ஹலேத் அகமது
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதி சையதா அபிதா ஹுசைன் அவர் தன்னுடைய இரண்டாவது புத்தகத்தினை வெளியிட்டிருக்கின்றார். 2015ஆம் ஆண்டு, பெனாசீர் பூட்டோவுடனான தன்னுடைய உறவு முறையையும் உள்ளடக்கிய சுயசரிதை Power Failure: The Political Odyssey of a Pakistani Woman ஒன்றை அப்பெண் வெளியிட்டிருந்தார். தற்போது பெனாசீர் பூட்டோவின் வாழ்க்கை வரலாற்றை Special Star: Benazir Bhutto’s Story என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
சையதா ஹூசைன், பெனாசீரின் மிக நெருங்கிய வட்டத்தில் இருந்த மிக முக்கியமான அரசியல் பிரமுகர். கராச்சியில் முதல்முறையாக பெனாசீரை கொல்வதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தவர் சையதா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்தகம் முழுமைக்கும் எதிர்மறை கருத்துகளால் நிரம்பி வழிகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. இதை எழுதிய எழுத்தாளர், அவர் பூட்டோவினை சந்தித்த காலத்தில், பூட்டோ எப்படி செயல்பட்டார் என்பதை எழுத மறந்துவிட்டார். ஆனால் எழுத்தாளர் அனைத்தும் அறிந்த ஒருத்தராக இருந்து இந்த புத்தகத்தினை எழுதிவிட்டதாகத்தான் தோன்றுகின்றது. இதைப்பற்றி நூலின் ஆசிரியர் கூறுகையில் “ஆரம்பத்தில் நானும் பெனாசீரின் கருத்துகளை எதிர்த்த ஒருத்தி தான். ஆனால், கொஞ்ச காலத்திலேயே அவருடைய எண்ண ஓட்டத்தினை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வளவு பெரிய பொறுப்பினை தூக்கிச் சுமக்கின்ற அளவிற்கு அவருடைய திறமைகள் இல்லை என்பதை நான் விரைவிலேயே அறிந்து கொண்டு, அவருக்கு பல்வேறு சமயங்களில் நல்ல தோழியாக இருந்திருக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த புத்தகத்தில், பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை அவருடைய தந்தை ஜுல்பிக்கர் பூட்டோ இறப்பிற்கு பிறகு எப்படி மாறிவிட்டது என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றார். ஜெனரல் ஜியாவினால், ஜுல்பிக்கர் பூட்டோ கொல்லப்பட்ட பின்பு, பெனாசீர் இரண்டு வருடங்கள் சிறையில் தன்னுடைய வாழ்நாளை கழித்தார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் அம்மாவுடன் சேர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜியா மீது கோபத்துடன் இருந்த காலத்தில், பொது மக்களை பார்க்கும் போதெல்லாம் “ஜியாவினை தூக்கிலேற்றி, அவருடைய தோலை எடுத்து, என் காலுக்கு செருப்பாக தைத்து போட்டுக் கொள்வேன் ”என்று பேசினார் பெனாசீர்.
1988ல் ஆட்சிக்கு வந்த பின்பு அவர் மேற்கொண்ட எந்த ஒரு நடவடிக்கையும் மக்கள் மனதில் நிலைக்கவில்லை. பொதுமன்னிப்பு வழங்கி, சிறையில் இருக்கும் கைதிகள் அனைவரையும் வெளியில் விட்டார். அதனால் சட்ட ஒழுங்கு சீர் குலைந்தது. ஜியாவின் ஆட்சி காலத்தில் பரவலாக்கப்பட்ட ஆயுத உபயோகங்களை கட்டுக்குள் கொண்டு வந்தார். பாகிஸ்தானில் செய்யப்படும் வேலைகள் குறித்து சட்டம் இயற்றப்பட்டு, பாகிஸ்தானின் மொத்த வளங்களும் வீணடிக்கப்பட்டது. அவருடைய அமைச்சகத்தில் இருந்த அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகளாக இருந்தார்கள். அவர்களின் ஊழல்கள் அனைத்திலும் பெனாசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு பங்குண்டு. அனைத்து கொள்ளைகளுக்கும் 10% கமிசன் கேட்டதால் அவருக்கு மிஸ்டர். 10% என்ற பட்டப் பெயரும் கூட கிடைத்தது.
தன்னுடைய பிள்ளைகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவதற்காக அடிக்கடி கராச்சிக்கு அவருடைய அலுவலக விமானத்தில் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் பெனாசீர். ஜோசியம் போன்ற மூடநம்பிக்கைகளை கண்மூடித் தனமாக நம்பும் பெனாசீர், வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்த போது, ஒரு மணி நேரம் எதிர்காலம் குறித்து கணிப்பவர்களிடம் செலவழித்திருக்கின்றார் பெனாசீர். 1993ல் ஆட்சிக்கு மீண்டும் வந்தபோது, அவர் தன்னுடைய கணவர் கூறிய திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த முன் வந்தார். அதில் பிரதமர் வீட்டில் 50 குதிரை லாயங்கள் கட்டுவதும் அடங்கும். இப்படியாக இந்த புத்தகம் அமைய அதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், அதில் இடம் பெற்றிருக்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பொய் என்றும் கூறியிருக்கின்றார்கள் பூட்டோ குடும்பத்தினர்.
தமிழில் நித்யா பாண்டியன்