ப.சிதம்பரம்
2008ம் ஆண்டில் ஜுலை மாதத்தில் அந்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அன்றுதான் கச்சா எண்ணையின் சர்வதேச விலை, ஒரு பேரல் 147 டாலர்களை தொட்டது. சவுதியின் அரசர் உடனடியாக கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளையும், அதை பயன்படுத்தும் நாடுகளையும் ஒரு கலந்தாய்வு கூட்டத்துக்காக அழைததார். இந்தியாவின் சார்பாக நானும், அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவும் சென்றோம். அதிக விலைக்கு ஒரு உச்சவரம்பை நிர்ணயித்து, அந்த உச்சவரம்பை கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் தாண்டக் கூடாது என்றும், குறைந்தபட்ச விலை ஒன்றை நிர்ணயித்து, எண்ணை பயன்படுத்தும் நாடுகள் அந்த விலையை குறைக்கக் கூடாது என்றும் பேசி முடிவெடுத்தோம். இது இரு தரப்பும் அளித்துக் கொள்ளும் ஒரு வாக்குறுதி. ஆனால் இந்த முடிவில் ஒற்றுமை ஏற்படவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவியில் இருந்தவரை (2004-2014) சில குறுகிய காலத்தை தவிர்த்தால், கச்சா எண்ணையின் விலை மிக அதிகமாகவே இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசலின் மீது வரி விதிப்பது என்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில் அரசுக்கு வருவாய் வேண்டும். மேலும், இதன் பயன்பாட்டை குறைக்கவும் வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மண்ணென்ணை போன்றவற்றின் விலையை குறைப்பதும் அவசியம். ஏனெனில் இந்த விலை உயர்வின் தாக்கத்தை ஏழைகள் மீது சுமத்தாமல் இருக்க வேண்டும். இது போன்ற ஒரு சமன்படுத்தும் நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும். ஆனால் எப்போதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்கிறதோ, அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள், குறிப்பாக பிஜேபி, காங்கிரஸ் கட்சியை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கும்.
கச்சா எண்ணை விலை குறைவு
2014 முதலாக, கச்சா எண்ணையின் உலகம் தலைகீழானது. எண்ணைக்கான தேவை குறையத் தொடங்கியது. ஷேல் எண்ணை போன்ற மற்ற விலை குறைந்த எரிபொருட்களை உலக நாடுகள் நாடத் தொடங்கின. கச்சா எண்ணையின் விலை கடுமையாக சரிந்தது. ரஷ்யாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டது. சவுதி அரேபியா, தன் குடிமக்கள் மீது வருமான வரியை விதித்தது. வெனிசூலா திவாலானது. எண்ணை பயன்படுத்தும் நாடுகளுக்கு இது பெரிய அளவில் பயனளித்தது.
ஆனால் இந்தியா இதற்கு விதிவிலக்கு. இந்தியாவுக்கும் கச்சா எண்ணை விலை குறைவு பலனளித்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை நுகர்வோர் அதிக விலை கொடுத்தே பெட்ரோல் டீசலை வாங்கி வருகின்றனர்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு குறைந்து விட்டதா என்றால் இல்லை. மே 2014ல் வசூலித்த வரியை விட இரண்டு மடங்கு தற்போது மத்திய அரசு வசூலித்து வருகிறது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு 21.48 ரூபாய்களை வரியாக வசூலிக்கிறது. இது மே 2014ல் ரூபாய் 9.48. டீசல் மீது மத்திய அரசு வசூலிக்கும் தற்போதைய வரி, ரூபாய் 17.33. இது மே 2014ல் வெறும் 3.56ஆக இருந்தது. கடந்த மூன்றாண்டுகளில் 17 சதவிகிதம் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக இதிலிருந்து செய்யப்படும் வரி வசூலும் அதிகரித்துள்ளது.
எளிதான வருவாய்
இதிலிருந்து வசூலிக்கப்படும் வரி எளிதாக வசூலாகும் வரி. இது போன்ற எளிதான வரி வருவாய் மேலும் தொடர்ந்து வசூல் செய்ய ஊக்கமாக அமையும். பெட்ரோல் மற்றும் டீசலின் மீதான கலால் வரி, மே 2014 முதல் அரசாங்கத்தால் 11 முறை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டில் மட்டும் மத்திய அரசு 2016-17 நிதியாண்டில் 3,27,550 கோடி வசூல் செய்துள்ளது.
மே 2014 முதல், கச்சா எண்ணையின் விலை 49 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. கச்சா எண்ணை விலை குறைந்ததை கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு வரியை உயர்த்தாமல் இருந்தால், பெட்ரோலின் விலை 19 சதவிகிதம் குறைந்திருக்கும். டீசலின் விலை 21 சதவிகிதம் குறைந்திருக்கும். ஆனால் அப்படி குறைக்கப்படாமல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
நாம் இப்படிப்பட்ட ஒரு சிக்கலான நிலையில் இருக்க காரணம், வரியை வாங்கி செலவு செய் என்ற முறையை கடைபிடிக்கும் ஒரு பேராசை பிடித்த அரசால். அரசு தன் செலவுகளை அதிகரித்தால்தான், பொருளாதாரம் வளரும் (கடந்த வார கட்டுரை பார்க்க) என்ற ஒரே அடிப்படையில் அரசு செலவு செய்து கொண்டு உள்ளது.
மத்திய அரசை பொறுத்தவரை, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கூடுதல் பணத்தை செலவழிக்கத்தான் வேண்டும் ஏனென்றால், புதிய சுற்றுலாத் துறை அமைச்சரின் வார்த்தையில், “அவர்கள் பசியால் வாடவில்லை”.
பொருளாதார அளவுகோல்களின்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்தால் அது அரசுக்குத்தான் பலனளிக்கும். மண்ணென்ணை மற்றும் சமையல் எரிவாயுவுக்காக வழங்கப்படும் மானியத்தின் அளவு குறையும். ரயில்வோ பாதுகாப்புத் துறை போன்ற துறைகள், குறைந்த அளவே எரிபொருளின் மீது செலவு செய்யும்.
நுகர்வோருக்கு எதிரான போக்கு
அரசாங்கத்தின் அடாவடியாக வரி விதிக்கும் போக்கினால் உலகச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்தது எந்த தாக்கத்தையும் இந்திய பொருளாதாரத்திலோ, பணவீக்கத்திலோ ஏற்படுத்தவில்லை. போக்குவரத்து செலவு இன்றும் அதிகமாகவே உள்ளது. சேவைகள் மற்றும் இதர விவகாரங்களில் செலவு செய்யும் நுகர்வோரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. 2017-18 முதல் காலாண்டில், நுகர்வோர் செலவு வெறும் 6.66 சதவகிதம் மட்டுமே அதிகரித்தள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களோடு ஒப்பிடுகையில் இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குபவர்களின் போட்டியிடும் தன்மை மிகவும் குறைந்துள்ளது.
மேலும் வரி வருவாய்க்காக ஒரே பொருளின்மீது சார்ந்திருப்பதும் நல்லது அல்ல. ஒரு வேளை கச்சா எண்ணையின் விலை கடுமையாக உயர்ந்தால், அரசு இந்த வரி வருவாயை இழக்க வேண்டியிருக்கும். அல்லது மக்களின் மீது கடும் சுமையை சுமத்த வேண்டியிருக்கும். எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், மே 2014 அன்று இருந்த அதே விலையில் பெட்ரோல் டீசல் விலைகளை வைத்திருப்பது என்பது, நுகர்வோருக்கு எதிரானது, போட்டித் தன்மைக்கு எதிரானது, பொருளாதார நலன்களுக்கு எதிரானது.
மக்களிடையே வெறுப்பும் எரிச்சலும் வளர்ந்து வருகின்றன. நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, டாக்டர் மன்மோகன் சிங், “ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்ளை. சட்டபூவர்மான கொள்ளை” என்றார். என்னுடைய பார்வையில், இந்த வார்த்தைகள், அரசின் பெட்ரோல், டிசல் விலை கொள்கைக்கு சிறப்பாக பொருந்துகிறது.
(முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியன் எக்ஸ்பிரஸில் 24.09.17 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)
தமிழில் : ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.