ப.சிதம்பரம்
14 மார்ச் 2018, புதன் கிழமை அன்று தொடர்பில்லாத இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தில் மானியங்களுக்கான விவாதங்கள் நெறிக்கப்பட்டது. எவ்வித விவாதமும் இல்லாமலேயே, மக்களவை 2018 பணப் பட்டியலை எவ்வித விவாதமும் இல்லாமல் நிறைவு செய்தது. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், மக்கள் உறுதியாக வாக்களித்து, பிஜேபி வேட்பாளர்களை தோற்கடித்தனர். அதிகாரத்தை வைத்துள்ள ஒரு கட்சியின் ஆணவத்தை
முதல் சம்பவம் உணர்த்துகிறது என்றால், மக்களின் அதிகாரம் என்ன என்பதை இரண்டாவது சம்பவம் உணர்த்துகிறது.
எந்த தனி நபரோ, அல்லது அமைப்பையோ விட, அரசின் ஆணவத்தையும், கையாலாகத்தனத்தையும், பொய்களையும், கட்டுக் கதைகளையும் சுட்டிக்காட்டுவதில் மக்களே முன்னணியில் இருந்து வருகிறார்கள் என்ற விபரம் எனக்கு மகிழ்ச்சியை
அளிக்கிறது. மகாராஷ்டிரா முதல் குஜராத் வரை, ராஜஸ்தான் முதல் உத்தரப்பிரதேசம், பீகார் வரை, புயல் உருவாகிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. ஊரக இந்தியா கடும் நெருக்கடியில் இருக்கிறது. நகர்ப்புரமோ, ஏழை, நடுத்தர மக்கள் மற்றும்
ஆட்சியாளர்களுக்கு பல்லக்கு தூக்குபவர்களுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
கடும் நெருக்கடியில் விவசாயம்.
ஊரக இந்தியாவிலிருந்தே தொடங்குவோம். ஜிடிபியில் 16 சதவிகிதமாக உள்ள விவசாயத்தை நம்பியே, 60 சதவிகித மக்கள் தொகை இன்னும் இருக்கிறது. சிறு விவசாயிகள், நிலமில்லாத தினக் கூலிகள், விவசாயம் சார்ந்த சிறு தொழில்கள், விவசாய சந்தைகள், சிறு கடைகள், சிறு சேவைகளை வழங்குவோர் இவர்கள் அனைவரும் இதில் அடக்கம். அவர்கள்தான் ஏழைகள். அவர்களின் வறுமை, அவர்கள் பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்று அனைத்திலும் அதன் தாக்கத்தை காட்டுகிறது. விவசாயம் பாதிக்கப்பட்டால், சமுதாயத்தில் 60 சதவிகித மக்கள் தொகை பாதிக்கப்படுகிறது. விவசாயம் நெருக்கடிக்கு உள்ளாகும்போது, விவசாயத்தை சாராதவர்களின் பொருளாதாரமும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. அவர்களின் வருமானமும் குறைகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக பிஜேபி அரசாங்கத்தின் சாதனைகள் என்ன? 2017-18ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை “ விவசாயத்துக்கான ஜிடிபி மற்றும் உண்மையான விவசாய வருமானம், மாற்றமில்லாமல் நிலையாக இருக்கிறது” என்று
கூறுகிறது. இந்தக் கூற்று ஒன்றே, நான்கு ஆண்டுகளின் இறுதியில் பிஜேபி அரசு என்ன செய்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
இது ஏன் இப்படி நடந்தது? கடந்த நான்கு ஆண்டுகளாக, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச விலையை, பிஜேபி அரசு எந்த அளவுக்கு குறைவாக உயர்த்த முடியுமோ, அந்த அளவுக்கு குறைவாகவே உயர்த்தியது. விவசாயத்தில் உருவாக வேண்டிய முதலீடு 2013-14ம் ஆண்டில் ஜிடிபியில் 2.9 சதவிகிதத்தில் இருந்து, 2016-17ல் 2.9ஆக வீழ்ந்தது. 2016-17ல், பருவ மழை சிறப்பாகவே இருந்தது. மகிழ்ச்சியோடு விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்ற சமயத்தில்தான், பண மதிப்பிழப்பு என்ற நடவடிக்கை, அவர்கள் தலையில் இடியாக இறங்கியது. விவசாய பொருட்களுக்கான விலைகள் வீழ்ந்தன. விவசாய பணிகள் இல்லாத காரணத்தால், விவசாயம் அல்லாத பணிகளைத் தேடும் இளைஞர்களின் கனவை, பிழையான ஜிஎஸ்டி நொறுக்கியது. லட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில்த் துறை வேலை வாய்ப்புகள் ஒரே நாளில் மாயமாகின.
கடும் வெயிலில், சிரமத்தை பொருட்படுத்தாமல், 30 ஆயிரம் விவசாயிகள் 170 கிலோ மீட்டர்கள் நடந்து மும்பையை அடைந்தது எதற்காக? அவர்களின் கோரிக்கை அசாதாரணமானதோ, நியாயமற்றதோ அல்ல. விவசாயக் கடன் தள்ளுபடி, நியாயமான
விலைகள், சம்மதமின்றி நிலத்தை கையகப்படுத்தக் கூடாது, கோவில் நிலங்கள் மற்றும், உரிமையல்லாத நிலங்களை அதில் விவசாயம் செய்து கொண்டிருப்பவர்களுக்கே வழங்க வேண்டும், ஏழை விவசாயிகளுக்கு ஓய்வூதியம், பூச்சி தாக்குதல் மற்றும் இயற்கை பேரழிவிகளுக்கு இழப்பீடு, வன நிலத்துக்கான உரிமை போன்றவையே இவர்கள் கோரிக்கை. பாராளுமன்றமோ, சட்டப்பேரவைகளோ இந்த விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க தயாராக இல்லை. வரும் காலங்களில் விவசாயிகளின் போராட்டங்கள், ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் வலுப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இடைத் தேர்தல் ஆச்சர்யம்
கோரக்பூர் மற்றும் ஃபுல்பூர். புல்பூர் ஊரகப் பகுதி. கோரக்பூர் நகர்ப்புற பகுதி. கோரக்பூர் என்ற பகுதி, அதிகார மையமாகவே திகழ்ந்தது. அடாவடிகளில் ஈடுபடும் இந்து யுவ வாகினி என்ற அமைப்பு இந்த நகரத்தில்தான் உருவானது. பிஜேபி அரசின்
ஆட்சியின் கீழ், ஒரு மதத்துக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாகவே அறிவித்து செயல்படுத்துகிறார்கள். குற்றவாளிகளை சட்ட விரோத போலி என்கவுன்டர்களில் கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. ஒரு வருடத்தில் புதிய வேலை
வாய்ப்புகளை உருவாக்குவதில் எந்த முயற்சியையும் பிஜேபி அரசு எடுக்கவில்லை. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் வேலை வாய்ப்பற்றோர் அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தின் அராரியா மற்றொரு வகையில் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஊழல் எதிர்ப்புப் போராளி என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தங்களின் செயலற்ற தன்மை, சந்தர்ப்பவாதம், வாக்குறுதிகளை நிறைவேற்றாமை மற்றும் இரட்டை வளர்ச்சி
என்ற பொய்களை மக்கள் கண்டு கொண்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.
எவ்வித விவாதமும் இல்லாமல் பாராளுமன்றத்தில் பண மசோதா நிறைவேற்றப்பட்டதே ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப் பெரிய அடியாகும். பாராளுமன்றத்தில் நியாயமான முறையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மசோதாக்களை நிறைவேற்றுவது
அரசின் கடமை. ஆனால் மக்களவையில் உள்ள பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில், இந்த பொறுப்பை உதாசீனப்படுத்டித விட்டு, எதிர்க்கட்சிகளை ஏளனத்தோடு பார்க்கும் தன்மையை பிஜேபி கடைபிடித்து வருகிறது. மாநிலங்களவையில் மட்டும்தான், அரசு எதிர்க்கட்சிகளுக்கு ஓரளவு மரியாதை வழங்கி வருகிறது. ஆனால், பண மசோதாக்களைப் பொறுத்தவரை, மாநிலங்களவையால் எதுவுமே செய்ய முடியாது.
மக்களின் விழிப்பு
மக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். நல்ல தினங்கள் வந்து விட்டன என்ற வாக்குறுதியை இனியும் யாரும் நம்பத் தயாராக இல்லை. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, இரட்டை இலக்க
வளர்ச்சி, காஷ்மீருக்கு நிரந்தர தீர்வு, பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி என்ற அனைத்து வாக்குறுதிகளும் போலியானவை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.
தற்போது உள்ள அரசியல் சூழலில், எந்த ஒரே ஒரு அரசியல் கட்சியாலும் பிஜேபியை வீழ்த்த முடியாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால் பிஜேபியை எந்த வேட்பாளரால் வீழ்த்த முடியுமோ அந்த வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்கள். வலுவான
ஒரு மாற்று சக்தியை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். கடன் தள்ளுபடி, விவசாய பொருட்களுக்கு உரிய விலை, விவசாயக் கடன்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ஊக்கம், நிலையான தொழில் தொடங்கும் சூழல், புதிய வேலை வாய்ப்புகள், ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு மாற்றுத் திட்டத்தை உருவாக்கினால் மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள். சராசரி வாக்காளன் நமக்கு உரத்த குரலில் ஒரு செய்தியை உணர்த்தியுள்ளான். அந்த செய்தியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழில் ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.