ப.சிதம்பரம் பார்வை : 70ம் ஆண்டில் சுதந்திர இந்தியா - பொருளாதாரம்

பொருளாதாரத்தின் நிலை குறித்து போதுமான தரவுகள் வெளியாகியுள்ளன. பொருளாதார ஆய்வறிக்கை பாகம் 2 மற்றும், ரிசர்வ் வங்கியின் கொள்கை குறிப்புகள் வெளியாகியுள்ளன.

ப.சிதம்பரம்

70ம் ஆண்டில் உள்ள சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து, மிகச் சிறப்பாக பல கட்டுரைகள் வந்துள்ளன. கிராமப்புரம் மற்றும் நகர்ப்புரங்களை சேர்ந்த பலரோடு உரையாடுகையில், விலைவாசி உயர்வு, புதிய வேலைகள் உட்கட்டமைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் அவர்கள் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியல் கூட்டங்களில், எதிர்க்கட்சியினரை திட்டுவது, எதிர்க்கட்சி தலைவர்களை மோசமாக விமர்சிப்பது போன்றவற்றில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பூர்த்தி செய்யப்படாத தேர்தல் வாக்குறுதிகள், விவசாய விளை பொருட்களுக்கான விலை, வேலை வாய்ப்பு, எரிபொருள், போக்குவரத்து, உட்கட்டமைப்பு பற்றாக்குறை, கல்விக் கடன் போன்ற விஷயங்களிலேயே மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். இதன் காரணமாகவே இந்த வாரமும் பொருளாதாரத்தைப் பற்றி எழுத முடிவு செய்தேன். பொருளாதாரத்தின் நிலை குறித்து போதுமான தரவுகள் வெளியாகியுள்ளன. பொருளாதார ஆய்வறிக்கை பாகம் 2 மற்றும், ரிசர்வ் வங்கியின் 2 ஆகஸ்ட் 2017 நாளிட்ட கொள்கை குறிப்புகள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் பொருளாதாரத்தின் நிலை குறித்த ஐந்து அளவீடுகள் எனக்கு கிடைத்தன.

மந்தமான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மை

முதல் அளவீடு வேலை வாய்ப்பு: பொருளாதார ஆய்வறிக்கையில் வேலை வாய்ப்புக்கென்று தனி பகுதி இல்லை. “வேலை வாய்ப்பு மற்றும் திறன் வளர்ச்சி” என்று இரண்டு பக்கத்துக்கு மட்டுமே ஒரு அறிக்கை உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் எத்தனை வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன என்பதற்கான எந்த தரவுகளும் இல்லை. திறன் வளர்ச்சி பயிற்சியளிக்கப்பட்ட 4,27,470 பேர்களுக்கு வேலை வாய்ப்பு ! என்ற தகவல் மட்டுமே உள்ளது. 2017-19 ஆண்டில் எத்தனை வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன என்ற விபரங்கள் இல்லை. மிக மிக முக்கியமான வேலை வாய்ப்பு குறித்து எந்த தகவல்களையும் அளிக்காமல் பொருளாதார ஆய்வறிக்கை மவுனமாக இருப்பதே, இந்தியா எத்தகைய மந்தமான, வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது அளவீடு ஜிடிபி வளர்ச்சி: ஜிடிபி வளர்ச்சி 2015-16ம் ஆண்டில் 8 சதவிகிதமாக இருந்தது 2016-17 ஆண்டில் 7.1 சதவிகிதமாக குறைந்துள்ளது என்பதை பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. 2016-17ம் ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி விகிதம் 7.7 சதவிகிதம் என்றும், இரண்டாவது பாதியில் 6.5 சதவிகிதம் என்பதையும் ஆய்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி சரியும் என்று நான் கூறியது போலவே, வளர்ச்சி விகிதத்தில் சென்று கொண்டிருந்த பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒட்டு மொத்த மதிப்பு கூட்டுதலின் வளர்ச்சி இதை விட மோசமாக உள்ளது. 2016-17ன் கடைசி காலாண்டில் இந்த வளர்ச்சி 5.6 சதவிகிதம் மட்டுமே. பொருளாதார ஆய்வறிக்கை, இந்த வளர்ச்சி விகிதத்தை (6.5 சதவிகிதம்) தக்கவைக்க வேண்டுமென்றால், தனியார் முதலீடு, ஏற்றுமதி மற்றும், கடன் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் கணக்கு வழக்குகளை வைத்திருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

அடுத்த அளவீடு முதலீடு: இரண்டு வரைபடங்களில், (படங்கள் 47 மற்றும் 48) ஒட்டு மொத்த மூலதன உருவாக்கம் சரிவடைந்துள்ளதை விளக்குகிறது. ஒட்டுமொத்த மூலதன உருவாக்கம் 2015-16 இரண்டாவது காலாண்டு முதல் சரிவையே சந்தித்து வருகிறது. தனியார் மூலதனமும் 2015-16 நான்காவது காலாண்டு முதல் சரிவையே சந்தித்து வருகிறது. இது 2016-17 ஆண்டிலும் தொடர்ந்தது. அடுத்து என்ன நடக்கும் என்ற மதிப்பீடும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. “நிதிநிலை அறிக்கையில் உள்ள தகவலின்படி, அரசின் முதலீடு செலவுகள், 2017-18ல் ஜிடிபியோடு ஒப்பிடுகையில், குறையும்” என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

நான்காவது அளவீடு கடன் வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ளதை அப்படியே தருகிறேன். நான் கூடுதலாக எதுவும் சேர்க்க வேண்டியதில்லை. “2003-08 ஆண்டு காலத்தில் கடன் வளர்ச்சி மிக அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் 20 சதவிகிதத்துக்கு அதிகமாக வளர்ச்சி இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக, 2008-10 ஆண்டு காலத்தில், இந்த வளர்ச்சி 15 சதவிகிதமாக வீழ்ந்தது. பிப்ரவரி 2014 வரை இந்நிலை நீடித்தது. பின்னர் இறங்குமுகமே. 2016-17ல் வங்கி கடன் விகிதம் சராசரியாக 7 சதவிகிதமாக இருந்தது. தற்போது மே 2017ல் இந்த சதவிகிதம் வெறும் 4.1 சதவிகிதமே”. உணவு அல்லாத கடன், விவசாயம், தொழில், சேவைத் துறை, தனி நபர் கடன் ஆகியவை, செப்டம்பர் 2016 முதல் தொடர்ந்து இறங்குமுகத்தையே சந்தித்து வருகிறது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது தொழில் துறையே. செப்டம்பர் 2016 முதல் சரிவையே சந்தித்து வருகிறது. தொழில் நிறுவனங்களுக்கான பொதுத்துறை வங்கிகளின் கடன் விகிதம் செப்டம்பர் 2016 முதல் வீழ்ந்துள்ளது. தனியார் வங்கிகள்தான் தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளித்து வருகின்றன.

ஐந்தாவது அளவீடு தொழில் உற்பத்தி: பொருளாதார ஆய்வறிக்கையின்படி, “தொழில் துறை வளர்ச்சி 8.8 சதவிகிதத்திலிருந்து 2015-16ல் 5.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. ” தொழில் உற்பத்தி குறியீடு குழப்பமான விபரங்களை அளிக்கிறது. 2004-05 ஆண்டை கணக்கில் எடுத்துக் கொண்டால், தொழில் உற்பத்தி குறியீடு 0.7 சதவிகிதத்திலிருந்து 1.9 சதவிகிதமாக 2016-17 முதல் காலாண்டில் உயர்ந்துள்ளது. ஆனால் 2011-12 ஆண்டை அடிப்படையாக கொண்ட புதிய கணகீட்டின்படி, வளர்ச்சி விகிதம் 2016-17 முதல் காலாண்டில் 7.8 சதவிகிதத்திலிருந்து கடைசி காலாண்டில் 2.9 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது !. இந்த புதிய அளவீடு சரிவை சுட்டிக்காட்டுகிறது என்றாலும், பழைய கணக்கீட்டோடு ஒப்பிடுகையில் முன்னேற்றமே. புதிய கணக்கீடுகள் மகிழ்ச்சியை அளித்தாலும், அதை சரி என்று நம்புவது அவரவர் விருப்பம்.

மத்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிக்கை ஏற்கனவே இருந்த பல்வேறு கருத்துக்களை உறுதிப்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, 2017-18ன் இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. தொழில் உற்பத்தியும் குறைந்து, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களின் உற்பத்தி குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய முதலீடுகள் 2016-17ன் முதல் காலாண்டில் கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. வங்கிகள் மற்றும் கார்ப்பரேஷன்களின் இரட்டை ஆண்டறிக்கைகளில் புதிய முதலீடுகள் குறைந்து, மூலதனங்கள் குறைவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளது. மாநிலங்களும் தங்களது மூலதன செலவுகளை குறைக்கும். இந்த பொருளாதார ஆய்வறிக்கை வேலை வாய்ப்பு மற்றும் கடன் வளர்ச்சி குறித்து எதுவும் கூறவில்லை. நான் பயந்தது போலவே, நாம் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம். அரசு தனக்கு முன்னால் உள்ள வெளிப்படையான ஆதாரங்களை காண மறுக்கிறது. 2019ம் ஆண்டில் நல்ல காலம் பிறக்கும் என்பதை வசதியாக மறந்து விட்டு, 2022ல் புதிய இந்தியா என்று பேசத் தொடங்கியுள்ளார்கள்.

(20.08.17 இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். //indianexpress.com/article/opinion/columns/india-at-70-the-economy-rbis-monetary-policy-statement-gdp-growth-demonetisation-employment-skill-development-4804447/)

தமிழில்: ஆ.சங்கர்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close