ப.சிதம்பரம்
உலகவர்த்தகப் போர் என்ற வார்த்தையைக் கேட்டாலே, மூன்றாம் உலகப் போர் வரப்போகின்றதா என்ற எண்ணம் வந்துவிடுகின்றது. ஆனால் வர்த்தகப் போர் வந்துவிட்டால், அதற்கு பின்னால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் கொஞ்சம் கணக்கில் கொண்டு இந்தியா செயல்பட வேண்டும்.
உலக வர்த்தகத்தில் ஜாம்பவானாக இருக்கும் அமெரிக்கா, இது நாள் வரை சீராக சென்று கொண்டிருந்த வர்த்தக கப்பலை சாய்த்துவிடும் முயற்சியில் இறங்கிவிட்டது. டொனால்ட் ட்ரெம்ப் ஆட்சிக்கு வந்தபின்பு, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது அதிக வரியை விதித்திருக்கின்றது அமெரிக்க அரசு.
உலக வர்த்தக அரங்கில், விற்பனை மற்றும் வணிகம் என்ற இரு துறைகளிலும் கோலூச்சிய நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் விற்பனை சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விகிதம் முறையே 9.12% மற்றும் 13.88% ஆகும். அதே போல் வணிகம் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விகிதம் முறையே 15.24% மற்றும் 10.27% ஆகும். உலகில் நடைபெறும் வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கு வர்த்தகம் அமெரிக்காவின் கையில் இருக்கின்றது. இந்நிலையில் அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு விதித்திருக்கும் வரி எதிர்பார்க்கப்படாதது மற்றும் திடீரென எடுக்கப்பட்ட முடிவால் அனைத்து நாடுகளும் இழப்பை சந்திக்க நேரிடும்.
இதனால் ஏற்பட இருக்கும் விளைவுகள்
வரி விதிப்பு முறை மிக சமீபத்தில் எடுக்கப்பட்டது தான். அதற்கு முன்பு வரை உலக நாடுகள் மிகவும் குறிப்பிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய மட்டுமே அதிக வரி விதித்தது. காரணம் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது தான். ஆனாலும் பொதுவாக இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது என்பது மிகவும் மோசமான செயல்பாடாகும்.
இந்த வரி விதிப்பு முறை மிக விரைவில் நடைமுறைக்கு வந்தால், இத்தனை வருடங்கள் செய்து வந்த வர்த்தக நடைமுறையில் மிகப் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆனால் டொனால்ட் ட்ரெம்ப் இதைப்பற்றி கூறுகையில் “வர்த்தகப் போர் உலக நாடுகளில் நிலவிவருவது நல்லது. அதனை எளிதாக வென்றுவிடலாம்” என்று ட்விட்டரில் தெரிவித்தார். ஆனால் சீனாவின் பணப்புழக்க மதிப்பு மற்றும் இந்தியா, கனடா போன்ற நாடுகள் முறையே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் பால்பொருட்களுக்கு விதித்திருக்கும் வரி குறித்து அதிகம் கவலை அடைந்தவராக இருக்கின்றார்.
ட்ரெம்ப் சொல்வதைப் போல், வர்த்தகப் போர் அவ்வளவு எளிமையானதாக என்றும் இருந்ததில்லை. இதனால் உலக நாடுகள் அதிக அளவில் பாதிப்படையும். தற்போது நடைபெற்று வரும் இந்த வர்த்தகப் போர் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தக சிக்கல்களினால் உருவானது தான். இக்காரணத்தால், அமெரிக்கா – சீனா , அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் என ஒவ்வொரு நாடுகளும் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிப்பு செய்திருக்கின்றது. இதனால் இந்தியா போன்ற நாடுகளும் மறைமுகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.
வர்த்தகப் போரில் இணையும் இந்தியா

நடக்கும் இந்த வர்த்தகப் போரில் இந்தியாவின் பங்கு பெரும் வியப்பினை அளிக்கின்றது. அமெரிக்கா இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்ததைப் போல், அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்களுக்கு வரியை விதித்திருக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதே அளவில் இருக்கும் பட்சத்தில், இந்த வரி விதிப்பினால் 240 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா அதிகமாக பெறும். இது இந்தியா எடுக்கும் மிகப் பெரிய சவலான காரியம். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் அதிக அளவில் உள்நாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உலக நாடுகளுடன் இந்தியா செய்யும் வர்த்தகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு முக்கியமனாதாக இருந்தாலும், இந்த நான்கு வருடங்களில் அவ்வளவு பெரிய மாற்றங்களை வணிகத்துறை எட்டவில்லை.
யாருக்கு இது அதிக இழப்பினைத் தரும்?
வர்த்தகப் போர் மற்றும் இறக்குமதிப் பொருட்களுக்கான வரி என இரண்டுமே நிறைய நாடுகளுக்கு சரிவினைத்தான் தரும். காரணம், எந்த ஒரு நாட்டாலும் 15% மேல் ஏற்றுமதி செய்யாமல், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது. மேக் இன் இந்தியா – இந்தியாவிற்கான திட்டமாக அல்லாமல் உலகத்திற்கான திட்டமாக இருக்கும் பட்சத்தில் தான் பொருளாதாரம் உயரும். அதில் உருவாக்கப்படும் பொருட்களின் ஏற்றுமதியில் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி இருக்கின்றது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இதன் நிலையும் மிகவும் மோசமாக தான் இருக்கின்றது.
அமெரிக்கா மற்றும் சீனா போன்ற ஜாம்பவான்கள் மத்தியில் இந்தியா வெறும் குழந்தை தான்.இந்தியாவின் விற்பனை சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முறையே 1.65% மற்றும் 2.21% ஆகும். அதே போல் வணிகம் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விகிதம் முறையே 3.35 % மற்றும் 2.83% ஆகும். ஆக வரிவிதிப்பு போன்ற முக்கிய நடவடிக்கைகளை கையாளும் போது பார்த்து தான் செயல்பட வேண்டும்.
இந்தியாவிற்கு நான் தரும் ஆலோசனை என்னவென்றால் “வரி மற்றும் ட்டார்ஃபினை உயர்த்துவதற்கு பதிலாக, அமெரிக்காவுடன் பேசி வர்த்தகத்தை மேம்படுத்துவது நல்லது” என்பது தான்.
தமிழில் : நித்யா பாண்டியன்