scorecardresearch

ப. சிதம்பரம் பார்வை : புதிய சிந்தனை பிறக்கும்.

உண்மைகள் மங்கத் தொடங்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். ஏராளமான மக்கள் தத்துவங்கள் இறந்து விட்டன என்று நம்பத் தொடங்கி விட்டார்கள்.

ப. சிதம்பரம் பார்வை : புதிய சிந்தனை பிறக்கும்.

ப.சிதம்பரம்

சமீப காலமாக தோல்வியை ஒப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கிறேன். 26 ஜுலை, 2017, புதன் அன்று, தன் வாளை தூக்கியறிந்து விட்டு, ஆறாவது முறையாக மீண்டும் தன்னை முதல்வராக நியமித்துக் கொண்டார் நிதிஷ் குமார். பீகாரின் வறுமை, வேலையின்மை, பிரிவினை இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில், ஒரு நபர் முதல் பதவியை எப்படியாவது வெல்வது, தன்னுடைய நம்பகத்தன்மை மற்றும் சுயமரியாதையை விட முக்கியமானது என்று நினைக்கிறார் என்று எண்ணுகையில் வியப்பாக இருந்தது.

மோடி-ஷா வின் பயணம் நிறுத்த முடியாதது என்பது உரக்க பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டவர்கள் தப்பித்து விடுவார்கள். மற்றவர்கள் கருணையில்லாமல் நசுக்கப்படுவார்கள் என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்படுகிறது. ஜுலை 26 முதல் குஜராத்தின் 26 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சரணடைந்தோம் என்று கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார்கள் (நேரடியாகவும், மறைமுகமாகவும்). ஊடகத்தின் பல்வேறு பகுதிகள் ஆளுங் கட்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஊடகத்துறையின் ஆசிரியர் குழுவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கல்விக் கூடங்கள் ஆக்ரமிக்கப்படுகின்றன. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒரு ஆர்மி டாங்கியை நிறுத்துமாறு கோரிக்கை விடுகிறார். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டது போல, ஐதராபாத்தும், ஜாதவ்பூரும் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அறைகூவல் விடுகிறார்.

உண்மைகள் மங்கத் தொடங்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். ஏராளமான மக்கள் தத்துவங்கள் இறந்து விட்டன என்று நம்பத் தொடங்கி விட்டார்கள். பலர், இதில் ‘எனக்கு என்ன ஆதாயம் ?’ என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். தற்போது நிலவும், அதி தீவிர தேசியவாதம் மற்றும் உண்மையான ஒரே தேச பக்தி என்பதை நீங்கள் நம்பத் தொடங்கினால் உங்களுக்கு ஏராளமான பலன் காத்திருக்கிறது. இந்தியாவின் முக்கிய அமைப்புகளை கைப்பற்றும் பணி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அது உண்மையான தேச பக்தர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கக் கூடும்.

அவர்கள் மதச்சார்பின்மை இறந்த விட்டது என்றே நம்புகிறார்கள். மதமும் அரசாங்கமும் இனியும் தனித்தனியாக இருக்காது. சர்தார் சரோவர் அணையின் உயரம் 138.72 மீட்டர்களாக உயர்த்தப்பட்ட பிறகு மீண்டும் அணையின் உயரத்தை அதிகரிக்கும் பணி, நாடெங்கும் உள்ள 2,000 பூசாரிகளால் தொடங்கி வைக்கப்படுகிறது.

சுதந்திர சிந்தனை இறந்து விட்டது என்றே அவர்கள் நம்புகிறார்கள். தீனா நாத் பத்ரா மற்றும் பஹ்லஜ் நிகலானி போன்றோர்தான், எது சரியான சிந்தனை, எது சரியான கலாச்சாரம், எது சரியான நடத்தை என்பதை தீர்மானிப்பார்கள். அவர்களின் ஒப்புதலுக்கு உட்படாத எதுவும் தவறென்னு முத்திரை குத்தப்பட்டு தடை செய்யப்படும்.

சுதந்திரம் இறந்து விட்டது என்றே நம்புகிறார்கள். அவர்கள் நம்பும் ஒரே சுதந்திரம் பின்வரும் வாக்கியத்தால் விளக்கப்படுகிறது. “நமக்கு அவசியமான ஒரே சுதந்திரம் அரசின் சுதந்திரம் மற்றும் அந்த அரசில் இருக்கும் தனி நபரின் சுதந்திரம்”. இந்த வாக்கியத்தை கூறியவர் முஸ்ஸோலினி என்பது கூடுதல் தகவல்.

சமத்துவம் இறந்து விட்டது என்றே கருதுகிறார்கள். இந்தியாவில் மதங்கள், சாதிகள் வருணங்களுக்கிடையே என்றும் சமத்துவம் இருந்தது இல்லை. வேத காலத்துக்கு பிறகு, மனு இயற்றிய சட்டங்களுக்கு பிறகு, வர்ணசாஸ்திரமே சட்டமாக இருந்தது. சமத்துவம் இல்லாமல்தான் இந்தியா வளர்ந்தது. ஆகையால் சமத்துவத்துவம் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் எந்த பங்கையும் வகிக்காதவர்கள் சமத்துவம் ஒரு தேசிய கொள்கை என்பதை என்றுமே ஒப்புக் கொண்டதில்லை. ஆகையால், சமத்துவமில்லாத உரிமைகள், சமத்துவம் இல்லாத சலுகைகள் ஆகியவற்றுக்காக கோரிக்கை வைப்பது, குறிப்பாக நீங்கள் பிஜேபி மாணவர் அணியைச் சேர்ந்தவர்களாகவோ, பசு பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களாகவோ, டெல்லியின் விவேகானந்தர் சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களாகவோ இருந்தால், அது நியாயமான கோரிக்கையே.

சகோதரத்துவம் இறந்து விட்டது என்றே நம்புகிறார்கள். ஒரு இஸ்லாமியருக்கோ, கிறித்துவருக்கோ, தனியாக வாழும் ஒரு பெண்ணுக்கோ, அசைவம் உண்பவருக்கோ, வீடு கிடையாது என்று சொல்வதில் தவறேதும் இல்லை. வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பெங்காலியா அல்லது பெங்காலி அல்லாதவரா என்று பாரபட்சம் பார்ப்பதில் தவறில்லை. பெங்காலி வேலையாட்கள் குடியிருக்கும் பகுதிகளை இடித்துத் தள்ளுவதில் தவறில்லை. அவர்கள் அனைவரும் பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள்தானே.

ஆங்கிலம் விரைவில் இறந்து விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அலுவல் மொழிக்கான பாராளுமன்ற குழு, விரைவில் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை செயல்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்து விரைவில் பரிந்துரை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படும்.

மாற்றுக் கருத்து

நான் இந்த கருத்துக்களோடு முரண்படுகிறேன். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இறந்து விட்டது என்றோ, இறக்கப் போகிறது என்றோ நாம் நம்ப மறுக்கிறேன். இந்த விழுமியங்கள் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாகும். அவை மரணிக்க மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். இந்திய மக்கள், மதச்சார்பின்மையை கைவிட்டு, முழுமையாக இந்துத்துவாவுக்கு மாறி விடுவார்கள் என்பதையும் நான் நம்பவில்லை. மதச்சார்பின்மை இந்துத்துவாவுக்கு நேரெதிரானது என்பது மக்களுக்கு தெரியும். இந்துத்துவா வெற்றி பெற்றால், உயர்சாதியினம் மீண்டும், பிற்படுத்தப்பட்ட தலித் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

தத்துவங்கள் காலாவதியான காலத்துக்கு பின்னால் நான் வாழ்வதாக கருதவில்லை. தத்துவங்களை, முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் இனி அடைக்க முடியாது. மக்களின் விருப்பம் மற்றும் மாறி வரும் சூழல்களை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கட்சியும் அதற்கான பாதையை வகுக்க வேண்டும். இந்துத்துவா ஒரு தத்துவம் இல்லையா ? மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் தத்துவங்களுக்கு மாற்றாக சாவர்க்கர், கோல்வால்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் தத்துவங்களை பிஜேபி முன்னிறுத்தவில்லையா ? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தியா என்ற சிந்தனையை அழித்து விட முடியும் என்று நான் நம்பவில்லை. இந்தியாவில் லியு சியாபோஸ் போன்றவர்கள் இல்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவின் படிப்பாளிகள் மற்றும் ஊடக ஆசிரியர்களின் மனசாட்சி எப்போதும் முடங்கியிருக்கும் என்றும் நான் நம்பவில்லை. 87 அறிவு ஜீவிகள் (13, ஜுலை 2017), 114 முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கைகள் எனக்கு நம்பிக்கையூட்டுகின்றன.

பெரும்பான்மை ஆதிக்கத்துக்கும், இந்துத்துவாவுக்கும் எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு வலுவான மாற்று சிந்தனையை முன்வைக்க தவறி விட்டன என்பது உண்மையே. இதற்கு அவர்களைத்தான் குறை சொல்ல வேண்டும். ஆனால், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர் படும் துன்பங்களும், போராட்டங்களும் நிச்சயமாக ஒரு மாற்று சிந்தனையை உருவாக்கவே செய்யும்.

(முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு 6.8.17 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். https://indianexpress.com/article/opinion/columns/across-the-aisle-nitish-kumar-bihar-gujarat-mla-rajya-sabha-election-chidambaram-post-truth-world-4784142/)

தமிழாக்கம் : ஆ.சங்கர்

 

 

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Across the aisle a counter narrative will emerge