ப.சிதம்பரம்
புதிய நடைமுறைகளுக்கு உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். புதிய நடைமுறை என்னவென்றால், ஒரு அரசியல் கட்சி அது நடத்தி வரும் ஆட்சியின் சாதனைகளைப் பற்றி பேசி தேர்தலை சந்திக்காது. மாறாக, சாதாரணமாக சொல்லப்பட்ட ஒரு கருத்தை திரித்து, ஊதிப் பெரிதாக்க அதன் அடிப்படையில் தேர்தல் சந்திக்கப்படும்.
புதிய நடைமுறை
புதிய நடைமுறை என்னவென்றால், ஒரு முன்னாள் துணை குடியரசுத் தலைவர், ஒரு முன்னாள் பிரதமர், ஒரு ராணுவ தலைமைத் தளபதி, பாகிஸ்தானின் முன்னாள் தூதர் மற்றும் பல முன்னாள் அரசு அதிகாரிகள் மீது ஆதாரமற்ற புகார்களை அள்ளி வீசி, அதன் அடிப்படையில் முன்னாள் பிரதமரை மன்னிப்பு கேட்கக் சொல்வது. மற்றொரு புதிய நடைமுறை என்னவென்றால், அரசின் நிலைபாடுகள் அனைத்தும் தேசிய நிலைபாடுகளாக கருதப்படும். அதற்கு எதிர்மறையான கருத்து ஒருவருக்கு இருக்கக் கூடாது. பண மதிப்பிழப்பு, தவறான முறையில் செயல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, பாகிஸ்தானில் நடந்த ரகசியமான அதிரடி நடவடிக்கை, சீனாவுடனான தோக்லாம் சிக்கல் ஆகியவை நாட்டுக்கு நன்மை பயப்பவை என்று நீங்கள் நம்ப வேண்டும்.
கடன் வாங்கிய நீரின் மீது பயணிக்கக் கூடிய விமானத்தை பயன்படுத்தி சபர்மதி நதியில் பயணிப்பது, அல்லது புதிய நீர்மூழ்கிக் கப்பலை தொடக்கி வைப்பது போன்றவைகள் புதிய நடைமுறைகள்.
2914 பாராளுமன்றத் தேர்தலையொட்டி, திரு நரேந்திர மோடி அவர்கள், தன்னை ஒரு நவீன அரசியல்வாதியாக சித்தரித்துக் கொண்டு, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் ஒன்றே தனது குறிக்கோள் என்று கூறினார். குஜராத் நிர்வாகத்தில் உள்ள மோசமான குறைகளை மூடி மறைத்து, மோடியை ஒரு மிகச் சிறந்த நிர்வாகியாக சித்தரிக்கும் ஒரு வலுவான, உத்தி கவனமாக உருவாக்கப்பட்டது. அதன் விளைவே 2014ல் மோடியின் வெற்றி.
இதே உத்தி குஜராத் தேர்தலிலும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் ஒரு மாநிலத்தில், அதன் சாதனைகளை சுட்டிக் காட்டி வாக்குகள் சேகரிப்பதை பிஜேபி கவனமாக தவிர்த்தது. குஜராத்தில் பிஜேபி மேற்கொண்ட பிரச்சாரம், எந்த விதமான அடிப்படை நேர்மையும் இன்றி, செயல்படும் ஒரு தேர்தல் இயந்திரம், உண்மைக்கும் பொய்மைக்குமான வேறுபாட்டை எப்படி தந்திரமாக மறைக்கும் என்பதை உணர்த்தியது. பிஜேபி வெற்றி கூட பெறலாம்.
அபாய ஒலியை உணருங்கள்
இதனிடையே பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு சாதாரண முன்னேற்றத்தை அரசு கொண்டாடுவதே நிலைமை எத்தனை மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த வாரம் வெளியான வளர்ச்சி விகித அறிக்கையில், 2017-18ன் முதல் காலாண்டில் 5.7 சதவிகிதத்திலிருந்து, 6.3 சதவிகிதமாக வளர்ச்சியடைந்தது. அக்டோபர் 2017ல், தொழில் உற்பத்தி கடந்த ஆண்டு இருந்த நிலையோடு ஒப்பிடுகையில் வெறும் 2.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி வெறும் 2.5 சதகிகிதம் வளர்ச்சியடைந்தது. உள்ளுர் பண வீக்க அளவு அக்டோபரில் 3.6 சதவிகிதமாக இருந்தது. இது நவம்பரில் 4.9 சதவிகிதமாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினாலும் இது உயர்ந்தது.
உதாரணமாக காய்கறிகளின் விலை, 7.5 சதவிகிதத்திலிருந்து 22.5 சதவிகிதமாக வளர்ச்சயிடைந்தது. விவசாயம் இரண்டாவது காலாண்டில் (ஜுலை – செப்டம்பர் 2017-2018) வெறும் 1.7 சதவிகித வளர்ச்சியடைந்தது. இந்த புள்ளி விபரங்கள் அத்தனை விரைவாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. 2017-18 ஜுலை செப்டம்பரில் புதிய தொழில்களாக 246 திட்டங்கள், 43,492 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. புதிய முதலீடுகளை செய்யக் கூடிய நிலையில் காப்பரேட் இந்தியா இன்று இல்லை. அதற்கான ஆர்வமும் அவர்களிடம் இல்லை. 2016-17 ஆண்டோடு நடப்பு ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டின் கார்ப்பரேட் லாபங்களை ஒப்பிட்டால் அவை முறையே 21 சதவிகிதம் மற்றும் 8.6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதாரத்தில் இன்று சிக்கலுக்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இந்திய வணிக அமைப்பான ஃபிக்கியின் ஆண்டு கூட்டத்தில் டிசம்பர் 14 அன்று பிரதமர் ஒரு முக்கியமான உரையை நிகழ்த்தினார். அந்த கூட்டத்தில் பிரதமர் சுமத்திய ஒரு முக்கியமான குற்றச்சாட்டு, இதற்கு முந்தைய அரசாங்கம், வங்கித் துறையையே சூறையாடி விட்டது என்பதே. எதிர்ப்பார்த்ததைப் போலவே, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட செம்மறியாடுகள் அமைதியாக இருந்தன. சில உற்சாக குரல் கொடுத்தன.
வாராக்கடன்கள் குறித்த தவறான புரிதலும், உண்மையும்.
வாராக் கடன்கள், ஒரு திட்டமிட்ட கொள்ளையா? கீழே உள்ள படத்தில் உள்ள எண்ணிக்கைகள் உண்மையை பேசும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/graph1-300x73.jpg)
31 மார்ச் 2014 அன்று உள்ளபடி, பொதுத் துறை வங்கிகளிடம் 2,16,739 கோடி ரூபாய் வாராக் கடன்கள். இதன்படி, மீதம் உள்ள கடன்கள் நல்ல முறையில் திருப்பி செலுத்தப்பட்டுக் கொண்டு இருந்தன என்பது உண்மை. அசல் மற்றும் வட்டி திருப்பி செலுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இப்படி சரியான முறையில் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த கடன்கள் எப்படி வாராக் கடன்களாக மாறின? தனியார் வங்கிகளின் வாராக் கடன்கள் இந்த காலகட்டத்தில் நான்கு மடங்கு அதிகரித்து 19,986 கோடி ரூபாயிலிருந்து 73,842 கோடியாக மாறியது ஏன்? இதற்கான விடை, சரிவைச் சந்தித்த உள்ளுர் பொருளாதாரம் மற்றும், மோசமான சூழல் காரணமாக, சரிந்த ஏற்றுமதிகளுமே. கடன் பெற்ற சிலர் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத நேர்வுகளும் சில உடு.
மற்றொரு முக்கியமான விஷயத்தில் அரசு உண்மையை பேச மறுக்கிறது. 31 மார்ச் 2017 அன்று உள்ளபடி, நிலுவையில் இருக்கும் வாராக் கடன்களில் எத்தனை கடன்கள் மே 2014க்கு பிறகு வழங்கப்பட்டவை? வாராக்கடன்களின் பின்னணியில் ஒரு பெரிய கொள்ளை இருக்கிறது என்பது உண்மையானால், 2014-15 மற்றும் 2016-17ம் ஆண்டுகளில் அரசும், பொதுத் துறை வங்கிகளும், ரூபாய் 1,88,287 கோடி கடனை எதற்காக தள்ளுபடி செய்தது?
குஜராத்தின் பரபரப்பான தேர்தல்களுக்கு பிறகு, நாம் மீண்டும் பொருளாதாரம் குறித்த விவாதங்களை தொடங்குவோம். ஆனால் இந்த விவாதம், ஒரு ஆதாரமில்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடங்க முடியாது. ஒரு முறை அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது, பில் கிளின்டன் “முட்டாளே, இது பொருளாதாரம்” என்று சொன்னார். பொருளாதாரம் இன்னும் மோசமான ஒரு சூழலிலேயே இருந்து வருகிறது.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.12.17 தேதியிட்ட இதழில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
தமிழில் ஆ.சங்கர்