ப.சிதம்பரம்
வளர்ச்சி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளை தரும். ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்றத் தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேல் போட்டியிட்டதனால், நான் பல முறை இந்த உண்மைக் கதையை கூறியிருக்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிவகங்கையில் முழுமையான சாலை வசதிகள் கிடையாது. மக்களின் பிரதான கோரிக்கை எங்களுக்கு சாலை வேண்டும் என்பதே. ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் நிதியை பெற்று, நிர்வாகம் ஒரு மண் சாலையை அமைக்கும். மக்கள் அந்த வளர்ச்சிக்கே மகிழ்ந்தார்கள். சில ஆண்டுகள் கழித்து, மழைக்காலத்தில் சாலைகள் சேதமானதும் கற்களால் ஆன சாலையை போட வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கும், மண் சாலை, கல் சாலை, தார் சாலை, இறுதியாக இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட உறுதியான சாலை என்று இந்த கோரிக்கையின் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்தியா செயற்கைக் கோள் அனுப்பினாலும், அணு சக்தி குழுவில் சேர்ந்தாலும், மக்களுக்கு உண்மையான மகிழ்ச்சி, அவர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், வேலைகள், விவசாயப் பொருட்களுக்கான உரிய விலைகள் போன்றவை கிடைக்கையிலேயே என்பதை நான் என் அனுபவத்தில் கற்றுக் கொண்டேன். உண்மையில் வளர்ச்சி என்பது, வாழ்க்கையின் தரம், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், நல்ல கல்வி மற்றும் உயர் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
ஏமாற்றம்
2014ல் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய நரேந்திர மோடி அவர்கள், “நல்ல நாட்கள் வருகின்றன” என்பதையே தனது முழக்கமாக வைத்திருந்தார். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வந்து, ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சத்தை செலுத்துவேன் என்பது போன்ற பல வாக்குறுதிகளை அளித்தார். அவரால் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற முடியவில்லை என்பதையே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 42 மாதங்கள் கழித்து எங்கு பார்த்தாலும் ஏமாற்றமே விஞ்சி நிற்கிறது.
இதே போன்றதொரு ஏமாற்றம் குஜராத் இந்த டிசம்பரில் தேர்தலை சந்திக்கப் போகும் இந்த நிலையிலும் தெரிகிறது. குஜராத் மாடல் வளர்ச்சி என்பது விரிவாக ஆராயப்படுகிறது. குஜராத் என்ற மாநிலம் 1960ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போதுதான் குஜராத் சிறப்பை பெற்றது. அதற்கு பிறகான 57 ஆண்டுகளில் குஜராத் முதல் 30 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியாலும், 1995 முதல் பிஜேபியாலும் ஆளப்பட்டு வருகிறது. 1995க்கு முன்னர் கூட குஜராத்தின் வளர்ச்சி விகிதம் என்பது, நாட்டின் சராசரி வளர்ச்சியை விட அதிகமாகவே இருந்தது. அமுல், துறைமுகங்கள், ஜவுளி ஆலைகள், ரசாயன தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்றவை 1995க்கு முன்பாக உருவாக்கப்பட்டவை. இதற்கான பெரும்பங்கு குஜராத் மக்களையே சாரும். அடிப்படையில் குஜராத் மக்கள், வணிகம் செய்பவர்கள். வணிகத்திலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர்.
பிரித்தளிக்கப்பட்ட நீதி
குஜராத் அரசு எங்கே தொய்வடைந்தது என்றால், அதன் வளர்ச்சி அனைத்து தரப்பினருக்குமானதாக இல்லை. குஜராத்தை நாம் மகாராஷ்டிர மாநிலத்துடனும், இதர மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவுடனும் ஒப்பிட்டால், மனித வளர்ச்சிக் குறியீட்டில் அது பின்தங்கியிருப்பதை உணர முடியும். (அட்டவணையை பார்க்கவும்)
இந்த அட்டவணை, குஜராத்தின் வளர்ச்சி இதர மாநிலங்களோடு ஒப்பிட்டால் எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதை காண முடியும். நாம் ஒப்பிட்ட மாநிலங்களோடு எந்த வகையிலும் குஜராத் முன்னேறவில்லை. தொழில் வளர்ச்சியில் குஜராத் வலுவாக முன்னேறி இருந்தாலும், மனித வளர்ச்சிக் குறியீட்டில் அது முன்னேறவில்லை என்பது மட்டுமல்லாமல், கடந்த 22 ஆண்டுகளில் அது பின் தங்கியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதில் முக்கியமாக குழந்தைகளின் வளர்ச்சி குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன. சமூக வளர்ச்சி குறித்த அக்கறையின்மையும், ஏழைகளின் மீதான பாராமுகமுமே இதற்கு காரணம்.
தவறான புரிதலோடு குஜராத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சியின் காரணமாக, சமூகத்தில் பெரும் பகுதி மக்கள் விடுபட்டுப் போயுள்ளனர். இப்படி விடுபட்டுப் போனவர்களில், பழங்குடியினர் (மக்கள் தொகையில் 14.8 சதவிகிதம்), தலித்துகள் 7.1 சதவிகிதம்), சிறுபான்மையினர் (11.5 சதவிகிதம்). பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட, தாங்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்படவி்ல்லை என்பதால் கொதிப்பில் இருக்கிறார்கள். தங்களுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாக கருதுகிறார்கள். சமூக ஒருங்கிணைவு பெரிய அளவில் நடந்து வருகிறது. இத்தகைய ஒருங்கிணைப்புக்கு சாதி ஒரு எளிமையான கருவி. ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் வேலை வாய்ப்புகள் பறிபோனதே. குஜராத்தி மொழியில் இன்று குஜராத்தில் பிரபலமாகியுள்ள ஒரு முழக்கம் “விகாஸ் காண்டோ, தாயோ ச்சே”. (வளர்ச்சி விபரீதமாக போய் விட்டது)
குஜராத்தை தொடர்ந்து கவனித்து வரும் எந்த அரசியல் ஆய்வாளருக்கும் இன்று ஒரு பெரும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது வெளிப்படையாக தெரியும். பிளவுகள் கண்கூடாக தெரிகின்றன. மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் வெளிப்படையாக கூறுகிறார்கள். குஜராத் தேர்தலின் போட்டி பல கூறுகளை அடிப்படையாக கொண்டது. பொருளாதார சமூக யதார்த்தத்துக்கும், தலைப்புச் செய்திகளை நோக்கமாக கொண்டு செய்யப்படும் வெற்று அறிவிப்புகளுக்குமான போட்டி. மோசமான மனித வளக் குறியீட்டு வளர்ச்சிக்கும், பல கோடி மதிப்பிலான முதலீடுகளுக்குமான போட்டி.
இந்தத் தேர்தல், ஆர்வமுள்ள இளம் தலைவர்களுக்கும், பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கும் இடையேயான போட்டியாக மாற இருக்கிறது.
தமிழில் ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.