ப.சிதம்பரம்
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கைதான், இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் ஒரு அவலத்தைப் பற்றி நமது கவனத்தை திருப்பியிருக்கிறது : பசி. இந்தியாவில் உள்ள கணிசமான பகுதியினர், ஒரு வருடத்தில் பல மாதங்கள் பசியோடு உணவில்லாமல் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாது உண்மை. எதற்காக அரசு இந்த விஷயத்தை மறுக்க வேண்டும் ? அல்லது அரசு வசதியில்லாத அல்லது விரும்பாத அனைத்து விஷயங்களையும் ஒரேயடியாக மறுப்பது என்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்டதா? அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ள எண்கள் பொய் சொல்லாது. அதில் மர்மம் ஏதும் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் சில நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. சில நாடுகள் விடுபடுகின்றன. போதுமான தரவுகள் கிடைக்காத காரணத்தால் சில நாடுகள் பட்டியலில் இருந்து விடுபடுகின்றன. இது ஒரு பெரிய விஷயம் கிடையாது. கடந்த 11 ஆண்டுகளாக உள்ள எண்களை பார்த்தால், நாடுகளின் எண்ணிக்கை 117 முதல் 122 வரை மாறி வந்துள்ளன. இது ஒரு பெரிய வேறுபாடு இல்லை. இதிலிருந்து நாம் என்ன முடிவுகளுக்கு வர முடியும் ?
2008ம் ஆண்டு முதல் 2011 வரை, இந்தியா இந்த பட்டியலில் மேலும் கீழுமாகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் அதன் மதிப்பு ஒரே அளவுதான் இருந்துள்ளது. 2011 முதல் 2014 வரை, அதன் ரேங்கும், மதிப்பும் குறிப்பிட்ட அளவு முன்னேறியது. 2014 முதல் கடுமையான சரிவு இருந்துள்ளது.
நன்மையும் தீமையும்.
2014ம் ஆண்டு வரை, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்த இந்தியாவின் நிலை, அதன் பிறகு ஏன் சரிவை சந்தித்தது என்ற கேள்வியையே நாம் நம்மைப் பார்த்து கேட்டுக் கொள்ள வேண்டும்.
1947ம் ஆண்டு முதல் இப்போது வரை உள்ள அத்தனை அரசாங்கங்களும், இதில் உள்ள நன்மை மற்றும் தீமைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். உலக வறுமை அளவீடு என்பது, ஒரு நாட்டின் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் வறுமையில் உள்ளார்கள், ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளில் எத்தனை சதவிகிதம் வளர்ச்சி குறைபாட்டோடு உள்ளது, ஐந்து வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் போன்றவை கணக்கிடப்படும். இதில் முன்னேற்றம் உள்ளது. எண்களால் இந்த கட்டுரையை சலிப்படைய வைக்காமல், எளிமையாக சொல்கிறேன். 2006 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகளிடையே வளர்ச்சி குறைபாடு குறைந்துள்ளது. பெண்களிடையே சத்துக் குறைபாடு, குறிப்பாக தாய்மைப் பேறடையும் வயதுடைய பெண்களிடையே சத்துக் குறைபாடு குறைந்துள்ளது. பிறக்கும் குழந்தைகளின் எடை குறைபாடு குறைந்துள்ளது. தாய்ப்பால் வழங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவீடுகளின்படி, 2016 வரை, குழந்தைகளிடையே எடை குறைபாட்டை நாம் சரி செய்ய முடியவில்லை.
இதில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கும், சரிவுக்கும் முக்கியமான காரணம் உணவுதான். எந்த அளவு உணவு கிடைக்கிறது. எத்தனை எளிதாக கிடைக்கிறது. எவ்வளவு இலகுவாக கிடைக்கிறது என்பதே இவற்றை தீர்மானிக்கிறது. மக்களுக்கு போதுமான உணவு வேண்டும். மற்றவை எல்லாம் பிறகுதான். இந்தியா தனது மக்களுக்கு போதுமான அளவு உணவை உற்பத்தி செய்கிறது. ஆனால் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்து விடுவதில்லை. இதுதான் மிகப்பெரிய முரண்பாடு. எத்தனையோ திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டாலும் ஒரு சில திட்டங்களே போதுமான அளவு பலனை அளித்தன. இவற்றில் முக்கியமானது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013.
உணவுப் பாதுகாப்பு சட்டம் அளித்த வாக்குறுதி
உணவு பாதுகாப்பு சட்டம் ஒவ்வொரு மாதமும் மான்ய விலையில் உணவு தானியங்களை உத்தரவாதப் படுத்தியது. ஒவ்வொரு முன்னுரிமை வழங்கப்பட்ட வீட்டுக்கும் 5 கிலோ தானியம், ஒவ்வொரு அந்தோத்யா திட்டத்துக்கும் 35 கிலோ தானியம், கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும், தினமும் ஒரு வேளை சத்தான உணவு, குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை உணவு, 6000 ரூபாய் ஊக்கத் தொகை, ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேளை இலவச சத்தான உணவு, 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு, உணவோ, தானியமோ கிடைக்காத நேர்வுகளில் உணவு ஊதியம் ஆகியவற்றை உத்தரவாதப்படுத்தியது. இத்திட்டம், 75 சதவிகித ஊரக மக்களையும், 50 சதவிகித நகர மக்களையும் சென்றடையும் என்று திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில திட்டக் குழு இத்திட்டத்தை செயல்படுத்தும்.
உணவுப் பாதுகாப்பு சட்டம் என்பது மிகவும் துணிச்சலான, தொலைநோக்குத் திட்டம். இத்திட்டம் குறித்தும் விமர்சனம் வந்தது. ஆனால், இதற்கு மாற்று என்பது, ஒவ்வொருவருக்கும் அடிப்படை வருமானத்தை உறுதி செய்வதுதான். இது மிகவும் செலவு பிடித்திருக்கும்.
அலட்சியம்
அரசு 2014ல் மாறி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றபோது, இத்திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். தூய்மை இந்தியாவுக்கு அளித்த முக்கியத்துவத்தை, பிரதமர் உணவுப் பாதுகாப்புக்கு வழங்கவில்லை. இதற்கு மாற்றுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. உணவுப் பாதுகாப்புச் சட்டம் புறக்கணிக்கப்பட்டது. ஜுலை 2017ல், இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு மாநிலங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மோசமான நிலையில் இருப்பதை உச்சநீதிமன்றம் கண்டறிந்தது. நிதிநிலை அறிக்கை ஆவணங்களின்படி, அரசு 2015-16ம் ஆண்டு, 1,34,919 கோடி செலவிட்டது. 2016-17ல் இத்தொகை 130,335 கோடி. மறு மதிப்பீட்டில் 130,673 கோடி. உண்மையில் மே 2017 அன்று உள்ளபடி செலவிடப்பட்டது 105,672 கோடி மட்டுமே. இதில் உள்ள அலட்சியத்துக்கான விளக்கம் இல்லை.
யூனிசெப் அமைப்பின் 2017ம் ஆண்டு அறிக்கை இந்தியாவில் 190 மில்லியன் மக்கள் உணவு குறைபாட்டால் அவதிப்படுவதாக தெரிவிக்கிறது. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் நமது முகத்துக்கு முன்னால் ஒரு கண்ணாடியை நீட்டும்போது, அதில் உள்ள மருக்களை நாம் மறுக்க முடியாது. வறுமை மற்றும் பட்டினியை முழுமையாக ஒழிப்பதற்கு மத்திய அரசு ஒரு உத்தரவாதத்தை அறிவித்தே ஆக வேண்டும். அது புல்லட் ரயில் அல்லது உலகின் உயரமான சிலை அல்லது வேறு ஏதாவது கோமாளித்தனத்தை விட முக்கியமானது.
தமிழில் : ஏ.சங்கர்