சிதம்பரம் பார்வை : வார்த்தை விளையாட்டா, அல்லது அதை விட மோசமா?

சீனாவுடனான உறவில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது என்பதை மக்களுக்கு விளக்கும் கடமை அரசுக்கு உள்ளது. இதை பிரதமர் அளிக்க வேண்டும்.

By: August 1, 2017, 2:52:34 PM

ப.சிதம்பரம்

போப் ஜான் அவர்களின் வார்த்தைகளான, “வேண்டாம் போர். எப்போதும் வேண்டாம்” என்ற வார்த்தைகளை தழுவிக் கொள்ள உலகம் இன்னும் தயாராகவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் பல போர்களை சந்தித்துள்ளது. பனிப் போர், உள்நாட்டுப் போர், அண்டை நாடுகளுடன் போர், ஜிகாதி போர், பிரிவினைப் போர் என்று பல வகையான போர்களை உலகம் சந்தித்துள்ளது. ஆயுத சண்டைகளால் உயிர் பலி நிகழாத நாட்களே இல்லை.

இந்தியாவும் சீனாவும் 1962ல் போரிட்டன. அந்த போர் முடிந்த பிறகு, நிலையில்லாத ஒரு அமைதி நிலவியது. 1988ம் ஆண்டு ராஜீவ் காந்தியை சீனா வரவேற்றது. அது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம். சீன அதிபர் டெங் ஜியோபிங்குடன் ராஜிவின் நீண்ட கைகுலுக்கல் மிகவும் பிரசித்தம். எல்லை தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்று இரு நாடுகளும் முடிவெடுத்தன. இதையடுத்து, இரு நாடுகளும் சிறப்பு பிரதிநிதிகளை நியமித்தன.

அவ்வப்போது சிக்கல்கள் நிகழாமல் இல்லை. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. 2013ல் டெப்சாங்கிலும், 2014ல் டெம்சோக் மற்றும் ச்சுமாரில் எழுந்த பிரச்சினைகள் பேசித் தீர்த்துக் கொள்ளப்பட்டன. உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா, பூட்டான் மற்றும் சீனா இடையே உள்ள முத்தரப்பு சந்திக்கும் இடத்தில் உள்ள எல்லைப் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ள 2012ல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு நாடுகளும், பிரச்சினைகளை ஆயுதங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொண்டதால் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த முடிந்தது. ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக சீனா மாறிக் கொண்டு வருகிறது. அதன் மொத்த மக்கள் தொகையான 1,380 மில்லியன் மக்களில் வெறும் 5 சதவிகிதத்தினர் மட்டுமே இன்னமும் வறுமையில் இருக்கிறார்கள். உலகத்துக்கான தொழிற்சாலையாக சீனா மாறியுள்ளது. அதன் ஏற்றுமதி காரணமாக, 3000 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிய செலாவணியாக கையிருப்பு வைத்துள்ளது. சீனா ஒரு அணு ஆயுத சக்தி. உலகின் மிகப்பெரிய ராணுவத்தை வைத்துள்ளது. தெற்கு சீன கடல் மற்றும் இந்துமகா சமுத்திரத்தில் ஆழ்கடலுக்கு செல்லும் வலிமை பெற்றுள்ளது. தொலை தூர இலக்குகளை தாக்கும் சக்தி பெற்றுள்ளது.

2014 வரை இந்தியா முன்னேறவே இல்லை என்ற குரல்களை ஒதுக்கி விட்டு ஆராய்ந்தால், இந்தியா (1998-2004 வாஜ்பாய் காலம் உட்பட) நன்றாகவே முன்னேறியுள்ளது. இருப்பினும் சீனாவை விட இந்தியா சில அடிகள் பின்னால் உள்ளது என்பதுதான் உண்மை. 1991 முதல் இந்தியா 250 மில்லியன் மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்தியாவும் ஒரு அணு ஆயுத சக்தியே. உலகின் இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் இந்தியா, எந்த அந்நிய நாட்டின் தாக்குதலையும் எதிர் கொள்ளும் நிலையில்தான் உள்ளது.

இந்த காரணங்களால்தான், சீனாவும் இந்தியாவும், கட்டாயம் போரை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும், மீண்டும் சொல்கிறேன், ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தைதான் வெற்றி பெற வேண்டும். வாட்கள் உறையினுள் இருக்க வேண்டும். வார்த்தை விளையாட்டுக்கள் போராக மாறி விடக் கூடாது.

புதிய வேறுபாடு என்ன ?

இந்தியா-பூட்டான்-சீனாவின் முத்தரப்பு எல்லை சந்திக்கும் இடமான டோக்லாம் என்ற இடத்தில் உள்ள டோலாமில் கடந்த 16, ஜுன் 2017 அன்று நடந்த சம்பவம், பேச்சுவார்த்தையின் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காது என்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. அந்த சம்பவம் மோசமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2013 மற்றும் 2014ல் நடந்த சம்பவங்களுக்கும் 2017 சம்பவத்துக்கும் வேறுபாடு உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்தியாவும், சீனாவும் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளை பார்ப்போம். இந்திய ராணுவ தளபதி (8, ஜுன் 2017), வெளியுறவுத் துறை (30 ஜுன்), நிதியமைச்சர் (30 ஜுன்), வெளியுறவுத் துறை செயலர் (11, ஜுலை), பிரதமர் அலுவலக இணை அமைச்சர் (ஜுலை 12) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் (ஜுலை 20). சீனாவின் தரப்பில், வெளியுறவுத் துறை மற்றும் ராணுவத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே பதிலளித்து வந்தனர். 24 ஜுலை 2017 அன்று மட்டும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி அவர்கள் பாங்காங்கில் பேசினார். ஆனால் சீனாவின் உண்மையான நோக்கம், க்ளோபல் டைம்ஸ் மற்றும் ஜின்ஹுவா ஆகிய ஊடகங்களில் வந்த கட்டுரைகளில் தெரிய வந்தது. சீனாவின் எதிர்வினை வரவேற்கத்தக்கதாக இல்லை.

தற்பாது என்ன மாறி விட்டது ? இந்தியா மீதான சீனாவின் பார்வை மாறி விட்டது என்றால் அதற்கு என்ன காரணம் ? இந்திய அரசு அதன் நிலையை தெளிவாகவே விளக்கியது. “சீனாவின் நடவடிக்கைகளால் இந்தியா மிகவும் கவலையடைகிறது. சீனா தற்போது நடத்தும் கட்டுமானப் பணிகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி தற்போது உள்ள நிலையை மாற்றும் தன்மை படைத்தவை என்பதை சீனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்”. ஆனால் இது போதுமானதல்ல. சீனாவுடனான உறவில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது என்பதை மக்களுக்கு விளக்கும் கடமை அரசுக்கு உள்ளது. இந்த விளக்கத்தை பிரதமர் அளிப்பதுதான் சரியாக இருக்கும்.

சீனா வார்த்தைகளோடு நிறுத்துமா?

சீனாவின் வார்த்தை எச்சரிக்கைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்தியா அமைதிக்காக எடுக்கும் நடவடிக்கைகள் சீனாவால் நிராகரிக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சீனாவுக்கு பயணிப்பது முதலில் உதாசீனப்படுத்தப்பட்டது. பின்னர் ஒப்புக்காக ஒரு பேச்சுவார்த்தை இரு தரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களால் நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தைகளின்போது, சீனா இரு தரப்புக்கு இடையே நிலவும் பிரச்சினைகளை முன் வைத்தது. சுமூகமான உறவு ஏற்படுத்துவதற்கான மரபுகளை மீறி சீனா பேச்சுவார்த்தைக்கு இடம் தராத வகையில் நடந்து கொண்டது. ஏற்க முடியாத ஒரு நிபந்தனையை விதித்ததோடு, பேச்சுவார்த்தைக்கான வழிகளையும் சீனா அடைத்தது. சீன செய்தி நிறுவனம் ஜின்ஹுவா 15, ஜுலை 2017 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டோக்லாம் பகுதியிலிருந்து இந்தியா தன் படைகளை வாபஸ் பெற்றே ஆக வேண்டும். இதில் பேச்சுவார்த்தைக்கு எந்த இடமும் கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் பல்வேறு பர்வையாளர்கள் இது குறித்து கவலை தெரிவித்தாலும், சீனத் தரப்பிலிருந்து ஒருவர் கூட இது பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. இரு தரப்பையும் அமைதி காக்கும்படியும், பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படியும் அறிவுறுத்திய முதல் நாடு அமெரிக்காதான். இந்தியா மற்றும் சீனாவோடு இது குறித்து பேசிய பல நாடுகள், வினோதமான வகையில் அமைதி காத்தன.

கவலை மேகங்கள் சூழ்ந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே எந்த விதமான ஆயுத போரும் இருக்கக் கூடாது என்பதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். இந்தியாவும் அதே நிலைப் பாட்டில்தான் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் சீனாவின் நிலைபாட்டின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எந்த சூழலில், எந்த நேரத்தில் குழப்பம் நிகழ்ந்தது என்பதை காலம்தான் கூற வேண்டும்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
http://indianexpress.com/article/opinion/columns/across-the-aisle-ping-pong-of-words-or-worse-doklam-standoff-india-china-4773329/

தமிழாக்கம் : ஆ.சங்கர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Across the aisle ping pong of words or worse

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X