ச.செல்வராஜ்
‘2ஜி வழக்கில் விடுதலை ஆனாலும்கூட திமுக.வை குற்றவாளியாகவே மக்கள் பார்க்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றாலும்கூட ஜெயலலிதாவை அப்படிப் பார்க்கவில்லை’-பிரபலமான அரசியல் விமர்சகர் ஒருவரின் வார்த்தைகள் இவை! வழக்கம்போல, ‘எங்க ஜாதகம் அப்படி!’ என இதை திமுக கண்டும் காணாமல் போகலாம்!
குடும்பத்தையும் கழகத்தையும்
சுழற்றிய சூறாவளி!
இன்னும் சில மாதங்கள் கழித்து மக்களை திமுக.வினர் சென்று சந்திக்கும்போது, ‘நீங்க 2ஜி ஊழல்வாதிகள்தானே!’ என முகத்திற்கு நேராகவே கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது. சற்று யோசித்துப் பாருங்கள்! இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் குடும்பத்தை சூறாவளியாக சுழற்றிய வழக்கு 2ஜி! கருணாநிதியின் மகள் கனிமொழியை மட்டுமல்லாமல், மூப்பு மற்றும் உடல்நலப் பாதிப்பில் சிக்குண்டிருக்கும் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளையும் பாடாய் படுத்திய வழக்கு!
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை அவரது கோபாலபுரம் இல்லத்திலேயே நீதிமன்றம் அமைத்து விசாரித்தபோது, திமுக.வின் அரசியல் எதிரிகளே கொஞ்சம் ஆடிப்போனார்கள். காரணம், அரசியல் ரீதியான சர்ச்சைகள் எதிலும் தன்னை இணைத்துக் கொள்ளாதவர் தயாளு! இந்த வழக்கு விடுதலை அவருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்க வேண்டும்.
திமுக.வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியின் காலை சுற்றிய பாம்பாகவும் இந்த வழக்கு இருந்தது. திமுக.வின் கொள்கைப்பரப்பு செயலாளர் ஆ.ராசா இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதன் மூலமாக டெல்லியில் அதிகாரத்தை பயன்படுத்தி திமுக பெரும் கொள்ளைகளை நடத்தியதாக சுலபமாக பலராலும் சொல்ல முடிந்தது.
நம்பிக்கையை அதிகரிக்குமா,
அதிகரிக்காதா?
கருணாநிதியின் குடும்பத்தையும், அவர்களின் கழகத்தையும் மொத்தமாக அமுக்கி வைத்திருந்த ஒரு ‘பாறாங்கல்’லில் இருந்து திமுக மீண்டிருப்பது நிஜம். ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களே குறிப்பிடுவதுபோல, கடந்த சில தேர்தல்களில் திமுக.வின் தோல்விக்கு இந்த வழக்கும் ஒரு காரணம்.
இவ்வளவு பெரிய பாவச் சுமையில் இருந்து, அதிலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு வழக்கில் இருந்து விடுதலை பெறும் வாய்ப்பு இன்னொரு கட்சிக்கு கிடைத்திருக்குமானால் அதை பெரும் கொண்டாட்டமாக முன்னெடுத்திருக்கும். திமுக.வோ ஒரு விமான நிலைய வரவேற்புடன் 2ஜி விடுதலை மகிழ்ச்சியை முடித்துக் கொண்டது.
ஒரு வழக்கில் இருந்து விடுபட்டது, அவ்வளவு பெரிய கொண்டாட்டத்திற்கு உரியதா? என ஒற்றைக் கேள்வியில் கேட்டால், ‘தேவையில்லை’ என கூறிவிடலாம். ஆனால் ஒரு வழக்கு தங்களை அநியாயமாக அரசியல் வீழ்ச்சிக்கு இழுத்துக் கொண்டுபோய்விட்டதாக நம்பும் ஒரு கட்சி, அந்த வழக்கின் விடுதலையை தங்களின் மீள் எழுச்சிக்கு உபயோகப்படுத்த வேண்டுமா, வேண்டாமா? அந்த விடுதலை தொடர்பான கொண்டாட்டம் கலந்த பிரசாரங்கள் அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்குமா, அதிகரிக்காதா?
2ஜி விடுதலையின்
எழுச்சி வடிவம்
அதுவும் வரலாறு காணாத வகையில் சென்னையில் ஒரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக டெப்பாசிட் இழந்திருக்கும் நிலையில், டிடிவி தினகரனின் வெற்றி, ரஜினிகாந்தின் வருகை, கமல்ஹாசனின் அரசியல் மிரட்டல், கால் பதிக்க எந்த வியூகத்திற்கும் தயாராகிக் கொண்டிருக்கும் பாஜக என தமிழக அரசியல் பரிமாணம் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் திமுக.வின் கோணத்தில் இது முக்கியமான காலகட்டம்!
கனிமொழியையும், ஆ.ராசாவையும் விமான நிலையத்தில் கட்டித்தழுவி வரவேற்ற பிறகு கொடுத்த பேட்டியில், ‘2ஜி விடுதலையை கொண்டாட்டமாக முன்னெடுப்போம்’ என்றே ஸ்டாலின் கூறினார். ஆனால் அதன்பிறகு கூடிய திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டத்தில், கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியதுடன் கடமையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2ஜி விடுதலைக்கு பிறகு நீலகிரி சென்ற ஆ.ராசாவுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதி திரட்டப்பட்ட ஆதரவாளர்களாக இருந்தாலும், அந்தக் கூட்டங்களில் ஒரு எழுச்சி இருந்ததை மறுக்க முடியாது. அதேபோல ஜனவரி 5-ம் தேதி கனிமொழியின் பிறந்த நாளுக்கு மிகவும் ஆரவாரமான வாழ்த்து பேனர்கள், சுவரொட்டிகள் தென்படுகின்றன. ஒரு வகையில் 2ஜி விடுதலையின் எழுச்சி வடிவம்தான் இது!
திமுக மறந்ததா,
அல்லது மறுக்கிறதா?
இந்த எழுச்சி வடிவத்தை ஏன் மாநிலம் தழுவிய இயக்கமாக திமுக பயன்படுத்தவில்லை? குறைந்தபட்சம் ஆ.ராசா, கனிமொழி மற்றும் கட்சி முன்னணியினரை உள்ளடக்கி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்குகூட இன்று வரை (ஜனவரி 4) அறிவிப்பு இல்லை. 2ஜி விடுதலையை கொண்டாட திமுக மறந்ததா, அல்லது மறுக்கிறதா? என்பதே இங்கு கேள்வி!
2ஜி விடுதலை தீர்ப்பு வெளியானதும், டிடிவி அணியின் நாஞ்சில் சம்பத் ஒரு கருத்தை உதிர்த்தார். ‘2ஜி விடுதலை கட்சிக்குள் கனிமொழியின் பலத்தை அதிகரிக்கும். ஸ்டாலினுக்கு பல சங்கடங்கள் காத்திருக்கின்றன. இதை போகப் போக உணர்வீர்கள்’ என்றார் அவர். முன்னாள் திமுக காரரான அவரது கருத்தையே திமுக தலைமையும் மனதில் வைத்திருக்கிறதோ? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
2ஜி வெற்றியை கொண்டாடுவது கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோரின் சுய செல்வாக்கை வளர்க்கவே உதவும் என திமுக தலைமை நினைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கனிமொழி, ஆ.ராசா ஆகியோரின் செல்வாக்கு வளர்ந்தாலும் அது கட்சியின் செல்வாக்கு வளர உதவும் என நம்ப வேண்டியதுதான் இங்கே முக்கியம்! அப்படி இல்லாமல், ஸ்டாலினுக்கு வழங்கும் புரமோஷன்கள் மட்டுமே கட்சியை வளர்க்கும் என நம்பினால், அதுதான் ஆபத்து!
அரசியல் கட்சியின்
வெற்றி சூட்சுமம்
இன்னும் சொல்லப்போனால், திமுக.வின் சரிவில் பெரும் பங்கை ஏற்க வேண்டியவர்கள் அந்தக் கட்சிக்கு மாவட்ட வாரியாக வாய்த்திருக்கும் குட்டித் தளபதிகளே! அவர்களை மாற்றாமல், அல்லது மாவட்டத் தலைமைகளின் செல்வாக்கை உயர்த்தாமல் மொத்த திமுக.வும் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வது சிரமம்.
ஆ.ராசா ஜாமீன் பெற்றுக் கொண்டு வந்தபோதே அவரை, ‘தகத்தகாய சூரியன்’ என மெச்சினார் கருணாநிதி. அதற்கு பிரதி உபகாரமாகவே விடுதலை ஆனதும், ‘என்னை பனிக்குடத்தில் வைத்து பாதுகாத்தவர் கலைஞர்’ என நெக்குருகி கடிதம் எழுதினார் ஆ.ராசா. கருணாநிதியும் ஆ.ராசாவும் சொன்ன வார்த்தைகளில் நியாயத்தை தேடுவதைவிட, ஒரு கட்சியின் தலைவருக்கும் இரண்டாம்கட்டத் தலைவருக்கும் இடையிலான பிணைப்பை மட்டும் இதில் துருவிப் பாருங்கள்! ஒரு அரசியல் கட்சியின் வெற்றி சூட்சுமம் அங்கே இருக்கிறது.
ஒரு அரசியல் தலைமை தன்னைச் சுற்றி திறமையானவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பலம் பெற்றால், நாம் பலவீனமாகிவிடுவோம் என நினைத்தால், அது அவ நம்பிக்கையின் அடையாளம்! காமராஜர், அண்ணா ஆகியோருக்கு பிறகு சமகால அரசியலில் தன்னம்பிக்கை மிக்க ஒரு தலைமைக்கு சரியான உதாரணம் கருணாநிதி மட்டுமே! அவரிடம்தான் மற்றவர்கள் பாடம் படிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.