ப.சிதம்பரம்
சரக்கு மற்றும் சேவைகள் வரி என்ற திட்டம் நல்ல யோசனை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஏறக்குறைய 160 நாடுகளில் இத்திட்டம் அமலில் உள்ளது. சில நாடுகளில் வேறு முறையில் இது செயல்படுத்தப்படுகிறது. ஆனால் அனைத்துத் திட்டங்களின் அடிப்படை என்னவென்றால் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரே வரி விகிதம் என்பதுதான். சிலவற்றுக்கு விதிவிலக்கு உண்டு.
அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தனது அறிக்கையில், வருவாய் சமன் விகிதம் 15 அல்லது 15.5 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்று கூறினார். வாட் வரியிலிருந்து ஜிஎஸ்டி வரி முறைக்கு மாறுகையில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, வருவாய் சமன் விகிதத்தில் இரண்டு முறைகள் (பாசிட்டீவ் மற்றும் நெகட்டீவ்) தேவை என்று பரிந்துரைத்தார். இந்த முறை வாட் வரியிலிருந்து ஜிஎஸ்டி முறைக்கு மாறுவதை எளிதாக்கியிருக்கும்.
இது உண்மையான ஜிஎஸ்டி அல்ல
பிஜேபி அரசு ஜிஎஸ்டியின் அடிப்படையான கூறுகளையே மீறி, தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனைகளை நிராகரித்து, தனக்கென்று ஒரு ஜிஎஸ்டியை வடிவமைத்தது. ஆங்கிலத்தில் எழுத்துக்களை குறுக்கி அதை பிரபலமாக்கும் பிஜேபி ஜிஎஸ்டிக்கு வேறு பெயர் வைத்திருக்கலாம். ஜிஎஸ்டி நிச்சயமாக எளிமையான வரி அல்ல. ராகுல் காந்தி எப்போது ஜிஎஸ்டியை 'கப்பர் சிங் டாக்ஸ்' என்று அழைத்தாரோ, அப்போது முதல் இந்தப் பெயர் நிலைத்து விட்டது. இந்தப் பெயரை மறக்கச் செய்வது அத்தனை எளிதல்ல.
ஜிஎஸ்டி மற்றும் அதன் செயலாக்கம் தவறான வடிவமைப்பு, அணுகுமுறை, வரி விகிதங்கள், விதி விலக்கு உள்ள மற்றும் இல்லாத பொருட்கள், கட்டமைப்பு, தயார் நிலை, பயிற்சி உட்பட பல வகைகளில் பிழையானது. 1,ஜுலை 201 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியில் தொடக்கம் முதல் எதுவுமே சரியாக இல்லை.
இப்படி தொடக்கம் முதலே பல முரண்பாடுகள் மற்றும் பிழைகளோடு செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பதை நாம் கண்டு வருகிறோம். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர். குறிப்பாக உற்பத்தி தொழில்களில் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறுந்தொழில்கள் பல (சுய வேலை வாய்ப்புக்கான முக்கிய களம்) இழுத்து மூடப்பட்டு விட்டன. சிறு தொழில்கள் (பலவற்றில் குடும்ப உறுப்பினர்களே பணியாட்களாக இருப்பர்) பல தட்டுத் தடுமாறிக் கொண்டுள்ளன. பலர் சமாளிக்க முடியாமல் தொழிலை விட்டே போய் விட்டார்கள். நடுத்தர தொழில்கள் (விவசாயம் அல்லாமல் 90 சதவிகித வேலை வாய்ப்பை வழங்கும் பிரிவு) கடுமையான நெருக்கடியில் உள்ளன. பலர் தடுமாறிக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையானோர் உற்பத்தியை குறைத்துள்ளனர். பணியாட்களை வேலை நீக்கம் செய்துள்ளனர். முதலீட்டை அதிகரிக்க கடன் வாங்கியுள்ளனர். ஆடிட்டர்களுக்காக பெரும் தொகையை செலவழித்து வருகின்றனர். எப்போது ஜிஎஸ்டி அதிகாரிகளிடமிருந்து ரெய்டு வரும் என்ற அச்சத்திலேயே உள்ளனர்.
இந்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, அரசு இதன் மீதான விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளியது. வரி நிபுணர்கள் மற்றும் தொழில் நிறுவன கூட்டமைப்புகள் அளித்த ஆலோசனைகளை நிராகரித்தது. தங்கள் வாழ்வில் தொழில் தொடங்குவதற்காக ஒரு ரூபாயை கூட செலவழித்திராத, எந்த விதமான துணிச்சலான முடிவையும் எப்போதும் எடுத்திராத அரசு அதிகாரிகளிடம் ஜிஎஸ்டியை வடிவமைத்து அமல்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டதுதான் அடிப்படை கோளாறு. இதன் விளைவே இத்தனை முரண்பாடுகள், குறைகள், சிக்கல்கள் மற்றும் பிழைகள். இதன் காரணமாகத்தான் இன்று இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களும் இதன் தாக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவசர கோல திருத்தங்கள்.
இந்த ஜிஎஸ்டி பிரச்சினை, அரசியல் பிரச்சினையாக உருவெடுக்கத் தொடங்கியதும்தான் அரசு தனது நீண்ட தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது. தற்போது ஜிஎஸ்டி சிக்கல்களை தீர்க்கிறேன் என்று அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. அரசின் ஆற்றாமை வெளிப்படையாக தெரிகிறது. ஜுலை 1, 2017ல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல், அதில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் மாற்றங்களின் எண்ணிக்கையை பாருங்கள். இந்த திருத்தங்கள் இன்னும் முடியவில்லை. 11 நவம்பர் 2017 அன்று மற்றுமொறு ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் கூட இருக்கிறது. இதுவும் இது தொடர்பான கடைசி கூட்டமாக இருக்காது என்பதை உறுதியாக சொல்வேன்.
இது வரை, 27 வரி குறைப்பு. 7 புதிய வரி விகிதம். 22 வரி விலக்குகள். ஒரு வரி தள்ளுபடி. 15 முறை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி விதிகளில் 11வது திருத்தம் 28, அக்டோபர் 2017 அன்று செய்யப்பட்டது. இதில் பல திருத்தங்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சம்பந்தப்பட்ட அடிப்படையான திருத்தங்கள். குறிப்பாக ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டதில் உள்ள பிழைகளை சரி செய்யும் திருத்தங்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பில் சிக்கலான அம்சங்களான அடிப்படை வரி விதிப்பு, மின்னணு பில்கள் போன்ற சிக்கலான அம்சங்களை அமல்படுத்தாமல் தள்ளிப் போடுதல் இந்த திருத்தங்களில் சில. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை நான்கு மாதங்கள் பாடாய் படுத்தி விட்டு, இந்த திருத்தங்களை செய்கிறார்கள்.
முழுமையான மாற்றம் தேவை
ஆனால் இந்த திருததங்கள் போதுமானவை அல்ல. சில விஷயங்களை உடனடியாக செய்ய முடியாது. உதாரணத்துக்கு பல்வேறு வரி விகிதம், வகைப்படுத்துதல், மின்சாரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கான விதிவிலக்கு, முதலில் வரி செலுத்தி விட்டு, பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை உடனடியாக திருத்த முடியாது. இவற்றில் மாற்றம் கொண்டு வருவதற்கு, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முழுமையான மற்றும் அடிப்படை மாற்றங்களை செய்வதோடு, சட்டத் திருத்தமும் செய்ய வேண்டும். ஆனால் இது குறித்து அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை.
அரசின் மீதான விமர்சனம் இந்தியாவில் மட்டும் எழவில்லை. ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை, சிறு தொழில்கள் மூடப்பட்டது குறித்து பதிவு செய்தது. டாக்டர் ஜஹாங்கீர் அஜீஸ் என்ற சிங்கப்பூரை சேர்ந்த பொருளாதார நிபுணரை மேற்கோள் காட்டியிருந்த அந்த கட்டுரை, அரசு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் தாக்கத்தை சரியாக கணிக்கத் தவறியது என்று கூறியிருந்தார். மேலும் இந்த வரி விதிப்பு வளர்ச்சியின் மீது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இது எத்தனை நாள் நீடிக்கும் என்பதையும் அரசு கணிக்கத் தவறியது என்று கூறியிருந்தார். தி எக்கனாமிஸ்ட் பத்திரிக்கை, தனது தலையங்கத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் பற்றி குறிப்பிட்டு, ஜிஎஸ்டியின் மோசமான அமலாக்கம், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று குறிப்பிட்டது. இறுதியாக, அந்த தலையங்கம், பிஜேபி அரசுக்கு கொள்கைகளில் பெரிய ஆர்வம் இல்லை. வாக்காளர்களை திசை திருப்புவதே அதன் நோக்கம் என்று கடுமையாக குறிப்பிட்டிருந்தது.
பொருளாதாரம் இந்த நடவடிக்கைகளால் இரண்டு முக்கியமான தாக்கங்களை சந்தித்துள்ளது. ஜிடிபி வளர்ச்சி விகிதம் கடந்த ஆறு காலாண்டுகளாக 9.1 சதவிகிதத்திலிருந்து 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது என்பது அப்பட்டமான உண்மை. 5.7 சதவிகிதத்தை விட மேலும் குறையாமல், இனி மேல் நோக்கி வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அரசு இதை வைத்து மார்தட்டிக் கொள்ள இது உதவும். ஆனால் பல தொழில்கள் மூடப்பட்டு விட்டன என்பதும், பல வேலையிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பதும் மறுக்க முடியாது உண்மை. இதற்கு உடனடி நிவாரணம் என்பது இல்லை.
தமிழில் ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.