சாய் ஸ்ரீ
ஆண்டாள் பிரச்னையில் ஜெகத்ரட்சகன் வெளியிட்ட அறிக்கை திமுக.வில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது. கடுமையான கண்டனங்களும் குவிகின்றன.
ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவான நிலைப்பாடை திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் முன்னெடுத்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இந்து மதத்தை மட்டுமல்ல, எந்த மதத்தினரையும் புண்படுத்தும் செயலில் திமுக இறங்காது. வைரமுத்து வருத்தம் தெரிவித்துவிட்டதால், இந்தப் பிரச்னையை விட்டுவிட வேண்டும்’ எனகிற கோணத்தில் இரு தரப்புக்கும் நோகாமல் அறிக்கை விட்டார்.
இதில் திடீர் திருப்பமாக திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனருமான ஜெகத்ரட்சகன் நீளமான ஒரு அறிக்கை விட்டார். ஆண்டாள் பிரச்னையில் வைணவர்களின் கோபம் முழுக்க நியாயமானது என்பதை தனது அறிக்கையில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார் ஜெகத்.
வைரமுத்து தனது ஆய்வு அறிக்கையில் ஆண்டாள் குறித்து குறிப்பிட்டது கண்டனத்துக்கு உரியது என்பதையும் கோடிட்டுக் காட்டினார். அனைத்துக்கும் மேலாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார் என குறிப்பிட்டார் ஜெகத்!
துர்கா ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை ஜீயர் நிறுத்தினார் : ஜெகத்ரட்சகன் தகவல்
இதுதான் தற்போது திமுக.வில் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள்தான். கருணாநிதியே பலமுறை ஆன்மீகத்திற்கு எதிராக கருத்துகளை வீசி, அதனால் கொந்தளிப்புகள் நிகழ்ந்தபோதும் தயாளுவோ, ராஜாத்தியோ அதில் நேரடியாக தலையிட்டதில்லை.
ஆனால் முதல்முறையாக சர்ச்சைக்குரிய ஒரு பொதுப் பிரச்னையில் துர்கா ஸ்டாலின் தலையிட்டதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரே அறிக்கை மூலமாக வெளிப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக தலைமை இதை அதிகாரபூர்வமாக மறுக்கவும் இல்லை. இந்தச் சூழலில் ஜெகத்ரட்சகனின் அறிக்கைக்கு சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
சாம்பிளுக்கு திமுக தலைமைக்கழக பேச்சாளரான சின்னமனூர் புகழேந்தி வெளியிட்டிருக்கும் கருத்துகள் இங்கே..
‘வைணவத்திலகம் ஜெகத்ரட்சகன் ஆண்டாளை விமர்சித்த கவிஞர்வைரமுத்துவை கண்டித்து யாருக்கோ திரைமறைவு வெண்சாமரம் வீசியுள்ளார். வைரமுத்து மீது கொலை வெறித்தாக்குதல் செய்வேன் என்றவர்களையும், ஹெச்.ராஜாவையும் கண்டிக்காத நன்கொடை வாங்காத!???? கல்விவள்ளலான ஜெகத், வைணவர்களுக்கு ஆதரவாகப் தட்டை திருப்பிவைத்து தட்டி இருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
வைணவர்கள் மனம்புண்பட்டு விழிகளில் கண்ணீர் வழிந்தோடுகிறதாம்.! அண்ணாவை திருடன் என்றபோது கண்ணிர் ஓடவில்லையோ? இப்படி பேசியதால் தான் தொண்டையில் ஓட்டை போட்டு பேச முடியாமல், சாப்பாடு இறங்குகிறது என்று தலைவரை ஹெச்.ராஜா பேசும் போது கண்ணீர் வடியவில்லையோ?
திருப்பதிக்கு உன் அண்ணனை கூட்டிட்டு போய் ஆட்டைய போட்டுவிடாதே என்று தளபதியை பேசும் போது கண்ணிர் வடியவில்லை ஜெகத் அய்யாவுக்கு! உன்னையும் என்னையும் சேர்த்து சூத்திரன் என உன் வேதங்கள் கல்எறிந்த போது எங்கே போனார் இந்த ஜெகத்? தலைவர் கலைஞர் நடமாட்டம் இருந்த போது சுருட்டிய வால் இப்போது ஆட காரணம் என்ன?
தர்ப்பைப்புல்லை மட்டுமே ஆயுதமாகக் கொண்டவர்கள்,
ஆயுதத்தையே விளையாட்டு கருவியாக பயன்படுத்திய வீரத்தமிழ் பரம்பரை கவிஞரை இலக்கியப்புலமை வாய்ந்த வைரமுத்துவை கொல்வேன் என்கிறார்கள். இவர்களுக்கு அந்த தைரியத்தை யார் கொடுத்தது? பச்சை செடிக்கும் பச்சை பாம்புக்கும் வித்தியாசம் தெரியாதவர் திமுக மத்திய அமைச்சரவையில் இருந்து என்ன லாபம்!
விசக்கிருமிகள் இன்னும் நம்மில் இருப்பதாலேயே கைபர்போலன் கணவாய் வழியே வந்தவர்கள் , நம்மையே கொலை செய்வேன் என்கிறார்கள். திராவிட தலைவர்களை இழிவுபடுத்துகிறார்கள். பெட்டிபடுக்கைகளை தயார் பண்ணி ஆன்மீக அரசியல் செய்ய தயார் என்றால் சென்றுவிடுங்கள். வெண்ணைக்கு பதில் சுண்ணாம்பு தடவும் தப்பாட்டம் ஆடவேண்டாம். மானமிகு சுயமரியாதைகாரர் தலைவர் கலைஞரின் கடைநிலை தம்பியாய் எச்சரிக்கை செய்கிறோம். திராவிட பயிரில் விசக்கிருமி, பூச்சிமருந்து அடித்தே தீருவோம்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.
சின்னமனூர் புகழேந்தி தனது இன்னொரு பதிவில், ‘தளபதியார் அவர்களுக்கு, ஜீயர்களின் மனதை புண்படுத்திய( அவ்வாறாக சொல்லப்படும்) தமிழன் பிரசன்னாவை கண்டித்தது போல, ஜெகத்ரட்சகனை கண்டிக்க வேண்டும்.
நாட்டின் பொதுப் பிரச்சனையில் தளபதி வீட்டு கிச்சன் கேபினட் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது ஆன்மிக ஸ்லீப்பர் செல் ஜெகத்ரட்சகனின் அறிக்கை. ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தின் முதலாளியாக பொது விவாதத்திற்கு அழைக்காமல் நிழல் பஞ்சாயத்தாக செயல்பட்டதே வைரமுத்து சொன்னதில் எந்த தவறுமில்லை என உணர்த்துகின்றது.
ஜெகத்ரட்சனுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர்ல சீட்டு கொடுத்தால் வெற்றி பெறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம். தலைவரின் நிழலாகவே நின்ற துரைமுருகன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்றதும், பொன்முடி "பிஜேபி தீண்டத்தகாத கட்சி இல்லை’ என்பதும், ஜெகத்ரட்சகன் பஞ்சாயத்து செய்வதும் கொள்கையை உரசி பார்ப்பதாகவே தெரிகின்றது.’ என குறிப்பிட்டிருக்கிறார் சின்னமனூர் புகழேந்தி.
மற்றொரு பேச்சாளரான சேப்பாக்கம் பிரபாகரன், ‘எத்தனை ஜெகத்ரட்சகன் இயக்கத்தில் ? எத்தனையோ துரோகத்தை பார்த்த இயக்கம் திமுக!’ என குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல ஜெகத்தை கண்டித்த பதிவுகள் ஏகமாய் இருக்கின்றன.
அதேசமயம் ஜெகத்தையும், துர்கா ஸ்டாலின் நடவடிக்கையையும் நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருக்கிறார், திமுக இணையதள பிரமுகரான சவுமியன் வைத்தியநாதன். அவர் தனது பதிவில், ‘தலைவர் கலைஞர் செயல்பட முடியாத நிலையில்... ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை பாஜக பல்வேறு இந்துத்துவா சக்திகளின் துணை கொண்டும் ரஜினிகாந்த்தை உள்ளே நுழைத்தும் ஆன்மீக அரசியலை அமல்படுத்துவதன் மூலமும் அதிதீவிரமாக களமிறங்கியிருக்கும் வேளையில்....
வைரமுத்துவின் மூலமாக ஆண்டாள் பிரச்சினை ஒன்று எழுந்து அதை நயவஞ்சகமாக இந்துத்துவா சக்திகள் பயன்படுத்திக் கொண்டு... ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக திமுகவில் இருக்கின்ற ஒரு சில மாற்று மதத்தினரும், திக ஆதரவு நிலப்பாடு கொண்டவர்களும் மிகப்பலமாக களமிறங்க.... அந்த களமாடல் ஒரு கட்டத்தில் வைரமுத்து ஆதரவு நிலையைத் தாண்டி..., ஆண்டாளை கேவலமாக சித்தரிக்கும் நிலைக்கு வந்து நிற்க...
இதை எதிர்பார்த்துக் காத்திருந்த பாஜக மற்றும் இந்துத்துவா வெறியர்கள் ஒட்டுமொத்த திமுகவினரும்.... திமுக தலைமையுமே ஏதோ இந்துக்களுக்கும்... இந்து கடவுள்கள் மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகளுக்குமே எதிரானவர்கள் என்பதான பிம்பத்தை கட்டமைக்க முற்பட்டு.... அதை ஊடகங்கள் மூலமாக அறங்கேற்றிக் கொண்டிருந்த வேளையில்....
கவிஞர் வைரமுத்து எந்த அளவிற்கு தலைவர் கலைஞருக்கு நெருக்கமோ.... அதே அளவுக்கு தலைவரிடம் நெருக்கமாக இருந்த ஜகத்ரட்சகன் மூலமாக ஆண்டாள் நம்பிக்கைக்கு ஆதரவாக வந்திருக்கும் அறிக்கை என்பது.... ஒட்டுமொத்தமாக பாஜகவின் திட்டமான... இந்துக்களை திமுகவுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக மடை மாற்றி அதை ரஜினி மூலமாக பாஜகவுக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கான முட்டுக்கட்டையாகவே தெளிவான அரசியல் ஞானிகள் புரிந்துகொள்வார்கள்..!
ஜகத்ரட்சகனின் அந்த அறிக்கையில் அண்ணியார் துர்காவதி ஸ்டாலின் அவர்களுடையை பெயரையும் சேர்த்து அவர் எழுதியிருப்பதை.... இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் அனைவருக்கும் அந்த அறிக்கையின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருப்பதோடு, பாஜகவின் இந்து மத வாக்குகளை திமுகவுக்கு எதிராக திருப்பிடும் திட்டத்தினையும் மீண்டும் ஒரு முறை முடக்கிப் போட்டிருப்பதாகவே தோன்றுகிறது.
இயல்பாக கடந்து செல்ல வேண்டிய இந்த பிரச்சினையை... இணையத்தில் சிலர் திமுக தலைமை மீது கடும் விமர்சனத்தோடும்... அண்ணியாரின் இறை நம்பிக்கையை ஏதோ திமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கே எதிரானது என்பது போலவும் சித்தரிப்பது இந்துத்துவா வெறியர்களை விட திமுகவை அழித்திடும் செயல்பாட்டாளர்களின் செயலாகவே அவதானிக்க வேண்டியிருக்கிறது.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.... நடக்கவிருப்பதும் நன்றாகவே நடக்கும்...! திமுகழகம் திகவிலிருந்து பிரிந்து வந்து 70 ஆண்டுகள் ஆகின்றது...! அதை ஏன் சிலர் மீண்டும் திகவோடு இணைக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள் என்பது தான் புரியவில்லை. ஆர் எஸ் எஸ் என்றைக்குமே திகவுக்கு பயப்படுவதில்லை... அதன் பயம் எல்லாம் திமுகவின் மீது தான்...! இதை இங்கிருக்கும் சிலர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து திமுக.வின் மேல்மட்டம் வரை இது விவாதம் ஆகியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.