ப. சிதம்பரம் பார்வை: 2 ரெட்டி + 1 எட்டி - கர்நாடக தேர்தல் வியூகம்!!!

ஊடகத்துறையில் வரும் “கர்நாடகா தேர்தலை சந்திக்கின்றது” என்பது “இந்தியா போருக்கு போகின்றது” என்பதைப் போல் ஒரு எண்ணத்தை தருவிக்கின்றது. முன்பு இருந்த எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு காரியமாக திரு. நரேந்திர மோடி, தேர்தல் களத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் பதினைந்து பிரச்சாரத்தில் கலந்து கொள்ளப் போகின்றார். இதே தந்திரத்தைப் பயன்படுத்தி உத்திரப் பிரதேசத்தில் இருந்த சமாஜ்வாதி கட்சியினை தோற்கடித்து ஆட்சியைக் கைப்படுத்தியது பாஜக. வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று தான் மோடி லோக்சபாவில் நுழைந்தார். அவருடைய இந்தி பேசும் திறமை எப்படி அவரை வெற்றியடையச் செய்ததோ அதே போல் அவருடைய கட்சியினரின் மதவாதக் கலவரங்களை உண்டாக்கும் போக்கும் அக்கட்சியினை இதுவரை வெற்றியடைய வைத்திருக்கும் காரணிகளாக காணலாம்.

கர்நாடகா குஜராத் இல்லை

தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்திலும் கூட மிகக் குறைந்த அளவான 7 தொகுதிகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை அமைத்திருக்கின்றது பாஜக. கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பு வரை சென்றுவிட்டுதான் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றார்கள். இது போன்றும் கர்நாடகாவில் நிகழ சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன.

குஜராத்தில் ஆளும் பாஜகவினரால் தேர்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்க இயலும். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வர். குஜராத்தின் புதல்வனாக மோடி பார்க்கப்பட்டாலும், கர்நாடகாவில் சித்தராமைய்யாவினைத் தான் மண்ணின் மைந்தனாக ஏற்றுக் கொள்வார்கள். குஜராத்தில், மோடி குஜராத்தி மொழி பேசி தன்னுடைய எண்ணங்களை மக்களுக்கு புரிய வைத்திட இயலும். ஆனால் கர்நாடகாவில் அவருக்கு மொழிப் பெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றார்கள். குஜராத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றியினை உறுதி செய்வதற்கான முகமாக நரேந்திர மோடி இருந்தார். ஆனால், கர்நாடகாவில் பாஜகவின் எண்ணங்களையும் திட்டங்களையும் வெளிப்படுத்தும் முகமாக திரு. எடியூரப்பா தான் இருக்கின்றார். பாஜகவினரின் மோடி அலை குஜராத்தில் நன்கு வேலை செய்தது. ஆனால் கர்நாடகாவில் குறிப்பாக தெற்கு கர்நாடகாவில் அதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

சாமர்த்தியமான ஆட்சிமுறை

சித்தராமைய்யா தலைமையில் காங்கிரஸ் 2013ம் ஆண்டு ஆட்சியினை அமைத்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2012-2013ம் நிதியாண்டில் சுமார் ரூபாய் 6,43,292 கோடியாக இருந்தது. 2017-2018ல் அதன் மதிப்பு தோராயமாக ரூபாய் 9,49,111 கோடியாக உயர்ந்திருக்கின்றது. சராசரி உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 8%மாக உயர்ந்திருக்கின்றது. கன்னடர்கள் ஒருவரின் சராசரி தனிநபர் வருமானமானது ரூ. 77, 309ல் இருந்து 1,74,551ஆக இந்த ஐந்து ஆண்டுகளில் உயர்ந்திருக்கின்றது. மொத்த நாட்டின் தனிநபர் வருமானம் 59% உயர்ந்திருக்கின்ற நிலையில் கர்நாடகாவில் இவ்வளர்ச்சி சுமார் 129 சதவிதமாகும். கர்நாடகாவில் வேலையில்லாத மக்களின் சராசரி என்பது வெறும் 2.9% ஆகும். இந்தியாவிலேயே இது மிகவும் குறைவான சதவிகதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சித்தராமைய்யாவின் ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வரி விகிதத்தை தொடர்ந்து மாற்றமில்லாமல் 9.5 வைத்திருத்தல் மற்றும் நிதிப்பற்றாக்குறை மதிப்பினை 3% வைத்திருத்தல் போன்ற காரணங்களால் முதலீடு மற்றும் உற்பத்தி அளவு அதிகரித்த வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை பணிகளுக்காக 40% நிதி ஒதுக்கியிருக்கின்றது சித்தராமைய்யா அரசு. கொடுக்கப்பட்ட அரசியல் தளத்தினை சிறப்பாக பயன்படுத்தியிருக்கின்றார் சித்தராமைய்யா. விளைவாக, பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்திருக்கின்றது. தடையில்லா மின்சார சேவையினை அதிகம் பயன்படுத்துதல், புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துதல் என அனைத்தையும் சிறப்பாக கையாண்டிருக்கின்றார்.

தேர்தல் களத்திலும் அதே சாதுர்யத்தை பயன்படுத்தியிருக்கின்றார். ஜனதா தாள் அணியினை பாஜகவின் கிளை அணியாக அறிவித்ததால் பாஜகவின் வாக்குவங்கி இரண்டாக பிளவுற்றது. மேலும், கன்னடமொழியினை எங்கும் பயன்படுத்துவதின் விளைவாக மோடி இதுவரை அவரின் பேச்சுத் திறமையால் உருவாக்கி வைத்திருந்த மோடி அலை சற்று பின்வாங்கியிருக்கின்றது. காரணம் மோடியின் இந்தி உரையானது, இந்தி மொழித்திணிப்பினையே உணர்த்துகின்றது. லிங்காயத்து மக்களை சிறுபான்மை மக்களாக அடையாளப்படுத்த இவர் எடுத்துக் கொண்ட முயற்சி பாஜகவின் வாக்கு வங்கியினை இன்னும் குறைத்திருக்கின்றது.

கன்னடர்களின் நிலைப்பாடு என்ன?

இன்னும் தேர்தலுக்கு ஆறு நாட்களே இருக்கின்ற நிலையில் கர்நாடக அரசு இந்த தேர்தலை அமைதியுடன் நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவினை முறையாக தடுக்க வேண்டும். மைசூர் மாவட்டத்தின் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும், பகல்கோட் மாவட்டத்தின் பதாமி தொகுதியிலும் நிற்கும் சித்தராமைய்யா, மற்ற தொகுதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தன்னுடைய மகன் யதிந்திர சித்தராமைய்யா வருணா தொகுதியில் நின்று போட்டியிடுகின்றார். 2+1 என்ற ஃபார்முலாவினை பயன்படுத்துவதாக சித்தராமைய்யாவை மோடி விமர்சனம் செய்திருக்கின்றார். பதிலுக்கு சுங்க ஊழல் மோசடியில் ஈடுபட்ட முக்கியமான கலிசோமசேகர ரெட்டி, கலிகருநாகர ரெட்டி இருவரும் எடியூரப்பாவும் இந்த ஃபார்முலாவிற்குள் அடங்குவார்கள் என்று கூறியிருக்கின்றார் சித்தராமைய்யா. எனவே அவர் அந்த 2+1 ஃபார்முலாவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இம்முறை பாஜக வெற்றியினை அடையும் முனைப்புடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் அதிகப் பெரும்பான்மை பெற்று ஜனதா தாள் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். நாட்டை ஆளும் கட்சியின் நிறை குறைகளை கணக்கில் கொண்டு சிந்திக்கும் வாக்காளர்களுக்கும் இந்த தேர்தல் சரியான களம் ஆகும். பெரும்பாலான வாக்காளர்கள் தலித்கள்,சிறுபான்மையினர், பெண்கள், சுதந்திரமானவர்கள், மற்றும் சமயசார்பற்றவர்கள், மற்றும் இந்துப் பெரும்பான்மை மக்கள் அவர்களே பணமதிப்பு நீக்கத்தில் அதிகம் பாதிக்க்கப்பட்டவர்கள். அவர்களே ஜிஎஸ்டி வரியால் தொடர் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 2014ல் ஓட்டுப் போட்டவர்களில் பெரும்பாலானோர், வேலைவாய்ப்பு உத்திரவாதத்தினை நம்பி முதன்முறையாக ஓட்டுப் போட்டவர்கள். அவர்களைத் தான் பக்கோடா விற்றுப் பிழைக்கச் சொன்னார்கள் ஆளும் கட்சியினர். கன்னடர்கள் இந்த சகிப்புத்தன்மையற்ற, விடாப்பிடிவாதம் கொண்ட, ஒதுக்கித் தள்ளும் பண்புடைய பாஜகவினருக்கு சிறந்த பதிலுரைப்பர்களா என்பதை மே 15 வரி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 6.6.18 அன்று, முன்னாள் நிதி அமைச்சர் பா. சிதம்பரம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில் நித்யா பாண்டியன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close