ப.சிதம்பரம்
நீண்ட காலமாக வழக்கில் இருக்கும் ஒரு தவறான பிரயோகம் “குறைவான நிர்வாகம் உள்ள நாடே சிறப்பாக நிர்வகிகப்படும் நாடு” என்ற பிரயோகம். தவறாக பயன்படுத்தப்பட்டு... பயன்படுத்தப்பட்டு, இந்த பிரயோகம் அதன் மதிப்பையே இழந்து விட்டது.
அரசு நிர்வாகத்தில் பல்வேறு முறைகள் உள்ளன. பொருளாதாரத்தை அரசு நேரடியாகவும், உறுதியாகவும் கட்டுப்படுத்தும் ஒரு முறையை அரசு பொருளாதாரம் என்று அழைக்கலாம். அதற்கு ஒரு உதாரணம் வட கொரியா. சில அதிகாரங்களை மட்டும் மாநில அரசுகளோடு பகிர்ந்து கொள்ளும் முறையும் உண்டு. இதற்கான உதாரணம் முன்னாள் சோவியத் குடியரசு. சீனா ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது. முக்கிய கட்டுப்பாடு மத்திய அரசு வசம் வைத்திருந்தாலும், தனியார் தொழிலதிபர்கள் சுதந்திரமாக நிதி தொடர்பான முடிவுகளை எடுக்க அனுமதி அளித்திருந்தது. சீனா இதை, சீனத் தன்மையோடுகூடிய சோசலிசம் என்று அறிவித்தது.
ஒரே நேரடி அரசோ அல்லது கூட்டாட்சியோ, திறந்தவெளி பொருளாதாரங்கள் வேறு முறையை கையாளுகின்றன. தன்னிச்சையான வணிகக் கொள்கையை சில நாடுகள் கடைபிடிக்கின்றன. இதற்கு முன்னால், முதலாளித்துவ பொருளாதார முறையின் தொடக்க காலத்தில், தன்னிச்சையான வணிகக் கொள்கையின் கீழ், அனைத்துமே அடக்கம் என்று கூறப்பட்டது. தொடக்க காலத்தில், ராபர் பேரன்ஸ் என்று அழைக்கப்பட்ட, அநீதியான தொழில் முறையின் கீழ் செல்வந்தர்களானவர்கள், தங்கள் சொத்துக்களை அதிகரித்துக் கொண்டதோடு, வேலை வாய்ப்புகளையும் உருவாக்கினர். ஆனால் அதே நேரத்தில் இந்த முறை அதிகமான ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கியது. இத்தகைய பொருளாதார முறை, தொழிலாளர் போராட்டங்களையும், பல நெருக்கடிகளையும் உருவாக்கியது.
கட்டுப்பாடும், ஒழுங்குமுறையும்.
முதலாளித்துவத்தின் தொடக்க காலத்தில் இருந்த தன்னிச்சையான வணிகக் கொள்கை தொடர்ந்து கட்டுப்பாடற்று செய்லபட முடியவில்லை. அரசும் தொடர்ந்து வேடிக்கை பார்க்க முடியவில்லை. இதனால் பொருளாதாரத்தில் அரசின் தலையீடு தொடங்கியது.
ஒழுங்குமுறை என்பது கட்டுப்பாடல்ல. வெளிப்படையான திறந்தவெளி பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள், ஒழுங்குமுறைக்கும் கட்டுப்பாடுக்கும் உள்ள வேறுபாடுகளை அடையாளம் காண திணறின. வணிகத்துக்கு ஒழுங்குமுறையை அமல்படுத்தி, தகுதிபெற்ற ஒழுங்குமுறை அதிகாரிகளை நியமனம் செய்ய பல ஆண்டுகள் பிடித்தன. முதலில் கட்டுப்பாடான பொருளாதார முறையில் இருந்து, பின்னர் தாராயமயமாக்கலை கடைபிடிக்கத் தொடங்கிய இந்தியா போன்ற நாடுகள் இன்னமும் இந்த சிக்கலை தீர்க்கவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகள் இத்தகைய மாற்றத்தை இன்னமும் சரியாக கையாளவில்லை. ஒழுங்குமுறை அதிகாரிகள் அதீத கட்டுப்பாடுகளை செலுத்தினர். அல்லது, அரசு ரிமோட் கண்ட்ரோல் மூலம் பொருளாதாரத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது.
இந்த கட்டுரை, இது போன்ற கட்டுப்பாடுகளின் ஒரு தன்மையை மட்டும் ஆராய்கிறது. அரசு, சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, ஒழுங்குமுறை ஆணையங்களை / ஒழுங்குமுறை நிறுவனங்களின் அதிகாரத்தினை அரசு கைப்பற்றி, அதன் மூலம், அத்தகைய ஆணையங்களின் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்கிறது. பிஜேபி அரசு, இந்த முறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
நிர்வாக முறையில் ஏராளமான ஓட்டைகள்
கீழே உள்ள அட்டவணையை பாருங்கள் :
/tamil-ie/media/media_files/uploads/2018/03/chidambaram-table-300x257.jpg)
132 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் உயர்நீதித்துறையில் (உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள்) வெறும் 1110 நீதிபதிகள் மட்டுமே. அவற்றிலும் 410 காலியிடம் !!! இத்தகைய சூழலால் அதிகம் பலனடைவது அரசுத் துறைகளே. ஏனெனில், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளின் காரணமாக, ஆயிரக்கணக்கான வழக்குகளின் அடிப்படை காரணியாக இருப்பதே அரசுத் துறைகள்தான். இவர்களின் நடவடிக்கைகளால், ஆண்டுக் கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அரசுத் துறைகள் போலவே, மீதம் உள்ள இதர அதிகாரிகளையும், துறைகளையும் கூற முடியும். வங்கிகளின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய வேண்டிய முக்கிய பதவியான மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் பதவி, 31 ஜுலை 2017 முதல் காலியாக உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடியையும், இதர வங்கிகளின் மோசடிகளையும் கண்காணிக்க ரிசர்வ் வங்கி தவறி விட்டது என்று எப்படி கேள்வி எழுப்ப முடியும்? முக்கியமான ஒழுங்குமுறை ஆணையங்களும், தீர்ப்பாயங்களும், ஒன்று அல்லது இரு சக்கரங்கள் குறைவாகவே ஓடிக் கொண்டிருக்கின்றன.
உள்நோக்கம்
நான் இந்த கட்டுரை மூலமாக இந்த அரசை கேட்க விரும்புவது இதுதான். “2014ல் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் வாக்குறுதியளித்த குறைந்தபட்ச அரசு என்பது இதுதானா?” மேலும் கேட்க வேண்டிய மற்றொரு முக்கியமான கேள்வி, “முக்கிய பதவிகளை காலியாக வைத்திருப்பதால் பலனடைவது யார் என்பதே” “தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்ப்பதனாலும், பல்வேறு வரி தொடர்பான வழக்குகளை தீர்த்து வைக்காமல் கால தாமதம் செய்வதாலும் பலனடைவது யார்?” இதற்கான விடை வெளிப்படையாக தெரிந்ததுதான்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியின் உண்மை முகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் என்பது சர்வாதிகாரமான அமைப்பு. ஒரே நோக்கம். ஒரே சிந்தனை. ஒரே கொள்கை மற்றும் ஒரே தலைவர். அதன் அரசியல் அமைப்பின் மூலம், ஆர்எஸ்எஸ் எப்போது ஆட்சியை பிடிக்கிறதோ, அப்போது, ஒரே வரலாறு, ஒரே மொழி, (இந்தி எங்களது தேசிய மொழி), ஒரே மதம் (இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே), ஒரே சட்டம், ஒரே தேர்தல். இதுதான் இவர்களது நோக்கம். ஒரு ஜனநாயகத்தின் அடிப்படையான கூறு, சுதந்திரமான கருத்துக்கள், சுதந்திரமாக செயல்படும் இதர அமைப்புகள், பல்வேறு கட்டங்களில் கட்டுப்பாடுகள், மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவை. ஆனால் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு இத்தகைய சுதந்திரம் என்பது வேப்பங்காய்.
அரசின் இதர கூறுகள் பலவீனமானால், அது அரசுக்கு கூடுதலான பலத்தை அளிக்கும். பல்வேறு அமைப்புகளை பதவிகளை காலியாக வைத்திருப்பதன் மூலமாகவோ, அல்லது சிக்கல்களை உருவாக்குவதன் மூலமாகவோ, தொடர்ந்து பலவீனடப்படுத்தி வரும் பிஜேபி அரசின் உண்மையான நோக்கம் அதிக அதிகாரத்தை சுவீகரித்துக் கொள்வது மட்டுமே. அப்படியே ஏதாவதொரு நியமனம் நடந்தாலோ, அது நேரடியாக பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டின் பேரில் மட்டுமே நடக்கிறது. இத்தகைய நியமனங்களும், ஒரு நபரின் முழுமையான விபரங்களை சேகரித்து, அவருக்கு ஒரு முத்திரை குத்தப்பட்ட பின்னரே நடக்கிறது. கடைசியாக இத்தகைய நடைமுறையினால் பாதிக்கப்பட்டவர், நீதிபதி கேஎம்.ஜோசப்.
குறைந்தபட்ச அரசு என்ற பிரயோகமே, அதிகப்படியான மற்றும் உச்சபட்ச கட்டுப்பாடுகள் விதிக்கும் உரிமையை தனதாக்கிக் கொள்வதற்காகவே. ஜனநாயகம் நாசமாகப் போகட்டும்.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 04.03.18 அன்று இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
தமிழில் ஆ.சங்கர்