Advertisment

சிதம்பரம் பார்வை : 70ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவின் சாதி என்ற சாபம்.

வர்ணம், சாதி மற்றும் தீண்டமை, இந்து மதத்தை ஒரு அடக்குமுறை மதமாகவும், உழைப்பை சுரண்டும் மதமாகவும், குறைந்த உற்பத்தியை அளிக்கும் ஒரு முறையாகவும் மாற்றியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
P.Chidambaram - A.Sankar

ப.சிதம்பரம்

Advertisment

என் வாழ்நாளில் எனது அனுபவத்தில் நான் தெரிந்து கொண்ட ஒரு விஷயம், சொந்த சாதி குறித்த பெருமை, ஒரு நல்ல மனிதனிடம் கூட இருப்பதையும், அது தவறென்றே அந்த மனிதர் உணராது அது குறித்து வெட்கப்படாது இருப்பதையும் கண்டிருக்கிறேன். இப்படி சாதிப் பெருமை உணர்வு படித்தவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களிடம் இருப்பதைக் கூட நான் கண்டிருக்கிறேன்.

உதாரணத்துக்கு, ராஜாஜி என்று அழைக்கப்பட்ட சி.ராஜகோபாலச்சாரி ஒரு அறிவுஜீவி, பண்பாளர், ஒரு தியாகி. அப்போதைய மெட்றாஸ் மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. சாதியோடு நேரடியாக தொடர்புள்ள ஒரு விஷயத்தை அவர் கையில் எடுத்தார். தொழிற்கல்வி என்ற முறையை பள்ளிக் கல்வித் துறையில் அவர் அறிமுகப்படுத்தினார். தொழிற் கல்வியில் விருப்பமான துறையை சம்பந்தப்பட்ட மாணவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அவர் மாணவர்கள் தங்கள் தந்தையின் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். சாதி அடிப்படையிலான குலக்கல்வி திட்டம் என்று அவரது திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் அவர் ராஜினாமா செய்தார். ராஜாஜி தவறு செய்து விட்டார் என்பது உண்மையே. ஆனால் அவர் சாதி உணர்வில் இதை செய்தார் என்று நான் நம்பவில்லை.

சரி செய்ய முடியாத பிளவுகள்.

இந்தியாவில் நிலவும் சாதி என்ற முறை வர்ணத்தின் அடிப்படையிலானது. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்ற நான்கு வர்ணத்தின் அடிப்படையிலேயே சாதிய முறை நிலவுகிறது. சாதிகளை பிரிக்கும் இந்த அமைப்பு முறை, மேல் கீழாக, பரம்பரை பரம்பரையாக, உடைக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

நீங்கள் பிராமணர் குடும்பத்திலோ, சத்திரியர் குடும்பத்திலோ, வைசிய குடும்பத்திலோ, சூத்திர குடும்பத்திலோ பிறந்து விட்டீர்களேயென்றால், நீங்களும் உங்கள் வாரிசுகளும் அந்த சாதியிலேதான் உங்கள் வாழ்க்கை முழுவதையும் கழிக்க வேண்டும். இதை விட ஒரு நடைமுறை ஒரு மனிதனின் சுயகவுரவத்தையும், அவன் மரியாதையையும் குலைக்க முடியாது. புத்த மதம் மற்றும் ஜைன மதங்கள், உடைக்க முடியாத இந்து மதத்தின் சாதிய கட்டமைப்பை எதிர்த்தே உருவாகின.

வர்ணம் மோசமென்றால், சாதி சமூகத்தை மேலும் மோசமாக சீரழித்தது. ஒவ்வொரு வர்ணத்துக்கும் உள்ளாக, பல்வேறு சாதிகளும், அதற்கு உட்பிரிவுகளும் உண்டாகின. ஒவ்வொரு சாதி மற்றும் அதன் உட்பிரிவு உள்நுழைய முடியாத ஒரு அமைப்பாக மாறியது. ஒவ்வொரு சாதியும் அதற்கென்றே பல்வேறு கொடுமையான விதிகளையும் சட்டங்களையும் உருவாக்கிக் கொண்டது. விதி மீறல்களை கடுமையாக தண்டிக்கவும் விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த சாதி முறையின் கொடுமையான வடிவம் தீண்டாமை. தற்போது தலித் என்று அழைக்கப்படும் தீண்டத்தகாதவர்கள், இந்த மதத்தை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்டனர். தலித்துகள் வர்ண அடுக்குமுறையில் சூத்திரர்களுக்கும் கீழானவர்கள் மட்டுமல்ல, அவர்கள் இந்து மதத்திற்கு வெளியே உள்ளவர்கள். வர்ண அடுக்குமுறையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதே தலித்துகளின் பணி என்று உருவாக்கப்பட்டது. கீழான பணிகள் என்று கருதப்பட்ட செருப்பு தைப்பது, பிணத்தை அகற்றுவது, கழிவுகளை சுத்திகரிப்பது, மாடுகளின் தோல்களை எடுப்பது என்ற பணிகளை அவர்கள் செய்தார்கள். இது தவிர, உயர் சாதியினரின் வயல்களில் குறைந்த கூலிக்கு பணி செய்யும் தொழிலாளர்களாகவும் அவர்கள் ஆனார்கள்.

சாதிக்கு எதிர்ப்பு

எந்த அளவீட்டின்படி பார்த்தாலும், வர்ணம், சாதி மற்றும் தீண்டத்தகாத முறை இந்து மதத்தை ஒரு அடக்குமுறை மதமாகவும், உழைப்பை சுரண்டும் மதமாகவும், குறைந்த உற்பத்தியை அளிக்கும் ஒரு முறையாகவும் மாற்றியது. குறைந்த உற்பத்தியை அளிக்கும் முறை என்பதை கவகிக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களுக்கு, கல்வி, நியாயமான கூலி, சொத்துக்களுக்கான உரிமை, சமூக சமத்துவம், அரசியல் பிரதிநிதித்துவம், வழங்க முடியாமல் போனால் அந்த சமூகம் எப்படி தனது முழுமையான திறனை பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்க முடியும்?

இதில் பல அம்சங்கள் சுதந்திர போராட்டத்தின்போது, விவாதிக்கப்பட்டது. பாசாகேப் அம்பேத்கர், தலித்துகளின் குரலாக ஒலித்தார். பெரியார் என்று அழைக்கப்படும் ஈவே.ராமசாமி, பிராமணர் அல்லாதோரின் நலன்களுக்காக பாடுபட்டார். தமிழ்நாட்டை பொருத்தவரை, பிராமணர் அல்லாதோர் 97 சதவிகிதத்தினர். ஸ்ரீ நாராயண குரு தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பாக ஈழவ சாதியினர் விடுதலைக்காக பாடுபட்டார்.

சுதந்திரத்துக்கான போராட்டம் தேசத்தின் கவனத்தை ஈர்த்தபோது, சமூக நீதிக்கான குரல் பின்னுக்கு தள்ளப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட நமது தலைவர்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு, தங்கள் உயிரையும் இழக்கத் தயாராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரிஸ்டோப் ஜாஃபர்லோட், தனது 4 ஆகஸ்ட் 2017 நாளிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில், மகாத்மா காந்தி, மதன் மோகன் மாளவியா, கே.எம்.முன்ஷி, ராஜாஜி, தயானந்த சரஸ்வதி ஆகியோர் 1920களிலும், 1930களிலும் ஆற்றிய உரைகளின் அடிப்படையில், தனி மனித உரிமைகளுக்கு எதிரான வர்ணாசிரம முறையை நியாயப்படுத்தும் பணிகளை செய்ததாக கூறுகிறார். 1965ல் வெளியான தீனதயாள் உபாத்யாயா எழுத்துக்கள் மற்றும் சமீபத்திய யோகி ஆதித்யநாத் உரைகள் ஆகியவற்றில் இருந்து அவர் மேற்கோள் காட்டினார்.

சில தலைவர்களின் கருத்துக்கள் காலப் போக்கில் மாற்றம் கண்டன. மகாத்மா காந்தி, பின்னாளில் கருத்துக்கள் காலப் போக்கில் மாற்றம் கண்டன. மகாத்மா காந்தி, பின்னாளில் "நான் சாதி அமைப்பை நம்பவில்லை. அது ஒரு தேவையற்ற வளர்ச்சி" என்றே அறிவித்தார். ஆனால் யோகி ஆதித்யநாத்தோ, "சாதிய முறை, விவசாயத்தில் கடைபிடிக்கப்படும் முறையைப் போலவே இந்து மதத்தில் உள்ளது. அது சமுதாயத்தை ஒரு ஒழுங்கமைவோடு வைத்துக் கொள்ள உதவுகிறது" என்று கூறியுள்ளார்.

நூற்றாண்டு புதிர்

இத்தனை நூற்றாண்டுகளாக சாதிய முறை எப்படி தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதே ஒரு புதிர். பணமும் செல்வாக்கும் உள்ள வைசியர்களும், சத்திரியர்களும் எப்படி பிராமணர்கள் தங்களுக்கு மேல் சாதியாக இருப்பதை ஏற்றுக் கொண்டார்கள். ராஜகுரு ஏன் எப்போதுமே பிராமணராக இருக்கிறார்? சமூகத்தில் ஒரு பாதுகாப்பு உணர்வை வழங்கக் கூடிய ஒரு வசதியான அமைப்பு முறையாக சாதிய முறை உள்ளது என்பதாலா? நகர்மயமாக்கல் மற்றும் கல்வி வளர்ச்சி காரணமாக சாதி இன்று இந்துமதத்தின் விளிம்புகளை அரித்துக் கொண்டிருந்தாலும், சாதி இன்னமும் இந்து மதத்தின் ஆணி வேராக உள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் 14,15,16,17 மற்றும் 21 இருந்தாலும் சாதிய அமைப்பு இன்றும் தாக்குபிடித்தே வருகிறது. அரசியலில் சாதி ஒரு பெரும் பங்கை வகிக்கிறது. அதே போல சமூக உறவுமுறைகள் மற்றும் திருமணங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு நிர்வாகம், தனியார் துறை, வணிகம் மற்றும் பல்வேறு இடங்களில் சாதி முக்கிய பங்கு வகிக்கிறது. கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களிலும் சாதி முக்கிய பங்காற்றுகிறது.

எனது பார்வையில் சாதி இந்தியா மற்றும் இந்திய மக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஒரு முறையாகவே இருக்கிறது. சாதிய ஒழிப்பு என்பதற்கான சாத்தியக் கூறுகள் என் கண்ணில் தென்படவேயில்லை.

(முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 27.8.17 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். http://indianexpress.com/article/opinion/columns/casteist-indian-caste-system-varna-hindus-brahmin-kshatriya-vaishya-sudra-dalit-across-the-aisle-india-at-70-the-curse-of-caste-4815198/)

ஆ.சங்கர்

P Chidambaram A Sankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment