ப.சிதம்பரம்
சமூக ஊடகத்தில் ஒருவர், பிரதமர் மோடி அவர்களின் 29 தேர்தல் பேரணிகளில் ஆற்றிய உரைகளில், 621 முறை ராகுல் காந்தி பெயரையும், 427 முறை காங்கிரஸ் குறித்தும் பேசியுள்ளார். ஆனால் ஒரே ஒரு முறை கூட குஜராத் மாடல் குறித்து பேசவில்லை என்றார். இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவும் இருக்கலாம். அல்லது தவறான கணக்காகவும் இருக்கலாம். ஆனால் பிஜேபியின் பிரச்சாரம் குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை இது உணர்த்துகிறது. பிஜேபியின் குஜராத் பிரச்சாரம் நிச்சயமாக வளர்ச்சி குறித்தோ, வளமான நாட்கள் குறித்தோ அல்ல. காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சி என்று கூறப்படுவதன் அடிப்படையிலேயே உள்ளது. இதை விட ஒரு மோசமான பிரச்சாரத்தை ஆளுங்கட்சி செய்ய முடியாது.
கடைசியாக காங்கிரஸ் கட்சி 1995ம் ஆண்டு ஆட்சியில் இருந்தது. மே 2014ல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த தேர்தல், ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சி குறித்ததோ அல்ல. 1995ம் ஆண்டு முதல் தொடர்ந்து பதவியில் இருக்கும் பிஜேபி அரசு வாக்குறுதி அளித்தபடி, மக்களுக்கு செய்யத் தவறியது குறித்த தேர்தல் இது. குஜராத் மக்களின் தேவைகள், விருப்பங்கள், அச்சங்கள் குறித்த தேர்தல் இது.
விலைவாசி உயர்வு மற்றும் வளர்ச்சி
குஜராம் மக்களின் மனதில் இருக்கும் பிரதானமான விஷயங்கள் என்று நான்கு முக்கிய விஷயங்களை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. விலைவாசி உயர்வு (18 சதவிகிதம்), வளர்ச்சி (13 சதவிகிதம்), வேலையின்மை (11 சதவிகிதம்), மற்றும் வறுமை (11 சதவிகிதம்). விலைவாசி உயர்வு குறித்து ஆளுங்கட்சியிலிருந்து ஒருவரும் பேசப் போவதில்லை. அது ரிசர்வ் வங்கியின் பணி என்று விட்டு விட்டார்கள். மத்திய ரிசர்வ் வங்கி 5 டிசம்பர் 2017 அன்று இவ்வாறு கூறியது “அடுத்து வரப் போகும் காலத்தில், பண வீக்கம் அதிகரிக்கும். உலக சந்தையில் உயர்ந்துள்ள கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரிக்கும். அப்பகுதியில் உள்ள அரசியல் சூழல் காரணமாக, அதன் விலை மேலும் உயரலாம்”
மூன்று வருடங்களாக, சர்வதேச சந்தையில் குறைந்த கச்சா எண்ணை விலையின் காரணமாக, மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைத்தது. ஆனால், அதற்கு ஏற்றார்போல, பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க அரசு பிடிவாதமாக மறுத்தது. விலையை குறைக்க வேண்டும் என்று வலுவாக குரல்கள் எழுந்தன. இதற்கு தீர்வும் கண்டிருக்க முடியும். ஆனால் அரசு நிதி நிலைமையை காரணமாக வைத்து, விலையை குறைக்க அஞ்சியது. மிகவும் எளிதாக, பெட்ரோலிய பொருட்களை, ஜிஎஸ்டியின் கீழ் எடுத்து வந்திருக்க முடியும். நான் குஜராத் வாக்காளனாக இருந்தால், எந்த கட்சி பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்து, பெட்ரோல் டீசல் விலைகளை உடனடியாக லிட்டருக்கு பத்து ரூபாயை குறைப்பதாக வாக்குறுதி அளிக்கிறதோ, அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பேன்.
ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் கூட வளர்ச்சி குறித்து பேசப் போவதில்லை. அப்படி பேசினால், 90 சதவிகித மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை கூட பயணம் செய்ய முடியாத புல்லட் ரயிலைப் பற்றி பேசுவார்கள். இல்லையென்றால், சர்தார் சரோவர் அணை குறித்து பேசுவார்கள். குஜராத்தில் நீர் பற்றாக்குறையாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள சவுராஷ்டிரா மற்றும் இதர பகுதிகளுக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் கால்வாய்கள் கட்டப்படாத காரணத்தால், சரோவர் அணையின் நீர் வரப் போவதில்லை. கடந்த 22 வருடங்களாக இந்த கால்வாய்கள் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நான் குஜராத் வாக்காளனாக இருந்தால், சர்தார் அணை கால்வாய்களை கட்டி முடிக்கவும், தேசிய நெடுஞ்சாலைகளை கட்டவும், தரமான சாலைகளை அமைக்கவும், சாலைகளை பராமரிக்கவும், அனைத்துப் பகுதிகளிலும் விமான நிலையம் அமைகக்கவும் வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே வாக்களிப்பேன்.
வேலையின்மை மற்றும் வறுமை
வேலையின்மை குறித்து பிஜேபியில் ஒருவரும் பேச மாட்டார்கள். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலானோர் பதிவு செய்திருப்பதை பிஜேபி உதாரணமாக காட்டும். அது ஒரு சொந்த கோல். வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பட்டுப் போய் பல நாட்கள் ஆகி விட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையினாலும், அவரால் செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் காரணமாகவும், குஜராத் மற்றும் இதர பகுதிகளில் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிவடைந்து, ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். குஜராத்தின் இளம் தலைவர்களின் பின்னால், ஏன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அணி வகுத்து செல்கிறார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். நான் குஜராத் வாக்காளனாக இருந்தால், தொகுப்பூதியம் வழங்காமல் முழுமையான ஊதியம் வழங்கும் அரசுப் பணியும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவித்து, வேலை வாய்ப்பை உருவாக்க வாக்குறுதி தரும் கட்சிக்குதான் வாக்களிப்பேன்.
பிஜேபி அரசு, ஏழைகளை புறந் தள்ளி விட்டது. குழந்தைகள் ஆரோக்கியம், ஆண் பெண் விகிதாச்சாரம், கல்வி, தனி நபர் வருமானம் என்று பல்வேறு மனிதவளக் குறியீடுகளில் குஜராத் பல மாநிலங்களை விட பின் தங்கியிருக்கிறது. நான் குஜராத் வாக்காளனாக இருந்தால், சாதி மத வேற்றுமை பாராமல், ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினர் மீது அக்கறை கொண்டு அவர்களின் துயர் துடைக்கும் ஒரு கட்சிக்கே வாக்களிப்பேன்.
தேர்தல் மற்றும் பொறுப்பு
விலைவாசி உயர்வு, வளர்ச்சி, வேலையின்மை போன்ற விவகாரங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். கடந்த காலங்களில் கூட, முக்கியமான விவகாரங்கள் குறித்து பேசாமல் அரசியல் கட்சிகள் கவனமாக தவிர்த்த நேர்வுகள் நடந்துள்ளளன. ஆனால் மக்கள் புத்திசாலித்தனமாக அரசாங்கத்தையே மாற்றுவார்கள். நாளுக்கு நாள் வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக மாறி வருகிறார்கள். விவாதப் பொருளாக பிஜேபி உருவாக்க நினைக்கும் விவகாரங்கள், இந்துத்துவா, அயோத்தியா, தனி நபர் சட்டம், பசுப் பாதுகாப்பு, வெறியூட்டும் தேசபக்தி, போன்றவற்றையே. இவற்றில் ஏதாவது ஒன்றை பிரதமர் எடுத்துக் கொண்டு அது குறித்தே தன் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவார். அது தலைப்புச் செய்தியாக மாறிப் போகும். ஊடகங்கள் உரத்த குரலில் அது குறித்து விவாதத்தை தொடங்கும். நல்ல வேளை, இது வரை எந்த கட்சியும் இது போன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ளவில்லை. வளர்ச்சி, வேலையின்மை விலைவாசி உயர்வு போன்ற விஷயங்கள் குறித்தே கட்சிகள் பேசி வருகின்றன.
தேர்தல் முடிவுகளை யாராலும் சரியாக கணிக்க முடியாது. பீகாரில் ஏறக்குறைய அனைத்து கணிப்புகளும் பொய்யாகிப் போயின. இதே போல உத்தரப் பிரதேசத்திலும் கருத்துக் கணிப்புகள் பொய்யாகின. குஜராத் மாநிலத்தின் நலனுக்காகவும், அடுத்த 16 மாதங்கள் மத்தியில் ஆட்சி சரியாக நடப்பதை உறுதி செய்வதற்காகவும், குஜராத் வாக்காளர்கள், ஒரு நல்ல முடிவை எடுத்து, ஆட்சி நடத்துபவர்களின் பொறுப்பை உறுதி செய்வார்கள் என்று நம்புவோம்.
தமிழில் : ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.