ப.சிதம்பரம் பார்வை : கொண்டாடப்படும் கடவுள்களும், புறக்கணிக்கப்படும் குழந்தைகளும்.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கும், ஒரு சிறந்த நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் வகையில் குழந்தைகள் உருவாகாமல் போனால், நாட்டை வல்லரசாக்க முடியாது.

ப.சிதம்பரம்

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கும், ஒரு சிறந்த நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் வகையில் குழந்தைகள் உருவாகாமல் போனால், உலகில் இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை வைத்திருப்பதும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதும், விண்வெளியில் செயற்கைக் கோள் ஏவுவதும், நமது நாட்டை வல்லரசாகவோ, சிறந்த நாடாகவோ உருவாக்காது.
16 மார்ச் 2017ல், கொண்டாடப்படும் கடவுள்களும் புறக்கணிக்கப்படும் குழந்தைகளும் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்த கட்டுரையில், “குழந்தைகள் நலன், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத மனித வள மேம்பாட்டை செய்து கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தேன். குழந்தைகளின் நலன் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக, 2015-16ம் ஆண்டின் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் அடிப்படையில் அவ்வாறு கூறியிருந்தேன். குழந்தைகளின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சியும் விடுபட்டுப் போயுள்ளது என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மற்றொரு அறிக்கை வெளியிடப்படுகிறது. அது வருடந்தோறும் வெளியிடப்படும் கல்வி அறிக்கை. 2017ம் ஆண்டுக்கான அறிக்கை 16, ஜனவரி 2018ல் வெளியிடப்பட்டது. அதில் ஊரகக் கல்வி குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதிர வைக்கும் உண்மைகள்

கல்வி அறிக்கையில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் கல்வி அறிக்கை, கடந்த 12 ஆண்டுகளாக, ஆரம்பப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு, கணிதம் மற்றும் அடிப்படைத் திறன்களை வளர்க்க வேண்டும் என்று அவ்வறிக்கை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. எண்ணிக்கையைத் தவிர இந்த விபரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அடிப்படை கல்வி உரிமை சட்டத்தின் காரணமாக, பள்ளியில் இருந்து படிப்பை பாதியிலேயே நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை 3.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்னால் குழந்தைகள் 5ம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் வழக்கம் இருந்தது. தற்போது 5ம் வகுப்புக்கு பிறகு படிப்பை தொடரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 8ம் வகுப்புக்கு பிறகு படிப்பை தொடரும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது. ஆனால் எண்ணிக்கை அதிகரிக்கும் இதே வேளையில், அடிப்படை திறன்களை வளர்த்துக் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 8ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினருக்கு 2ம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை. 8ம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் பாதி பேரால், சாதாரண வகுத்தல் கணக்கை போட முடிவதில்லை.

இந்த ஆண்டின் கல்வி அறிக்கை 14 முதல் 18 வயதுள்ள ஊரகப் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் மீது கவனம் செலுத்துகிறது. அதற்கான காரணம் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 14 வயதில், அதிக குழந்தைகள் 8 வருட ஆரம்பப்பள்ளி கல்வியை முடிக்கிறார்கள். நான்கு வயதை கடந்ததும் இவர்கள் பெரியவர்கள் ஆகிறார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் இந்த குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை திறன்களை இவர்கள் வளர்த்துக் கொண்டு, நல்ல வாழ்க்கையை நடத்த தயாராகிறார்களா?

துரதிருஷ்டவசமாக இதற்கான பதில் இல்லை என்பதே. 2008-09ம் ஆண்டில், 24 மில்லியன் குழந்தைகள் 8ம் வகுப்பில் சேர்ந்தார்கள். 2011-12ம் ஆண்டில் 19 மில்லியன் குழந்தைகள் மட்டுமே 8ம் வகுப்பில் சேர்ந்தார்கள். 5 மில்லியன் குழந்தைகள் குறைவாக சேர்ந்திருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு நகர்கையில், 12ம் வகுப்பில் வெறும் 12 மில்லியன் குழந்தைகள் மட்டுமே சேர்ந்துள்ளார்கள். சராசரியாக 1.7 மில்லியன் குழந்தைகள், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப் படிப்பை நிறுத்துகிறார்கள். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு வராமல் இருந்தது, தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தாமை, கல்விக்கான அரசின் குறைந்த நிதி ஒதுக்கீடு ஆகியவை இதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.

14 முதல் 18 வயது உடையோர்.

14 முதல் 18 வயதுடையவர்கள் என்ன செய்கிறார்கள்? பலர் பள்ளிகளில் சேர்கிறார்கள். அதே போல படிப்பை நிறுத்தவும் செய்கிறார்கள். படிப்பை நிறுத்துவோரின் எண்ணிக்கை வயது ஏற ஏற குறைந்து கொண்டே செல்கிறது. இப்படி படிப்பை நிறுத்துவோரில், நான்கில் ஒரு பகுதியினர், நிதி நெருக்கடியை காரணமாக கூறுகிறார்கள். 34 சதவிகிதம் பேர், ஆர்வம் இல்லை என்பதையும், 16 சதவகிதம் பேர், தேர்வில் தோல்வியடைந்ததையும் காரணமாக கூறுகிறார்கள்.

14 முதல் 18 வயதுடையவர்களில் ஊரகப் பகுதியில் 78 சதவிகிதத்தினர், பள்ளியில் படித்தாலும் படிக்காவிட்டாலும் கூலிக்காகவும், சில சமயம் சொந்த நிலத்திலும் விவசாயப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இவர்களின் ஏறக்குறைய அனைவருமே, கால்நடை மருத்துவப் படிப்பையோ, விவசாயப் படிப்பையோ தேர்ந்தெடுப்பதில்லை. நாட்டில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் நபர்களில் அரை சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே, விவசாயத்தையோ, கால்நடை மருத்துவத்தையோ தேர்ந்தெடுக்கிறார்கள்.

14 முதல் 18 வயதுடையவர்களை நாம் என்ன செய்கிறோம். கல்வி அறிக்கை தனது ஆய்வில், இந்த பிள்ளைகள் வேலைக்கான திறனை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை என்று கூறுகிறது. திறன் பயிற்சி இல்லாத இளைஞர்கள், திறமையை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை. தொழில் நிறுவனங்களும், பயிற்சி மையங்களை நாடுவதில்லை.

விவசாயம் ஊரக இளைஞர்களுக்கு முக்கிய வேலை வாய்ப்பை தருவதாக இருக்கும் வரையில், விவசாயம் திறன் பயிற்சி உள்ள இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், உற்பத்தித் திறனில் வளர்ந்த நாடுகளை விட நாம் பின் தங்கியுள்ளோம் என்று கூறுகிறது கல்வி அறிக்கை. ஆனால், விவசாயம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பதற்கு, இளங்கலை பட்டப்படிப்புகளைப் போல அல்லாமல், குறுகிய கால கல்வித் திட்டங்கள் ஏதும் இல்லை.

தோல்வியடைந்த நடைமுறை.

நமது பள்ளிக் கல்வி முறை ஒரு தோல்வியான நடைமுறை. 18 வயதை அடைவதற்கு முன்னதாகவே அனைத்து வயதுகளையும் சேர்ந்த 50 சதவிகிதத்தினர் படிப்பை நிறுத்துகிறார்கள். இவர்களின் பெரும்பாலானவர்களுக்கு எழுதவோ, படிக்கவோ, தொழில் திறமையோ இல்லை. இதன் காரணமாக இவர்களில் பெரும்பாலானோர், விவசாயக் கூலிகளாகவோ, அல்லது வேறு கூலித் தொழிலிலோ ஈடுபடுகின்றனர்.

இதே போல குழந்தைகளின் உடல் நலனை பார்ப்போம். 5 வயதுள்ள குழந்தைகளில், பாதி குழந்தைகள், சத்துக் குறைபாடுள்ள குழந்தையாக இருக்கிறது. மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவோடு இருக்கிறது. ஐந்தில் ஒரு குழந்தை நலிந்த உடல்நிலையோடு இருக்கிறது. ஒரு குழந்தையின் முதல் ஐந்து ஆண்டுகள், பிற்காலத்தில் அதன் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்ட உண்மை.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கும், ஒரு சிறந்த நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் வகையில் குழந்தைகள் உருவாகாமல் போனால், உலகில் இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை வைத்திருப்பதும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதும், விண்வெளியில் செயற்கைக் கோள் ஏவுவதும், நமது நாட்டை வல்லரசாகவோ, சிறந்த நாடாகவோ உருவாக்காது.
“மாற்றத்தை உருவாக்க மிகச் சிறந்த ஆயுதம் கல்வி” என்றார் நெல்சன் மண்டேலா. ஆனால் இந்தியா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close