ப.சிதம்பரம் பார்வை : நல்ல மருத்துவர் – மோசமான நோயாளி

அக்டோபர் 2014ல், தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டது முதல் அவர் சிறந்த மருத்துவராகவே செயல்பட்டு வருகிறார்.

ப.சிதம்பரம்

காலங்காலமாக, நிதித்துறையில் ஒரு மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நிதித் துறையில் உள்ள பல செயலாளர்களைப் போலவே அதிகாரம் மிக்க ஒரு பதவி, அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர். அவரும் அரசுப் பணியாளர்தான். ஆனால், ஓரளவுக்கு சுதந்திரமாக இயங்கக் கூடியவர். கண்ணியமான மொழியில் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசக்கூடிய சுதந்திரம் அவருக்கு உண்டு. அரசின் முடிவுகள் தவறு என்று இடித்துரைக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிப்பதில் அவருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. அரசுக்கான ஆலோசனைகளையும் அவர் வழங்கலாம். நிதித் துறையில் பணியாற்றும் செயலாளர்களுக்கு இந்த சுதந்திரம் கிடையாது. ஆனால், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறும் ஆலோசனைகளை ஏற்பதும், நிராகரிப்பதும் அரசின் உரிமை.

அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரை, வீட்டிலேயே இருக்கும் மருத்துவரோடு நான் ஒப்பிடுவேன். தினந்தோறும், ஒருவரின் உடலை பரிசோதித்து, தேவையான சிகிச்சைகளை வழங்கி மருந்துகளை பரிந்துரைப்பது போன்றது அவர் வேலை. ஒரு மோசமான நோயாளி மருத்துவர் கூறும் மருந்துகளை உட்கொள்ளமாடடார். அவருக்கான நோயை அவரே ஆராய்வார். அவரே அதற்கான மருந்துகளையும் தேர்ந்தெடுப்பார்.

பொருளாதார ஆய்வறிக்கையும், நிதி நிலை அறிக்கையும்

அக்டோபர் 2014ல், தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டது முதல் அவர் சிறந்த மருத்துவராகவே செயல்பட்டு வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மோசமான நோயாளியாக இருந்து வருகிறது. நல்ல மருத்துவருக்கும், மோசமான நோயாளிக்குமான உறவை, பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கைகளை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்.

1) பொருளாதார ஆய்வறிக்கை நான்கு முக்கிய குறியீடுகளை சுட்டிக்காட்டியது. அங்கீகாரம், தீர்வு, மறுமுதலீடு மற்றும் சீர்திருத்தங்கள். முதல் மூன்றும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஆனால், நான்காவது செய்யப்படவில்லை என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நிதிநிலை அறிக்கை என்பது, சீர்திருத்தங்களுக்கான காலக்கெடுவை நிர்ணயித்து அதற்கான திட்டத்தை உருவாக்கி அறிவித்திருக்க வேண்டிய ஒரு வாய்ப்பு. ஆனால் நடந்தது என்னவோ, எலிசபெத் ராணி காலத்திய ஒரு சொல்லாடல்தான். “எளிதான அணுகுமுறை மற்றும் சிறந்த சேவை” என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வால் நாயை ஆட்டுவிக்கும் ஒரு திட்டம் இது.

2) உறுதியான ஒரு திட்டத்தோடு, முக்கிய பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து அரசு வெளியேறி, அதன் மூலம், தேவையான பொருளாதார நலன்களை அடைய வேண்டும் என்றும், அந்த நிறுவனங்கள் சரியான நபர்களின் கைகளில் சரியாக வழி நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை ஆலோசனை கூறியிருந்தது. மாறாக அரசு, பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து 37,000 கோடியை கேட்டது. இந்த எண்ணை துரப்பண நிறுவனம் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான எச்பிசிஎல் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக, அரசுக்கு இந்த நிதியை அளித்தது. இந்த நடவடிக்கையால் அரசின் நிதிப் பற்றாக்குறை 0.2 சதவிகிதம் குறைந்தது. இது சரியான நடவடிக்கை அல்ல.

3) பொருளாதார ஆய்வறிக்கை, ஒரு நல்ல மருத்துவரைப் போல, ஏற்றுமதிகளை அதிகரிக்க நல்ல ஆலோசனைகளை பரிந்துரைத்திருந்தது. ஆனால், மோசமான நோயாளியான இந்த அரசு, அந்த பரிந்துரைகளை ஒரே வாக்கியத்தில் நிராகரித்தது. இதற்கு அரசு அளித்த பதில் “இந்தியாவின் ஏற்றுமதி 2017-18 நிதியாண்டில் 15 சதவிகிதம் வளரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது” என்பதே அது. சமீபத்தில், ஏற்றுமதி விகிதத்தில் ஏற்பட்ட லேசான முன்னேற்றம், அரசின் இந்த மெத்தனப் போக்குக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அரசு மெத்தனமாக இருப்பதற்கு எந்த காரணிகளும் இல்லை. பொருட்களின் ஏற்றுமதி சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அளவுக்கு இன்று வரை உயரவே இல்லை. மேலும் நிதியமைச்சர் தவறான தகவலை அளித்தார். ஏற்றுமதி வளர்ச்சி ஏப்ரல் – டிசம்பர் 2017 காலகட்டத்தில், 11.24 சதவிகிதமாகத்தான் இருந்தது. நிதியமைச்சர் கூறியபடி 15 சதவிகிதம் அல்ல.

வரி வருவாய் மதிப்பீடுகள்.

வரி வருவாய் மதிப்பீடுகள் குறித்து பேசிய பொருளாதார ஆய்வறிக்கை, “மத்திய அரசின் வரி மற்றும் ஜிடிபி விகிதம், 1980களில் இருந்த அளவை விட குறைவாகவே உள்ளது” என்று கூறியதோடு, பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு, வரி வருவாய் எப்படி இருக்கப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்டிருந்தது. தற்போது உள்ள கணக்கீடுகளின்படி, வரி வருவாய் மற்றும் ஜிடிபியின் விகிதம் 2017-18ல், 11.6 சதவிகிதமாக உள்ளது. ஆனால் அரசோ, 2018-19ல், வருமான வரி 19.9 சதவிகிதமாக உயரும் என்றும், ஜிஎஸ்டி வருவாய் 67 சதவிகிதம் வளரும் என்றும், மொத்த வரி வருவாய் 16.7 சதவிகிதம் உயரும் என்றும் ஆருடம் கூறுகிறது. மருத்துவரின் ஆலோசனைகள் குறித்து எந்த கவலையும் படாமல், ஒரு மோசமான நோயாளி, எழுதி வைத்த உயிலைப் போல இருக்கிறது அரசின் எதிர்ப்பார்ப்புகள்.

5) வளர்ச்சிக்கு எதிரான காரணிகளை பொருளாதார ஆய்வறிக்கை பட்டியலிடுகிறது. உலகமயமாக்கலுக்கு எதிரான அலை, குறைந்த உற்பத்தியிலிருந்து உயர் உற்பத்திக்கு ஆதாரங்களை மாற்றுவதில் உள்ள சிக்கல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு, மனித வள மேம்பாட்டில் மாறுதல்கள், பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்ற காரணங்களை பொருளாதார ஆய்வறிக்கை பட்டியலிடுகிறது. நாம் வாழும் பூமியை மறந்த இந்த அரசு, “விண்வெளி மற்றும் கணினி தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை அதிகரிப்பதோடு, பொருளாதாரத்தையும், நம் வாழ்க்கை முறையையுமே மாற்ற வல்லது. ரோபோடிக்ஸ், செயற்கை அறிவு, டிஜிட்டல் உற்பத்தி, புள்ளி விபரங்களை ஆய்வு செய்தால், தகவல் தொடர்புத் துறை மற்றும் இணையம் போன்றவற்றில் முதலீடு செய்வது கணினித் துறையில் நமது முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு, அறிவு சார் மையங்கள் உருவாகுவதற்கும் உதவியாக இருக்கும். நிதியமைச்சர், அவரது விண்வெளி சஞ்சாரத்திலிருந்து இறங்கி வந்து, பூமியில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

6) தனியார் முதலீடுகள், கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிவில் உள்ளன. 2000ம் ஆண்டுகளில், சேமிப்புகளும், முதலீடுகளுமே, பொருளாதாரத்தை முன்னேற்றிய இரட்டை என்ஜின்களாக செயல்பட்டன. தற்போது உள்ள மந்த நிலையை சுட்டிக்காட்டிய பொருளாதார ஆய்வறிக்கை, அரசு உடனடியாக தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், இந்த கவலையளிக்கும் நிலை குறித்து ஒரு வார்த்தை கூட நிதியமைச்சர் பேசவில்லை.

7) நாட்டில் போட்டித் தன்மையை உருவாக்கவும், ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும், சுகாதாரம் மற்றும் கல்வியில் அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என்பதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது. இது குறித்து நிதியமைச்சர் விரிவாக பேசினார். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கீடு என்று வருகையில் அவர் இதைத்தான் செய்துள்ளார்.

Across - PC
ஆனால் அரசு தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் மறுத்து வருகிறது. பொருளாதாரத்தில் உள்ள தேக்க நிலையை ஒப்புக் கொள்ளக் கூட மறுக்கிறது. விவசாயிகளின் நெருக்கடியை கண்டு கொள்வதில்லை. வேலையில்லா பிரச்சினை பற்றி பேசுவதில்லை. எதிர்க்கட்சிகளின் வாதத்தை ஏற்க மறுக்கிறது. தற்போது இந்த அரசு 2014ம் ஆண்டு நியமித்த மருத்துவரின் பரிந்துரைகளையும், மருந்துகளையும் கூட ஏற்க மறுக்கிறது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 04.02.18 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : ஆ.சங்கர்

×Close
×Close