிதி சந்திக்க நேர்ந்தது, இத்தகைய நல்வாய்ப்புகள் எதுவும் ஸ்டாலினுக்கு அமையவில்லை.
2006 – 11 தி.மு.க ஆட்சி காலம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. 2011ல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஜெயலலிதா வகுத்த வியூகம் அதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், கூட்டுறவு தேர்தல்களிலும் அ.இ.அ.தி.மு.க.,விற்கு மிகப்பெரிய வெற்றிகளை தந்தது. கட்டமைப்பு ரீதியாக அ.தி.மு.க பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2014 பாராளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்பது என ஜெயலலிதா எடுத்த முடிவு அரசியல் அரங்கில் மிகவும் துணிச்சலான ஒன்று.
கூட்டணி அரசியலுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில் தனித்து நிற்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்த ஜெயலலிதா வெற்றிக் கனிகளையும் பறித்தார். 2011 இல் ஆரம்பித்த அ.இ.அ.தி.மு.க.,வின் வெற்றிப் பயணம் 2016- லும் தொடர்ந்தது. தி.மு.க கூட்டணி 90 இடங்களுக்கு மேல் வென்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 2016 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கும் தி.மு.க கூட்டணிக்குமான வாக்கு வித்தியாசம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு, ஆனால் ஆட்சி அதிகாரத்தை பெற இயலாத நிலையில் இத்தகைய புள்ளி விவரங்கள் எதுவும் தி.மு.க.,விற்கு பெரிதாக பலனளிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் கழகத்தின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அ.தி.மு.க.,வின் தொடர் வெற்றிகள் தி.மு.க தொண்டர்களை மிகவும் மனம் சோர்வடைய செய்திருந்த வேளையில் கட்சியை முன்னின்று நடத்த வேண்டிய பொறுப்பு ஸ்டாலினின் தோள்களில் ஏறியது.
ஸ்டாலின் தனது அரசியல் செயல்பாடுகள் குறித்து எப்போதும் எங்கேயும் வெளிப்படையாக பேசுபவர் அல்ல. பொதுக்கூட்ட மேடைகளிலோ, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலோ அதிரடியாக பேசுவது, சவால் விடுவது போன்ற செயல்களை அவர் ஒருபோதும் செய்ததில்லை. மிகவும் மென்மையான தலைவராகவே ஸ்டாலின் அரசியல் களத்தில் வளர்ந்து வந்தார். செயல் தலைவராக பொறுப்பேற்ற போது தி.மு.க.,விற்குள் நிலவிய உட்கட்சி குழப்பங்களை நிதானமாக கையாளத் தொடங்கினார் ஸ்டாலின்.
தி.மு.க.,விற்கு உள்ளேயே தன்னை விமர்சித்துப் பேசுபவர்கள், தனக்கு எதிராக அரசியல் செய்பவர்கள் யார் யார் என்பதை ஸ்டாலின் அறிந்திருந்தாலும் அதை ஒருபோதும் அவர் எந்த சூழலிலும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. கட்சியிலும் ஆட்சியிலும் எந்த ஒரு பெரிய முடிவை எடுத்தாலும் அதை ஊடகங்களின் வாயிலாக வெளியிடுவது கருணாநிதியின் உத்தியாக இருந்தது. ஸ்டாலினின் உத்தி கருணாநிதியின் உத்திக்கு நேர் எதிரானது என சொல்லலாம். ஏனைய தலைவர்கள் குறித்தோ, உட்கட்சி மாற்றங்கள் குறித்தோ ஊடகங்களிடம் ஸ்டாலின் பெரிதாக உரையாடுவது இல்லை. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார்.
2016 இல் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அந்த ஆண்டின் இறுதியில் அகால மரணம் அடைந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அந்த அரசியல் சூழலை விலகி நின்றே வேடிக்கை பார்த்தார், ஜெயலலிதாவின் மரணம் அ.தி.மு.க.,வில் ஏற்படுத்திய குழப்பமான சூழலை தி.மு.க.,விற்கு சாதகமாக பயன்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த போதும் கூட ஸ்டாலின் மௌனம் காத்தார்.
2018 ல் கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு தி.மு.க.,வின் தலைமையேற்ற ஸ்டாலின், கட்சியை மாவட்டங்கள் அளவில் மறு கட்டமைப்பு செய்தார். 2019 தேர்தலுக்கு தயாரானார். ஒத்த சிந்தனை உள்ள கட்சிகளைக் கொண்டு வலிமையான கூட்டணியை உருவாக்கினார், இடங்களை தாராளமாக பகிர்ந்து அளித்தார். பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெருவெற்றி பெற்றது. 1996 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி பெற்ற பெருவெற்றி இது. 2019 உள்ளாட்சி தேர்தல் முன் இல்லாத வகையில் புதிய முறையில் நடத்தப்பட்டது, கிராமப்புற உள்ளாட்சிக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் தி.மு.க 50 சதவீதத்திற்கு நெருக்கமான இடங்களை பெற்றது. ஊரக அளவில் தி.மு.க.,வின் சிறந்த செயல்பாடு இது. அப்போதும் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி பற்றியோ, ஊரக தேர்தல் வெற்றி குறித்தோ ஸ்டாலின் சிலாகித்துப் பேசவில்லை, தனது இயல்பின் படி ஒரு புன்னகையோடு கடந்து சென்றார்.
2020 எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும், கட்சியிலும் தனது அதிகாரத்தை உறுதி செய்த ஆண்டு என மதிப்பிடலாம். வடக்கே விக்கிரவாண்டி, தெற்கே நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிகள் அ.தி.மு.க.,விற்கு தன்னம்பிக்கையை கொடுத்திருந்தது. 2019 பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க அமர்ந்தது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனக் குறிப்பிட்டு கூட்டத்தை நிமிர்ந்து பார்த்து பதவியேற்றுக்கொண்டார்.
பெருமழை காரணமாக வெள்ளக்காடானது சென்னை, காலையும், மாலையும் மழை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக உரையாடி குறைகளை தீர்த்து வைத்தார் ஸ்டாலின். அடுத்த மழையில் இப்படி நீர் தேங்காது என்ற வாக்குறுதியையும் அளித்தார். ஸ்டாலின் கடினமான உழைப்பாளி என்ற பிம்பத்தை அவரது மழைக்கால செயல்பாடுகள் மக்கள் மனதில் தோற்றுவித்தது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியோடு 2022 ஆரம்பமானது. சந்திரசேகர ராவ், மம்தா போன்ற பிற மாநில முதல் அமைச்சர்கள் ஸ்டாலினை தேடி வந்து தேசிய அரசியல் பேசினர். கேரளாவில் நடைபெற்ற கம்யூனிஸ்டுகளின் கூட்டத்தில் மலையாளத்தில் பேச்சை துவக்கினார் ஸ்டாலின். முதலமைச்சராக வருவதற்கு முன்பு மாநிலம் கடந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஸ்டாலின் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. பிற மாநில தலைவர்களை டுவிட்டுகளின் வழி வாழ்த்துவதையும் ஒரு அரசியல் செயல்பாடாக கவனமுடன் முன்னெடுத்தார்.
தேசிய அரசியலில் தனது கனவு என்ன என்பதை அவர் வெளிப்படையாக பேசவில்லை, ஆனால் மாநிலம் தாண்டி 2022 ல் நட்புக்கரம் நீட்டத் தொடங்கினார். சனாதனத்தை உயர்த்தி பிடித்த ஆளுநருக்கு முரசொலி மூலம் பதில் சொன்னார். மஞ்சப்பை, காலை சிற்றுண்டி போன்ற திட்டங்கள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு துவக்கி வைக்கப்பட்டன.
திராவிட மாடல் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் 2022 ல் ஸ்டாலின் பேச ஆரம்பித்தார், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திராவிட மாடலின் வெவ்வேறு அம்சங்களை அவர் விளக்கத் தவறுவதே இல்லை. 2022 ஆம் ஆண்டில் திராவிட மாடலை ஸ்டாலின் ஒரு பிராண்ட் ஆக திட்டமிட்டு மாற்றினார்.
தி.மு.க உட்கட்சித் தேர்தல் இதுவரை இல்லாத அளவில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களை பெரிய அளவில் மாற்றவில்லை, ஒரு சில மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு கொண்டுவரப்பட்டனர். மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அணிகளின் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்.
தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பதவி கிடைக்கிற வகையில் நிர்வாகிகள் பட்டியலை நீட்டித்திருந்தார். முன்னர் தனது விசுவாசிகளாக இருந்தவர்கள், முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் என ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து ஏதாவது ஒரு அணியில் இணைத்து பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபடி ஸ்டாலின் தயாரித்த 2022 ஆம் ஆண்டு நிர்வாகிகள் பட்டியல் பல்வேறு வகைகளிலும் முக்கியமான ஒன்று. 2022 ல் கட்சியும் ஆட்சியும் முழுமையாக ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது, இத்தகைய சூழலில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க நாள் குறித்தார் ஸ்டாலின்.
அதிகாரபலமும், பொருளாதார பலமும் இல்லாத இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி அமைச்சரவை பட்டியலில் பத்தாவது இடத்தில் அமர வைக்கப்பட்டார், இந்த நுட்பம் தான் ஸ்டாலின். உதயநிதி அமைச்சரானதற்கு மறுநாள் மியூசிக் அகடமி விழாவில் தனது மனநிலையை பூடகமாக வெளிப்படுத்தினார்.
சட்டப்பேரவையில் அவரே குறிப்பிட்டதை போன்று விமர்சனங்களையும், அவதூறுகளையும் ஸ்டாலின் அளவிற்கு எதிர் கொண்டவர் சம கால அரசியலில் யாருமில்லை. அரசியலின் எல்லா கடினமான தருணங்களையும் பெருந்தன்மையுடனே எதிர் கொண்ட ஸ்டாலின், தன்னை பூரணமாக கட்டி எழுப்பிய ஆண்டாக 2022 யை மதிப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil