ப.சிதம்பரம் பார்வை : மீண்டும் ஜம்மு காஷ்மீர்

காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அனைவரோடும் பேச மறுப்பதன் மூலம், வருங்காலத்தில் தீர்வு ஏற்படுவதற்கான கதவுகளையும் அடைக்கிறது.

ப.சிதம்பரம்

ஜம்மு காஷ்மீரில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன என்பது அவ்வப்போது நமது கவனத்துக்கு வருகிறது. 30-31 டிசம்பர் 2017 இரவு இது போல ஒரு நினைவூட்டல் வந்தது. காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎப்) பயிற்சி மையம் தாக்குதலுக்கு உள்ளானது. ஐந்து சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர். மூவர் காயமடைந்தனர்.

காஷ்மீர் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கருத்து உள்ளது. ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் கருத்து அதி தீவிரமானது – காஷ்மீருக்கு சுதந்திரம். அவர்களுக்கு இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிப்பது என்பது ஒரு நாளும் நடக்கப் போவதில்லை என்பது நன்றாகவே தெரியும். இதற்கு நேரெதிரான அதி தீவிர நிலைபாடு பிஜேபியினுடையது. ராணுவ உதவியோடு பலத்தை பிரயோகப்படுத்தி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது அவர்கள் நிலை. காஷ்மீருக்கு அரசியல் ரீதியான தீர்வுக்கு இந்த நிலைபாடு ஒருபோதும் உதவாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்த இரு நேரெதிரான நிலைப்பாடுகளில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது. அப்படி சிக்கிக் கொண்டால், காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் வாய்ப்பை நாம் இழப்பதோடு, காஷ்மீர் மக்களும் இழப்பார்கள். அதிர்ஷ்டவசமாக, அது போன்ற நெருக்கடிகளை தவிர்த்து, காஷ்மீருக்கு அரசியல் ரீதியான தீர்வை நம்மால் காண முடியும்.

நான் காஷ்மீர் விவகாரம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன். ஏப்ரல் 17 2017 முதல் செப்டம்பர் 18, 2016 வரை இரண்டு கட்டுரைகளும், 16, ஏப்ரல் 2017 மற்றும் ஜுலை 16, 2017 அன்று இரண்டு கட்டுரைகளும் வெளி வந்துள்ளன.

தேர்தல் தந்திரம்

குஜராத் தேர்தலையொட்டி, மத்திய அரசு, தினேஷ்வர் சர்மா என்பவரை சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது. ஆனால் அவரது பணி என்ன என்பது தெளிவுபடுத்தப்படவிர்லலை. பின்னர், சிறப்புப் பிரதிநிதி அவரை சந்திப்பவர்களோடு பேசவும், விவாதிக்கவும் தயாராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சூசகமாக உணர்த்தப்பட்ட விஷயம் என்னவென்றால், ஹுரியத் மாநாட்டுக் கட்சியினர் பிரிவினைவாதிகள் என்றும், அவர்களோடு எந்த காலத்திலும் பேச்சுவார்த்தை கிடையாது என்பதையும், பிஜேபி மற்றும் மத்திய அரசு உணர்த்தியதுதான்.

சுதந்திரம் என்ற கோரிக்கையே பிரிவினைவாதம் என்று சித்தரித்த மத்திய அரசும், பிஜேபியும், சுதந்திரம் என்ற கோரிக்கையை வைப்பவர்களோடு பேச்சுவார்தையே இல்லை என்பதை உணர்த்தியது.

மத்திய அரசும், பிஜேபியும் கல் வீசுபவர்களை தேச விரோதிகள் என்று தித்தரித்து அவர்கள் மீது, ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையை வைத்து தாக்குதல் நடத்தியது. ஜனவரி 2016ம் ஆண்டு பதன்கோட் தாக்குதலுக்குப் பிறகு, இனி பாகிஸ்தானோடு ஒரு காலத்திலும் பேச்சுவார்த்தை கிடையாது என்று அரசு அறிவித்தது. “பேச்சுவார்த்தை கிடையாது” என்பது ஒரு பெரிய கொள்கை முடிவு போல அறிவிக்க்பபட்டது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் கூடுதலாக ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன. இது போன்ற வலுவான, உறுதியான, ராணுவ நடவடிக்கைகள், காஷ்மீரில் ஊடுறுவலையும், தீவிரவாதத்தையும் குறைக்கும் என்று கூறப்பட்டது. இது உண்மையா என்பதை, கடந்த நான்கு ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்களின் இந்த பட்டியல் விளக்கும்.

chidambaram graf

ஊடுறுவலும், தீவிரவாதமும், பாகிஸ்தான் ஆதரவோடு காஷ்மீரின் அமைதியை சீர்குலைத்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வெறும் ஊடுறுவல் மற்றும் தீவிரவாதம்தான் காஷ்மீரின் சிக்கலுக்கு அடிப்படை என்ற முடிவுக்கு வருவது, பிழையானது. சிக்கலின் விளைவுகள்தான் ஊடுறுவலும் தீவிரவாதமும். காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்ட நாள் முதலாக தொடரும் சிக்கல்தான் அடிப்படை. ஜம்மு காஷ்மீர், 1947 இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு, வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டது. இன்று வரை பிரிந்துதான் இருக்கிறது. இந்த பிரிவினையின் அடிப்படையில் நான்கு போர்கள் நடந்துள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று கண்ணை மூடிக்கொள்வதால் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

வாஜ்பேயி மற்றும் நரேந்திர மோடி.

காஷ்மீர் விவகாரத்துக்கு ஒரு நல்ல தீர்வை காண்பதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. வாஜ்பேயி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர், காஷ்மீர் விவகாரத்துக்கு ஒரு தீர்வை காண்பதற்காக முழு மனதோடு முயற்சிகள் எடுத்தார்கள் என்று நினைவு கூறப்படுகிறார்கள். ஒவ்வொரு தருணத்திலும், இதற்கு ஒரு தீர்வு வருவது போன்ற சூழல் ஏற்பட்டு பின்னர் கைநழுவிப் போகிறது. தற்போது இருக்கும் அரசாங்கத்தின் சிக்கல் என்னவென்றால், அது தீர்வை விரும்பவில்லை. தீர்வுக்கான முயற்சிகள் எடுப்பதையும் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அனைவரோடும் பேச மறுப்பதன் மூலம், வருங்காலத்தில் தீர்வு ஏற்படுவதற்கான கதவுகளையும் அடைக்கிறது. தீர்வுக்கான ஒரே வழி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரோடும் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே.

துரதிருஷ்டவசமாக, இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், சிறப்புப் பிரதிநிதியின் நியமனத்தை ஒரு தேர்தல் தந்திரம் என்று மட்டுமே பார்க்கின்றனர். அந்த சிறப்புப் பிரதிநிதியை பெரும்பாலானோர் புறக்கணித்து விட்டனர். இது வரை, அவரை சந்தித்தவர்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அவரை இதுவரை சந்தித்தவர்கள், மலர் பயிரிடுபவர்கள் சங்கத்தினர், கால்பந்து விளையாட்டு சங்கத்தினர். யார் அவரை இது வரை சந்திக்கவில்லை என்பதை பார்ப்போம். காங்கிரஸ், தேசிய மாநாடுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஹுரியத் மாநாட்டுக் கட்சி, மாணவர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், மற்றும் இளைஞர் அமைப்பினர்.

ஹுரியத் மாநாட்டுக் கட்சியனரோடு பேச்சுவார்த்தை கிடையாது. சுதந்திரம் என்று பேசுபவர்களோடு பேச்சுவார்த்தை கிடையாது. கல் வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களோடு பேச்சுவார்த்தை கிடையாது என்று அரசு நிபந்தனைகளை விதித்துக் கொண்டதன் மூலம், இதன் நோக்கத்தையே சிதைத்து விட்டது.

மாற்று வழிகள்.

இன்னும் எல்லாம் முடிந்து விடவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதற்கென்று ஒரு பிரதிநிதியை நியமிக்கலாம். தவறில்லை. ஆனால், அது செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். 16, ஏப்ரல் 2017 அன்று வெளியான என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

மாநிலத்தில் ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு அனைத்துத் தரப்பினரோடும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று அறிவிக்க வேண்டும். பேச்சுவார்த்தையை நடத்த ஏதுவாக பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். காஷ்மீரில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் எண்ணிக்கையை குறைத்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியை மாநில காவல்துறையிடம் அளிக்க வேண்டும்.

அப்போது எழுதிய அனைத்தையும் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். காஷ்மீர் பிரச்சினையை வலுவான, தீவிரமான ராணுவ நடவடிக்கையினால் மட்டுமே தீர்க்க முடியும் என்று நம்பும் நபராக நீங்கள் இருந்தால், கடந்த நான்கு ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை மீண்டும் ஒரு முறை பாருங்கள். உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் 7.1.18 அன்று, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் ஆ.சங்கர்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close