/indian-express-tamil/media/media_files/2025/02/19/U4lSCkeIrh0XYP3iacFr.jpg)
வாக்குகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியின் வித்தியாசம் வெறும் 3.5 சதவீதம் தான், இது இடங்களின் எண்ணிக்கை சுட்டிக் காட்டும் வித்தியாசத்தை விடவும் மிகவும் சிறியதே. (எக்ஸ்பிரஸ் விளக்கப்படம்)
கட்டுரையாளர்: யோகேந்திர யாதவ் YOGENDRA YADAV
"இப்போதாவது மனம் திறந்து பேசுங்களேன்," என்று ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் என்னை கல்யாண மேடையில் கைவிடப்பட்ட மணமக்களைப் போன்ற (கெஜ்ரிவலால் தூக்கி எறியப்பட்ட) முன்னாள் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் கூட்டத்தோடு சேரும்படி என்னைத் தூண்டினார். முன்னாள் ஆம் ஆத்மி தலைவர்கள் சிலரின் வாட்ஸ்அப்பில் பரிமாறத் தொடங்கிய "கசப்பான-இனிப்பு வெற்றி" என்ற செய்திகள், குமார் விஸ்வாஸின் பயமுறுத்தும் வகையில் உள்ள வசைகள் அல்லது ஸ்வாதி மாலிவாலின் குதூகலத்தை விட, ஒரு சிறிய அளவு மென்மையானதே. நான் இந்த மனநிலையில் பங்கு கொள்ள மறுத்த போது, எனது முன்னாள் சகாக்களுடன் மீண்டும் இணைவதற்காக நான் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறேனா என்று மற்றொரு தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆச்சரியப்பட்டார்! "வழியே இல்லை" என்று நான் அவளிடம் கொஞ்சம் கடுப்பான சாயலிலேயே சொன்னேன்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியைக் கொண்டாடும் இதில் என்னால் கலந்து கொள்ள முடியாது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சியில் சர்வாதிகார (ஸ்டாலின் மாதிரியில்) சுத்திகரிப்பு நடவடிக்கையில் எங்களில் சிலருக்கு ஏற்பட்ட அவமானங்களையும் புரளிகளையும் நான் மறந்துவிடவில்லை. எனது தனிப்பட்ட அனுபவத்திற்காக பா.ஜ.க.,வின் இந்த வெற்றியின் முழுப் பரிமாணத்தை மறைக்க என்னால் அனுமதிக்க முடியாது, டெல்லியில் ஆம் ஆத்மியின் தோல்வி என்பது ஒரு சிறிய நிகழ்வு மட்டுமே. இது என்னைப் பற்றியதோ, ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர்களைப் பற்றியதோ மட்டும் அல்ல. இது "ஆம் ஆத்மி" (சாதாரண மக்களைப்) பற்றியது.
இந்த தேர்தல் கடந்த தசாப்தத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் மீது எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பு ஆகும். அதன் தீர்ப்பு மிகத் தெளிவான (திருப்தி)“இல்லை” என்பதே. இந்த நிராகரிப்பின் பலன் பா.ஜ.க.,விற்குத் தான். உண்மையில், மக்கள் வாக்குகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியின் வித்தியாசம் வெறும் 3.5 சதவீதம் தான், இது இடங்களின் எண்ணிக்கை சுட்டிக்காட்டும் வித்தியாசத்தை விடவும் மிகவும் சிறியதே. எந்த சூழ்நிலைகள் இந்தத் தேர்தல் முடிவைத் தலைகீழாக மாற்றியிருக்கக் கூடும் என்பதைக் கற்பனை செய்வது கடினம் அல்ல. பத்திரிகைகளும் ஊடகங்களும் பா.ஜ.க தலைமையை வழக்கமாகக் காப்பாற்றுவது போல, ஆம் ஆத்மி தலைமையையும் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றியிருந்தால். பட்ஜெட்டுக்கு முன்னதாக டெல்லி தேர்தல் நடத்தப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்திருந்தால், அல்லது டெல்லி வாக்காளர்களை குறிவைக்க பட்ஜெட்டை அனுமதிக்க மாட்டோம் என்ற அதன் வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால். ம.பி., மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வதைப் போல டெல்லி அரசு பரிமாற்றம் செய்ய முயன்றதை துணைநிலை ஆளுநர் தடுக்காமல் இருந்திருந்தால். ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி இல்லை என்றாலும் கூட ஒரு தேர்தல் புரிந்துணர்வை ஏற்படுத்தியிருந்தால். இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்திருந்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு 2 சதவீத வாக்குகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும், தலைப்புச் செய்திகளைத் தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கலாம்.
அதே சமயம், வாக்குப் பங்கீடுகளின் ஆய்வு அறிக்கையில் முழுமையாக உள்ளடக்கப்படாத ஒரு “வலுவான அரசுக்கு எதிரான மக்களின் உணர்வு" இருந்ததை மறுக்க முடியாது. பொதுவான வளர்ச்சி, சாலைகள், தூய்மை, சாக்கடைகள் மற்றும் குடிநீர் என மக்களின் பல அடிப்படை தேவைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆளும் கட்சி மீது ஆழ்ந்த ஏமாற்றம் இருந்ததை சி.எஸ்.டி.எஸ்-லோக்நிதி ஆய்வு பதிவு செய்கிறது. மாநில அரசாங்கத்தின் திருப்தி மதிப்பீடு மத்திய அரசை விட மிகவும் குறைவாக இருந்தது மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட புகழ் அவரது கட்சியின் வாக்குகளை விட குறைவாக இருந்தது. அதிர்ச்சியூட்டும் வகையில், ஊழல் எதிர்ப்புக் கொள்கையில் ஆட்சிக்கு வந்த ஒரு கட்சியை, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி அரசாங்கம் "முழுமையாக" அல்லது "ஓரளவாவது" ஊழல் செய்திருக்கிறது என்று நம்பினர். ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்த பல தில்லி வாழ் மக்களுக்கு அது பிடிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. அவர்களுக்கு தேர்வு செய்ய வாய்ப்புகள் இருந்திருந்தால், பா.ஜ.க ஒரு நம்பகமான முதல்வர் வேட்பாளரை நிறுத்தி இருந்திருந்தாலோ அல்லது காங்கிரஸ் ஒரு மாற்றாக தோன்றி இருந்திருந்தாலோ, இந்த வாக்கெடுப்பில் ஆம் ஆத்மிக்கு எதிராக இன்னும் தெளிவான ஊசலாட்டத்தைக் காட்டியிருப்பார்கள்.
, ஆம் ஆத்மி கட்சி ஒரு குட்டு வாங்குவதற்குத் தகுதியானது தான். ஆனாலும் இங்கு கொண்டாட ஒன்றுமில்லை. உண்மையில், அரசியலமைப்பிற்கு உட்பட்ட ஜனநாயகத்திற்காக நிற்கும் எவரும் கவலைப்பட வேண்டும் மற்றும் அதைப் பிரதிபலிக்க வேண்டும்.
நான் கவலைப்படுகிறேன், நான் ஆம் ஆத்மி கட்சியின் மற்றும் அதன் தலைமையின் அபிமானி என்பதால் அல்ல. வெளிப்படையாகச் சொல்வதானால், அரசியலை மாற்றியமைக்க வந்த கட்சி, இன்றைய அரசியல் சதுரங்கத்தில் கடைப்பிடிக்கப்படும் விதிகளை முதல் வருடங்களிலேயே ஏற்றுக்கொண்டது. உச்ச தலைவரை வணங்கும் வழிபாட்டு முறையில், அனைத்து அதிகாரங்களையும் ஒருவரிடம் குவித்தல், அவரது கூட்டாளிகள் அரங்கேற்றிய ரகசிய சூழ்ச்சி விளையாட்டுகள், அவர்களின் ஏளனமான இரட்டைப் பேச்சு மற்றும் ஒரு சாதாரண தொழிலாளியை அவமதிப்பு செய்தல் ஆகியவற்றில், ஆம் ஆத்மி கட்சி மாற்றியமைக்க விரும்பிய, பிரதான மற்ற கட்சிகளிலிருந்து தான் வேறுபட்டதல்ல என்பதை நிரூபித்தது என்று கூறுவது நியாயமானதே. ஒரு விரோதமான ஊடகங்கள் முதல்வரின் "ஷீஷ் மஹாலை" அதிகம் விளம்பரப்படுத்தியது, ஆனாலும் அவ்வாறு செய்ய முடிந்தது, ஏனெனில் இது கட்சித் தலைமையின் காந்தியக் கொள்கைகளுடன் மிகவும் முரண்பட்டது.
மதுபான ஊழலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்றங்கள் தண்டனை வழங்காமல் இருக்கலாம், சட்டப்பூர்வ ஆதாரம் கிடைக்காமலும் போகலாம், ஆனால் இந்த ஊழல் ஒரு கற்பனை இல்லை, மேலும் ஆம் ஆத்மி கட்சியின் (ஊழலுக்கு எதிரான) தார்மீக உயர்ந்த நிலை இதனால் பறி போய்விட்டது. டெல்லி கலவரத்தின் போது ஆம் ஆத்மி அரசு மௌனம் சாதித்தது, புல்டோசர் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ரோஹிங்கியா சிறுபான்மையினரை குறிவைத்த நடவடிக்கைகளில் (நாய் விசில் அடிப்பதில்) சூசகமாக ஈடுபட்டது - இவை அனைத்தும் பா.ஜ.க.,வின் இந்து மதவாதத்தை விட மேலோங்க முயற்சி செய்த அரசியல் திட்டங்களின் செயல்களாகும்.
நான் கவலைப்படுகிறேன், "டெல்லி மாடல்" ஆட்சியை நான் நம்புவதால் அல்ல. ஆம் ஆத்மி அரசாங்கம் பொதுக் கல்வியை அரசியல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததுடன், கல்வியின் தரம் விவாதத்திற்குரியதாக இருந்தாலும், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியது. மொஹல்லா கிளினிக்குகள் (ஆரம்ப சுகாதார நிலையங்கள்) ஒரு நல்ல யோசனையாக இருந்தன, அதைச் செயல்படுத்தியது விரும்பத்தக்கதாக இருந்தது. இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணங்கள் ஏழைகளின் நலனுக்காக முன்னுரிமை அளிக்கும் அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தின, ஆனால் அதே தொகையை ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளில் நீண்டகால கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பயன்படுத்தியிருக்க முடியும். இது தவிர, நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிராமப்புற டில்லியின் நிலை, கழிவு மேலாண்மை மற்றும் காற்று மற்றும் நீர் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதில் தில்லி மாடல் பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. சில அம்சங்களில் ஒரு முன்னேற்றம், தவிர எந்த வகையிலும் ஒரு முன்மாதிரியை உருவாக்கவில்லை.
ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி, நகர-மாநிலத்தின் கொள்கை மற்றும் அரசியலில் இருந்து "அடித்தட்டு மக்களின் (பிரமிட்டின் அடிப்பகுதி)" அரசியல் பிரதிநிதித்துவம் அழிக்கப்படுவதைக் குறிக்கும் என்பதால் நான் கவலைப்படுகிறேன். ஆம் ஆத்மியின் அதிகாரம் ஒரு வரம்புகளுக்கு உட்பட்டு இருந்தபோதிலும், அங்கீகரிக்கப்படாத இருப்பிடங்களில் வாழும் பெரும்பான்மையான டில்லி மக்களுக்கு அது பாதுகாப்பு அளித்தது. ஏழைகள், சமீபத்தில் குடியேறியவர்கள் மற்றும் தலித்துகள் மதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பிரச்சினைகள் கேட்கப்படும் என்றும் உறுதியளித்தது. உலகத் தரம் வாய்ந்த நகரம், அழகிய ஆற்றங்கரை மற்றும் ஏனைய திட்டங்களுடன் பா.ஜ.க வருவது, டெல்லியின் உண்மையான பெரும்பான்மையினர் காணாமல் போய்விட வாய்ப்புள்ளது. கபில் மிஸ்ரா மற்றும் ரவீந்தர் நேகி போன்றோரின் வெற்றி, மதச் சகிப்புத் தன்மையின்மையைப் புனிதமாக்கி, ஏற்கனவே இருந்ததை விட முஸ்லிம்களை மிகவும் பாதிப்படையச் செய்யும்.
எனக்குக் கவலையாக இருக்கிறது, ஏனென்றால் டெல்லியில் பா.ஜ.க.,வுக்கு கிடைத்த வெற்றி, ஒட்டுமொத்த அரசியல் ஆதிக்கத்திற்கான தேடலில் இருக்கும் அக்கட்சியை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது. இந்த எரிச்சலூட்டும், என்றென்றும் சவாலாக இருக்கும் (AAP-யைத்) இவர்களைத் தோற்கடிக்க, அதற்குக் கீழ்ப்படியும் அரசாங்க அமைப்புகளின் ஆதரவுடன் பா.ஜ.க செய்யும் முயற்சியின் தொடக்கமாக இது இருக்கலாம். பா.ஜ.க.,வின் வெற்றியானது, துணைநிலை ஆளுநர் மூலம் மத்திய அரசின் NCT (தேசிய தலைநகர் பிரதேச) அரசாங்கத்தின் செயல்பாட்டில் ஒரு தசாப்த கால சட்ட விரோதமான தலையீட்டை சட்டப்பூர்வமாக்கும். இந்த வெற்றி, தேர்தல் ஆணையத்தின் பாகுபாடான நடத்தையையும், தேர்தலின் போது சமதளம் போன்ற எதுவும் இல்லாததையும் போர்வைக்கு அடியில் தள்ளுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் இந்தப் பரிசோதனை முயற்சியின் தோல்வி இன்னும் சில காலத்திற்கு மாற்று அரசியலுக்கான முயற்சிகளுக்கு கதவுகளை மூடிவிடும் என்பதாலும் நான் கவலைப்படுகிறேன். இந்த நகரத்திலும் நாட்டிலும் உண்மையான மக்களுக்காக, மதச்சார்பற்ற அரசியல் வெளிப்படுவதற்கு ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியைக் குறைப்பது அவசியம் என்று யாராவது வாதிடலாம். உண்மையில், ஆம் ஆத்மி இந்த இடத்தைக் காலி செய்தால், டில்லியில் உள்ள ஓரங்கட்டப்பட்ட ஒரு பரந்த மக்கள் கூட்டம் அது தன்னுடைய அரசியல் தேவையைக் கேட்பதற்கு ஒரு கட்சியைத் தேடும். ஆனால் நிஜ வாழ்க்கையில், இந்த இடத்தை ஒரு மாற்று சக்தி எப்போது அர்த்தத்துடன் ஆக்கிரமிக்கக்கூடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதுவரை நேர்மையான அரசியலுக்கு உத்திரவாதம் அளித்து பொதுவாழ்க்கையில் நுழைய முற்படுபவர்கள் ஒரு நமட்டுச் சிரிப்பையே எதிர் கொள்வர். அதனால்தான் நான் கவலைப்படுகிறேன். நீங்களும் அப்படியே (கவலைப் பட வேண்டும்).
கட்டுரையாளர் ஸ்வராஜ் இந்தியா உறுப்பினராகவும், பாரத் ஜோடோ அபியானின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். கட்டுரை அவரின் சொந்தக் கருத்து.
மொழிபெயர்ப்பு: எம். கோபால்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.