ப.சிதம்பரம் பார்வை : தென்னக நெருப்பு தேசத்தை எரிக்கும்.

தென்னக மாநிலங்கள், சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக 6.338 சதவிகித நிதியை இழந்து விட்டனர். அந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைவால் பாதிக்கப்படக் கூடாது

By: April 9, 2018, 5:14:13 PM

ப.சிதம்பரம்

குடியரசுத் தலைவர் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, நிதி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் (பிரிவு 280) என்று வலியுறுத்துகிறது. குடியரசுத் தலைவருக்கு, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே வரி வருவாயை பகிர்ந்தளிப்பது, நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை குறித்து பரிந்துரை செய்ய வேண்டியது அந்த ஆணையத்தின் கடமை.

அந்த ஆணையத்துக்கு வேறு பல கடமைகள் இருந்தாலும், தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு அது தொடர்பில்லாததால், அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். நிதி ஆணையத்தின் கடமைகள் என்று குறிப்பிட்டவற்றில் முதல் பகுதி மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. நிதி ஆணையத்திடமிருந்து அதிக ஒதுக்கீடு வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலமும், நிதி ஆணையத்திடம் வலியுறுத்தும். கடைசி நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு 42 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டதில் இரண்டாவது பகுதி குறித்துதான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அத்தனை மாநிலங்களும் அதிக ஒதுக்கீடு கேட்டாலும், மொத்தம் உள்ள 100 சதவிகிதத்தை தாண்டி வழங்க முடியாது. அதே போல, ஒரு மாநிலத்துக்கான ஒதுக்கீட்டின் அளவையும் நிரந்தரமாக நிர்ணயிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தின் தேவைகள் வேறுபடும். அதனால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை, இதையும் மறு சீரமைப்பு செய்ய வண்டும். ஒவ்வொரு நிதி ஆணையத்துக்கும் மிகுந்த சிரமமான பணி இருந்தாலும், நவம்பர் 2017ல் உருவாக்கப்பட்ட 15வது நிதி ஆணையத்தின் பணி மிக முக்கியமானது.

சந்தேகத்துக்கு உள்ளாக்கும் புதிய முறை

இதற்கான காரணம், 15வது நிதி ஆணையத்தின் பணி வரம்புகளாக அறிவிக்கப்பட்டவைதான். பெரும்பாலான ஷரத்துகள் வழக்கம் போல உள்ளவைதான் என்றாலும், இரண்டு முக்கிய விஷயங்களில் மாறுதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

15வது நிதி ஆணையம், செயல்பாடுகளின் அடிப்படையிலான ஊக்கத் தொகை வழங்குவதை பரிந்துரைக்கிறது.

அவற்றில் சில…

மக்கள் தொகை வளர்ச்சி அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு.

மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னேற்றம்

இலவசங்கள் மற்றும் மலிவு விலை திட்டங்களை குறைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்.

இரண்டாவதாக, நிதி ஆணையம், 2011 மக்க்ள தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படும். 1971 கணக்கெடுப்பிப் அடிப்படையில் அல்ல. அரசியல் அமைப்புச் சட்டம், மத்திய அரசுக்கு, வரி விதிப்பு தொடர்பாக அதிக அதிகாரங்களையும், செலவுகளை குறைப்பதில் மாநிலங்களுக்கு அதிக பொறுப்பையும் நிர்ணயம் செய்துள்ளது.

இதனால்தான், மாநிலங்களுக்கான வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில், ஒரு நேர்மையான வழிமுறையை கையாள வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மாநிலங்களின் மீது திணிப்பதற்கான கருவி நிதி ஆணையம் அல்ல. ஒரு மாநிலம் தங்களுக்கு அதிக நிதி வேண்டும் எனறு கோரவும், உங்கள் திட்டங்களை எங்கள் மீது திணிக்காதீர்கள், எங்கள் சட்டமன்றத்தின் மூலம் எங்கள் மாநிலத்தை வழி நடத்திக் கொள்கிறோம் என்று கூற, அனைத்து உரிமைகளும் உண்டு.

செயல்பாடுகள் குறித்த விதிமுறை, கொடுமையானது

இரண்டாவது மாற்றம், மிகவும் மோசமானது. இது நாள் வரை, மக்கள் தொகை எண்ணிக்கை 1971ம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்துதான் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு, சில மாநிலங்கள் தங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியை காரணமாக வைத்து, தண்டிக்கப்படக் கூடாது என்பதால் எடுக்கப்பட்டது. 14வது நிதி ஆணையம், இதில் ஒரு சிறு திருத்தத்தை கொண்டு வந்தது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அளிக்கப்படும், புள்ளிகளை 25ல் இருநது 17.5 சதவிகிதாக குறைத்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 10 சதவிகித கூடுதல் புள்ளிகளை வழங்கியது. ஆனால், 15வது நிதி ஆணையம் 2011 மக்ள் தொகை கணக்கெடுப்பை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. 1971 கணக்கெடுப்பை முற்றிலும் நிராகரித்துள்ளது. இது 1971 முதல் 2011 வரை, மக்கள் தொகை பெருக்கத்தை குறைப்பதில் வெற்றி பெற்ற மாநிலங்களை தண்டிப்பதாகும்.

ஏழ்மையான மாநிலங்கள், வருவாய் குறைவாக உள்ள மாநிலங்கள், வரலாற்று ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள மாநிலங்கள், வளர்ச்சி குறைந்த மாநிலங்கள் ஆகியவை அதிக நிதி வேண்டும் என்று கேட்பது நியாயமான கோரிக்கையே. 14வது நிதி ஆணையம், ஒரு மாநிலத்தின் நிதித் திறனுக்கு 47.5 புள்ளிகளில் இருந்து 50 புள்ளிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து 2011 கணக்கெடுப்புக்கு திடீரென்று மாறியது, ஏற்கத்தக்கதே அல்ல. இன்னும் சொல்லப்போனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் பரிசு இது.

நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்பட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கீழே உள்ள அட்டவணையில் பார்க்க முடியும்.

acrosstheaisle

தீயை உடனே அணையுங்கள்.

தென்னக மாநிலங்கள், சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக 6.338 சதவிகித நிதியை இழந்து விட்டனர். அந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைவால் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், அம்மாநிலங்கள் இது நாள் வரை பாதுகாக்கப்பட்டு வந்தனர். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை சதவிகிதத்தில் தென்னக மாநிலங்கள் 24.7 சதவிதமாக இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இது 20.7 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதர குறியீடுகள் அனைத்தையும் நிலையாக வைத்துக் கொண்டால், 15வது நிதி ஆணையத்தின் நோக்கம் 1991க்கு பிறகு வந்த தாராயமய பொருளாதாரக் கொள்கைகளின் பலனை, இநத் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலங்களாக இருந்த பல மாநிலங்கள், தற்போது நல்ல வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தென்னக மாநிலங்களின் நிதியை மேலும் குறைக்கும். பின்தங்கிய நிலையில் உள்ள வறிய மாநிலங்களின் மீது நமக்கு கருணையும் அக்கறையும் உண்டு. அனால், நன்றாக நிர்வாகம் செய்யப்படும் மாநிலங்களை நாம் தண்டித்தல் கூடாது.

மத்திய அரசு ஒரு பெரும் நெருப்பை பற்றவைத்துள்ளது. தென்னக மாநிலங்கள், இந்தியக் குடியரசை எரிப்பதற்கு முன்னதாக அந்த நெருப்பு அணைக்கப்பட வேண்டும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 08.04.18 அன்று இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் ஆ.சங்கர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Across the aisle southern flames may scald the nation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X