ப.சிதம்பரம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு கேள்விகள் பல தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றன. அரசின் செலவுகள் குறித்து நானும் சில கேள்விகளை எழுப்புகிறேன்.
அரசு என்ன செலவு செய்கிறது? எதன் மீது செய்கிறது? 2017-18ல், அரசு, ரூபாய் 21,46,735 கோடியை செலவு செய்யும் என்று மதிப்பிட்டது. ஆனால் இறுதியில் ரூபாய் 22,17,750ஆக அந்த செலவு உயர்ந்தது. கூடுதலாக ரூபாய் 71,015 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் தொகை எங்கிருந்து வரும்? இந்தத் தொகை கடனாக பெறப்படுகிறது. ரூபாய் 48,309 கோடியை அரசு நேரடியாக கடனாகப் பெறும். ஓஎன்ஜிசி நிறுவனம், அரசுக்காக மற்றொரு 37,000 கோடியை கடன் வாங்கும்.
கடன் வாங்கி செலவு
இப்படி கடனாக பெறப்பட்ட தொகை எப்படி செலவிடப்படப் போகிறது? ரூபாய் 1,07,371 கோடி வருவாய் செலவினமாகும். இதன் காரணமாக, முதலீட்டு செலவு, ரூபாய் 36,356 கோடியாக குறையும். அரசு வருவாய் கணக்கில் செலவிடுவதற்காக, அதிகமாக கடன் வாங்கி அதன் விளைவாக மூலதனத்தில் குறைவு ஏற்படுகிறது. வருவாய் செலவினத்தில், ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் தொகை 2017-18ம் ஆண்டில் சுகாதாரத்துக்கு போகிறதா என்றால் அதுவும் இல்லை. அட்டவணையை பார்க்கவும்.
சுகாதாரத்துக்காக அரசு கூடுதலாக செலவிட்ட தொகை வெறும் 4,320 கோடி மட்டுமே. இது கூடுதல் செலவினமான ரூபாய் 71,015 கோடியில் ஒரு சிறு பகுதி மட்டுமே. மொத்த வருவாய் செலவினமான ரூபாய் 1,07,371 கோடியில் இது சிறு துளி.
குழந்தைகளின் ஆரோக்கியம்.
சுகாதாரத்தின் ஒரு பகுதியை ஆராய்வோம். குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் உடல் நலன் குறித்து பார்ப்போம். 2005-06 முதல், 2015-16 வரையிலான புள்ளி விபரங்களை எடுத்துக் கொண்டுள்ளேன்.
ஆண் குழந்தைகளோடு ஒப்பிடுகையில் பெண் குழந்தைகளின் விகிதம் லேசாக முன்னேற்றம் கண்டிருக்கிறது. 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம், 919ஆக உயர்ந்துள்ளது. இந்த விகிதத்தில் முன்னேற்றம் இருந்தால், பெண்களின் விகிதம் முன்னேற பல பத்தாண்டுகள் ஆகும்.
இளம் குழந்தைகள் மரணம், 57ல் இருந்து 41ஆக குறைந்துள்ளது. உலகத்தின் சராசரி 30.5. முதலிடத்தில் இருக்கும் நாட்டில் குழந்தைகள் இறப்பின் சராசரி 2.
ஐந்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம், 74ல் இருந்து 50ஆக குறைந்துள்ளது. உலகத்தின் சராசரி 41. உலகில் சிறந்த நாட்டில் 5 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 2.1.
ஐந்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளில் இரண்டில் ஒரு குழந்தை, சத்துக் குறைப்பாட்டோடு சோகையாக உள்ளது. மூன்றில் ஒரு குழந்தை, எடைக் குறைபாட்டோடும், வளர்ச்சி குன்றியும் உள்ளது. ஐந்தில் ஒரு குழந்தை, வீணான குழந்தையாக உள்ளது.
குழந்தைகள் நலனையும், குழந்தைகள் ஊட்டச் சத்தையும் நாம் கவனிக்காமல் புறக்கணித்ததால், மனித வளம், மிகக் குறைவாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியோ, தேசப் பாதுகாப்போ, தொழில்நுட்ப முன்னேற்றமோ, சமூக நல்லிணக்கமோ, இவை அனைத்துக்கும் அடிப்படை சிறந்த மனிதவளம். நமது குழந்தைகளை ஊட்டச்சத்தோடு ஆரோக்கியமாக வைத்திருப்பது அனைத்து மருத்துவர்களின் கடமை. ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்தியாவில் 2016ம் ஆண்டின் புள்ளி விபரத்தின்படி, 1681 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். 11,528 பேருக்கு ஒரு அரசு மருத்துவர் உள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோளின்படி, ஒவ்வொரு 1000 நபருக்கும் ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நாம் 55,000 இளங்கலை மருத்துவர்களையும், 25,000 முதுகலை மருத்துவர்கயும் உருவாக்குகிறோம். ஒவ்வொரு மருத்துவரும், இரு மருத்துவர்களுக்கான சுமையை சுமக்க வேண்டி உள்ளது.
நமது சுகாதார ஏற்பாடுகளை மூன்று வகையாக பிரிக்கலாம் அரசு மற்றும் பொது மருத்துவமனைகள். லாபத்துக்காக நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகள். லாபநோக்கமில்லாமல் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகள். புது டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைப் போல சில விதிவிலக்கான மருத்துவமனைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால், பெரும்பாலான மருத்துவமனைகள், தரம் குறைந்ததாகவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தான்தோன்றித்தனமாகவும், நோயாளிகளை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காத மருத்துவமனைகளாகவே உள்ளன. பல தாலுகா மற்றும் மாவட்ட அளவிலான மருத்துவமனைகள், வரும் நோயாளிகளை பெரிய மருத்துவமனைக்கு வழி காட்டி விடும் மருத்துவமனைகளாக மட்டுமே செயல்படுகின்றன.
அதே நேரத்தில் சில விதிவிலக்குகளை தவிர்த்து, பெரும்பாலான லாப நோக்கிலான தனியார் மருத்துவமனைகள், லாபத்துக்காக, தேவையற்ற பரிசோதனைகளுக்கு பரிந்துரை செய்வது, சிகிச்சையை வளர்த்துக் கொண்டே செல்வது ஏழை நோயாளிகளை திருப்பி அனுப்புவது என்ற முறையிலேயே செயல்பட்டு வருகின்றன.
நிதியே ஒதுக்காமல் புதிய திட்டம்.
இலவச சிகிச்சை வழங்கும் பொது மருத்துவமனைகளையும், சுகாதார காப்பீட்டுத் திட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னரும், ஒவ்வொரு நோயாளியும், சிகிச்சைக்காக கணிசமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. 2014 புள்ளி விபரங்களின்படி, ஒரு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு சராசரியாக ஒருவர் ரூபாய் 7,670 செலவழிக்கிறார். தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற, ரூபாய் 32,375 செலவிடுகிறார். இந்த புள்ளி விபரங்கள், இந்தியாவில் சுகாதாரத் துறை மேலும் மேலும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.
இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசின், மிகுந்த படோடாபத்தோடு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பார்க்க முடியும். அரசு நிதியோடு செயல்படுத்தப்படும் உலகிலேயே மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அல்ல இது. நிதியே ஒதுக்கப்படாத மிகப்பெரிய திட்டம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். 2016-17 நிதி நிலை அறிக்கையில், ஆறு கோடி குடும்பங்களுக்காக, ஒரு லட்ச ரூபாய் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வகை செய்யும் மருத்துவக் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவே இல்லை. இறுதி வரை செயல்படுத்தப்படவும் இல்லை. சத்தமில்லமால் அந்தத் திட்டம் புதைக்கப்பட்டது. தற்போது 10 கோடி குடும்பங்களுக்காக, 5 லட்ச ரூபாய் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்துககும் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. காப்பீட்டுத் துறை நிபுணர்கள், ஒன்று முதல் மூன்று சதவிகிதம் வரை என்ற அளவில், மருத்துவக் காப்பீட்டுக்கான சந்தா கட்டுவதற்கு மட்டும் ஆண்டுக்கு 50,000 முதல் 1,50,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்பதையும், இத்திட்டம் தொடர்பாக எந்த காப்பீட்டுத் துறை நிபுணரையும், கலந்தாலோசிக்கவில்லை என்பதையும், சுட்டிக் காட்டியுள்ளனர். மாநிலங்கள் இதில் 40 சதவிகித சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த மாநிலமும் கலந்தாலோசிக்கப்படவில்லை. இது தவிர, பல மாநிலங்கள், ஏற்கனவே இது போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த மாநிலங்கள் எதற்காக இந்தத் திட்டத்தில் இணைய விரும்புவார்கள் என்பது புரியவில்லை.
ஆட்சியின் கடைசி ஆண்டில் ஒரு திட்டத்தை அறிவித்து, எவ்விதமான தயாரிப்பு வேலைகளும் இல்லாமல், அதற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் இருப்பது என்பது, மக்களின் அறிவுத் திறனுக்கு ஏற்படுத்தப்படும் அவமானம். அறிவிப்பை செய்து விட்டு, நிறைவேற்ற முடியாத இந்த திட்டத்துக்கு உயிரூட்டுகிறோம் என்று தன் நேரத்தையும் நிதியையும் மனித வளங்களையும் செலவழிக்கும். அதே நேரத்தில் சுகாதாரத் துறையின் புறக்கணிப்பு தடையில்லாமல் தொடரும்.
தமிழில் : ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.