Advertisment

சிதம்பரம் பார்வை : திருவள்ளுவரை உதாசீனப்படுத்தினால் ஆபத்து

ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கு ஊக்க நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது பண வீக்கத்திலும், நிதிப் பற்றாக்குறையிலும் கொண்டு விடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Money - p.chidambaram

ப.சிதம்பரம்

Advertisment

சொற்களை விட செயல்கள் வலிமையானவை. நிதியமைச்சர் சிறிது தூரத்தில் உள்ள குஜராத்துக்கு கேட்கும் வகையில் உரத்த குரலில் கூறினார். “பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் முதலீடாக 2,11,000 கோடி; 34,800 கிலோ மீட்டர் சாலைகளை கட்டமைப்பதற்கான பாரத்மாலா திட்டத்துக்காக 5,35,000 கோடி“. “பொருளாதாரம் மிக வலுவான அடித்தளத்தோடு உள்ளது“ என்று கூறி விட்டு, “எந்த இடத்தில் ஊக்க நடவடிக்கை தேவையோ, அதற்கான நடவடிக்கையை எடுத்து உள்ளோம்“ என்றார். பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர், “2014-17 முதல் இந்தியா மிக வலுவாக 7.5 சதவிகித வளர்ச்சியை அடைந்து வருகிறது“ என்று கூறினார்.

பொருளாதாரம் வலுவான அடிப்படைகளோடும், 7.5 சதவிகிதத்தில் வளர்ச்சி அடைந்து வந்தால், எதற்காக ஊக்க நடவடிக்கை? இப்படி ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கு ஊக்க நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது பண வீக்கத்திலும், நிதிப் பற்றாக்குறையிலும் கொண்டு விடும். இவர்களின் மதிப்பீட்டில் ஏதோ தவறு இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

பல்வேறு பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் மத்திய புள்ளி விபர அலுவலகத்தின் தரவுகளில் இருந்து, இவர்களின் கருத்துக்கள் வேறுபடுகின்றன. நமது கருத்துக்களை ஓரம் வைத்து விட்டு எண்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். ஜனவரி-மார்ச் 2016 முதல் உள்ள காலாண்டுகளுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம், 9.1, 7.9, 7.5, 7.0, 6.1, மற்றும் 5.7. பொருளாதாரம் நிச்சயமாக 7.5 சதகிகிதத்தில் வளரவில்லை. உற்சாகமாக வளர்ந்து வந்த பொருளாதாரம், திடீரென்று மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டது. அது முதல், ஏப்ரல் 2016 முதல் தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. நிதியமைச்சர் மற்றும் பொருளாதார செயலாளரின் கருத்தில் உள்ள முதல் பிழை இதுதான்.

இரண்டாவது முக்கியமான பிழை, பொருளாதார சரிவுக்கான காரணத்தை கண்டு பிடிப்பது.

அய்யன் திருவள்ளுவர்,

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்“ என்று கூறினார்.

பொருளாதார சரிவுக்கான காரணங்களை கவனமாக ஆராய்ந்திருந்தால், தனியார் முதலீடு, தனியார் நுகர்வு மற்றும் ஏற்றுமதி தடுமாறத் தொடங்கியிருந்தன என்பதே. தற்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டு முடிவுகளும், இந்த தடுமாற்றங்களை சரி செய்ய எந்த வகையிலும் உதவாது.

வங்கிகளில் மறுமுதலீடு உதவாது

வங்கிகளில் மறுமுதலீடு என்பது ஒரு வரவேற்கத் தகுந்த நடவடிக்கையே. பல கடன்களை தள்ளுபடி செய்ததன் காரணமாக, வங்கிகளின் முதலீடு குறைந்துள்ளது. மேலும் பல கடன்கள் தள்ளுபடி செய்தே ஆக வேண்டிய நெருக்கடி உள்ளது. 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் திவாலாகி விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால், வங்கிகளின் மூலதனம் மேலும் குறையும். மறு முதலீடு என்பது, வங்கிகளை மேலும் வலுவாக்கும். வங்கிகளின் கடன் வழங்கும் திறன் கூடும். ஆனால் வங்கிகள் கூடுதலாக கடன் வழங்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.

இந்தியாவில் உள்ள எந்த தொழிலதிபரும் தற்போது தொழில் தொடங்க ஏதுவாகவோ, அல்லது தொழிலை விரிவாக்குவதற்கான சூழலோ இருப்பதாக நம்பவில்லை. (“தொழில் தொடங்க ஏதுவான சூழல்” என்பது குறித்து தற்போது அரசு பேசுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.). தொழிலதிபர்கள் மேலும் முதலீடுகளை செய்ய (தங்கள் சொந்த பணம் மற்றும் வங்கிகளில் இருந்து கடன் பெற்ற பணம்) முன் வராத வரை, வங்கிகளில் செய்துள்ள இந்த மறு முதலீடு எந்த வகையிலும் உதவி செய்யாது. தற்போது செய்ய வேண்டிய முக்கியமான நடவடிக்கை, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களில் முதலீடுகளை ஊக்குவிப்பதே. இந்தத் தொழில்கள் தற்போது உள்ள நிலைமைக்கு வங்கிகளின் மறு முதலீடு எந்த வகையிலும் உதவாது.

மேலும், அரசின் இந்த திட்டத்துக்கு மேலும் பாதகமான அம்சங்கள் உள்ளன. அரசு பத்திரங்களை வெளியிடும். வங்கிகள் இந்த பத்திரங்களை வாங்கும். வங்கிகள் முதலீடு செய்யும் அந்த பணத்தை, அரசு அந்த வங்கிகளிலேயே முதலீடு செய்யும். “ஒருவனிடமிருந்து திருடி, அவனுக்கே அதை கொடு“ என்ற தத்துவமே இது. இதனால், வருவாய் பற்றாக்குறை அளவு மீறப்பட்டு, அதீதமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தலைமை பொருளாதார ஆலோசகர் அக்டோபர் 25 அன்று சுட்டிக்காட்டியபடி, மறுமுதலீடு நடவடிக்கை, அரை மனதோடு மூன்று ஆண்டுகள் தாமதமாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. அவரின் கருத்துப்படி, வங்கி சீர்திருத்தங்கள் மற்றும் வங்கி நிர்வாகத்துக்கு அளவுகோள்கள் நிர்ணயிப்பதோடு சேர்த்து இதை செய்திருக்க வேண்டும். எனது கருத்துப்படி, இதை செய்த பிறகே, மறு முதலீடு செய்திருக்க வேண்டும். அவரின் உரையில் மூன்றாம் பகுதியை பாருங்கள். அரசு இது குறித்து வாயே திறக்கவில்லை.

சாலை திட்டம் வெறும் அறிவிப்பு மட்டுமே

மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கம் அடுத்த திட்டம் 34,800 கிலோ மீட்டர் சாலைகள். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உருவாக்கி வரும் 10,000 கிலோ மீட்டர் சாலைகளும் இதில் அடக்கம். எஞ்சியுள்ள சாலைகள், பொருளாதார சரகங்கள், அவற்றின் இணைப்பு சாலைகள், சாலைகளின் திறனை மேம்படுத்துதல், எல்லை சாலைகள் மற்றும் கடலோர சாலைகள். எந்த சாலைப் பணிகளை தொடங்குவதற்கு முன்பும் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற வேண்டும். விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும். சுற்றுச் சூழல் தடையில்லா சான்று பெற வேண்டும். நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும். டெண்டர் விடப்பட வேண்டும். நிதி ஆதாரங்களை உறுதி செய்ய வேண்டும். சுங்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இது போல ஒவ்வொரு சாலைப் பணிக்கும் முன்னதாக பல கட்டங்கள் உள்ளன. அடுத்த 18 மாதங்களில் இந்த 34,800 கிலோ மீட்டர் சாலை பணிகளில் குறிப்பிடும் விதமாக எந்தப் பணியும் நடைபெறப் போவதில்லை.

இது அல்லாமல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற முட்டாள்த்தனமான நடவடிக்கைகளில் இறங்க மாட்டோம் என்று அறிவித்திருக்கலாம். ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியதில் உள்ள பிழைகளையும் முரண்பாடுகளையும் சரிசெய்ய அரசு சாராத ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியிருக்கலாம். வரி வசூல் செய்யும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதலான, அளவுக்கு அதிகமான அதிகாரங்களை ரத்து செய்திருக்கலாம். வரி வசூல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை ரத்து செய்திருக்கலாம். தொழில் நடத்துபவர்களின் மனதில் பயத்தை விதைத்துள்ள புலனாய்வு அமைப்புகளை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இந்த அரசு ஆர்வமாகவோ, தயாராகவோ இல்லை. வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் ஒரு அரசாகவே இந்த அரசு இருக்கிறது. வேலையின்மை மற்றும் மனமுடைந்த இளைஞர் பட்டாளத்தை சந்திக்க நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வோம்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் 29.10.17 தேதியிட்ட இதழில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் ஆ.சங்கர்

Gst P Chidambaram A Sankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment