ப.சிதம்பரம்
இந்திய நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளில் இரு தரப்புகளும் எடுத்து வைக்கும் வாதங்கள், தவறாமல் பதிவு செய்யப்படுகின்றன. தனியுரிமை வழக்கில் (நீதிபதி. கே.எஸ்.புட்டாசாமி தொடர்ந்த வழக்கு) 24 ஆகஸ்ட் 2017 அன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், குறிப்பாக நீதிபதி ரோஹின்டன் நரிமன் எழுதிய தீர்ப்பில், வாதங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தத் தீர்ப்பில் பத்தி 6ல் கூறப்பட்டுள்ளவற்றை நாம் இப்போது பார்ப்போம்.
"மத்திய அரசின் சார்பாக வாதிட்ட அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.கேகே.வேணுகோபால், தனது வாதத்தில் இது தொடர்பாக இது வரை தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மற்றும் 8 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புகளை நாம் மாற்றக் கூடாது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது முன்னோர்கள், தனியுரிமையை அடிப்படை உரிமைகளில் சேர்க்கக் கூடாது என்று முடிவெடுத்துள்ளனர். "அந்தத் தீர்ப்பின் 7, 8, 9 மற்றும் 10ம் பத்திகளில், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் வாதத்தை அப்பயே ஏற்றுக் கொண்டார்கள். கூடுதலாக, தனியுரிமை என்பது வரையறை செய்ய முடியாதது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உறுதியல்லாதது என்று வாதிட்டனர்.
பிஜேபி ஆளும் மாநிலங்களும், மத்திய அரசும் சேர்ந்து, தனியுரிமை அடிப்படை உரிமை அல்ல என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள் என்பதை கண்டறிய ஒருவர் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை.
தீர்ப்பும் அதன் தாக்கமும்.
இறுதியாக 9க்கு 0 என்ற நீதிபதிகள் கருத்தின் அடிப்படையில் இந்த வாதங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. நீதிமன்றம், தனியுரிமை என்பது ஒரு உயரிய உரிமை என்றும், அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதி என்றும் கூறியதோடு, இதற்கு முன்னால் இது குறித்து வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புகளும் தவறானவை என்றும் கூறியது. மத்திய அரசு மற்றும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் எடுத்து வைத்ததை உச்சநீதிமன்றம் நிராகரித்ததையே இது காட்டுகிறது.
தீர்ப்பு வெளி வந்ததும், இத்தீர்ப்பை தனக்கு சாதகமாக திசை திருப்ப பிஜேபி முயன்றது. மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர், அரசின் நிலைப்பாட்டையும் கொள்கையையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்றே கூறினார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அதிர்ச்சியில் உறைந்திருப்பர். சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு வீரதீரச் செயலுக்கான விருது வழங்க வேண்டும். குறைந்தது இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு இடமாவது வழங்க வேண்டும்.
அரசுத் தரப்பிலிருந்து நேர்மையாக நடந்து கொண்டவர், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மட்டுமே. அவர் ஓய்வு பெற்ற பிறகு அளித்த ஒரு பேட்டியில், அவர் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக இருந்திருந்தால், அரசு இவ்வழக்கில் தோல்வியடைந்து விட்டது என்பதை வெளிப்படையாக கூறயிருப்பேன் என்று கூறினார். அவரது கருத்தில், இந்தத் தீர்ப்பு தவறு என்றும் கூறினார்.
ஒரு முக்கியமான உரிமையை அடிப்படை உரிமை என்று தெளிவாக குறிப்பிடாத நேர்வுகள் ஏராளமாக இருக்கின்றன. நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பில் இது போன்ற உரிமைகளை பட்டியலிட்டுள்ளார்.
வெளிநாடு செல்லும் உரிமை
தனிமைச் சிறையில் வைப்பதற்கு எதிரான உரிமை
பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு எதிரான கைதிகளின் உரிமை
சட்டரீதியான உதவிக்கான உரிமை
வேகமான வழக்கு விசாரணைக்கான உரிமை
கைவிலங்கு போடுவதற்கு எதிரான உரிமை
காவல்நிலைய சித்திரவதைக்கு எதிரான உரிமை
பொதுவெளியில் தூக்கிலிடுவதற்கு எதிரான உரிமை
அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உதவிக்கான உரிமை
ஆரோக்கியமான சுற்றுச் சூழலுக்கான உரிமை
சட்டவிரோத கைதுக்கு நிவாரணம் பெறுவதற்கான உரிமை
சித்திரவதைக்கு எதிரான உரிமை
நற்பெயரை காப்பதற்கான உரிமை
உழைத்து சம்பாதிப்பதற்கான உரிமை
நீதிபதி செல்லமேஸ்வர், அரசியல் அமைப்புச் சட்டத்தின் உள்ளே இருக்கும் இருண்ட பகுதிகளுக்குள் சென்று ஆராயும் பணி என்று கூறியுள்ளார். கேசவானந்த பாரதி என்ற வழக்கில், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கென்று சில அடிப்படை கூறுகள் உள்ளன. அவற்றை ஒரு போதும் மாற்ற இயலாது என்று தீர்ப்பளித்தது போலவேதான், நீதிபதி புட்டாசாமி தொடர்ந்த இந்த வழக்கிலும் மாணிக்கங்கள் கண்டெக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டப் பிரிவு 21ன் பிரிக்க முடியாத ஒரு அங்கம்தான் தனியுரிமை என்பதே அது.
தனியுரிமையின் பார்வையில்
இத்தீர்ப்பின் தாக்கம் நெடியது. தனியுரிமையை பாதிக்கும் வகையில் அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், தனியுரிமையின் பார்வையில்தான் பார்க்கப்பட வேண்டும். உடனடியாக இந்த சிக்கலில் மாட்டப் போவது, ஆதாரை வருமான வரி கணக்கு, பேன் கார்டு, வங்கிக் கணக்கு, விமான டிக்கெட், பள்ளி சேர்க்கை போன்ற அனைத்தோடும் இணைக்க வேண்டும் என்பதே. ஆதார் அட்டை உருவாக்கியதன் நோக்கம் நிச்சயமாக இது அல்ல. இது நிச்சயமாக தனியுரிமையை பாதிக்கும் செயல்தான்.
மோசடி, ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களால் அரசின் நலத் திட்டங்களும், மானிய உதவிகளும் தவறான நபர்களிடம் சென்று சேரக்கூடாது என்ற நோக்கத்தில்தான் ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டது. தவறான மாணவர்களுக்கு பள்ளி கல்லூரி உதவித் தொகை சென்று சேர்வது, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்களை போலியான நபர்கள் எடுத்துக் கொள்வது, பல பெயர்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்து, அதன் மூலம் மானியம் பெற்றுக் கொள்வது ஆகியவையே இதன் நோக்கம். ஆனால் மத்திய பிஜேபி அரசானது, அதன் அசல் நோக்கத்தையே பின்னுக்குத் தள்ளி விட்டு, அரசு உதவிகளோ, மானியமோ சம்பந்தப்படாத விவகாரங்களில் கூட கட்டாயப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
ஆதார் ஆணையம் ஆதார் டேட்டாக்கள் பாதுகாப்பாக உள்ளன என்று கூறினாலும் அது குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது. டேட்டாக்கள் அனைத்தையும் பாதுகாகக வேண்டிய நேட்க்ரிட் அமைப்பின் அதிகாரம் மற்றும் வரம்பு ஆராயப்பட வேண்டியுள்ளது. எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்துவது, இணையதளங்களை ஆராயவ்து, தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது போன்றவற்றை ஆராய வேண்டும். இந்திய தண்டணை சட்டம் 377 ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வங்கிகள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கும் விபரங்கள், டேட்டாக்களை சேகரிப்பது, பகிர்வது, போன்றவை தெளிவாக வரையறை செய்யப்பட வேண்டும். மறப்பதற்காக உரிமை செயல்படுத்த வேண்டிய வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். மரணமடைவதற்கான உரிமை, மூளைச்சாவு அடைந்தவர்களை இறக்க அனுமதிப்பது போன்றவை விவாதிக்கப்பட வேண்டும்.
நீதிபதி புட்டாசாமியின் வழக்கு, 1947ம் ஆண்டில் நாம் பெற்ற சுதந்திரத்தை வளமையாக்கி உள்ளது. நாம் கொண்டாடுவோம். நாளை மேலும் பல சவால்கள் நம் முன்னே வரும். அதையும் வெல்வோம்.
(முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 10.09.17 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். http://indianexpress.com/article/opinion/columns/across-the-aisle-privacy-is-the-core-of-personal-liberty-4836237/)
தமிழில் ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.