ப.சிதம்பரம்
பல்வேறு பின்னடைவுகளையும் மீறி, குஜராத்தில் பிஜேபி வெற்றி பெறும் என்று கடந்த வாரம் எழுதியிருந்தேன். ஆனால் மாறாக குஜராத்தில் பிஜேபி வெற்றி பெறவில்லை. எல்லைக் கோட்டை தட்டுத் தடுமாறி பிஜேபி தொட்டது. அதன் பின்னால், ஒரு இள வயதுத் தலைவர் தொடும் தூரத்தில் வந்து கொண்டிருந்தார். இந்தத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டுமே பெற்றி பெற்றுள்ளன. தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே இருந்த 115 இடங்களில் 16 இடங்களை இழந்ததும், அது குறி வைத்த இலக்கான 150 இடங்களை தொடவே முடியவில்லை என்பதாலும், பிஜேபி தலைமை கவலையடைவது இயல்பே. அதே போல காங்கிரஸ் தலைமையும் வருத்தப்பட காரணங்கள் இருக்கிறன. வெகு நெருக்கத்தில் 80 இடங்களை அடைந்த காங்கிரஸால், பெரும்பான்மை இலக்கான 92 இடங்களை அடைய முடியவில்லை என்பது உண்மையே.
வெற்றி பெற்றவரும், சவால் விடுபவரும்.
இந்தத் தேர்தலில் பல முக்கிய கூறுகள் உள்ளன. ஒரு சிலவற்றை பட்டியலிடுகிறேன்.
1) திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பிஜேபி வெல்ல முடியாதது அல்ல. டெல்லி மற்றும் பீகார் தேர்தல் முடிவுகள், விதிவிலக்குகள் அல்ல. பிஜேபிக்கு எதிராக ஒரு வலுவான, நன்கு திட்டமிட்ட பிரச்சாரத்தை முன்னெடுத்தால், பிஜெபியை தோற்கடிக்க முடியும்.
2) இடைவெளி மிக குறைவாக, இரண்டோ அல்லது மூன்று ஆண்டுகளோ இருந்தால் கூட, வாக்குகள் மாற்றம் என்பது ஒரு தேர்தலுக்கும் அடுத்த தேர்தலுக்கும் அதிகரிக்கவே செய்கிறது.
3) குஜராத்தில் இந்தத் தேர்தலில் முக்கியமான விவகாரம் சாதிகளை ஒருங்கிணைத்தது அல்ல. மற்ற கூறுகளின் அடிப்படையில் இந்த ஒருங்கிணைவு நடந்திருக்கலாம். விவசாயிகளின் சிக்கல், மதத்தின் அடிப்படையிலான வேறுபாடுகள். சமூக அமைப்புகளின் வீச்சு, அரசியல் கட்சிகளின் தாக்கத்தை விட அதிகமாக உள்ளது. அது தேர்தல் முடிவுகளை மாற்றும் வலிமை படைத்தது.
4) ராகுல் காந்தி அவர்களின் பணி தெளிவாக வரையறுக்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் ராகுலால் உற்சாகம் அடைந்தனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அவர்கள் அமைப்பில் இணைந்து பணியாற்ற வேண்டும். திடீரென்று காணாமல் போன அமைப்புக் கிளைகள், 92 இடங்களுக்கு பதிலாக 80 இடங்கள் பெற்றதை விளக்க வேண்டும்.
5) திரு நரேந்திர மோடி அவர்கள் அவரது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். வேலை வாய்ப்புகள், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல், அனைவருக்குமான வளர்ச்சி என்ற அவரின் வாக்குறுதிகள் என்ன ஆயின? இந்த அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கிறது (புதிய அளவீட்டு முறையின்படி). இரட்டை இலக்க வளர்ச்சி என்று இவர்கள் அளித்த வாக்குறுதியிலிருந்து இந்த வளர்ச்சி விகிதம் வெகு தூரத்தில் உள்ளது. வேலைகள் எப்போது வரப் போகின்றன என்று தெரியவில்லை. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது எப்போது நடக்கப் போகிறது? அல்லது வெறும் கனவா ? அனைவருக்குமான வளர்ச்சி என்பதற்கு பதிலாக, வேறுபாட்டை உருவாக்கி, பிளவை உருவாக்கும் பணியில் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மற்றும் சில தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொருளாதாரமும் வேலைகளும்
2018-19ம் நிதியாண்டில் பொருளாதாரத்தின் நிலைமைதான் அடுத்த 16 மாதங்களில் நடக்கும் தேர்தல்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக அமையும். பொருளாதாரத்தில், வேலைகள் முக்கிய காரணியாக விளங்கும். ஆகையால் பொருளாதாரத்தை பற்றி சற்று விவாதிப்போம்.
கடைசியாக அலுவல் ரீதியாக பொருளாதாரம் குறித்து வந்த அறிக்கை மத்திய ரிசர்வ் வங்கியின், நிதி கொள்கை ஆய்வறிக்கை. இந்த அறிக்கை 6 டிசம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது. உற்பத்தி, சுரங்கம், மின்சாரம், எரிவாயு, குடிநீர் போன்ற துறைகள் இரண்டாவது காலாண்டில், 2017-18 வளர்ச்சி அடைந்துள்ளது என்று குறிப்பிடும் ரிசர்வ் வங்கி, அதே நேரத்தில், விவசாயம் மற்றும் அது தொடர்பான தொழில்கள் மந்த நிலையை அடைந்துள்ளன என்றும், கரீப் பயிர் எதிர்ப்பார்த்ததை விட குறைவான விளைச்சலையே தரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சேவைத் துறையில் வளர்ச்சி மந்தமாகியுள்ளது. இது குறிப்பாக, நிதி, காப்பீட்டுத் துறை, ரியல் எஸ்டேட், சேவைத் துறை, பொது நிர்வாகம், பாதுகாப்புத் துறை போன்ற துறைகளில் ஏற்பட்ட சரிவு, முதலாம் காலாண்டில் அரசின் செலவுகளால் ஏற்பட்டது. சிறிய அளவு முன்னேற்றம் இருந்தாலும், கட்டுமானத் துறை தொடர்ந்து மந்த கதியிலேயே இருந்து வருகிறது. இது தவறான ரியல் எஸ்டேட் மசோதா மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் நேர்ந்த விளைவு. வணிகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இரண்டாவது காலாண்டில் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் ஓரளவு வளர்ச்சி இருந்தது. செலவு கணக்கை எடுத்துக் கொண்டால், முதல் காலாண்டை விட, இரண்டாவது காலாண்டில், முதலீடுகள் அதிகரித்துள்ளன. ஆனால், தனியார் ஒட்டுமொத்த நுகர்வு என்பது, கடந்த 8 காலாண்டுகளாக இருந்ததை விட மிகவும் குறைந்துள்ளது.
விவசாய வளர்ச்சி பொய்த்துள்ளது, சேவைத் துறை சரிவடைந்துள்ளது, கட்டுமானத் துறை மந்தமாகியுள்ளது. வர்த்தகம், ஹோட்டல் தொழில்கள் போன்றவை மிதமான வளர்ச்சியையை அடைந்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில், சுயநினைவோடு உள்ள ஒருவர் பொருளாதாரம் ஆராக்கியமாக இருக்கிறது என்று கூறி முடியுமா?
முத்ரா என்ற மாயை
அரசாங்கம் மார்தட்டிக் கொள்ளும் மற்றொரு விஷயத்தை பார்ப்போம். கடந்த மூன்றாண்டுகளில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டள்ளன என்று கூறப்படுகிறது. 28, மார்ச் 2016 அன்று, முத்ரா திட்டத்தை குறிப்பிட்ட பிரதமர், 31 மில்லியன் கடன்கள் இளம் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஒரு பேச்சுக்கு இதை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், ஒரு புதிய தொழில், குறைந்தது ஒரு வேலையையாவது உருவாக்கியிருக்க வேண்டும்.பிரதமரின் பேச்சை உண்மையென்று எடுத்துக் கொண்டால், 31 மில்லியன் வேலைகள உருவாகியிருக்க வேண்டும். முத்ரா கடன்கள் என்பன, பொதுத் துறை வங்கிகளும், ஊரக வங்கிகளும், கடந்த பல வருடங்களாக வழங்கி வரும் தொழில் கடன்களின் கூட்டுத் தொகையே. 28 ஜுலை 2017 அன்று உள்ளபடி, 8.56 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்த தொகை 3.69 லட்சம் கோடி. சராசரி கடனின் அளவு, 43,000/-
43,000/- கடன் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். இவர்கள் கூற்றின்படி, கடன் பெற்று புதிய தொழில்களை தொடங்கியவர்கள், புதியவர் ஒருவருக்கு வேலை அளித்து, மாதம் 5,000 ரூபாய் சம்பளம் தருகிறார் என்று வைத்துக் கொண்டால், 43,000 கடன் தொகை 8 மாதத்தில் காணாமல் போய் விடும். 43,000 ரூபாய் முதலீடு, மாதந்தோறும் 5,000 ரூபாய் வருமானத்தை பெற்றுத் தருமா என்ன? ஒவ்வொரு தொழில் கடனும், ஒரு நிரந்தர வேலையை உருவாக்கியுள்ளது என்பது முழுமையான பொய். இது, ஒவ்வொரு இந்தியனின் வங்கியிலும் 15 லட்சம் கருப்புப் பணம் வெளி நாட்டிலிருந்து மீட்கப்பட்டு போடப்படும் என்று கூறப்பட்ட பொய்யைப் போலவேதான் இது.
நீங்கள் வேலையில்லாத இளைஞராக இருந்தீர்கள் என்றால், உங்கள் கணக்கில் போடப்பட்டுள்ள 15 லட்சத்தை செலவு செய்து, முத்ரா வேலையை பயன்படுத்திக் கொண்டு, அரசு தரும் புள்ளி விபரங்களை உண்டு மகிழ்ந்து, மகிழ்ச்சியான வாழ்வை வாழ பழகிக் கொள்ள வேண்டியதுதான்.
தமிழில் ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.